அட்லாண்டிக் சுவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அட்லாண்டிக் சுவர் (Atlantic Wall; இடாய்ச்சு: Atlantikwall) என்பது இரண்டாம் உலகப் போரின் போது மேற்கு ஐரோப்பாவில் நாசி ஜெர்மனி தனது கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளின் கடற்கரைகளில் கட்டிய அரண் நிலை அமைப்பினைக் குறிக்கிறது. பிரிட்டனிலிருந்த நேச நாட்டுப் படைகள் நாசி கட்டுப்பாட்டு ஐரோப்பா மீது படையெடுப்பதைத் தடுப்பதற்காக இந்த அரண்நிலைகள் அமைக்கப்பட்டன.[1]
சென் நசேர் திடீர்த்தாக்குதல் நிகழ்ந்ததன் நேரடி விளைவாக மார்ச் 23, 1942ல் ஹிட்லர் தனது “தலைவர் அரசாணை” (Führer Directive) எண் 40ஐப் பிறப்பித்தார். இந்த ஆணையில் மேற்கு ஐரோப்பியக் கடற்கரையில் ஒரு பலமான அரண் நிலை தொடர் அமைப்பினை உருவாக்க உத்தரவிட்டார். ஏப்ரல் 13, 1942ல் முதலில் கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தளங்களைப் பாதுக்காக்கும் அரண்நிலைகளை உருவாக்கும்படி உத்தரவிட்டார். 1943 இறுதி வரை கடற்படைத் தளங்களையும், துறைமுகங்களையும் சுற்றி மட்டுமே அரண்நிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக பிற கடற்கரைப் பகுதிகளுக்கும் அவை விரிவு படுத்தப்பட்டன. சிக்ஃபிரைட் கோட்டினை உருவாக்கிய டாட் அமைப்பு அட்லாண்டிக் சுவரையும் வடிவமைத்து உருவாக்கியது. ஜெர்மனியால ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும் போர்க்கைதிகளும் இச்சுவரினைக் கட்ட கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
1944 துவக்கத்தில் ஃபீல்டு மார்ஷல் எர்வின் ரோம்மல் அட்லாண்டிக் சுவரை பலப்படுத்த நியமிக்கப்பட்டார். அவ்வாண்டு மேற்கத்திய மேலை நாடுகள் ஐரோப்பாவின் மீது கடல்வழியாகப் படையெடுக்கத் திட்டமிட்டிருந்ததால், அப்படையெடுப்பை எதிர்கொள்ள அட்லாண்டிக் சுவரின் பலம் போதாது என்று அவர் முடிவு செய்தார். அவரது ஆணைப்படி பல வலுவூட்டப்பட்ட திண்காறை (reinforced concrete) அரண்நிலைகள் கடற்கரைகளில் கட்டப்பட்டன. இந்த அரண்நிலைகளில் எந்திரத்துப்பாக்கி நிலைகள், டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள், இலகுரக பீரங்கிகள் ஆகியவை நிறுவப்பட்டன. கடற்கரை மணலிலும், கரையோரமாகக் கடலிலும் கண்ணி வெடிகளும், நீரடித் தடைகளும், டாங்கு எதிர்ப்புத் தடைகளும் நிறுவப்பட்டன. நேச நாட்டுப் தரையிறங்கு படகுகள் கரையை அடையும் முன்னரே அவற்றை அழிப்பது தான் ரோம்மலின் போர் உத்தி.
ஜூன் 6, 1944ல் படையெடுப்பு நிகழ்வதற்கு முன்பாக சுமார் அறுபது லட்சம் கண்ணி வெடிகள் இவ்வாறு அட்லாண்டிக் சுவரெங்கும் இடப்பட்டன. கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் அரண்நிலைகள் பலப்படுத்தப்பட்டன. மிதவை வானூர்திகள் மற்றும் வான்குடைகளை பயன்படுத்தி வான்குடை வீரர்கள் தரையிறங்க ஏதுவான இடங்களில் எல்லாம் ரோம்மலின் தண்ணீர்விட்டான் கொடி ("Rommel's asparagus") என்றழைக்கப்பட்ட கூர்மையான குச்சிகள் நடப்பட்டன. பள்ளமான ஆற்றுப் பகுதிகளும், ஆற்று முகத்துவாரப் பகுதிகளும் நிரந்தரமாக வெள்ளக்காடாக்கப்பட்டன. கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தப்படா விட்டால், மேற்குப் போர்முனையில் நேசநாட்டு படையெடுப்பைத் தோற்கடிக்க முடியாது என ரோம்மல் உறுதியாக நம்பினார்.
படையெடுப்பு நிகழ்வதற்கு முன்னர் திட்டமிட்டபடி ஜெர்மானியர்களால் அட்லாண்டிக் சுவரைக் கட்டி முடிக்க இயலவில்லை. ஆனால் இத்தகு சுவர் உருவானது மேற்கத்திய நேச நாடுகளின் மேல்நிலை உத்தியினை பாதித்தது. கிழக்குப் போர்முனையில் ஜெர்மனியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் மேற்குப் போர்முனையில் உடனே படையெடுப்பு நிகழ வேண்டும் என்று வற்புறுத்திய போதெல்லாம், படையெடுப்பைத் தள்ளிப்போட அட்லாண்டிக் சுவர் காரணமாகச் சொல்லப்பட்டது. ரோம்மல் திட்டமிட்ட அளவுக்கு அரண்நிலைகள் பலப்படுத்தப்படாததல் பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் படையெடுப்பு நிகழ்ந்த போது அவற்றால் படையிறக்கத்தைத் முற்றிலும் தடுக்க முடியவில்லை.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads