இரணியகசிபு அல்லது இரணியன் {Hiranyakashipu or Hiranyakasipu) (சமசுகிருதம்: हिरण्‍यकशिपु), காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியாட்சனின் அண்ணன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரத்தில் நான்காம் அவதாரமான நரசிம்மர் வதம்செய்த அரக்கன். வட மொழியில் இரண்யம் எனில் தங்கம். கசிபு எனில் துணி. தங்கத்தால் ஆன துணியை அணிந்தவன் எனப்பொருள்.

Thumb
இரணியவதம்
Thumb
இரணியவதம், கிறித்துவுக்கு முற்பட்ட அஜந்தா சிற்பம்

புராணம்

மூலம்

நாராயணன் மகாலட்சுமியுடன் தனித்திருக்க, வாயிற்காவலர் இருவரிடமும் ”யாரையும் அந்தப்புறத்துக்குள்ளே விடவேண்டாம்” எனக் கூறி உள்ளே சென்றார். அப்போது முனிவர்கள் நேரிடையாக நாராயணனின் அந்தப்புரத்துக்குள்ளே செல்ல முயல, அவரைத் தடுத்தனர் வாயிற்காவலர்கள். வெகுண்ட முனிவர்கள் அவர்களை பூலோகத்தில் போய்ப் பிறக்கும்படி சாபமிட்டனர். நாராயணனின் மேல் அளவில்லா பக்தி கொண்ட வாயிற்காவலர்கள் வருந்த நாராயணனே அங்கு வந்து அவர்களிடம், கொடியவர்களாகப் பிறந்து, தீமைகள் செய்து, விரைவில் தம்மை வந்தடையும் பிறப்பு வேண்டுமா? அல்லது நல்லவர்களாகப் பிறந்து, பலகாலம் கழித்து தன்னை வந்தடையும் பிறப்பு வேண்டுமா? என்று கேட்க அவர்கள் இருவரும் நாராயணனை வெகு காலம் பிரிந்திருக்க முடியாது, ஆகவே கொடியவனாக அசுரப் பிறப்பெடுக்க சம்மதித்தனர். இந்த துவார பாலகர்களில் ஒருவன் தான் இரணியன்.

இரணியன் கதை

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் - திதிக்கும் பிறந்தவர்களே இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாட்சன். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்களாக பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.[1]

வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்[2]. பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.[3] பிரம்மாவும் அவ்வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

அப்படிப்பட்ட அசுரனை வதம் செய்ய நாராயணன் முடிவெடுத்தார். நல்லவர்களை காக்க, தர்மத்தைக் நிலைநாட்ட, தன்மேல் பக்தி கொண்ட ஒரு பிரகலாதனை இரணியனுக்கு மகனாகப் பிறக்க வைத்து, பிரகலாதன் வாயிலாக தன் நாமம் சொல்லச் சொல்லி இரணியனைக் கோபமூட்டினார்.

உலகத்திலுள்ள அனைவரும் தன்னை “ஓம் நமோ இரண்யாய நமஹ” என்று துதிபாடும்போது தன்னை அவமதித்து ”ஓம் நமோ நாராயணாய நமஹ” என்று சொல்லும் பிள்ளையை ஒழித்தால்தான் தன் மானம் காக்கப்படும் என்று நினைத்து இரணியனும் பிரகலாதனிடம் தன்னுடைய விரோதியின் பெயரைச் சொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பிரகலாதன் இரணிய நாமம் சொல்ல மறுத்து நாராயண நாமம் சொல்லி, தந்தைக்கே உபதேசம் செய்யத் தொடங்கினான். நாராயணனே தெய்வம் என்றான். ஆகவே கடுங்கோபம் கொண்ட இரணியன் பிரகலாதனைக் கொன்று விடும்படி உத்தரவிட்டான்.[4][5] ஒவ்வொரு முறையும் தன் பக்தன் பிரகலாதனை நாராயணன் காப்பாற்றினார்.

இரணியன் பிரகலாதனிடம், ”எங்கே இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? காட்டு” என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே, அவர் பரம்பொருள்; தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்றான். ”இந்தத் தூணிலே இருப்பானா?” என்று ஒரு தூணைக் காட்டி இரணியன் கேட்க, ”இருப்பான்” என்று பிரகலாதன் பதில் சொல்ல, இரணியன் ஆவேசமாக தன்னுடைய கதாயுதத்தால் தூணை ஓங்கி அடித்தான், காலால் உதைத்தான். தூண் இரண்டாகப் பிளந்தது. இரணியன் கேட்ட வரத்தை யோசித்து அதற்கேற்றாற் போல மனிதனும் அற்று மிருகமும் அற்று நரசிம்மமாய், இரவும் அற்று பகலும் அற்று சந்தியா காலத்தில், உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, பூமியில் இரணியனின் உடல் படாமல் தன் மடியில் கிடத்தி எந்தவித ஆயுதமும் இன்றி, தன் விரல்களில் உள்ள நகங்களாலேயே அவன் மார்பைப் பிளந்து, அவனுடைய குருதியை ஒரு சொட்டுக்கூடக் கீழே விடாமல் உறிஞ்சி அவனுடைய குடலைத் தனக்கே மாலையாக்கிக் கொண்டு இரணியனை வதம் செய்தார் நரசிம்மர்[6].

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.