அதியமான் நெடுமான் அஞ்சி

தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர் From Wikipedia, the free encyclopedia

அதியமான் நெடுமான் அஞ்சி
Remove ads

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூ பெயர். அஞ்சி என்பது இவரது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர்.[2]

Thumb
அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை

அக்காலத்து அதியமான்களுள் இவரைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புகள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவர் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனைக்கு இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவரது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவரைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் என்றும் அவரது கொடையின் திறம் பேசப்படுகிறது.

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.

Remove ads

புறநூனூறு, பாடல் எண்; 94

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.

பொருள்:- பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்.

திணை வாகை; துறை அரச வாகை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads