2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2023 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2023 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 13-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா பொறுப்பேற்று நடத்தியது. ஆத்திரேலியா இத்தொடரில் வெற்றியீட்டியது.[1]
அதிகாரபூர்வ சின்னம் | |
நாட்கள் | 5 அக்டோபர் – 19 நவம்பர் 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ப.ஒ.நா) |
போட்டித் தொடர் வடிவம் | சுழல்-முறையும், ஒற்றை வெளியேற்றமும் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | ஆத்திரேலியா (6-ஆம் தடவை) |
இரண்டாமவர் | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 48 |
தொடர் நாயகன் | விராட் கோலி |
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (765) |
அதிக வீழ்த்தல்கள் | முகம்மது சமி (24) |
அலுவல்முறை வலைத்தளம் | இணையதளம் |
← 2019 2027 → |
இத்தொடர் 2023 பெப்ரவரி, மார்ச்சில் நடத்தப்படுவதாக இருந்து, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பின்போடப்பட்டது. இங்கிலாந்து அணி 2019 பதிப்பில் நியூசிலாந்தை இறுதிப்போட்டியில் வென்று நடப்பு வாகையாளராகப் போட்டியிட்டது. மொத்தம் 10 தேசிய அணிகள் 2023 தொடரில் போட்டியிட்டன. முதல்தடவையாக இந்தியா தனித்து உலகக்கிண்ணப்போட்டியை இம்முறை நடத்தியது. முன்னதாக இந்தியத் துணைக்கண்டத்தின் ஏனைய நாடுகளுடன் இணைந்து 1987, 1996, 2011 போட்டிகளை நடத்தியிருந்தது.
இறுதிப்போட்டி 2023 நவம்பர் 19 அன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் விளையாடப்பட்டது. ஆத்திரேலிய அணி ஆறாவது தடவையாக உலகக்கிண்னத்தைக் கைப்பறியது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மும்பை வான்கேடே அரங்கம், கொல்கத்தா ஈடம் கார்டன்சு ஆகியவற்றில் நடைபெற்றன.
2023 உலகக்கிண்ண தொடக்கநிலைப் போட்டிகளின் இறுதிப் புள்ளிப் பட்டியலில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த அணிகள், புரவலர்களான பாக்கித்தானுடன், அடுத்த 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்துக்குத் தகுதி பெற்றன.