ஆர்ட்டெமிசியம் சமர்
கிரேக்க பாரசீகப் போர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்ட்டெமிசியம் அல்லது ஆர்ட்டெமிஷன் சமர் (Battle of Artemisium) என்பது கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது மூன்று நாட்கள் நடந்த கடற்படை போர்த் தொடராகும். கிமு 480 ஆகத்து அல்லது செப்டம்பரில், யூபோயா கடற்கரையில் தெர்மோபைலே தரைப் போருடன் ஒரே நேரத்தில் இந்த இரண்டு போர்களும் நடந்தன. இப்போரானது எசுபார்த்தா, ஏதென்ஸ், கொரிந்து மற்றும் பிற கிரேக்க நகர அரசுகளின் கூட்டணிக்கும், செர்கஸ் தலைமையிலான பாரசீகப் பேரரசுக்கும் இடையே நடந்தது.
பாரசீகப் படையெடுப்பானது கிரேக்கத்தின் மீதான முதல் பாரசீக படையெடுப்பின் தோல்விக்கு பிறகான தாமதமான எதிர்வினையாகும். அப்போரானது மராத்தான் போரில் ஏதெனியன் வெற்றியால் முடிவுக்கு வந்தது. அதற்கு பலிவாங்கும் நோக்கத்துடன் மன்னர் செர்கஸ் பெருமளவில் இராணுவத்தையும் கடற்படையையும் திரட்டி, கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றத் தொடங்கினார். ஏதெனியன் தளபதி தெமிஸ்ட்டோக்ளீஸ், நேச நாட்டு கிரேக்கர்களின் படைகளைக் கொண்டு தெர்மோபைலேயின் வழியே தரைப்போரில் பாரசீகப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், அதே நேரத்தில் ஆர்ட்டிமீசியம் நிரிணையில் பாரசீக கடற்படையைத் தடுக்கவும் முன்மொழிந்தனர். பாரசீகர்களின் வருகையை எதிர்நோக்கி 271 கப்பல்களைக் கொண்ட நேச நாட்டு கடற்படை இவ்வாறு அனுப்பப்பட்டது.
கோடையின் இறுதியில் ஆர்ட்டெமிசியத்தை நெருங்கியது பாரசீகப்படை. மக்னீசியா கடலோரப் பகுதியில் சூறாவளி ஒன்றில் சிக்கி, அவர்களின் 1200 கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. ஆர்ட்டெமிசியத்திற்கு வந்த பிறகு, கிரேக்கர்களை சிக்க வைக்கும் முயற்சியில் பாரசீகர்கள் 200 கப்பல்களை யூபோயா கடற்கரையை சுற்றி அனுப்பினர், ஆனால் இவை மற்றொரு புயலில் சிக்கி கப்பல்கள் உடைந்தன. போரின் முக்கிய நடவடிக்கையாக இரண்டு நாட்கள் சிறிய சண்டைகள் நடந்தன. இரு தரப்பினரும் நாள் முழுவதும் சண்டையிட்டனர், தோராயமாக சமமான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் சிறியதான நேச நாட்டு கடற்படையால் இழப்புகளை தாங்க முடியவில்லை.
அச்சமயத்தில், தெர்மோபைலேயில் நேச நாட்டு தரைப்படை தோற்கடிக்கப்பட்ட செய்தி நேச நாடுகளுக்கு வந்தடைந்தது. மேலும் பாரசீகப் படைகள் தெற்கே ஏதென்சை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் வந்தடைந்தது. கிரேக்கர்களின் உத்தியில் தெர்மோபைலே மற்றும் ஆர்ட்டெமிசியம் என இரண்டையும் தக்க வைத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் கடற்போரில் கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் கருத்தில் கொண்டு, நேச நாடுகளின் எஞ்சிய கடற்படையுடன் சலாமிசுக்கு விரைந்து திரும்ப முடிவு செய்தனர். பாரசீகர்கள் ஃபோசிஸ், பின்னர் போயோட்டியாவைக் கைப்பற்றி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இறுதியாக அட்டிகாவிற்குள் நுழைந்தனர். ஏதென்சை நோக்கி பாரசீக படைகள் வருவதை உணர்ந்து அதன் மக்கள் அங்கிருந்து முன்னதாகவே வெளியேறி இருந்தனர். இந்நிலையில் பாரசீகர்கள் மக்கள் இல்லாத ஏதென்சைக் கைப்பற்றி அதை அழித்தனர். இருப்பினும், கிரேக்க நேச நாட்டுக் கடற்படையை முழுமையாக வெற்றிகொள்வதை நோக்கமாக கொண்டு வந்த, பாரசீகர்கள் பின்னர் கிமு 480 இன் பிற்பகுதியில் சலாமிஸ் போரில் தோற்கடிக்கப்பட்டனர். ஐரோப்பாவில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில், செர்க்செஸ் தனது இராணுவத்தின் பெரும்பகுதியை ஆசியாவிற்கு திரும்பப் பெற்றார். கிரேக்கத்தை வெற்றி கொள்ளும் பணியை தளபதி மார்டோனியசிடம் ஒப்படைத்து திரும்பினார். இருப்பினும், அடுத்த ஆண்டு, பிளாட்டேயா போரில் கிரேக்க நேச நாட்டு இராணுவம் பாரசீகர்களை முழுமையாக தோற்கடித்தது, இதன் மூலம் பாரசீக படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads