சிறுபாணாற்றுப்படை

பத்துப்பாட்டில் ஒரு தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை[1] எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

சிறுபாணாற்றுப்படை அமைப்பு

சிறுப்பாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்), விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்), பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்), சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்), உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்), வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்), வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்), பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்), மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்), நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்), வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்), அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்), நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்), தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்), ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்), வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்), விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்) ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும்.

Remove ads

புலவர் புலமை

ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின்[2] தலை நகரான வஞ்சியும்[3] உறையூரும்[4] மதுரையும்[5] முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலும் கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள்[6] பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் இலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன் என்று தம் இலக்கியப் புலமையைக் காணலாம்.

Remove ads

சிறுபாணாற்றுப்படை உவமை

சிறுபாணாற்றுப்படையில் உவமை என்பது இலக்கியச் சிறப்பை உணர்த்துவதாகும். இவ்வகையில் இந்நூல் உவமையிலே தொடங்குகிறது,

“மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை

அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல”

என அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உவமைகளை இந்நூலின் ஆசிரியர் கையாண்டுள்ளதனால் இந்நூலினைச் " சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை" எனத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார்

பாணன் நடந்து செல்லும் பாதை

சிறுபாணாற்றுப்படையில் 31-50 வரிகளில் பாணன் நடந்து செல்லும் பாதை குறிப்பிடப்படிகிறது.

“மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்

நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி

கல்லா இளையர் மெல்லத் தைவர

பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்

இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”

என்ற வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளைஞர்கள். முறுக்கேரிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழை தம் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான். நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளன்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்பமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஓர் இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.

Remove ads

பாணனின் வறுமை

சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாண்னின் வறுமை என்பது,

“இந்நாள்

திறவாக் கண்ண சாய் செவிக் குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த

பூழி பூத்த புழல் காளாம்பி”

என்ற பாடல் வரிகளில், பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூறை இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறும் வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads