அருணாசலக் கவிராயர்

இசை மும்மூர்த்தி, கருநாடக இசைக்கலைஞர். From Wikipedia, the free encyclopedia

Remove ads

அருணாசலக் கவிராயர் (Arunachala Kavi) (1711–1779) என்பவர் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712–1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717–1787), முத்துத் தாண்டவர் (1525–1625) ஆகியோர்.[1]

Remove ads

வாழ்க்கை வரலாறு

அருணாசலக் கவிராயர் பொ.ஊ. 1711-இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்ல தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.[2] இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.[2]

சீர்காழியில் வாழ்ந்ததால் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.[1] மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. பொ.ஊ. 1779-இல் தமது 67-ஆவது வயதில் காலமானார்.

Remove ads

படைப்புகள்

  • அசோமுகி நாடகம்
  • சீர்காழித் தலபுராணம்
  • சீர்காழிக் கோவை
  • சீர்காழிக் கலம்பகம்
  • சீர்காழி அந்தாதி
  • தியாகராசர் வண்ணம்
  • சம்பந்தர்பிள்ளைத் தமிழ்
  • அநுமார் பிள்ளைத் தமிழ்
  • இராம நாடகக் கீர்த்தனை

ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" உள்ளது.

  • கைவல்ய நவநீதம் - தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார். இவ்வுரையே மிகச் சிறந்தது என ஞானத்தேடலில் உள்ள சாதகர்களுக்கு (பயிற்சியாளர்) மிகவும் அத்தியாவசியமானது என பலரும் கூறுகின்றனர்.
Remove ads

அரங்கேற்றம்

அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.[2] ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.[1][2]

மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.

புகழ் பெற்றவை

"இராம நாடகக் கீர்த்தனை" என்ற நூல் பல பதிப்புகளில் வெளிவந்தது. தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன.

சில இசைப்பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் பாடல், தொடக்கம் ...

அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடிச் சிறப்பு சேர்த்தனர்.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads