இப்ராகிம் லௌதி
தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இப்ராகிம் லௌதி ( Ibrahim Lodhi) (இறப்பு: ஏப்ரல் 21, 1526) என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார்.[2][3] இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ஆம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்.[4][5]
இந்தியாவில் ஆட்சி செய்த அரச வம்சங்களுள் ஒன்றான லௌதி வம்சத்தின் கடைசி அரசர் இப்ராஹிம் லௌதி ஆவார். இவர் கி.பி. 1517 - ஆம் ஆண்டு முதல் கி.பி. 1526 வரை ஆட்சி செய்தார். இப்ராஹிமின் தந்தை சிக்கந்தர் லௌதி தாம் இறப்பதற்குமுன் தன் நாட்டைப் பிரித்து தில்லியைத் தலைநகராகக் கொண்ட பகுதியை மூத்த மகன் இப்ராஹிம் லௌதிக்கும், கல்பி கோட்டையினை மையமாகக் கொண்ட பகுதியை இளையமகன் சலால் கானுக்கும் வழங்கினார்.
Remove ads
ஆட்சியும் வீழ்ச்சியும்
கி.பி. 1517 ஆம் ஆண்டில் தில்லி சுல்தானாக இப்ராஹிம் லௌதி பதவி ஏற்றார். இப்ராகிம் லௌதி இவரது தந்தையான சிக்கந்தர் லௌதியின் இறப்புக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சியாளர் ஆனார். ஆனால் தந்தையைப்போல் சிறந்த ஆட்சி புரியும் வல்லமை இவருக்கு அமைந்திருக்கவில்லை. முதல் வேலையாக தம்பியுடன் போரிட்டு அவர் பகுதிகளைக் கைப்பற்றி, பிரிந்த நாட்டை ஒன்றாக்கினார். வெற்றி பெருமிதத்தில் தன் தம்பியின் ஆதரவு பிரபுக்களைப் பழிவாங்கவும், பிரபுக்களின் செல்வாக்கை அழிக்கவும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். எனவே, பிரபுக்கள் சுல்தானை எதிர்த்தனர். அடுத்து இராஜபுத்திரர்களிடமிருந்து குவாலியரைக் கைப்பற்றினார். தொடர்ந்து மேவார் மீது படையெடுத்து தோல்வியடைந்தார்.
நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ராணா சங்கா தனது பேரரசை மேற்கு உத்தரப் பிரதேசம் வரை விரிவாக்கி ஆக்ராவைத் தாக்கும் நிலையில் இருந்தார். கிழக்குப் பகுதியிலும் குழப்பங்கள் இருந்தன. தந்தையின் காலத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களை அகற்றித் தனக்குச் சார்பான இளையோரைப் பதவிகளில் அமர்த்தியதன் மூலம், மூத்த உயர் குடியினரின் வெறுப்பையும் இப்ராகிம் பெற்றிருந்தார். இவரது குடிமக்களும் இவரை விரும்பவில்லை.
Remove ads
ஆப்கானியப் பிரபுக்களின் கலகம்
இப்ராஹிம் லௌதியின் தூண்களாக திகழ்ந்த படைத்தலைவர்கள் (இவரது ஆப்கானியப் பிரபுக்கள்) அரசுக்கெதிராக கலகம் செய்தனர். அவர்களுள் தவுலத்கான் (Daulat Khan), ஆலம்கான் இருவரும் காபூலில் அரசாண்டு வந்த பாபரை தங்கள் உதவிக்கு வருமாறு அழைத்தனர். பெரும் படையோடு வந்த பாபரை வரவேற்க வேண்டிய தவுலத்கானும், ஆலம்கானுமே அவரை எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களை வென்றபின் பாபரின் படைகள் இப்ராஹிமின் படைகளை லாகூரில் தாக்கியபின் காபூல் திரும்பின.
Remove ads
முதலாம் பானிப்பத் போர்
கி.பி. 1525 - ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக பாபர் படையெடுத்து வந்தார். பானிபத் நகரில் இரு படைகளும் மோதின. பாபரின் தற்காப்பு முறைகளைக் கண்டு திகைத்தப் படைகள் சுதாரிப்பதற்குள் பாபர் பீரங்கி தாக்குதல் நடத்தி படைகளைச் சிதறடித்தார். மிகுந்த வீரத்துடன் போர்புரிந்த இப்ராஹிம் லௌதி மரணமடைந்தார். இத்துடன் லௌதி வம்சம் முடிவுக்கு வந்தது. இப்போர் இந்தியாவில் மொகலாயப் பேரரசு ஏற்படக் காரணமாக அமைந்தது. லௌதியின் படையினர் எண்ணிக்கை பாபருடையதை விஞ்சியிருந்த போதிலும், பாபரின் வீரர்களின் திறமையும், லௌதியின் வீரர்கள் படையை விட்டு விலகிக் கொண்டமையும், லௌதியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.[6] பானிப்பத் போர் என்று அழைக்கப்படுவதும், பானிப்பத் என்னும் இடத்தில் இடம்பெற்றதுமான போரில் இப்ராகிம் லௌதி இறந்தார்.
சமாதி
தில்லியில் லௌதி பூங்காவுக்குள் இருக்கும் சீசு கும்பாட் என்பதே இப்ராகிம் லோடியின் சமாதி என்று பிழையாக நம்பப்படுவது உண்டு. உண்மையில் இவரது சமாதி பானிப்பத்தில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில், பூ அலி சா கலந்தர் சூபி குருவின் தர்காவுக்கு அருகின் அமைந்துள்ளது. இது ஒரு மேடைமீது அமைந்துள்ள செவ்வக வடிவமான எளிமையான கட்டிடம் ஆகும். இதனை அடைவதற்குப் பல படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்தச் சமாதியை பிரித்தானியர் புதுப்பித்தனர். பாபரின் கையால் லோடி இறந்தது, சமாதி புதுப்பிக்கப்பட்டது ஆகிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றும் 1866 ஆம் ஆண்டில் இங்கே வைக்கப்பட்டது.[7][8][9]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads