இந்திய வானிலை ஆய்வுத் துறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department, IMD), அல்லது சுருங்க வானிலைத் துறை, இந்திய அரசின் புவியறிவியல் அமைச்சின் கீழே உள்ள திணைக்களம் ஆகும். இது வானிலையியல் அவதானிப்புகள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில நடுக்கவியல் குறித்தான முதன்மை முகமையாகும். இதன் தலைமை அலுவலகம் புதுதில்லியில் லோதி சாலையில் அமைந்துள்ளது. இந்தியா முழுமையிலும் நூற்றுக்கணக்கான வானிலை கவனிப்பு மையங்களை இயக்கி வருகின்றது; அந்தாட்டிக்காவிலும் இதன் ஆய்வு மையம் உள்ளது.
உலக வானிலை ஆய்வு அமைப்பின் ஆறு மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. வானிலை முன்னறிவிப்பு, மலாக்கா நீரிணை, வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா உள்ளிட்ட வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு பெயர் வழங்குவதும் அவை குறித்த எச்சரிக்கைகளை பரப்புவதும் இதன் பொறுப்புகளாக உள்ளன.
Remove ads
வரலாறு
1686இல் எட்மண்டு ஏலி இந்தியக் கோடைக்காலத்தில் பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் குறித்த ஆய்வுரையை வெளியிட்டார்; இத்தகைய பருவம் சார்ந்த காற்று திசைமாற்றம் ஆசிய நிலப்பகுதியும் இந்தியப் பெருங்கடல் பகுதியும் வெவ்வேறாக வெப்பமடைவதால் ஏற்படுவதாக முன்மொழிந்திருந்தார். இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது; 1785இல் கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796இல் மதராசு ஆய்வு மையத்தையும் 1826இல் கொலாபா ஆய்வுமையத்தையும் நிறுவப்பட்டன. 19ஆவது நூற்றாண்டின் முதற்பாதியில் நாடெங்கிலும் அவ்வப்பகுதி மாகாண அரசுகளால் பல வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்படலாயின.
கொல்கத்தாவில் 1784இலும் மும்பையில் 1804இலும் நிறுவப்பட்ட ஆசியச் சமூகம் இந்தியாவில் வானிலையியல் ஆய்வுகளை ஊக்குவித்தது. இச்சமூகத்தின் கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆய்விதழில் 1835க்கும் 185க்கும் இடையே என்றி பிடிங்டன் என்பார் வெப்ப மண்டலச் சூறாவளி குறித்து 40 கட்டுரைகள் வெளியிட்டார். இவரே சைக்குளோன் என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்; பாம்புச் சுருள் என்ற பொருள்படும். 1842இல் அவர் தனது சிறப்புமிக்க புயல்களின் விதிகள் என்ற கோட்பாட்டை வெளியிட்டார்.[2]
1864இல் வெப்ப மண்டலச் சூறாவளி ஒன்று கொல்கத்தாவை தாக்கிய பின்னரும் தொடர்ந்து 1866க்கும் 1871க்கும் இடையே பருமழை பொய்த்தமையால் ஏற்பட்ட பஞ்சத்தையும் அடுத்து ஒரே துறை கீழ் வானிலை தரவுகளையும் பகுப்பாய்வுகளையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் செயலாக்கமாக 1875ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்டது. இதன் முதல் அறிவிப்பாளராக என்றி பிரான்சிசு பிளான்போர்டு நியமிக்கப்பட்டார். மே 1889இல் அப்போதையத் தலைநகராக இருந்த கொல்கத்தாவில் இதன் முதல் தலைமை இயக்குநராக ஜான் எலியட் நியமிக்கப்பட்டார். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமையகம் 1905இல் சிம்லாவிற்கும் 1928இல் புனேக்கும் மாற்றப்பட்டது. இறுதியாக 1944இல் இதன் தலைமையகம் புது தில்லிக்கு மாற்றப்பட்டது.[3]
இந்திய விடுதலைக்குப் பிறகு ஏப்ரல் 27, 1949இல் உலக வானிலை ஆய்வு அமைப்பில் உறுப்பினராக இணைந்தது.[4] இந்திய வேளாண்மையில் பருவமழையின் தாக்கத்தால் இத்துறை சிறப்பு பெற்றுள்ளது. ஆண்டு பருவமழையளவை மதிப்பிடுதல், நாடெங்கும் பருவமழையின் பரவலைக் கண்காணித்தல் ஆகியவற்றில் இத்துறை முக்கியப் பங்காற்றி வருகின்றது.[5]
Remove ads
அமைப்பாண்மை

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவராக வானிலையியல் தலைமை இயக்குநர் விளங்குகின்றார். தற்போது புகழ்பெற்ற வேளாண்-வானிலையாளர் முனைவர். இலட்சுமண் சிங் இரத்தோர் இப்பதவியில் உள்ளார். இத்துறைக்கு துணைத் தலைமை இயக்குநர் தலைமையிலான ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன. இவை சென்னை, குவகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புது தில்லி நகரங்களில் அமைந்துள்ளன. தவிரவும் ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. முன்னறிப்பு அலுவலகங்கள், வேளாண் வானிலை ஆய்வு பரிந்துரை சேவை மையங்கள், வெள்ள எச்சரிக்கை அலுவலகங்கள், ஆட்புல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் இந்த மையங்கள் உள்ள இடங்களில் அமைந்துள்ளன.[6]
வானிலைத் தரவுகளைப் பெற தரை, பனியாறுகள், உயர்வெளி, கமழிப் படலங்களிலும் அளவைக் கருவிகளை வைத்துள்ளது. மேகச் சூழலைக் கண்காணிக்க வானிலை கதிரலைக் கும்பா நிலையங்களை இயக்குகின்றது. கூடுதல் தரவுகளை கல்பனா-1 போன்ற இந்தியச் செயற்கைக் கோள்கள், இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் மற்றும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் மூலமும் பெறுகின்றது.[7] இந்தியக் கடற்படை கப்பல்களிலிருந்தும் இந்திய வணிகக் கப்பல்களிலிருந்தும் வானிலைத் தரவுகளைப் பெறுகின்றது.
நில நடுக்கவியல் கண்காணிப்பு மையங்களையும் தேவையான இடங்களில் இயக்கி நில நடுக்கங்களை அளந்தும் கண்காணித்தும் வருகின்றது.
இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வுக் கழகம், தேசிய இடைநிலை நெடுக்க வானிலை முன்கணிப்பு மையம் மற்றும் தேசியப் பெருங்கடல் தொழினுட்பக் கழகம் போன்ற முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads