இந்திய தேசிய பங்கு சந்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India) இந்தியாவின் இரு பெரும் பங்குச்சந்தைகளுள் ஒன்றாகும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சந்தை 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மொத்தச் சந்தை மதிப்பீடு (market capitalization) அடிப்படையில், இதுவே ஆசியாவின் இரண்டாவது பங்குச் சந்தை. மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது.
Remove ads
பின்புலம்
தேசியப் பங்குச் சந்தை 1993 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவில், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு மூலம் பங்கு வர்த்தகம் செய்வதைப் பரவலாக்கியது, இந்த பங்குச் சந்தையே. இந்தியாவில் பொருளாதாரப் பரிமாற்றங்களை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் சட்டக் கட்டுப்பாட்டில் இது இருக்கின்றது. இந்தச் சந்தையின் பங்குதாரர்கள் ஐடிபிஐ, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் ஆகும் (தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்). இவர்களைத் தவிரக் 'கோல்ட்மான் சாக்ஸ்' நிறுவனம், நியூயார்க் பங்குச் சந்தை போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தேசியப் பங்குச்சந்தையில் பங்குபெற்று உள்ளன. சந்தையின் செம்மையான செயல்பாட்டிற்காகச் சந்தையின் நிர்வாகத்திற்குச் சுதந்திரமாகச் செயல்படும்உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Remove ads
வர்த்தகம்
தேசியப் பங்குச்சந்தையில் 1500 க்கும் மேற்பட்ட பங்குகளின் வர்த்தகம் நடைபெறுகிறது. சந்தையின் தலைமைச் செயலகம், மும்பை நகரில் உள்ளது. செயற்கைக் கோள் தொலைத் தொடர்பைப் பயன்படுத்திக் கணினி வழியாக வர்த்தகம் நடைபெறுகிறது. நேரடிப் பங்கு வர்த்தகத்தைத் தவிர உருவாக்கப்பட்ட நிதி ஒப்பந்தங்கள் (financial derivatives – futures and options), பரஸ்பர நிதிகள் (சமநலநிதிகள்), கடன் ஒப்பந்தங்கள் (bonds), வட்டிவிகித ஒப்பந்தங்கள் (interest rate derivatives) ,அந்நியச் செலாவணி ஒப்பந்தங்கள் (foreign currency derivatives) ஆகியவையும் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன.
தேசியப் பங்குச் சந்தையில் பல சந்தைக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிஃப்டி 50 என்ற குறியீடே மிக முக்கியமானது, பிரபலமானது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களின் பங்கு விலையைக் கொண்டு நிறையிடப்பட்ட சராசரி (weighted average) முறை மூலம் இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்த குறியீட்டின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு மொத்தப் பங்குச்சந்தை செல்லும் போக்கை அறியலாம். 1994 ஆம் ஆண்டு 1000 புள்ளிகள் என்ற தொடக்க அடிப்படையில் ஆரம்பித்த நிஃப்டி குறியீடு தற்போது (2013 ஆம் ஆண்டில்) 6000 புள்ளிகளாக உள்ளது. இதனைத் தவிர 'நிஃப்டி ஜூனியர்', 'நிஃப்டி 500', 'மிட்கேப் குறியீடு' எனப் பிற குறியீடுகளும் உள்ளன.
Remove ads
இயக்கம்
தேசியப் பங்குச் சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயற்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படாது. இப்பங்குச் சந்தையில் பொதுமக்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய இயலாது. சந்தையில் உறுப்பினர்களாக உள்ள தரகர்களிடம் கணக்குத் தொடங்கி அவர்கள் மூலமாகவே வர்த்தகம் செய்யலாம். அவ்வாறு வர்த்தகம் செய்ய விரும்பும் ஒருவர் – அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், நிரந்தர வரிக்கணக்கு எண் (PAN- Permanent Account Number) உடையவராகவும் இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்
- முதல்நிலை இந்தியப்பங்குகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads