![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Hubble_01.jpg/640px-Hubble_01.jpg&w=640&q=50)
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி
From Wikipedia, the free encyclopedia
ஹபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வட்டணையில் ஏவப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஓர் ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும். காம்ப்டன் காமாக் கதிர் வான்காணகம், சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம், சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி ஆகியவற்றோடு இதுவும் நாசாவின் சிறந்த வான்காணகமாகும்.
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி Hubble Space Telescope (HST) | |
---|---|
![]() The Hubble Space Telescope as seen from Space Shuttle Discovery during its second servicing mission (STS-82) | |
பொதுத் தகவல்கள் | |
NSSDC ID | 1990-037B |
நிறுவனம் | நாசா / ESA / STScI |
ஏவிய தேதி | ஏப்ரல் 24, 1990 |
சுற்றுவிலக்கம் | Likely between 2013 and 2021[1] |
திணிவு | 11,110 kg (24,250 lb) |
சுற்றுப்பாதை வகை | ஏறத்தாழ வட்டம் தாழ்ப் புவி வட்டணை |
சுற்றுப்பாதை உயரம் | 589 கிமீ (366 மை) |
சுற்றுக் காலம் | 96–97 நிமி |
சுற்று வேகம் | 7500 மீ/செ |
ஈர்ப்பினாலான முடுகல் | 8.169 மீ/செ² (26.80 அடி/செ²) |
அமைவிடம் | தாழ்ப் புவி வட்டணை |
தொலைநோக்கி வகை | இரிட்சே-சிரேசிய வகை ஒளித்தெறிப்பி |
அலைநீளம் | ஒளியியல், புற ஊதாக் கதிர், அகச்சிவப்புக் கதிர் |
விட்டம் | 2.4 மீ (94 அங்.) |
பெறும் பரப்பு | தோராயமாக. 4.5 மீ² (46 அடி²)[2] |
குவியத் தூரம் | 57.6 மீ (189 அடி) |
கருவிகள் | |
அகச் சிவப்புக் கதிரணுக்க ஒலிப்படக் கருவியும் பன்னோக்க கதிர்நிரல் அளவியும் (NICMOS) | அகச் சிவப்புக் கதிர் ஒளிப்படக் கருவி/கதிர்நிரல் அளவி |
அளக்கைக்கான உயர்தர ஒளிப்படக் கருவி (ACS) | ஒளியியல் அளக்கை ஒளிப்படக் கருவி (பேரளவில் பழுதுள்ளது) |
அகல்புலக் கோள்காண் ஒளிப்படக் கருவி 2 (WFPC2) | அகல்புல ஒளியியல் ஒளிப்படக் கருவி |
விண்வெளித் தொலைநோக்கியின் படிமப்பதிவு கதிர்நிரல் வரைவி (STIS) | ஒளியியல் கதிர்நிரல் அளவி/படக்கருவி (பழுதுற்றது) |
நுண்வழிகாட்டு உணரி (FGS) | மூன்று நுண்வழிகாட்டு உணரிகள் |
இணையத்தளம் http://www.nasa.gov/hubble · http://hubble.nasa.gov http://hubblesite.org · http://www.spacetelescope.org |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/HubbleExploded.svg/640px-HubbleExploded.svg.png)
1940களிலேயே விண்வெளித் தொலைநோக்கிகள் பற்றிய கருத்துப்படிமம் முன்மொழியப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டில் இவ்வகைத் தொலைநோக்கியை ஏவும் எண்ணத்துடன் 1970களில் ஹபிள் தொலைநோக்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பத் தாமதங்கள், நிதிச் சிக்கல், சேலஞ்சர் விபத்து போன்றவற்றால் இத் திட்டத்தை நிறைவேற்றுவது தாமதமாகியது. இறுதியாக 1990 இல் விண்ணில் இத்தொலைநோக்கி ஏவப்பட்டாலும், இதன் முதன்மை ஆடியில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப் பிழையினால் தொலைநோக்கியின் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் 1993 இல் இடம்பெற்ற திருத்தவேலைப் பயணத் திட்டத்தின் மூலம் ஹபிளின் தரம் எதிர்பார்க்கப்பட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஹபிள் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியில் இருப்பதால் மிகவும் நுண்ணிய விவரங்களுடன் கூடிய, பின்புல ஒளி இடையீடுகள் இன்றி, ஒளிப்படங்களை எடுக்ககூடியதாக உள்ளது. ஹபிளின் அவதானிப்புகள் பல வானியற்பியலில் பல முக்கியமான தீர்வுகளுக்கு வழி சமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அண்டம் விரிவடையும் வீதத்தைத் முடிவு செய்வதில் இதன் அவதானிப்புகள் பெரும் பங்காற்றியுள்ளன.
விண்வெளியில், விண்வெளிவீரர்களால் பழுது பார்க்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரே தொலைநோக்கி ஹபிள் ஆகும். இதுவரை நான்கு தடவைகள் திருத்தவேலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1993 இல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தின் மூலம் படிமக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. 2, 3 மற்றும் 4 ஆம் பயணங்களின் போது பல்வேறு துணைத் தொகுதிகள் பழுதுபார்க்கப்பட்டதுடன், பல அவதானிப்புக் கருவிகளும் நவீன திறன்மிக்க கருவிகளால் பதிலீடும் செய்யப்பட்டன. எனினும், 2003 இல் இடம்பெற்ற கொலம்பியா விண்வெளி ஓட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் குறித்த அச்சங்களினால் ஐந்தாவது திருத்தவேலைப் பயணம் நிறுத்தப்பட்டது. உற்சாகமான பொதுக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு இறுதியான திருத்தவேலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு நாசா முடிவு செய்தது. தற்போது இது அக்டோபர் 2008 க்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹபிளுக்கான திட்டமிடப்பட்ட திருத்தவேலைகள், இது 2013 ஆம் ஆண்டுவரை செயல்பட வழி செய்யும். அதன் பின்னர், புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட உள்ளது. இப் புதிய தொலைநோக்கி பல வானியல் ஆய்வுகள் தொடர்பில் ஹபிளிலும் மிகமிகத் திறன் வாய்ந்தது. எனினும் இது அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே அவதானிக்கும் என்பதால் கட்புலனாகும் மற்றும் புறஊதாக் கதிர்களை அவதானிக்கும் திறன்கொண்ட ஹபிளின் செயல்பாடுகளுக்கு ஒரு குறை நிரப்பியாகவே இருக்கும் எனலாம்.