கோயம்புத்தூர்
இது தமிழக மாநகராட்சிகளில் இரண்டாவது மிகப்பெரிய பெருநகர மாநகராட்சி மற்றும் தொழில்நகரம் ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும்.
சங்க காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதி சேரர்களால் ஆளப்பட்டது. இந்த நகரமானது மேற்குக் கடற்கரைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது. தென்னிந்தியாவில் முசிறி முதல் அரிக்கமேடு வரை நீண்டிருந்த பழங்கால வர்த்தகப் பாதையான ராசகேசரி பெருவழியில் இது அமைந்திருந்தது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர். இப்பகுதி 15-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார், இதன் கீழ் கொங்கு நாடு 24 "பாளையங்களாக" பிரிக்கப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் இராச்சித்தின் கீழ் வந்தது. திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களால் 1799-இல் கோயம்புத்தூர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியானது தீரன் சின்னமலை தலைமையிலான பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.
1804-ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866-இல் நகராட்சி தரம் வழங்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மும்பையில் பருத்தித் தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் சவுளி வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் விரைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. "கோயம்புத்தூர் ஈர மாவு இயந்திரம்" மற்றும் "கோவை கோரா பருத்தி" ஆகியவை இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடுகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் ஆடைத் தொழிலின் மையமாக இருப்பதால், இந்த நகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்றது.
கோயம்புத்தூர் 2014-ஆம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த, வளர்ந்து வரும் நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்நகரமானது இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் முதலீட்டு சூழலில் இந்திய நகரங்களில் நான்காவது இடத்தையும் மற்றும் தோலோசு வெளியிட்ட சிறந்த உலகளாவிய புறத்திறனீட்ட நகரங்களில் 17-ஆவது இடத்தையும் பிடித்தது. இந்திய அரசாங்கத்தால் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் இந்திய நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் வாழ்வதற்கான பத்து சிறந்த நகரங்களில் இடம்பெற்றது.
Remove ads
அமைவிடம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில், (11.0168°N 76.9558°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் நகரம் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், "கோசர்புத்தூர்" என்று வழங்கப்பட்ட, பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[7] இன்னொரு கூற்றின் படி, "கோவன்" எனும் தலைவன் இருந்ததாகவும், அதன் பெயரிலே உண்டான ஊரே "கோவன்புத்தூர்" என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம்.[8][9] இப்பெயர் "கோவையம்மா" எனபதிலிருந்து வந்திருக்கலாம் என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது. கோனான் வழிபட்ட தெய்வமான கோயம்மாவிடமிருந்து உருவான இந்த வார்த்தை கோனியம்மாவாகவும் பின்னர் கோவையம்மாவாகவும் மாறியது.[10]
Remove ads
வரலாறு
சங்க காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதி சேரர்களால் ஆளப்பட்டது. இந்த நகரமானது மேற்குக் கடற்கரைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது.[11] இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் காவியமான சிலப்பதிகாரம் மற்றும் மற்ற சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள கோசர் மக்கள் கோயம்புத்தூர் மண்டலத்துடன் தொடர்புடையவர்களாவர்.[12] தென்னிந்தியாவில் முசிறி முதல் அரிக்கமேடு வரை நீண்டிருந்த பழங்கால வர்த்தகப் பாதையான ராசகேசரி பெருவழியில் இது அமைந்திருந்தது.[13][14] கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர்.[15][16] இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார், இதன் கீழ் கொங்கு நாடு 24 "பாளையங்களாக" பிரிக்கப்பட்டது.[17]

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் இராச்சித்தின் கீழ் வந்தது. திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களால் 1799 இல் கோயம்புத்தூர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியானது தீரன் சின்னமலை தலைமையிலான பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.[18] 1804 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866 இல் நகராட்சி அந்தசுது வழங்கப்பட்டது.[19][20] ராபர்ட் ஸ்டேன்சு கோயம்புத்தூர் நகர அமைப்பின் முதல் தலைவராக ஆனார்.[21][22] 1876-78 ஆம் ஆண்டுகளில் இப்பகுதி பெரும் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் இறந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பிலேக் நோயால் ஏறக்குறைய இருபதாயிரம் இறப்புகள் ஏற்பட்டது.[23][24]

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மும்பையில் பருத்தித் தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் சவுளி வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்தது.[22] இந்திய சுதந்திர போராட்டத்தில் இப்பகுதி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.[25][26] சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் விரைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியாக உயர்வு பெற்றது.[27] 14 பிப்ரவரி 1998 அன்று தீவிர இசுலாமிய தீவிரவாத குழுவான அல் உம்மா நகரம் முழுவதும் 11 இடங்களில் குண்டுவீசியதில் 58 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[28]
Remove ads
புவியியல்
கோயம்புத்தூர் தென் இந்தியாவில் வடமேற்கு தமிழ்நாட்டில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது 642.12 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.[29] இது மேற்கு மற்றும் வடக்கே மேற்குத் தொடர்ச்சி மலை மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது, இதன் வடக்குப் பகுதியில் நீலகிரி பல்லுயிர் வலய காடுகள் உள்ளன.[30] நொய்யல் ஆறு நகரின் தெற்கு எல்லையை ஒட்டி பாய்கிறது.[31][32]

கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் குளம், குறிச்சி ஏரி, வாலாங்குளம், கிருஷ்ணாம்பதி ஏரி, முத்தண்ணன் ஏரி, செல்வசிந்தாமணி ஏரி, உக்கடம் பெரியகுளம். இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.[33][34] பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு, நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து–அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.[30][35]

இந்த நகரம் இரண்டு தனித்துவமான புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நகரத்தின் பெரும்பான்மையான நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கிய வறண்ட கிழக்குப் பகுதி மற்றும் நீலகிரி, ஆனைமலை மற்றும் மூணாறு எல்லைகளை உள்ளடக்கிய மேற்குப் பகுதி. அண்டை மாநிலமான கேரளாவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் பாலக்காட்டு கணவாய், நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ளதால் இந்த நகரத்தில் பல்வேறு விதமான விலங்குகள் மற்றும் பறவைகள் காணப்படுகின்றன. சமவெளிகளில் பொதுவான விலங்கு இனங்கள் தவிர, இந்திய யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி போன்ற பல விலங்குகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.[36] நகரத்தின் வடக்குப் பகுதியில் தேக்கு, சந்தனம்,மற்றும் மூங்கில் போன்ற வணிக ரீதியாக குறிப்பிடத்தக்க மரங்களைக் கொண்ட வளமான வெப்பமண்டல பசுமைக் காடு உள்ளது. இங்கு பெரும்பாலும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் மண் காணப்படுகின்றது. 1900 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது.[37][38]
வானிலை
கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ், இந்த நகரம் வெப்பமான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஈரமான பருவம் நீடிக்கின்றது. இந்த நகரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.9 °C (96.6 °F) இலிருந்து 29.2 °C (84.6 °F) ஆகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.5 °C (76.1 °F) முதல் 19.8 °C (67.6 °F) ஆகவும் உள்ளது.[39] 22 ஏப்ரல் 1976 அன்று நகரின் பதிவான அதிகபட்ச வெப்பநிலையான 42.6 °C (108.7 °F) பதிவானது. அதே சமயம் 12 சனவரி 1957 அன்று குறைந்தபட்ச வெப்பநிலையான 12.2 °C (54.0 °F) பதிவாகியது.[40]
கோயம்புத்தூர் ஈரமான மற்றும் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது மார்ச் முதல் சூன் வரையிலான காலத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான கோடைகாலத்தை அனுபவிக்கிறது. மழைக்காலம் சூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். இந்நகரம் தென்மேற்கு பருவமழையிலிருந்து மிதமான மழையையும், வடகிழக்கு பருவமழையிலிருந்து அவ்வப்போது கனமழையையும் பெறுகிறது. குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரியில் முடிவடைகிறது. பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ. மழை பெறுகிறது.[39] நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி, அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
கோயம்புத்தூரின் மக்கள்தொகை 1,601,438 ஆக உள்ளது.[6] 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விரிவாக்கத்திற்கு முந்தைய நகர எல்லைகளின் அடிப்படையில், கோயம்புத்தூர் நகரின் மக்கள் தொகை 1,050,721 ஆக இருந்தது. ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 997 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது, இது தேசிய சராசரியான 929 ஐ விட அதிகம்.[45] இது தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஆகும்.[46] 52,275 ஆண்கள் மற்றும் 49,794 பெண்கள் என மொத்தம் 102,069 பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683 ஆகவுள்ளனர். நகரில் 1,539 விவசாயிகள், 2,908 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 11,789 வீட்டுத் தொழிலாளர்கள், 385,802 இதரத் தொழிலாளர்கள், 23,077 குறு தொழிலாளர்கள், 531 குடும்பத் தொழிலாளர்கள், குறு விவசாயிகள், 531 குறு விவசாயிகள் மற்றும் 20,877 பிற குறு தொழிலாளர்கள் உள்ளனர்.[29][46][47]
நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.23% ஆகும், இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 93.17% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 85.3% ஆகவும், ஆறு வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் 8.9% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள்.[49] 2005 ஆம் ஆண்டில், நகரத்தில் குற்ற விகிதம் 100,000 பேருக்கு 265.9 ஆக இருந்தது, இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதிவான குற்றங்களில் 1.2% ஆகும். இந்தியாவில் உள்ள 35 முக்கிய நகரங்களில் குற்றங்கள் நடப்பதில் 21வது இடத்தில் உள்ளது.[50] நகரத்தின் மக்கள் தொகையில் சுமார் 8% பேர் சேரிகளில் வாழ்கின்றனர்.[51]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீக்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.[48][52]
Remove ads
நிர்வாகம்

கோயம்புத்தூர் ஒரு மாநகராட்சியும், மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரும் ஆகும். இந்நகரமானது 1804 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866 ஆம் ஆண்டில் இது நகராட்சி அந்தசுது பெற்றது.[19][20] 1981ல் கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[27] இந்த நகரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய என ஐந்து நிர்வாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு மண்டலமும் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[53] ஒவ்வொரு வார்டுக்கும் பிரதிநிதியாக ஒரு மாநகர்மன்ற உறுப்பினர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர்மன்ற உறுப்பினர்கள் பின்னர் மாநகர மேயரை தேர்ந்தெடுக்கின்றனர். மாநகராட்சியின் நிர்வாகப் பிரிவு ஒரு மாநகராட்சி ஆணையரின் தலைமையில் உள்ளது. இது குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை சேவைகளை அளிக்கிறது.[54][55]
மாவட்டம் மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை மேற்பார்வையிடுகிறது. கோயம்புத்தூர் நகரக் காவல்துறை ஒரு தமிழக காவல்துறை ஆணையரின் தலைமையில் இயங்குகிறது. இந்த நகரத்தில் 18 காவல் நிலையங்கள் உள்ளன.[56] 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் கோவையும் ஒன்றாகும்.[57]
கோயம்புத்தூர் பெருநகரப் பகுதியின் சில பகுதிகள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளது.[58] இந்த புறநகர் பகுதிகள் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர பஞ்சாயத்துகள் எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது.[59][60] இந்த உள்ளாட்சி அமைப்புகள் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் அந்தந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[55][61]
Remove ads
அரசியல்
இந்த நகரம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஆறு உறுப்பினர்களையும் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கிறது. நகரத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன : கோயம்புத்தூர் கிழக்கு, கோயம்புத்தூர் மேற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு. நகரின் பெரும்பாலான பகுதிகள் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன. நகரத்தின் வடக்கே உள்ள சில பகுதிகள் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. சில நகரப்பகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது.[62]
Remove ads
பண்பாடு
கோயம்புத்தூர் மற்றும் அதன் மக்கள் தொழில்முனைவுக்கு பெயர் பெற்றவர்கள்.[63][64] பொதுவாக பாரம்பரிய நகரமாகக் கருதப்பட்டாலும், கோயம்புத்தூர் பன்முகத்தன்மை வாய்ந்தது.[63][65][66] உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றது.[67] நகரத்தின் தொழில்மயமாக்கல் காரணமாக தொழிற்சங்கங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.[68] இந்தியாவில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்களின் பட்டியலில் இந்த நகரம் தொடர்ந்து இடம்பெறுகிறது.[69] கோயம்புத்தூர் மாவட்டமாக நிறுவப்பட்ட நாளான 24 நவம்பர் ஓவொரு ஆண்டும் "கோயம்புத்தூர் தினமாக" கொண்டாடப்படுகிறது.[70]
மொழி
தமிழ் மொழி நகரின் அதிகாரப்பூர்வ மொழியாகும். இங்கு கொங்கு தமிழ் ("கொங்கலம்" என்றும் அழைக்கப்படுகிறது) என்ற ஒரு பேச்சுவழக்கு, முக்கியமாக பேசப்படுகிறது.[71][72] கோயம்புத்தூரில் கணிசமான எண்ணிக்கையிலான தெலுங்கு மக்கள், கன்னட மக்கள், மலையாளிகள் மற்றும் வட இந்தியர்கள் உள்ளனர்.[65][73][74][75][76][77][78] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 710,326 பேர் பேசும் மொழி முதன்மையான மொழி தமிழ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தெலுங்கு (173,136), கன்னடம் (102,000), மலையாளம் (76,485), உருது (15,484) மற்றும் இந்தி (13,608) . நகரத்தில் பேசப்படும் பிற மொழிகளில் அடங்கும்.[73][79] 1970 களில் அதிகரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளால் தூண்டப்பட்ட இடம்பெயர்வின் விளைவாக நகரின் மக்கள்தொகை உயர்ந்தது.[43][80]
மதம்
நகரத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுடன், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.[52][81][82]
நகரின் ஏராளமான மாரியம்மன் கோவில்களில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள் கோடையில் முக்கிய நிகழ்வுகளாகும்.[83] நகரின் முக்கிய இந்து கோவில்கள் பின்வருமாறு: பேரூர் பட்டீசுவரர் கோயில்,[84] நாக சாய் மந்திர்,[85][86] கோனியம்மன் கோயில்,[83] தண்டு மாரியம்மன் கோயில்,[87] ஈச்சனாரி விநாயகர் கோவில்,[88][89] முந்தி விநாயகர் திருக்கோயில்,[90] மருதமலை முருகன் கோயில்,[91][92] லோக நாயக சனீசுவரன் கோயில்,[93][94] வரத ஆஞ்சநேயர் கோவில்,[95] மாசாணி அம்மன் கோயில்,[96] காரமடை அரங்கநாதசாமி கோயில்,[97] மற்றும் ஈஷா ஆதியோகி சிவன்.[98] ஒப்பனகார தெரு மற்றும் பெரிய கடைத் தெருவில் உள்ள மசூதிகள் கிபி 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[99] 17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியாளர்களால் இப்பகுதியில் தேவாலயங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.[100] கோயம்புத்தூரில் சீக்கிய குருத்வாராக்கள் மற்றும் சமண கோவில்கள் பல உள்ளன.[101]
உணவு

கோயம்புத்தூர் நகரின் உணவுகள் பெரும்பாலும் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான உள்ளூர் உணவகங்கள் இன்னும் கிராமப்புற உணவுகளை வாழை இலையில் பரிமாறுகின்றன.[102] வாழை இலையில் உண்பது ஒரு பண்டைய தமிழர் வழக்கம். உணவுக்கு அது ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.[103] இந்திய, சீன மற்றும் மேல்நாட்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன. இட்லி, தோசை, பணியாரம் மற்றும் ஆப்பம் ஆகியவை இங்கு பிரபலமான சிற்றுண்டி உணவுகளாகும்.[104][105][106][107] இப்பகுதிக்கு தனித்துவமான பருப்பு மற்றும் அரிசி கலவையில் இருந்து தயாரிக்கப்படும் அரிசி பருப்பு சாதம் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் இருந்த வரும் ஒரு செய்முறையாகும்.[108] கஞ்சி போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை காரமான குழம்பில் காளான்களை வேகவைத்து தயாரிக்கப்படும் பிரபலமான உணவாகும் காலான்; நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் தெளிக்கப்பட்ட உணவு பரிமாறப்படுகிறது.[109][110][111]
கலை
தென்னிந்தியாவின் முதல் திரையரங்கத்தை கோயம்புத்தூரில் சுவாமிகண்ணு வின்சென்ட் நிறுவினார். இவர் திரைப்படங்களைத் திரையிட திறந்த நிலத்தில் கூடாரம் அமைத்து "டென்ட் சினிமா"வை அறிமுகப்படுத்தினார்.[112][113] சென்ட்ரல் சுடுடியோ 1935 இல் அமைக்கப்பட்டது, எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு 1945 இல் பட்சிராசா சுடுடியோவை நிறுவினார்.[114] ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் ஒரு பாரம்பரிய இசை விழா நடத்தப்படுகின்றது.[66] கலை, நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் (மார்கழி) நடத்தப்படுகின்றன.[115] கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடு தொழில்துறை கண்காட்சி, காசு அருங்காட்சியகம், காந்தி காதி அருங்காட்சியகம், கசுதூரி சீனிவாசன் கலைக்கூடம் என பல அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் உள்ளன.[116][117]
Remove ads
பொருளாதாரம்

தமிழ்நாட்டில் தொழில்துறை, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான முக்கிய மையமான கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரங்களில் ஒன்றாகும்.[118][119] இந்த நகரம் 25,000 க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவங்களைக் கொண்டுள்ளது. நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும். இந்நகரின் நூற்பாலைகள் மற்றும் விரிவான துணி உற்பத்தி தொழிலின் காரணமாக கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரை சுற்றியுள்ள ஊர்களில் வளர்க்கப்படும் பருத்தி இந்த தொழிலுக்கு மூலதனமாக உள்ளது.[120][121] 2010இல், கோயம்புத்தூர் வணிகச் சூழலின் அடிப்படையில் வரிசையிடப்பட்ட இந்திய நகரங்களின் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்தது.[122] 1999இல் கட்டப்பட்ட கொடிசியா வளாகம், நகரின் முக்கிய வர்த்தக கண்காட்சி மையங்களில் ஒன்றாகும்.[123]
கோயம்புத்தூர் மண்டலம் 1920 மற்றும் 1930 களில் தொடங்கி சவுளி மற்றும் துணி உற்பத்தியில் வளர்ச்சியை எட்டியது.[22] 1888 ஆம் ஆண்டு, இராபர்ட் இசுடேன்சு கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுடேன்சு கோவையின் முதல் துணி ஆலைகளை நிறுவியிருந்தாலும், 20 ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில்தான் கோயம்புத்தூர் ஒரு முக்கிய தொழில் மையமாக உருவெடுத்தது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி, மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன. 2009 ஆம் ஆண்டில், இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் கோயம்புத்தூரின் பங்களிப்பு 15% ஆக இருந்தது.[126] கோயம்புத்தூரில் உள்ள தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல வர்த்தக சங்கங்கள் செயல்படுகின்றன. கோயம்புத்தூரில் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச துணி பயிற்சிப் பள்ளி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னிந்திய துணி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.[127] "கோவை கோரா பருத்தி" இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[128][129][130]

மென்பொருள் உற்பத்தியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. 2006இல் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா இப்பகுதியின் முதல் மென்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.[133] டைடல் பூங்கா மற்றும் நகரத்தில் உள்ள பிற தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நகரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புறத்திறனீட்ட தொழில்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.[134] 2009-10 நிதியாண்டில் இந்நகரின் மென்பொருள் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 90% அதிகரித்து 700 கோடி ரூபாயாக ஆக இருந்தது.[135] கோயம்புத்தூர் ஒரு பல்வகைப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது மற்றும் இங்குள்ள பொறியியல் கல்லூரிகள் ஆண்டுதோறும் சுமார் 50,000 பொறியாளர்களை உருவாக்குகின்றன.[136]

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்தியாவில் முக்கிய மையமாக கோயம்புத்தூர் உள்ளது. முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் வாகன உதிரிபாக தேவைகளில் 30% வரை நகரத்திலிருந்து பெறுகின்றனர். ஜி. டி. நாயுடு 1937 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஒரு இயந்திர பொறியை உருவாக்கினார்.[137] இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கார்களுக்கான டீசல் பொறி 1972 இல் இங்கு தயாரிக்கப்பட்டது. இந்த நகரம் வாகன உற்பத்தி தொழில்துறைக்கு முக்கியமான சிறிய வாகன உதிரிபாகங்களை தயாரிப்பாளர்களுக்கான முக்கிய மையமாகவும் உள்ளது.[138] இந்தியாவில் மொத்த மாதாந்திர உற்பத்தியாகும் 1 இலட்சம் ஈரமாவு அரைக்கும் பொறிகளில் சுமார் 75% இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.[139] 70,000 பேர் பணியாற்றும் இந்தத் துறை ஆண்டுக்கு 2800 கோடி வருவாய் ஈட்டிகிறது.[139] "கோயம்புத்தூர் ஈரமாவு அரவைப்பொறி" இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது[140][141]
கோயம்புத்தூர் "நீரேற்றி நகரம்" என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த நீரேற்றி தயாரிப்பில் ஏறத்தாழ 50% இந்நகரில் உருவாக்கப்படுகின்றன.[142] தங்க மற்றும் வைர நகைகளை ஏற்றுமதி செய்யும் நகரங்களில் கோவையும் ஒன்றாகும்.[143][144][145][146] இந்நகரில் உள்ள ஏறத்தாழ 3,000 நகை உற்பத்தியாளர்கள், 40,000க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்களைப் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.[147][148][149]
கோயம்புத்தூரில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ளன மற்றும் இந்நகரம் கோழி முட்டை உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி, இந்நகரில் இருந்து பல நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.[150] கோயம்புத்தூரில் பழமையான மாவு ஆலைகள் பல உள்ளன. விருந்தோம்பல் துறையானது 21 ஆம் நூற்றாண்டில் புதிய உயர்தர விடுதிகளை நிறுவுவதன் மூலம் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.[151][152][153][154]
Remove ads
போக்குவரத்து
வான்வழி

பீளமேட்டில் உள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்நகரின் பிரதான வானோர்த்தி நிலையமாக செயல்படுகின்றது. இந்த வானூர்தி நிலயமானது 1940 ஆம் ஆண்டு செயல்படத் துவங்கியது. 2 அக்டோபர் 2012 அன்று மத்திய அமைச்சரவையால் சர்வதேச வானூர்தி நிலைய அந்தசுது வழங்கப்பட்டது.[155][156] இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் இயக்கப்படும் இந்த வானூர்தி நிலையத்திலிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற சர்வதேச நகரங்களுக்கு வானூர்தி சேவை உள்ளது.[157] வானூர்திகள் இயக்கத்தின் அடிப்படையில் இது இந்தியாவில் 15 வது பெரிய வானூர்தி நிலையமாகும்.[158][159][160][161] இங்கு 2990 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை ஓடுபாதை உள்ளது.[162] காங்கயம்பாளையத்தில் அமைந்துள்ள சூலூர் விமான படை தளம் இந்திய வான்படையால் இயக்கப்படுகின்றது.[163][164][165]
தொடர் வண்டி

போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்ட பிறகு, கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1861 ஆம் ஆண்டில் தொடங்கியது.[166] கோயம்புத்தூர் சோலார்பேட்டை-சோரனூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது கேரளா மற்றும் மேற்கு கடற்கரையை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்நகரின் தொடருந்து பாதைகள் இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வேயால் நிர்வகிக்கப்படுகின்றது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது.[167][168][169] கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர், பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும்.[170][171][172] அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது.
மத்திய அரசு 2010 இல் கோயம்புத்தூர் உட்பட 16 நகரங்களில் மெட்ரோ இரயில் சேவையை துவங்க முன்மொழிந்தது. பல ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.[173] 2021 இல் சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டு ஐந்து பாதைகள் முன்மொழியப்பட்டன.[174]
சாலை


கோயம்புத்தூர் நகரில் ஆறு பிரதான சாலைகள் உள்ளன: அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, மற்றும் பொள்ளாச்சி சாலை.[175][176][177] நகரில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன:[178][179]


கோயம்புத்தூர் புறவழிச்சாலை என்பது நகரின் பல்வேறு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தொடர்ச்சாலை ஆகும்.[180][181] நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான இந்த . புறவழிச்சாலையின் முதல் பகுதி 2000 ஆம் ஆண்டில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.[182][183] 2008 ஆம் ஆண்டில், மாநில நெடுஞ்சாலைத் துறையானது முக்கியச் சாலைகளில் நெரிசலைக் குறைக்க உதவும் ஒரு வட்டச் சாலையை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை பரிந்துதரைத்தது. 2012 ஆம் ஆண்டில், மேட்டுப்பாளையம் சாலையை அவிநாசி சாலையுடன் இணைக்கும் கிழக்கு சாலை மற்றும் அதை ஏற்கனவே உள்ள புறவழிச்சாலையுடன் இணைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.[184] 2011 ஆம் ஆண்டில், பாலக்காடு சாலையில் நெரிசலைக் குறைக்க உக்கடம் மற்றும் ஆத்துபாலத்தில் இரண்டு புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன.[185] மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர, கோயம்புத்தூர் மாநகராட்சி ஏறத்தாழ 635 கி.மீ. சாலைகளைப் பராமரிக்கிறது.[31] கோயம்புத்தூரில் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அவை பின் வருமாறு: TN 37 (தெற்கு), TN 38 (வடக்கு), TN 66 (மத்திய), TN 99 (மேற்கு).[186] கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் மற்றும் விளி வாடகையுந்துகள் பரவலாக இயக்கப்படுகின்றன.
பேருந்து

நகர பேருந்துகள் 1921 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கின. இவை நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும், மாவட்டத்தில் உள்ள மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் சேவை செய்கின்றன. நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[187][188] வெளியூர் செல்லும் பேருந்துகள் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.[189][190][191][192] கோவை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள்:
வெள்ளலூரில் கட்டப்படவிருந்த இருந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலை வளாகத்திற்கான திட்டம் 2023 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.[194]
Remove ads
ஊடகங்கள் மற்றும் சேவைகள்
ஊடகங்கள்
நான்கு முக்கிய ஆங்கில அச்சு ஊடகங்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை நகரத்திலிருந்து பதிப்புகளைக் வெளியிடுகின்றன.[195] கோயம்புத்தூர் பதிப்புகளைக் கொண்ட தமிழ் செய்தித்தாள்களில் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன், தி இந்து (தமிழ்), (அனைத்து காலை செய்தித்தாள்களும்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவை அடங்கும்.[196][197][198] மலையாள மனோரமா மற்றும் மாத்ருபூமி ஆகிய இரண்டு மலையாள செய்தித்தாள்களும் நகரத்தில் கணிசமான புழக்கத்தில் உள்ளன.[199]
ஒரு நடுத்தர அலை வானொலி நிலையம் அகில இந்திய வானொலியால் இயக்கப்படுகிறது, பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளன.[200] கோயம்புத்தூரிலிருந்து ஐந்து எஃப்எம் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன - அகில இந்திய வானொலியில் இருந்து ரெயின்போ எஃப்எம், சன் நெட்வொர்க்கிலிருந்து சூர்யன் எஃப்எம், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி மற்றும் ஹலோ எஃப்எம்.[201][202][203][204][205][206] இந்த தனியார் வானொலி நிலையங்கள் அனைத்தும் திரைப்பட இசை உட்பட தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு 1985 இல் டெல்லி தூர்தர்ஷனிலிருந்து தொடங்கியது. 1986 ஆம் ஆண்டில், கொடைக்கானலில் ஒரு கோபுரம் தொடங்கப்பட்ட பின்னர், சென்னை தூர்தர்ஷனிலிருந்து ஒளிபரப்பு தொடங்கியது.[207] தற்போது தொலைக்காட்சி வரவேற்பு டி.டி.எச் மூலமாகவோ அல்லது கேபிள் மூலமாகவோ உள்ளது, அதே நேரத்தில் தூர்தர்ஷன் வரவேற்பு வெளிப்புற ஆண்டெனாவைப் பயன்படுத்தி கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டில், தூர்தர்ஷன் கோயம்புத்தூரில் தனது ஸ்டுடியோவைத் திறந்தது.[208]
தொலைத்தொடர்பு
கோவையில் நான்கு இணைக்கப்பட்ட தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளது. 1990கள் வரை அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நகரத்தின் ஒரே தொலைதொடர்பு சேவை வழங்குநராக இருந்தது. 1990களில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கின. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஆக்ட் ஆகியவை பிராட்பேண்ட் மற்றும் நிலையான வரி சேவைகளை வழங்குகின்றன.[209] கம்பியற்ற தகவல்தொடர்பு (செல்லுலார் தொலைபேசி) முதன்முதலில் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[210]
சுகாதாரம்
கோயம்புத்தூர் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.[211] இந்நகரத்தில் ஏறத்தாழ 750 மருத்துவமனைகள் உள்ளன.[212] இந்த மருத்துவமனைகளில் ஒற்றை சிறப்பு நிறுவனங்களான கண் பராமரிப்பு மையங்கள் மற்றும் பல சிறப்பு மருத்துவமனைகளும் அடங்கும்.[213] நகரில் முதல் சுகாதார மையம் 1909 இல் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ESI மருத்துவமனை ஆகிய அரசாங்கத்தால் நடத்தப்படும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் இலவச சுகாதார சேவையை வழங்குகின்றன.[214] கோவை மாநகரக் கழகம் 16 மருந்தகங்களையும் இரண்டு மகப்பேறு இல்லங்களையும் பராமரிக்கிறது.[31] அதிகளவில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதால், அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மக்கள் மருத்துவச் சுற்றுலாவுக்காக கோவைக்கு வருகிறார்கள்.[215][216][217][218]
Remove ads
கல்வி

கோயம்புத்தூர் ஒரு முக்கிய கல்வி மையமாக உள்ளது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது.[219] நகரின் முதல் பள்ளி 1831 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[220] 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும்.[221]
நகரின் முதல் பொறியியல் கல்லூரியான ஆர்தர் ஹோப் தொழில்நுட்பக் கல்லூரி (இப்போது அரசினர் தொழிற்நுட்ப கல்லூரி என அழைக்கப்படுகிறது), 1945 இல் ஜி.டி. நாயுடுவால் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தனியார் பொறியியல் கல்லூரிகள் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி 1950களில் தொடங்கப்பட்டன.[222] 1949 இல் நிறுவப்பட்ட விமானப்படை நிர்வாகக் கல்லூரி, இந்திய விமானப்படையின் பழமையான பயிற்சி நிறுவனம் ஆகும்.[223] கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி 1966 இல் திறக்கப்பட்டது மற்றும் ESIC மருத்துவக் கல்லூரி 2016 இல் நிறுவப்பட்டது. அரசினர் சட்டக் கல்லூரி 1978 இல் செயல்படத் தொடங்கியது.[222] 1868 இல் நிறுவப்பட்ட விவசாயப் பள்ளி 1971 இல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆக அமைக்கப்பெற்றது. சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் 1990 இல் திறக்கப்பட்டது.[222]

இன்று கோயம்புத்தூரில் 46க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், 62க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஏழு பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன.[224][225] இந்த நகரத்தில் மூன்று அரசுப் பல்கலைக்கழகங்கள் (வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்) மற்றும் நான்கு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.[226] இந்த நகரத்தில் பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம், கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம், இந்திய வனவியல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம் ஆகிய ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ளன.[227][228][229] 2008 இல், இந்திய அரசு இப்பகுதியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்தது.[230][231]
கோயம்புத்தூரில் மூன்று வகையான பள்ளிகள் இயங்குகின்றன: அரசு நடத்தும் பள்ளிகள், அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் தனியார் பள்ளிகள் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) மற்றும் தனியார் அறக்கட்டளைகளால் முழுமையாக நடத்தப்படும் பள்ளிகள்.[222] பள்ளிகள் மத்திய அல்ல மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன.[222] இந்த நகரம் கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்டது மற்றும் 2023 இல் 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் ஏறத்தாழ 31,320 மாணவர்கள் பங்கேற்றனர்.[232]
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு

தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை "இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்" என்றும் "இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை" என்றும் விளிப்பர்.[233][234] கோவையின் தொழிலதிபர்கள் சிலர், கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். பார்முலா பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன.[235] எம்ஆர்எஃப் கோயம்புத்தூரில் பார்முலா கார்களை வடிவமைக்கிறது.[236] நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும், கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. பார்முலா ஒன்று பந்தயத்தில் 2005 ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர்.[237]

நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.[238] கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது.[239] நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம், இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.[240] கோயம்புத்தூர் பறக்கும் மன்றம் கோயம்புத்தூர் வானூர்தி நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.[241] புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக "கோயம்புத்தூர் மாரத்தான்" எனப்படும் வருடாந்திர ஓட்டம் நடத்தப்படுகின்றது.[242] புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர்.[243] 1940 இல் நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க சங்கம் நாட்டின் பழமையான சதுரங்க சங்கமாகும்.[244]
பொழுதுபோக்கு

நகரைச் சுற்றி பல பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளன.[245] 1980 களில் இருந்து, நகரத்தில் சில சிறிய வணிக வளாகங்கள் தோன்றின. பின்னர் 2000 களில் பெரிய வணிக வளாகங்கள் பல தோன்றின.[246] நகரத்தில் வ. உ. சி. பூங்கா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூங்கா, ரேசு கோர்சு சிறுவர் பூங்கா மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள பாரதி பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் உள்ளன. கோயம்புத்தூர் உயிரியல் பூங்காவில் பல விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.[247][248] சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் உள்ளிட்ட கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வ. உ. சி. பூங்கா மைதானம் பயன்படுத்தப்படுகிறது.[249] சிங்காநல்லூர் ஏரி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், பறவைகள் தாங்கும் தலமாகவும் உள்ளது.[250] நகரில் பல திரையரங்குகள் உள்ளன.[251] கோவைக் குற்றாலம் அருவி, உதகமண்டலம் மலை வாழிடம் மற்றும் முதுமலை வனவிலங்கு காப்பகம், மலம்புழா அணை, ஆனைமலை மற்றும் தேசியப்பூங்கா, அமராவதி அணை மற்றும் முதலைப் பண்ணை, திருமூர்த்தி அணை மற்றும் பஞ்சலிங்கம் அருவி, ஆழியாறு அணை மற்றும் குரங்கு அருவி, வால்பாறை மலை வாழிடம், சத்தியமங்கலம் காடுகள் மற்றும் புலிகள் சரணாலயம், கொடிவேரி அணைக்கட்டு, பழனி முருகன் கோவில் ஆகியவை கோயம்புத்தூர் அருகில் உள்ள சுற்றுலா தலங்களாகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads