பண்டாரம் (சமய மரபு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ மரபை பின்பற்றும் வெள்ளாளர் சமூக உட்பிரிவைச் சார்ந்தவர்களாவர்.[1][2][3] ஆண்டிப் பண்டாரம், பண்டராம், யோகிஸ்வரர், வைராவிகள், புலவர், போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.

Remove ads

வரலாறு

தமிழக வரலாற்றின் படி 9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.

ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.

வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.

தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் என்ற சாதியினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல இன்று அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது.

Remove ads

பெயர்க் காரணம்

பண்டாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரல்ல மாறாக சைவ சமயத்தை குறிப்பாக வீரசைவ சமயத்தை பின்பற்றும் மக்களின் சமய சடங்குகளை செய்வதற்கு நியமிக்கப்படும் குருமார்களை குறிக்க பயன்படுத்தும் ஒரு பொதுவான வார்த்தையாகும். சைவ சமயத்தை பின்பற்றும் பல சமூக மக்கள் தங்கள் சொந்த சமூகத்திற்குள்ளேயே குருமார்களை நியமித்து கொள்வர் அவ்வாறு நியமிக்கப்படும் குருமார்களை பண்டாரம் என்று அழைப்பர். மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது. பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள். பண்டார வகுப்பினர் அரசாங்க, கல்விப் படிவங்களில் ‘வீரசைவ லிங்கத்தார்’ எனத் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தச் சமூகப்பிரிவில் லிங்கம் அணிந்துகொள்பவர்களும் உண்டு. ஆனாலும் அவர்களில் பெரும்பாலோர் இன்று முருகனடிமைகளே.

Remove ads

எட்கர் தர்ஸ்டசன் கூற்று

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் தலைப்பின் கீழ் எட்கர் தர்ஸ்டசன் ஒவ்வொரு குலத்தைப் பற்றியும் அறிமுகத் தகவல்களைத் தருகிறார். அவரின் கூற்றுப்படி பண்டாரமென்பது ஒரு தொழிலை மேற்கொண்டவர்களின் பெயராகுமேயன்றி ஒரு சாதிக்குரிய பெயராகாது. அவர்கள் சைவ நெறியில் உறுதியான பற்றுள்ளவர்கள்; துறவற மனம் கொண்டவர்கள்; கழுத்தில் லிங்கம் அணிந்துகொள்பவர்கள். ஒரு காலத்தில் சோழிய வெள்ளாளர்களாகவும் இருந்தவர்கள். இவர்களில் கோயில் பணியாளர்கள் அதிகம். கோயில் வழிபாட்டிற்குரிய மலர்மாலைகளைத் தருவதும் வழிபாடு நடக்கும்போது தேவாரம் ஓதுவதும் இவர்களது பணி. கிராமங்களில் கிராமத் தேவதைகளின் கோயில்களில் பண்டாரங்கள் பூசாரிகளாகவும் உள்ளனர். சில இடங்களில் ஆற்றிலிருந்து கோயில் திருமஞ்சன நீராட்டிற்கு நீர்சுமந்து வருபவர்களாகவும் உள்ளனர். பொன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் அரசு, கோயில் கருவூலங்கள் “பொற் பண்டாரங்கள்” என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் பண்டாரங்கள் கருவூல அதிகாரிகளாகவும் பணியாற்றி உள்ளனர். அரசாங்க உத்தரவுகளைப் பனையோலையில் பதிவுசெய்து அவற்றைப் பாதுகாக்கும் நூலகர்களாகவும் இவர்கள் இருந்துள்ளார்கள். பிற்காலத்தில் பண்டாரம் என்பது ஒரு சாதிக்குரிய பெயராகவும் பல சாதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த வகுப்பிற்குரிய பெயராகவும் விளக்கம் பெறுகிறது. பண்டாரம் என்னும் சாதி நிலவுடமையாளர்களில் மதிப்பு வாய்ந்த பிரிவினரையும் சில மடங்களைச் சேர்ந்த சன்னியாசிகளையும் செல்வச்செழிப்புள்ள ஆதீனங்களின் மேலாளர்களையும் குறிக்கும் சொல்லாக மாற்றம்பெறுகிறது. இந்தப் பண்டார சன்னதிகள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு சைவ ஆகமங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நல்ல பரிச்சயம் உடையவர்கள் ஆனார்கள். தமிழில் நல்ல புலமையும் சைவசித்தாந்தத்தில் நல்ல தேர்ச்சியும் பெற்று ‘தம்பிரானும்’ ஆனார்கள். மாணிக்கவாசகர் “பண்டாரம்” என்னும் சொல்லை திருவாசகத்தில் சிறப்பாகப் பிரயோகிக்கிறார்.

தொழில்கள்

கோயில் பணி

பண்டாரம் இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில் தொண்டு வேலைகளை செய்யவும், ஓதுவார்களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும், பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது. அத்துடன் இவர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லுனர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள். சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்; இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர்.தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் சில ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.

Remove ads

வெவ்வேறு பெயர்கள்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிப்பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், மதுரையில் யோகிஸ்வரர் அழைக்கப்படுகிறார்கள். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாகசித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிக்கொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

புலவர்

அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர். இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர். தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரப் பிரிவினரை "புலவர்" என்றே அழைக்கின்றனர்.

மலைப்பண்டாரம்

மலைப்பண்டாரம் என்னும் குலப்பிரிவும் உள்ளது. இவர்கள் சைவசமயத்தின் மீதோ தமிழின் மீதோ தாகம் கொண்டவர்களல்லர். இவர்கள் காட்டில் எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். மலையாளத்திற்கு நெருக்கமான மொழியையே பேசுகிறார்கள். காட்டுக்குகை, மரக்கூட்டம், பாறையிடுக்கு இவற்றை வாழ்விடமாகக் கொண்டவர்கள். காட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பண்டமாற்றம் செய்து வாழ்பவர்கள்.

தென்மாவட்டங்களில் பழக்கம்

முருகனுக்கு மிகவும் உகந்ததான ‘காவடியை’ எடுக்கும்போது அதைத் தோள்மீது ஏற்றிவைக்க ‘பண்டாரம்’ கிடைத்தலே நன்மை என்னும் நம்பிக்கை தென்மாவட்டங்களில் பலமாக உள்ளது. சஷ்டிக் காலங்களில் அதுவும் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் அங்கப் பிரதட்சணம் செய்த பிறகு பண்டாரம் கையால் விபூதி தரிப்பதை மிகவும் நன்மை என்றும் அவர்களுக்காகவே காத்திருப்பவர்களையும் காணலாம். பண்டாரங்களை ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கழைத்து வந்து தலைவாழையிலை முன்பு அமரவைக்கிறார்கள். பண்டாரங்கள் தங்கள் கையோடு கொண்டுவரும் சங்கை ஊதி (சங்கு ஊதுவதை சங்கு பெருக்குவது என்று குறிப்பிடுகிறார்கள்) முருகன் பாடல்களைப் பாடித்துதித்த பின்பு தலை வாழையிலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவைப் புசிக்கிறார்கள். அவர்களை அவ்வாறு வயிறார உண்ணவைத்தால் அதுவரை சேர்ந்திருந்த பாவங்கள் அனைத்தும் உடனடியாக முருகனருளால் தொலையும் என்பது ஐதீகம். இது தென்மாவட்டங்களில் இன்றும் செல்வாக்குடன் இருக்கும் பழக்கம்.

தெலுங்கு மொழி பேசும் ஜங்கம்கள் மற்றும் தமிழ் மொழி பேசும் பண்டாரங்கள் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாவர் ஆயினும் இவர்கள் வீரசைவ மரபின் மூலம் இணைக்கப்பட்டுள்ளார்கள்

Remove ads

மொழிகள்

இவர்கள் பொதுவாக தமிழ்மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர். இருந்தாலும் சிலர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுகின்றனர். தெற்காசிய நாடுகளில் இருப்பவர்கள் மலாய் பேசுகின்றனர்.

பண்பாடு மற்றும் கலாச்சாரம்

இவர்கள் இந்து சைவமுறைகளில் திருமந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ள தூயதமிழ் பண்பாட்டினையும் கொண்டுள்ளனர். சிலரால் வீரசைவ (லிங்காயத்) கன்னட, தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட பண்பாட்டினையும் கொண்டுள்ளனர்.

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads