அம்மோனியம் சல்பேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மோனியம் சல்பேட்டு (Ammonium sulfate) ; (NH4)2SO4, ஒரு கனிம உப்பாகும். இந்த உப்பு பல வணிகப் பயன்களைக் கொண்டுள்ளது. இந்த உப்பின் மிகவும் பொதுவான பயனானது சிறந்த மண் உரமாக உள்ளது. இது 21% நைட்ரசன் மற்றும் 24% கந்தகம் ஆகிய தனிமங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
தயாரிப்பு
அமோனியாவை கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதால் அமோனியம் சல்பேட்டு உருவாகிறது. பெரும்பாலும் இவ்வினை கல்கரி உலைகளில் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது.
- 2 NH3 + H2SO4 → (NH4)2SO4
அமோனியம் சல்பேட்டின் நிறைவுற்ற கரைசல் மற்றும் 2 முதல் 4 சதவீத கந்தக அமிலம் கொண்ட உலைக்குள் மோனியா வாயு மற்றும் நீராவி சேர்ந்த கலவை 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கரைசல் தொடர்ந்து அமிலமாக நீடிக்க அடர் கந்தக அமிலம் அவ்வப்போது சேர்க்கப்படுகிறது. உலையின் மீது கந்தக அமிலத்தை தெளிப்பதால் உலர் நிலையில் அமோனியம் சல்பேட்டு உருவாகிறது. உலையின் வெப்பம் நீரை நீராவியாக்கி வெளியேற்றும். 1981 ஆம் ஆண்டு மட்டும் தோராயமாக 6000 மெட்ரிக் டன் அமோனியம் சல்பேட்டு தயாரிக்கப்பட்டது.
கிப்சம் உப்பிலிருந்தும் அமோனியம் சல்பேட்டு உப்பைத் தயாரிக்க இயலும். இறுதியாகப் பிரித்தெடுக்கப்பட்ட கிப்சம் உப்பு (CaSO4•2H2O) அமோனியம் கார்பனேட்டு கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. கால்சியம் கார்பனேட்டு திண்மமாக வீழ்படிவாகிறது. கரைசலில் அமோனியம் சல்பேட்டு எஞ்சுகிறது.
- (NH4)2CO3 + CaSO4 → (NH4)2SO4 + CaCO3
எரிமலைகளின் நீராவித் துளைகளில், நிலக்கரி எரிதலில், சில குவியல்களில் மேசுகாக்னைட்டு என்ற அரிய கனிமமாக இயற்கையில் அமோனியம் சல்பேட்டு தோன்றுகிறது.
Remove ads
பயன்கள்
அம்மோனியம் சல்பேட்டின் முதன்மையான பயனானது காரத்தன்மையுள்ள மண்ணிற்கு இது சிறந்த உரமாகப் பயன்படுவதாகும். மண்ணில் அம்மோனியம் அயனியானது வெளியிடப்பட்டு சிறிய அளவிலான அமிலத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மண்ணின் pH சமநிலை மதிப்பானது குறைகிறது. மேலும், தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நைட்ரசனை வழங்குகிறது. அம்மோனியம் சல்பேட்டின் பயன்பாட்டின் முக்கியக் குறைபாடானது, அம்மோனியம் நைட்ரேட்டுடன் ஒப்பிடும் போது குறைவான நைட்ரசன் அளவைக் கொண்டுள்ளதாகும். இதன் காரணமாக உரங்களைக் கொண்டு செல்ல தேவைப்படும் போக்குவரத்துச் செலவினம் அதிகரிக்கிறது.
இது விவசாயத்தில் நீரில் கரையக்கூடிய பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகிவற்றுடன் கலந்து தெளிக்கக்கூடிய துணையூக்கியாகவும் பயன்படுகிறது. அவற்றில் இது தாவர செல்கள் மற்றும் கிணற்று நீர் ஆகியவற்றில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் நேரயனிகளுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறது. குறிப்பாக இது 2,4-D (அமீன்), கிளைபாசேட்டு மற்றும் குளுபோசினேட்டு களைக்கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடிய துணையூக்கியாக உள்ளது.
அமோனியம் பெர்சல்பேட்டு போன்ற அமோனியம் உப்புகளை குறைந்த அளவில் தயாரிக்க அமோனியம் சல்பேட்டு பயன்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டிற்கு உதவும் பல தடுப்பூசிகளில் அமோனியம் சல்பேட்டு பகுதிப் பொருளாக இருக்கிறது.
கனநிரில் இடப்பட்ட அமோனியம் சல்பேட்டின் நிறைவுற்ற கரைசல் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் சோதனைக்குப் பயன்படுகிறது. மரப்பொருட்களைப் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்
ஆய்வகப் பயன்பாடு
அம்மோனியம் சல்பேட்டு வீழ்படிவாக்கல் புரதத்தை வீழ்படிவாக்கல் மூலம் துாய்மையாக்குவதற்கான ஒரு பொதுவான முறையாகும். கரைசலின் அயனிச் செறிவானது அதிகரிக்கும் போது, கரைசலில் புரதத்தின் கரைதிறனானது குறைகிறது. அம்மோனியம் சல்பேட்டானது தனது அயனித்தன்மையால் நீரில் மிகுதியாகக் கரையக்கூடியது. ஆகவே இது புரதத்தை உப்பாற்படிவு பெறல் மூலமாக வீழ்படிவாக்குகிறது. [3] நீரின் உயர் மின்கடத்தாப் பொருள் மாறிலியின் காரணமாக, சிதைவுற்ற உப்பின் அயனிகள் அம்மோனியம் நேரயனிகளும், சல்பேட்டு எதிர்மின்னயனிகளும் உடனடியாக நீர் மூலக்கூறுகளின் நீரேற்ற கூடுகளுக்குள் கரைதிரவஞ் சேர்க்கப்பட்ட நிலை உருவாகிறது. சேர்மங்களைத் துாய்மைப்படுத்துவதற்கு பயன்படும் இச்சேர்மத்தின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் மற்ற முனைவற்ற மூலக்கூறுகளை விட எளிதில் நீரேற்றமடையும் இதன் திறனைச் சார்ந்துள்ளது. ஆகவே, முனைவுறும் தன்மையற்ற மூலக்கூறுகள் ஒன்றுகூடி செறிவான நிலையிலுள்ள கரைசலிலிருந்து வீழ்படிவாகிறது. இந்த முறையானது உப்பாற்படிவு பெறல் என அழைக்கப்படுகிறது. இம்முறை நிகழ்வதற்கு ஒரு நீர்க்கலவையில் நம்பத்தகுந்த அளவிற்கு கரையக்கூடிய அதிக உப்புச் செறிவானது அவசியமானதாகிறது.
Remove ads
பண்புகள்
வெப்பநிலை -49.5 ° செல்சியசுக்கு கீழாக உள்ள போது அமோனியம் சல்பேட்டு பெரோமின் தன்மையைப் பெறுகிறது. அறைவெப்ப நிலையில் இது செஞ்சாய்சதுர வடிவில் படிகமாகிறது. இதன் அலகுக் கூடுகளின் அளவு a = 7.729 Å, b = 10.560 Å, c = 5.951 Å. பெரோமின் நிலைக்கு குளிர்விக்கும் போது படிகம் Pna2 இடக்குழுவுக்கு மாற்றம் அடைகிறது.
வினைகள்
250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலாக அமோனியம் சல்பேட்டை சூடுபடுத்தினால் அது சிதைவடைகிறது. முதலில் அமோனியம் பைசல்பேட்டு உருவாகிறது. மேலும் அதிகமாகச் சூடாக்கும் போது அமோனியா, நைட்ரசன், கந்தக டை ஆக்சைடு, மற்றும் நீர் ஆகியன் உருவாகின்றன.
வலிமையான அமிலமான கந்தக அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரமான அமோனியா ஆகியவற்றின் உப்பான அமோனியம் சல்பேட்டு கரைசலில் அமிலத்தன்மையோடு காணப்படுகிறது. 0.1 மோலார் கரைசலில் இதன் pH மதிப்பு 5.5 ஆகும். நீரியக் கரைசலில் NH4+ மற்றும் SO4−2 என்ற அயனிகள் வினைபுரிகின்றன. உதாரணமாக பெரியம் குளோரைடைச் சேர்க்கும்போது பெரியம் சல்பேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது. ஆவியாக்கி வடிகட்டும்போது அமோனியம் குளோரைடு கிடைக்கிறது.
அமோனியம் உலோக உப்புகள் எனப்படும் பல இரட்டை உப்புகளை அமோனியம் சல்பேட்டு உருவாக்குகிறது. உலோக சல்பேட்டுகளின் சம அளவு மோலார் கரைசல் அமோனியம் சல்பேட்டு உப்புக் கரைசலுடன் சேர்க்கப்பட்டு ஆவியாக்கப்பட்டால் இரட்டை உப்புகள் உருவாகின்றன. மூவிணைதிற உலோக அயனிகளுடன் பெரிக் அமோனியம்சல்பேட்டு போன்ற படிகாரங்கள் தோன்றுகின்றன. அமோனியம் கோபால்டசு சல்பேட்டு, பெரசுடையமோனியம் சல்பேட்டு, அமோனியம்நிக்கல் சல்பேட்டு போன்றவை இரட்டை உப்புகளுக்கு உதாரணங்களாகும். இவை டட்டன் உப்புகள் மற்றும் அமோனியம் செரிக் சல்பேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. லேங்பெய்னைட்டு குடும்பத்தில் அமோனியாவின் நீரற்ற இரட்டை சல்பேட்டு உப்புகளும் தோன்றுகின்றன.
Remove ads
பயன்பாட்டுச் சட்டம்
2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமோனியம் சல்பேட்டு, அமோனியம் நைட்ரேட்டு, கால்சியம் அமோனியம் நைட்ரேட்டு உரங்கள் பயன்படுத்துவதற்கு பாக்கித்தானில் அந்நாட்டு அரசு தடை விதித்தது. இவை வெடிமருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதே காரணத்திற்காக ஆப்கானிசுத்தானிலும் இப்பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads