அருணாச்சலம் முருகானந்தம்

கோவையைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர். From Wikipedia, the free encyclopedia

அருணாச்சலம் முருகானந்தம்
Remove ads

அருணாச்சலம் முருகானந்தம் (பிறப்பு: 1962) கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ் விருது வழங்கியுள்ளது.[1]

விரைவான உண்மைகள் அருணாச்சலம் முருகானந்தம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இவருடைய பெற்றோர்கள் அருணாச்சலம், வனிதா ஆவர். அவர்கள் கோயம்புத்தூரில் கைத்தறி நெசவுத் தொழில் செய்துவந்தனர். இவரது தந்தை ஒரு விபத்தில் மரணமடைந்ததால் வறுமையில் வாழ நேரிட்டது[2]. தனது 14ஆவது அகவையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, பல சிறு சிறு வேலைகளைச் செய்து தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்[2].

வரலாறு

பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அணையாடைகளை வாங்க இயலாத தமது குடும்பச்சூழலில் தமது மனைவி விடாய்க் காலத்தில் பயன்படுத்த பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை கண்ட அருணாசலம் முருகானந்தம் இதற்கான எளிய வழிமுறையைக் காண விழைந்தார்.[3][4] பிரச்சினையை சரியாக அறிந்துகொள்ள பல சோதனைகளை மேற்கொண்டார். துவக்கத்தில் பருத்தியாலான அணையாடைகளைத் தயாரித்தார். ஆனால் அவற்றை அவரது மனைவியும் சகோதரிகளும் ஏற்புடையதாக இல்லை என நிராகரித்து விட்டதோடு மட்டுமன்றி அவரது புதிய சோதனை முயற்சிகளுக்கு இணங்கவும் மறுத்துவிட்டனர். மூலப்பொருளுக்கு ஆகும் உண்மையான செலவைவிட 40 மடங்கு அதிகமாக ஒவ்வொரு அணையாடையின் விற்பனை விலை இருப்பதைக் கண்டார்.[5] மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது தவறு என்ற மனப்பான்மை மக்களிடையே நிலவியதால் அவர் கண்டுபிடிக்கும் புதிய அணையாடையைப் பயன்படுத்திப் பார்த்து அதன் நிறைகுறைகளைப் பற்றி அவரிடம் சொல்வதற்கு பெண்கள் எவரும் முன்வரவில்லை. இதனால் விலங்குகளின் இரத்தத்தைக் கொண்டு இவர் தானாக நிகழ்த்திய சில சோதனைகளால் குடும்பத்தாராலும் சமூகத்தாலும் வெளித்தள்ளப்பட்டார்.[6][7] இறுதியில் மரச் சக்கை சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். வணிக அணையாடைகளில் பயன்படுத்தப்படுவது பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட மாவிய இழை என்பதைக் கண்டறிய அவருக்கு இரு ஆண்டுகளாயின[8]. அணையாடைகள் இரத்தப்போக்கை உறிஞ்சும்போது அவற்றின் வடிவமைப்பு மாறாமல் அவ்விழைகள் காத்தன.[2] வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்தின் விலை மூன்றரை கோடி இந்திய ரூபாயாக இருந்தது.[9] மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன் அணையாடைகளைத் (Napkin) தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை இவர் கண்டுபிடித்தார். முறைப்படுத்தப்பட்ட பைன் மரக்கூழை மும்பையிலிருந்து தருவித்தார். இந்த மரக்கூழ் பயன்படுத்தப்பட்டு அணையாடை தயாரிக்கப்படுகிறது.[10] இந்த இயந்திரத்தின் விலை 65,000 இந்திய ரூபாய் ஆகும்.[11]

Remove ads

கண்டுபிடிப்பு

அணையாடைகளைத் (Napkin) தயாரிக்க முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி இந்த இயந்திரங்களை இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வறுமையிலிருந்து மீள்கின்றனர்.[12] இவரது எளிய மற்றும் விலைத்திறன் மிக்க கண்டுபிடிப்பிற்காகவும் சமூகத்திற்கு இவராற்றும் தொண்டிற்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] இவரது முயற்சியை வணிகமயமாக்க பல நிறுவனங்கள் முன்வந்தபோதும் இவர் விற்பதற்கு மறுப்பதுடன் மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.[13] இந்தியப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.[14][15] பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது. மேலும் தரமான அணையாடையைப் பயன்படுத்துவதால் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக இயங்கவும் முடிகிறது.[16] இவரது வெற்றி பிற தொழில்முனைவோரையும் இத்துறையில் இறங்க ஊக்கப்படுத்தியுள்ளது. இவர்கள் பயன்படுத்தப்பட்ட வாழைநார் அல்லது மூங்கிலை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்து முயற்சி செய்கின்றனர்[15][17]

பாராட்டு

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ்உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது. இவரது வாழ்க்கைக் கதையை இந்தித் திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி 'பேட்மேன்' (Pad Man) என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.[18].[19]. மேலும் இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.[20]

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads