பாபுர்
முதல் முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1526-1530) From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபுர் (Babur, பாரசீகம் - بابر, பொருள்: புலி; பெப்ரவரி 14, 1483 – திசம்பர் 26, 1530) என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மிர்சா சாகிருதீன் முகம்மது (Mīrzā Zahīr ud-Dīn Muhammad) ஆகும். இவர் தன் தந்தை மற்றும் தாய் வழியே, முறையே தைமூர் மற்றும் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார்.[3] இவருக்கு இறப்பிற்குப் பிந்தைய பெயராக பிர்தவ்சு மகானி ('சொர்க்கத்தில் வாழ்பவர்') என்ற பெயர் கொடுக்கப்பட்டது.[4]
பாபுர் சகதாயி துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டவர் ஆவார்.[5] இவர் பெர்கானாப் பள்ளத்தாக்கின் ஆண்டிஜனில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) பிறந்தார். இவர் இரண்டாம் உமர் சேக் மிர்சாவின் (1456–1494, பெர்கானாவின் ஆளுநராக 1469–1494) முதல் மகன் ஆவார். இவரின் சேயோன் தைமூர் (1336–1405) ஆவார். பாபுர் பெர்கானாவின் தலைநகரான அக்சிகெந்தில் 1494ஆம் ஆண்டு அரியணைக்கு தனது பன்னிரண்டாம் வயதில் வந்தார். கிளர்ச்சியை எதிர்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் சமர்கந்தை வென்றார். எனினும், பிறகு சீக்கிரமே, பெர்கானவை இழந்தார். பெர்கானவை மீண்டும் வெல்லும் தனது முயற்சியில் சமர்கந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். 1501இல் இந்த இரண்டு பகுதிகளையும் மீண்டும் வெல்லும் இவரது முயற்சியானது முகம்மது சாய்பானி கான் இவரைத் தோற்கடித்த போது தோல்வியில் முடிந்தது. 1504இல் இரண்டாம் உலுக் பெக்கின் குழந்தை வாரிசான அப்துர் இரசாக் மிர்சாவின் ஆட்சியில் இருந்ததாகக் கருதப்படும் காபூலை இவர் வென்றார். சபாவித்து ஆட்சியாளர் முதலாம் இசுமாயிலுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திய பாபுர், சமர்கந்து உள்ளிட்ட துருக்கிஸ்தானின் பகுதிகளை மீண்டும் வென்றார், ஆனால், மீண்டும் சமர்கந்தையும், பிற புதிதாக வெல்லப்பட்ட நிலங்களையும் சாய்பனிடுகளிடம் இழந்தார்.
சமர்கந்தை மூன்றாவது முறையாக இழந்ததற்குப் பிறகு, பாபுர் தன்னுடைய கவனத்தை இந்தியா மீது திருப்பினார். அண்டை நாடுகளான சபாவித்து மற்றும் உதுமானியப் பேரரசுகளின் உதவியைப் பயன்படுத்தினார்.[6] பொ. ஊ. 1526இல் முதலாம் பானிபட் போரில் தில்லியின் சுல்தானாகிய இப்ராகிம் லௌதியைத் தோற்கடித்தார். முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தார். அந்நேரத்தில், தில்லி சுல்தானகமானது நீண்ட காலமாகச் சிதைந்து வந்த ஒரு காலம் போன சக்தியாக இருந்தது. வட இந்தியாவிலிருந்த வலிமையான சக்திகளில் ஒன்றாக இராணா சங்காவின் திறமையான ஆட்சியின் கீழிருந்த மேவார் இராச்சியமானது மாறி இருந்தது. பிரிதிவிராச் சௌகானுக்குப் பிறகு பல இராசபுத்திர இனக் குழுக்களைச் சங்கா ஒன்றிணைத்தார்.[7] பாபுருக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியாக 1,00,000 இராசபுத்திரர்களைக் கொண்ட இராணுவத்துடன் முன்னேறினர். எனினும், பாபுரின் திறமையான துருப்புகளின் கள அமைப்பு, நவீன உத்திகள் மற்றும் வெடிமருந்தைப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களால் கன்வா யுத்தத்தில் சங்கா ஒரு முக்கியத் தோல்வியைச் சந்தித்தார். இந்திய வரலாற்றில், முதலாம் பானிபட் போரை விட, கன்வா யுத்தமானது மிக முக்கியமான யுத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவை முகலாயர்கள் வென்றதில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இராணா சங்காவின் தோல்வி கருதப்படுகிறது.[8][9][10]
பாபுர் பலமுறை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நசிருதீன் உமாயூன், கம்ரான் மிர்சா மற்றும் இன்டால் மிர்சா ஆகியோர் ஆவர். பாபுர் 1530ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் உமாயூன் ஆட்சிக்கு வந்தார். பாபுர் முதலில் ஆக்ராவில் புதைக்கப்பட்டார். ஆனால், இவரது விருப்பத்தின்படி இவரது உடலானது காபூலுக்குச் கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்பட்டது. உசுபெக்கிசுத்தான் மற்றும் கிர்கிசுத்தானில் இவர் ஒரு தேசியக் கதாநாயகனாகக் கருதப்படுகிறார். இவரது பெரும்பாலான கவிதைகள் பிரபலமான நாட்டுப்புற பாடல்களாக உருவாகியுள்ளன. சகதாயி மொழியில் இவர் தன் சுயசரிதையான பாபுர் நாமாவை எழுதினார். இந்நூல் இவரது பேரன் பேரரசர் அக்பரின் ஆட்சியின் (1556–1605) போது பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
Remove ads
பெயர்
சாகிருதீன் என்ற பெயருக்கு அரேபிய மொழியில் "நம்பிக்கையைத் தற்காப்பவர்" என்று பொருள். பாபுருக்கு இப்பெயரானது சூபித் துறவி கவாஜா அராரால் கொடுக்கப்பட்டது. பாபுரின் தந்தைக்கு ஆன்மிகக் குருவாக கவாஜா அரார் இருந்தார்.[11] இப்பெயரை உச்சரிப்பது நடு ஆசியத் துருக்கிய-மங்கோலிய இராணுவத்திற்குக் கடினமாக இருந்ததே இவரது செல்லப்பெயரான பாபுர் மிகுந்த பிரபலமடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[12] இவரது பெயர் பாபெர்,[13] பாபர்[14] மற்றும் பாபோர்[15] என்று பலவாறாக உச்சரிக்கப்படுகிறது. இப்பெயர் பொதுவாகப் "புலி"யைக் குறிக்கும் பாரசீக வார்த்தையான பாபுரிலிருந்து பெறப்பட்டது எனக் கருதப்படுகிறது.[13][16] இப்பெயர் பிர்தௌசியின் ஷாநாமேவில் அடிக்கடிக் காணப்படுகிறது. இது நடு ஆசியாவின் துருக்கிய மொழிகளில் பிறகு பயன்படுத்தப்பட்டது.[14][17]
Remove ads
பின்னணி


பாபுரின் வரலாற்றுக் குறிப்புகளே இவரது வாழ்க்கையின் தகவல்கள் குறித்த முதன்மையான நூல் ஆதாரமாக விளங்குகின்றன. இவை பாபுர் நாமா என அழைக்கப்படுகின்றன. இவை பாபுரின் தாய் மொழியான சகதாயி துருக்கிய மொழியில் எழுதப்பட்டதாகும்.[18] எனினும், டேல் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, "இவரது துருக்கிய வசனமானது சொற்றொடர் அமைப்பு, வடிவம் அல்லது சொல்லுருவாக்கம், மற்றும் சொல் தொகுதியில் பெருமளவு பாரசீக மயமாக்கப்பட்டதாக இருந்தது".[16] பாபுர் நாமா நூலானது பாரசீக மொழிக்கு பாபரின் பேரன் அக்பரின் ஆட்சியின் போது மொழி பெயர்க்கப்பட்டது.[18]
பாபுர் 14 பெப்ரவரி 1483 அன்று தற்போதைய உசுபெக்கிசுத்தானின் பெர்கானா பள்ளத்தாக்கின் ஆண்டிஜன் நகரத்தில் பிறந்தார். இவர் பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளரான இரண்டாம் உமர் சேக் மிர்சா[19] மற்றும் குத்லுக் நிகர் கனுமின் முதல் மகன் ஆவார். இரண்டாம் உமர் சேக் மிர்சா என்பவர் அபு சயித் மிர்சாவின் மகன் ஆவார். அபு சயித் மிர்சா என்பவர் மீரான் ஷாவின் பேரன் ஆவார். மீரான் ஷா தைமூரின் மகன் ஆவார். குத்லுக் நிகர் கனும் என்பவர் மொகுலிசுதானின் ஆட்சியாளரான யூனுஸ் கானின் (செங்கிஸ் கானின் ஒரு வழித்தோன்றல்) மகள் ஆவார்.[20]
பாபுர் பர்லாஸ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இப்பழங்குடியினம் ஒரு மங்கோலியப் பழங்குடியினமாகும். இவர்கள் பிறகு துருக்கிய[21] மற்றும் பாரசீகக்[22] கலாச்சாரத்தைத் தழுவினர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவர்கள் இஸ்லாம் மதத்திற்கும் மதம் மாறி இருந்தனர். இவர்கள் துருக்கிஸ்தான் மற்றும் குராசானில் வாழ்ந்து வந்தனர். தனது தாய்மொழியான சகதாயி மொழியைத் தவிர, பாபுர் தைமூரிய அரச குலத்தினரின் இணைப்பு மொழியான பாரசீகத்தையும் சரளமாகப் பேசத் தெரிந்தவராக இருந்தார்.[23]
எனவே, பெயரளவில் ஒரு மங்கோலியராக (அல்லது பாரசீக மொழியில் மொகுலாயர்) இருந்த பாபுர் தனது பெரும்பாலான ஆதரவை நடு ஆசியாவின் உள்ளூர் துருக்கிய மற்றும் ஈரானிய மக்களிடம் இருந்து பெற்றார். இவரது ராணுவமானது அதன் இனக்குழுக்களில் வேற்றுமைகளைக் கொண்டதாக இருந்தது. இது பாரசீகர்கள் (பாபுர் இவர்களை "சர்த்துகள்" மற்றும் "தஜிக்குகள்" என்று அறிந்திருந்தார்), ஆப்கானிய இனத்தவர்கள், அரேபியர்கள், மேலும் நடு ஆசியாவைச் சேர்ந்த பர்லாஸ் மற்றும் சகதாயி இனத் துருக்கிய-மங்கோலியர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது.[24]
Remove ads
நடு ஆசியாவின் ஆட்சியாளராக
பெர்கானாவின் ஆட்சியாளராக
1494இல் 11 வயது சிறுவனான பாபுர், "உறுதியாகக் கட்டப்படாத ஒரு புறாக் கூட்டில், புறாக்களுக்கு இரை அளித்துக் கொண்டிருந்த போது அரண்மனைக்குக் கீழே இருந்த ஒரு பள்ளத்தில் அக்கூடு விழுந்ததால்" உமர் சேக் மிர்சா இறந்ததற்குப் பிறகு, தற்போதைய உசுபெக்கிசுத்தானின் பெர்கானாவின் ஆட்சியாளரானார்.[25] இந்த நேரத்தில் அண்டைய இராச்சியத்திலிருந்து வந்திருந்த, இவரது தந்தைக்கு எதிரிகளாக இருந்த இரண்டு உறவினர்கள் மற்றும் இவரது தம்பி ஜஹாங்கீரை ஆட்சியாளராக வருவதை விரும்பிய உயர் குடியினரின் ஒரு குழு ஆகியவை அரியணைக்கு இவர் வருவதற்கு அச்சுறுத்தலாக இருந்தன.[12] இவரைப் பதவியிலிருந்து இறக்குவதிலும், இவரது ஆட்சியின் கீழிருந்த மற்ற நிலப்பரப்புகளையும் இவரிடமிருந்து எடுத்துக்கொள்வதிலும் தங்களது முயற்சிகளில் இவரது உறவினர்கள் ஓய்வற்றவர்களாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். அரியணையைக் காப்பாற்ற இவருக்கு ஓரளவு அதிர்ஷ்டம் கை கொடுத்த போதும், அரியணையைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது இவரது தாய் வழிப் பாட்டி அயிசன் தவுலத் பேகத்தின் உதவி ஆகும்.[12]
இவரது இராச்சியத்தைச் சுற்றி இருந்த பெரும்பாலான நிலப்பரப்புகள் இவரது உறவினர்களால் ஆளப்பட்டன. அவர்கள் தைமூர் அல்லது செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களாக இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடிச் சண்டையிட்டுக் கொண்டனர்.[12] அந்நேரத்தில், மேற்கில் இவரது தந்தை வழி உறவினரால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமர்கந்துக்காக எதிரி இளவரசர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.[சான்று தேவை] இந்நகரத்தைக் கைப்பற்றுவதற்குப் பாபுருக்கும் மிகுந்த விருப்பமிருந்தது.[சான்று தேவை] 1497இல் ஏழு மாத சமர்கந்து முற்றுகைக்குப் பிறகு இவர் அந்நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.[26] அப்போது இவருக்கு 15 வயதாக இருந்தது. இவருக்கு அந்தப் படையெடுப்பானது ஒரு மிகப்பெரிய சாதனையாக இருந்தது.[12] இவரது ராணுவத்தில் இருந்து பல விலகிச் சென்ற போதும், நகரத்தைப் பாபுர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், பிறகு இவருக்குக் கடும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.[சான்று தேவை] அதே நேரத்தில், இவரது தாயகப் பகுதியிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. இது சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் இவரது சகோதரருக்கு ஆதரவாக இருந்த உயர் குடியினரும் அடங்குவர். அவர்கள் பெர்கானாவை இவரிடமிருந்து பறித்துக் கொண்டனர்.[26] பெர்கானாவை மீண்டும் பெற இவர் அணிவகுத்துச் சென்ற போது ஒரு எதிரி இளவரசனிடம் இவர் சமர்கந்தை இழந்தார். இறுதியில் இவருக்கு இரு பகுதிகளுமே கிடைக்காமல் போய்விட்டது.[12] சமர்கந்தை இவர் தன் கட்டுப்பாட்டில் 100 நாட்களுக்கு வைத்திருந்தார். சமர்கந்தை இழந்த தன் தோல்வியை தனது மிகப்பெரிய இழப்பாக இவர் கருதினார். இந்தியாவில் இவரது வெற்றிகளுக்குப் பிறகும் கூட தன் வாழ்வின் பின்னாட்களில் சமர்கந்து இவரது மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.[12]
மூன்றாண்டுகளுக்கு ஒரு வலிமையான இராணுவத்தைக் கட்டமைப்பதில் பாபுர் கவனம் செலுத்தினார். பதாக்சானிலிருந்து குறிப்பாக தஜிக்குகளில் பெரும்பாலானவர்களைச் சேர்த்தார். 1500-1501இல் சமர்கந்து மீது மீண்டும் முற்றுகையிட்டார். உண்மையில் அந்த நகரத்தைக் குறுகிய காலத்திற்குப் பிடித்து வைத்திருந்தார். ஆனால், பதிலுக்கு இவருக்கு மிகுந்த அச்சமூட்டக் கூடிய எதிரியான, உசுப்பெக்குகளின் கானான முகம்மது சாய்பானி பாபுரை முற்றுகையிட்டார்.[26][27] அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தனது சகோதரி கன்சதாவை சாய்பானிக்குத் திருமணம் செய்து கொடுக்கும் நிலைக்குப் பாபுர் தள்ளப்படும் வரும் வரை சூழ்நிலையானது மோசமானது. இதற்குப் பிறகே பாபுரும் அவரது துருப்புகளும் நகரத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இவரது வாழ்நாள் விருப்பமான சமர்கந்து மீண்டும் ஒரு முறை இழக்கப்பட்டது. பிறகு, இவர் பெர்கானாவை மீண்டும் கைப்பற்ற முயற்சித்தார். ஆனால், அங்கும் யுத்தத்தில் தோல்வி அடைந்தார். தனது ஆதரவாளர்களின் ஒரு சிறிய குழுவுடன் தப்பித்தார். நடு ஆசியாவின் மலைகளில் சுற்றித் திரிந்தார். அங்கிருந்த மலை வாழ் பழங்குடியினரிடம் தஞ்சமடைந்தார். 1502இல் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட பெர்கானாவை மீண்டும் கைப்பற்றும் தனது நம்பிக்கைகளை விட்டுவிட்டார். கடைசியில் இவரிடம் எதுவுமே இல்லை. தனது அதிர்ஷ்டத்தை வேறு எங்காவது முயற்சித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[28][29] இறுதியாக, இவர் தாஷ்கந்துக்குச் சென்றார். அது இவரது தாய்வழி மாமனால் ஆளப்பட்டது. ஆனால், அங்கு இவருக்குச் சரியான வரவேற்பு அளிக்கப்படவில்லை. பாபுர் இது குறித்து எழுதியிருப்பதாவது, "தாஷ்கந்தில் தங்கியிருந்த போது நான் மிகுந்த ஏழ்மை நிலையிலும், இழிவைத் தாங்கிக் கொண்டும் இருந்தேன். எந்த ஒரு நாடு குறித்தோ அல்லது நாடு குறித்த நம்பிக்கையோ எனக்கு நம்பிக்கை எழவில்லை!". [29]பெர்கானாவின் ஆட்சியாளராகிய பிறகு 10 ஆண்டுகளின் போது பாபுர் குறுகிய காலமே நீடித்த பல வெற்றிகளைப் பெற்றார். அடைக்கலம் இருக்க எந்த ஒரு இடமுமின்றி இருந்தார். நாடு கடந்து வாழ்ந்தார். அந்நேரத்தில் இவரது நண்பர்களும், விவசாயிகளும் இவருக்கு உதவி புரிந்தனர்.
காபூலில்

காபூலானது பாபுரின் தந்தை வழி உறவினரான இரண்டாம் உலுக் பெக்கால் ஆளப்பட்டு வந்தது. அவர் தனக்கான வாரிசாக ஒரு குழந்தையை விட்டு விட்டு இறந்தார்.[29] பிறகு இந்நகரத்திற்கு முகின் பெக் உரிமை கோரினார். அவர் தவறான முறையில் ஆட்சியைக் கைப்பற்றியவராகக் கருதப்பட்டார். உள்ளூர் மக்கள் அவரை எதிர்த்தனர். 1504இல் பனி படர்ந்த இந்து குஃசு மலைகளைப் பாபுரால் கடக்க முடிந்தது.[26] எஞ்சியிருந்த அர்குனிடுகளிடம் இருந்து காபூலைக் கைப்பற்றினார். அர்குனிடுகள் காந்தாரத்திற்குப் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் மூலம் பாபுர் ஒரு புதிய இராச்சியத்தைப் பெற்றார். தன்னுடைய நிலையை மீண்டும் நிறுவினார். 1526 வரை அதன் ஆட்சியாளராகத் தொடர்ந்தார்.[28] 1505இல் தன்னுடைய புதிய மலை இராச்சியத்தால் குறைவான அளவே வருவாய் உருவாக்கப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் தனது முதல் பயணத்தைப் பாபுர் தொடங்கினார். தனது தகவல் குறிப்புகளில் பாபுர் எழுதியிருப்பதாவது, "இந்துஸ்தானுக்கான எனது விருப்பமானது அடிக்கடித் தோன்றக் கூடியதாக இருந்தது. சாபன் மாதத்தில், சூரியன் கும்பராசியில் பிரகாசித்த போது இந்துஸ்தானுக்காகக் காபூலில் இருந்து நாங்கள் குதிரைப் பயணத்தை மேற்கொண்டோம்." கைபர் கணவாய் வழியாக இது ஒரு குறுகிய பயணமாக இருந்தது.[29]
அதே ஆண்டு, ஹெறாத்தின் சுல்தான் உசைன் மிர்சா பய்கராவுடன் பாபுர் இணைந்தார். உசைன் மிர்சா தைமூரிய அரச மரபைச் சேர்ந்தவரும், பாபுரின் ஒரு தூரத்து உறவினரும் ஆவார். இவர்கள் இருவரும் தங்களது பொது எதிரியான உசுப்பெக் சாய்பானிக்கு எதிராக இணைந்தனர்.[30] எனினும், இத்திட்டமானது செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில், 1506இல் உசைன் மிர்சா இறந்தார். போருக்குச் செல்ல அவரது இரண்டு மகன்களும் தயக்கம் காட்டினர்.[29] இரு மிர்சா சகோதரர்களின் அழைப்புக்குப் பிறகு பாபுர் போருக்குப் பதிலாக ஹெறாத்தில் தங்கியிருந்தார். எனினும், நகரத்தின் தீயொழுக்கம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையால் இவர் அருவருப்புக்குள்ளானார்.[31] அங்கு ஏராளமான அளவில் இருந்த சிந்தனை இன்ப நாட்டம் குறித்து இவர் ஆச்சரியமடைந்தார். அதைப் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளதாவது, "கற்றறிந்த மற்றும் நிகரான மனிதர்களால் [இந்நகரம்] நிரப்பப்பட்டுள்ளது."[32] சகதாயி கவிஞரான மிர் அலி சிர் நவாயின் கவிதைகளுடன் இவர் பழக்கப்பட்டவரானார். சகதாயியில் எழுதத் தொடங்கியவராகக் கருதப்படும் இக்கவிஞர், சகதாயியை ஓர் இலக்கிய மொழியாகப் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.[33] இம்மொழியில் நவாயின் திறனானது பாபுரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. பாபுரின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுத இம்மொழியைப் பயன்படுத்துவதில் இக்கவிஞரின் தாக்கமும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு இரண்டு மாதங்களைப் பாபுர் கழித்தார். தன் குறைந்து வந்த பொருள் வளம் காரணமாக இங்கிருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்.[30] பிறகு, இந்நகரமானது சாய்பானியால் இராணுவ ஓட்டத்திற்கு உள்ளானது. மிர்சாக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.[31] ஹெறாத்தின் இழப்புக்குப் பிறகு தைமூரிய அரசமரபின் ஓர் ஆட்சியில் உள்ள ஆட்சியாளராகப் பாபுர் இருந்தார். மேற்கில் சாய்பானியின் படையெடுப்பு காரணமாக பல இளவரசர்கள் காபூலில் பாபுரிடம் அடைக்கலம் தேடி வந்தனர்.[31] எனவே, தைமூரிய அரச மரபினர் மத்தியில் இவர் பாட்ஷா (பேரரசர்) என்ற பட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எனினும், இவரது பெரும்பாலான பூர்வீக நிலங்கள் கைப்பற்றப்பட்டதன் காரணமாக இந்தப் பட்டம் முக்கியத்துவம் அற்றதாக இருந்தது. காபூலே ஆபத்தில் இருந்தது. சாய்பானி தொடர்ந்து ஓர் அச்சுறுத்தலாக இருந்தார்.[31] காபூலில் ஒரு கிளர்ச்சியாக வெடிக்க வாய்ப்பு இருந்த ஒரு சூழ்நிலையிலிருந்து பாபுர் மீண்டார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது சில முன்னணித் தளபதிகள் மத்தியில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியானது காபூலில் இருந்து பாபுரை வெளியேறும் நிலைக்குத் தள்ளியது. வெகு சில தோழர்களுடன் பாபுர் தப்பினார். பாபுர் சீக்கிரமே நகரத்திற்குத் திரும்பி வந்தார். காபூலை மீண்டும் கைப்பற்றினார். எதிராளிகளின் கூட்டணியை மீண்டும் பெற்றார். அதே நேரத்தில், 1510இல் சபாவித்துப் பாரசீகத்தின் ஷாவான முதலாம் இசுமாயிலால் தோற்கடிக்கப்பட்டுச் சாய்பானி கொல்லப்பட்டார்.[34]
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது பூர்வீக நிலப்பரப்புகளை மீண்டும் வெல்ல பாபுரும், எஞ்சிய தைமூரிய அரச மரபினரும் செயலாற்றினர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பாபுர் மற்றும் ஷா இசுமாயில் நடு ஆசியாவின் பகுதிகளைக் கைப்பற்றும் ஒரு முயற்சிக்காக ஒரு கூட்டணியை உருவாக்கினர். இசுமாயிலின் உதவிக்குப் பதிலாகத் தான் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு இராஜாதி இராஜனாகச் சபாவித்துக்கள் செயல்படலாம் என்ற அனுமதியைப் பாபுர் கொடுத்தார்.[35] இவ்வாறாக, 1513இல் தனது சகோதரர் நசீர் மிர்சாவைக் காபூலை ஆள விட்டு விட்டு, பிறகு சமர்கந்தை மூன்றாவது முறையாகப் பாபுர் வென்றார். இவர் மேலும் புகாராவையும் கைப்பற்றினார். ஆனால், உசுப்பெக்குகளிடம் இந்த இரண்டு நகரங்களையும் மீண்டும் இழந்தார்.[28][31] இவரது சகோதரி கன்சதாவையும், பாபுரையும் ஷா இசுமாயில் மீண்டும் இணைத்து வைத்தார். அண்மையில் இறந்த சாய்பானியால் இவரது சகோதரி சிறைவைக்கப்பட்டுத் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தார்.[36] 1514இல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காபூலுக்குப் பாபுர் மீண்டும் திரும்பினார். தொடர்ந்து வந்த இவரது ஆட்சியின் 11 ஆண்டு காலமானது பெரும்பாலும் ஆப்கானியப் பழங்குடியினங்கள், இவரது உயர் குடியினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த ஒப்பீட்டளவில் முக்கியத்துவமற்ற கிளர்ச்சிகளை எதிர்கொள்வதிலும், கிழக்கு மலைகள் வழியாக ஊடுருவல்களை நடத்துவதிலும் கழிந்தது.[31] இக்காலமானது ஒப்பீட்டளவில் இவருக்கு அமைதியான காலமாக இருந்த போதிலும், தனது இராணுவத்தை நவீனப்படுத்தவும், பயிற்சி கொடுக்கவும் பாபுர் தொடங்கினார்.[37]
Remove ads
அயல் நாட்டு உறவுகள்

நசுமே சானியால் தலைமை தாங்கப்பட்ட சபாவித்து இராணுவமானது நடு ஆசியாவில் குடி மக்களைப் படுகொலை செய்தது. பிறகு பாபுரின் ஆதரவைக் கேட்டது. பாபுர் சபாவித்துக்களுக்குப் பின் வாங்குமாறு அறிவுரை கூறினார். எனினும் சபாவித்துக்கள் மறுத்தனர். கசுதேவான் யுத்தத்தின் போது போர்ப் பிரபு உபயத்துல்லா கானால் தோற்கடிக்கப்பட்டனர்.[38]
உதுமானியர்களுடனான பாபுரின் ஆரம்ப கால உறவுகள் நன்முறையில் இல்லை. ஏனெனில், உதுமானியச் சுல்தான் முதலாம் செலிம் பாபுரின் எதிரியான உபயத்துல்லா கானுக்குச் சக்தி வாய்ந்த திரி இயக்கச் சுடுகலன்களையும், பீரங்கிகளையும் கொடுத்தார். 1507இல் முதலாம் செலிமை பாபுர் தன்னுடைய இராஜாதி இராஜனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆணையிடப்பட்ட போது பாபுர் அதற்கு மறுத்தார். கசுதேவான் யுத்தத்தின் போது உபயத்துல்லா கானின் படைகளை எதிர்கொள்வதற்காகக் கிசில்பாசு சேவை வீரர்களைத் திரட்டினார். பாபுர் சபாவித்துக்களுடன் இணைந்து விடுவார் என்று அஞ்சிய முதலாம் செலிம் 1513இல் பாபுருடன் சமரசம் செய்து கொண்டார். பாபுருக்கு அவரது படையெடுப்புகளில் உதவுவதற்காகச் சேணேவி வீரரான உசுதாத் அலி குலி, திரி இயக்கச் சுடுகலன் குறி வல்லவரான முசுதபா ருமி மற்றும் பல பிற உதுமானியத் துருக்கியர்களை அனுப்பி வைத்தார். இந்தக் குறிப்பான உதவியானது எதிர்கால முகலாய-உதுமானிய உறவுகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.[39] உதுமானியர்களிடமிருந்து பாபுர் திரி இயக்கச் சுடுகலன்கள் மற்றும் பீரங்கிகளை முற்றுகையின் போது மட்டுமின்றி போர்க்களங்களிலும் பயன்படுத்தும் உத்தியைக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் ஒரு முக்கிய அனுகூலத்தை இச்செயல்முறை பாபுருக்குக் கொடுத்தது.[37]
Remove ads
முகலாயப் பேரரசை தோற்றுவித்தல்


பாபுர் இன்னும் உசுப்பெக்குகளிடம் இருந்து தப்பிக்க நினைத்தார். காபூலுக்கு வடக்கே இருந்த பதாக்சானைத் தவிர்த்து இந்தியாவில் தஞ்சம் அடைய நினைத்தார். அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "இவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நாம் நமக்கென ஒரு இடத்தைப் பற்றி நினைக்கவேண்டும். இந்தக் கடினமான சூழ்நிலையில் நமக்கும் நம்முடைய வலிமையான எதிரிகளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்."[37] சமர்கந்தை இழந்த பிறகு வட இந்தியாவை வெல்வதற்கான பணியில் தனது முழு கவனத்தைப் பாபுர் செலுத்தினார்; கி. பி. 1519இல் தற்போதைய பாக்கித்தானில் உள்ள செனாப் ஆற்றைக் அடைந்தார்.[28] 1524 வரை இவரது குறிக்கோள் பஞ்சாப் வரை தனது ஆட்சியை நீட்டிப்பதாக மட்டுமே இருந்தது. ஏனெனில், தனது சேயோன் தைமூரின் மரபைப் பின்பற்றுவதற்காகத் தைமூரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அதை ஆள நினைத்தார்.[37] அந்நேரத்தில் வட இந்தியாவின் பகுதிகள் லௌதி அரச மரபின் இப்ராகிம் லௌதியின் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆனால் அந்த அரசு சிதைந்து கொண்டிருந்தது. பலர் பேரரசில் இருந்து விலக ஆரம்பித்து இருந்தனர். பஞ்சாபின் ஆளுநரான தௌலத் கான் லௌதி மற்றும் இப்ராகிமின் உறவினரான அலாவுதீன் ஆகியோரிடமிருந்து பாபுருக்கு அழைப்புகள் வந்தன.[40] இப்ராகிம் லௌதிக்கு ஒரு தூதுவரைப் பாபுர் அனுப்பினார். தான் தான் அரியணைக்கு உண்மையான வாரிசு என்று கூறினார். ஆனால் அந்தத் தூதுவர் இலாகூரில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.[28]
1524இல் பாபுர் பஞ்சாபின் இலாகூருக்குத் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இப்ராகிம் லௌதியால் அனுப்பப்பட்ட படையானது தௌலத் கான் லௌதியை விரட்டி இருந்தது.[41] பாபுர் இலாகூரை அடைந்த போது லௌதி இராணுவமானது இலாகூரை விட்டு வெளியேறி இருந்தது. இலாகூரைக் கடந்த பாபுர் திபல்பூருக்குப் பயணித்தார். இப்ராகிம் லௌதியின் மற்றொரு கிளர்ச்சியாளரான ஆலம் கானை ஆளுநராக நியமித்தார்.[42] ஆலம் கானும் சீக்கிரமே பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு காபூலுக்குத் தப்பினார். இதற்குப் பதிலாக ஆலம் கானுக்குப் பாபுர் துருப்புகளைக் கொடுத்தார். தௌலத் கான் லௌதியுடன் இணைந்த ஆலம் கான் 30,000 துருப்புகளுடன் இப்ராகிம் லௌதியின் தில்லியை முற்றுகையிட்டார்.[43] இப்ராகிம் லௌதி ஆலம் கானின் இராணுவத்தை எளிதாகத் தோற்கடித்து விரட்டினார். தான் பஞ்சாபை ஆக்கிரமிப்பதை லௌதி அனுமதிக்க மாட்டார் என்பதைப் பாபுர் உணர்ந்தார்.[43]
முதலாம் பானிபட் போர்

நவம்பர் 1525இல் பெசாவரில் இருந்த பாபுருக்குத் தௌலத் கான் லோதி கட்சி மாறிய செய்தியானது கிடைத்தது. அலாவுதீனைப் பாபுர் துரத்தியடித்தார். பிறகு தௌலத் கான் லௌதியை எதிர் கொள்வதற்காக இலாகூருக்குப் பாபுர் அணி வகுத்தார். பாபுரின் இராணுவம் வருவதைக் கண்டவுடனேயே தௌலத்தின் இராணுவமானது மறைந்து போனது.[28] தௌலத் சரணடைந்தார். மன்னிக்கப்பட்டார். சிந்து ஆற்றைக் கடந்து மூன்று வாரங்களுக்குள்ளாகவே இவ்வாறாகப் பாபுர் பஞ்சாபின் எசமானன் ஆனார்.
சிருகிந்து வழியாகத் தில்லிக்குப் பாபுர் அணி வகுத்தார். 20 ஏப்ரல் 1526இல் பானிபட்டை இவர் அடைந்தார். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த சுமார் 1,00,000 வீரர்கள் மற்றும் 100 யானைகளைக் கொண்டிருந்த இப்ராகிம் லௌதியின் இராணுவத்தை இவர் அங்கு சந்தித்தார்.[28][40] அடுத்த நாள் தொடங்கிய யுத்தத்தில் துலுக்மா உத்தியைப் பாபுர் பயன்படுத்தினார். இப்ராகிம் லௌதியின் இராணுவத்தைச் சுற்றி வளைத்தார். சேணேவி சுடுதலை நேரடியாக எதிர் கொள்ளும் நிலைக்கு அந்த இராணுவத்தைத் தள்ளினார். மேலும், அதன் போர் யானைகளையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார்.[40] இந்த யுத்தத்தின் போது இப்ராகிம் லௌதி இறந்தார். இவ்வாறாக லௌதி அரசமரபு முடிவுக்கு வந்தது.[28]
இந்த வெற்றியைப் பற்றி தனது நினைவு குறிப்புகளில் பாபுர், "வலிமையான இராணுவமானது அரை நாளுக்குள்ளாகவே தூள் தூளானது" என்று குறிப்பிட்டுள்ளார்.[44]
முதல் பானிபட் போருக்குப் பிறகு பாபுர் தில்லி மற்றும் ஆக்ராவை ஆக்கிரமித்தார். தில்லி சுல்தான் இப்ராகிம் லௌதியின் அரியணையைக் கைப்பற்றினார். இறுதியில் இந்தியாவில் முகலாய ஆட்சியின் உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தார். எனினும், வட இந்தியாவின் ஆட்சியாளராக இவர் வருவதற்கு முன்னர் இராணா சங்கா போன்ற இராசபுத்திரர்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது.[45]
கன்வா யுத்தம்
கன்வா யுத்தமானது பாபுருக்கும், மேவாரின் இராசபுத்திர ஆட்சியாளரான இராணா சங்காவுக்கும் 16 மார்ச் 1527இல் நடந்தது. பாபுரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய இராணா சங்கா விரும்பினார். இந்தியாவில் ஆட்சி செய்யும் ஒரு அயல் நாட்டவராகப் பாபுரை இராணா சங்கா கருதினார். தில்லி மற்றும் ஆக்ராவை இணைப்பதன் மூலம் இராசபுத்திர நிலப்பரப்புகளை விரிவாக்கவும் இராணா சங்கா விரும்பினார். தங்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதன் மூலம் பாபுர் ஏமாற்று இயல்பைக் காட்டுவதாக எண்ணிய ஆப்கானியத் தலைவர்கள் இராணா சங்காவிற்கு ஆதரவளித்தனர். ஆக்ராவை நோக்கி இராணா சங்கா முன்னேறுவது குறித்த செய்தியை அறிந்த பாபுர் கன்வாவில் (தற்போது இராசத்தானில் உள்ளது) ஒரு தற்காப்பு நிலையை மேற்கொண்டார். அங்கிருந்து பிறகு ஒரு எதிர்த் தாக்குதலைத் தொடங்கலாம் எனப் பாபுர் நம்பினார். கே. வி. கிருட்டிண இராவ் என்கிற வரலாற்றாளர், தனது "உயர் தரமான தளபதித்துவம்" மற்றும் நவீன உத்திகள் காரணமாகப் பாபுர் இந்த யுத்தத்தை வென்றார் என்கிறார். இந்தியாவில் நடைபெற்ற யுத்தங்களில் பீரங்கிகளும், நீண்ட துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்ட முதல் யுத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்துத் தலைவர் சில்காதி 6,000 வீரர்களைக் கொண்ட ஒரு காவல் படையுடன் பாபுரின் இராணுவத்தில் இணைந்த போது இராணா சங்கா "நம்பிக்கை துரோகத்தை" எதிர் கொண்டார் என இராவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.[46]
தலைமைத்துவத்தில் சங்காவின் திறமையைப் பாபுர் அங்கீகரித்தார். அந்நேரத்தில் முஸ்லிம் அல்லாத இரண்டு மிகப்பெரிய இந்திய மன்னர்களில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டார். அந்த மற்றொருவர் விசயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆவார்.[47]
சந்தேரி யுத்தம்
கன்வா யுத்தம் நடந்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு சந்தேரி யுத்தம் நடைபெற்றது. தன்னுடனான சண்டையை மீண்டும் தொடர இராணா சங்கா ஆயத்தமாகிறார் என்ற செய்தியை அறிந்த பாபுர் இராணாவைத் தனிமைப் படுத்துவதற்காக அவரது உறுதியான கூட்டாளிகளில் ஒருவரான மல்வாவின் ஆட்சியாளரான மேதினி இராயைத் தோற்கடிக்க முடிவு செய்தார்.[48][49]
சந்தேரியை அடைந்த பிறகு 20 சனவரி 1528இல்[48] ஓர் அமைதி முயற்சியாகச் சந்தேரிக்கு பதிலாக மேதினி இராய்க்கு சம்சபாத்தைப் பாபுர் அளிக்க முன் வந்தார். ஆனால், இந்த அளிப்பானது நிராகரிக்கப்பட்டது.[49] இரவில் பாபுரின் இராணுவத்தால் சந்தேரியின் வெளிப்புறக் கோட்டையானது கைப்பற்றப்பட்டது. அடுத்த நாள் காலையில் மேல் கோட்டையானது கைப்பற்றப்பட்டது. இறுதித் தாக்குதலின் 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே மேல் கோட்டை வீழ்ந்தது குறித்து பாபுரே ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.[48] வெற்றிக்கு எந்த வாய்ப்பும் இல்லாதால் மேதினி இராய் ஒரு சௌகருக்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வின்போது கோட்டைக்குள் இருந்த பெண்களும், குழந்தைகளும் தீக்குளித்தனர்.[48][49] மேதினி இராயின் வீட்டில் ஒரு குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் கூடினர். அவர்கள் ஒட்டுமொத்தத் தற்கொலையாக ஒருவரை மாற்றி ஒருவர் கொன்றனர். இந்தத் தியாகமானது பாபுரின் கவனத்தை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. தனது சுயசரிதையில் எதிரியைப் புகழும் ஒரு சொல்லைக்கூட இவர் வெளிப்படுத்தவில்லை.[48]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
அக்பரின் ஆட்சி காலத்தின் போது மொழிபெயர்க்கப்பட்ட பாபுர்நாமா நூலில் உள்ள ஓவியங்களை தவிர பாபுரின் உருவ அமைப்பு பற்றிய குறிப்புகள் கிடையாது.[29] தனது சுயசரிதையில் பாபுர் தான் வலிமையாக உடலளவில் நேர்த்தியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கண்ட அனைத்து முக்கிய நதிகளையும் நீந்தி கடந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றை இரண்டு முறை நீந்திக்கடந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.[50]
பாபுர் ஆரம்பத்தில் பழைய இந்துசுத்தானி மொழியை அறிந்திருக்கவில்லை; எனினும், இவரது துருக்கியக் குழு மொழியின் கவிதைகள் இவரது பிந்தைய வாழ்க்கையில் அதன் சொல் தொகுதியைப் பின்பற்ற ஆரம்பித்தார் என்பதைக் காட்டுகின்றன.[51]

அமைதியான சூழ்நிலை நிலவிய காலமான காபூலில் ஆட்சி செய்த காலத்தில் பாபுர் இலக்கியம், ஓவியம், இசை மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[37]
Remove ads
கவிதை

பாபுர் ஒரு பாராட்டப்பட்ட எழுத்தாளர் ஆவார். இவர் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். இவரது மிகுந்த விருப்பத்திற்குரிய உடைமைகளில் ஒன்றாக இவரது நூலகம் திகழ்ந்தது. இவர் தன்னுடன் நூலகத்தை எப்போதுமே எடுத்துச் செல்வார். புதிதாக வெல்லப்பட்ட நிலங்களில் இவர் தேடிய பொக்கிஷங்களில் நூல்களும் ஒன்றாக இருந்தன. இவரது நினைவுக் குறிப்புகளில் வெல்லப்பட்ட நிலப்பரப்பில் உள்ள மன்னர்கள் மற்றும் உயர்குடியினரை இவர் பட்டியலிட்ட போது புலவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற கற்றறிந்த மக்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.[52]
இவருடைய 47 ஆண்டு வாழ்க்கையின் போது, ஒரு செழிப்பான இலக்கிய மற்றும் அறிவியல் பாரம்பரியத்தை இவர் விட்டுச் சென்றார். இவருடைய புகழ்பெற்ற நினைவுக்குறிப்பான பாபுர் நாமாவையும் இவர் எழுதினார். மேலும், அழகான வரிகளைக் கொண்ட வேலைப்பாடுகள் அல்லது கசல்களையும், கவிதைக் கலைகளையும், இசை மற்றும் காத்தி பாபுரி என்று அறியப்பட்ட ஒரு தனித்துவமான வனப்பெழுத்தையும் இவர் எழுதினார்.[53][54][55][56]
பாபுரின் பாபுர் நாமா என்பது நினைவுக் குறிப்புகளின் ஒரு தொகுப்பு ஆகும். இது சகதாயி மொழியில் எழுதப்பட்டது. பிறகு, பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது முகலாய அவையின் பொதுவான இலக்கிய மொழியான பாரசீகத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது.[57] எனினும், பாபுர் நாமாவில் பாபுரின் துருக்கி மொழிக் குழு வசனமானது அதன் சொற்றொடர் அமைப்பு, சொல் தொகுதி மற்றும் வடிவத்தில்[58] ஏற்கனவே பெருமளவு பாரசீகமயமாக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் பல சொற்றொடர்களும், சிறு கவிதைகளும் பாரசீக மொழியில் இருந்தன.
பாபுர் தனது பெரும்பாலான கவிதைகளை சகதாயி துருக்கிய மொழியில் எழுதினார். இம்மொழியை இவர் துர்கி என்ற பெயரால் அறிந்திருந்தார். ஆனால், இவர் மேலும் பாரசீக மொழியிலும் கவிதைகளை எழுதினார். எனினும், துருக்கி மொழிக் குழுவில் இவரது இலக்கிய பணிகளுக்காகவே இவர் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார். இவை அலி சிர் நவாயின் கவிதைகளுடன் ஒப்பிடப்படுவதற்கு ஈடாக இருந்தன.[52]
Remove ads
குடும்பம்
மனைவிகள்
- ஆயிசா சுல்தான் பேகம் (தி. 1499; வி. 1503), சுல்தான் அகமது மிர்சாவின் மகள் — பாபுரின் முதல் மனைவி
- சைனப் சுல்தான் பேகம் (தி. 1504; இ. 1506–07), சுல்தான் மகுமூது மிர்சாவின் மகள்
- மகம் பேகம் (தி. 1506) — பாபுரின் முதன்மை மற்றும் விருப்பத்திற்குரிய பட்டத்து இராணி
- மசூமா சுல்தான் பேகம் (தி. 1507; இ. 1509), சுல்தான் அகமது மிர்சாவின் மகள் மற்றும் ஆயிசா சுல்தான் பேகத்தின் ஒன்று விட்ட தங்கை
- பீபி முபாரக்கா (தி. 1519), யூசுப்சாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த பஷ்தூன்
- குல்ருக் பேகம் (பாபுருக்கு குல்ருக் பேகம் அல்லது குல்பர்க் பேகம் என்ற ஒரு மகளும் இருந்தார்)
- தில்தர் பேகம்
- குல்னர் அகாச்சா, சிர்காசியத் துணைவி
- நர்குல் அகாச்சா, சிர்காசியத் துணைவி
பாபுரின் மகள்களில் ஒருவரின் தாயான குல்ருக் பேகத்தின் அடையாளம் குறித்து தெளிவற்ற தன்மை நிலவுகிறது. சுல்தான் மகுமூது மிர்சா மற்றும் அவரது மனைவி பாசா பேகம் ஆகியோரின் மகள் குல்ருக்கின் தாயாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குல்ருக்கின் தாய் சில நூல் ஆதாரங்களில் சலிகா சுல்தான் பேகம் என்று குறிப்பிடப்படுகிறார். எனினும், இப்பெயர் பாபுர் நாமா அலல்து குல்பதன் பேகத்தில் நூல்களில் குறிப்பிடப்ப்டவில்லை. இது இப்பெயரில் ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இப்பெண் உண்மையில் இல்லாமலேயே இருந்திருக்கலாம் அல்லது தில்தர் பேகமும் இப்பெண்ணும் ஒரே நபராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
குழந்தைகள்
பாபுரின் மகன்கள்:
- நசிருதீன் உமாயூன் (பி. 1508; இ. 1556) — தாய் மகம் பேகம் — பாபுருக்குப் பிறகு இரண்டாம் முகலாயப் பேரரசர் ஆனார்
- கம்ரான் மிர்சா (பி. 1512; இ. 1557) — தாய் குல்ருக் பேகம்
- அசுகாரி மிர்சா (பி. 1518; இ. 1557) — தாய் குல்ருக் பேகம்
- இன்டால் மிர்சா (பி. 1519; இ. 1551) — தாய் தில்தர் பேகம்
- அகமது மிர்சா (இளம் வயதிலேயே இறந்தார்) — தாய் குல்ருக் பேகம்
- சாருக் மிர்சா (இளம் வயதிலேயே இறந்தார்) — தாய் குல்ருக் பேகம்
- பர்புல் மிர்சா (குழந்தைப் பருவத்திலேயே இறந்தார்) — தாய் மகம் பேகம்
- அல்வர் மிர்சா (இளம் வயதிலேயே இறந்தார்) — தாய் தில்தர் பேகம்
- பரூக் மிர்சா (குழந்தைப் பருவத்திலேயே இறந்தார்) — தாய் மகம் பேகம்
பாபுரின் மகள்கள்:
- பக்ருன்னிசா பேகம் (பி. மற்றும் இ. 1501) — தாய் ஆயிசா சுல்தான் பேகம்
- அயிசன் தௌலத் பேகம் (குழந்தைப் பருவத்திலேயே இறந்தார்) — தாய் மகம் பேகம்
- மெகர் சகான் பேகம் (குழந்தைப் பருவத்திலேயே இறந்தார்) — தாய் மகம் பேகம்
- மசூமா சுல்தான் பேகம் (பி. 1508) — தாய் மசூமா சுல்தான் பேகம் — கணவர் முகம்மது சமான் மிர்சா.
- குல்சர் பேகம் (குழந்தைப் பருவத்திலேயே இறந்தார்) — தாய் குல்ருக் பேகம்
- குல்ருக் பேகம் (குல்பர்க் பேகம்) — தாயின் அடையாளம் உறுதிப் படுத்தப்படவில்லை, ஒரு வேளை தில்தர் பேகம் அல்லது ச்லிகா சுல்தான் பேகமாக இருந்திருக்கலாம் — கவாசா கான் நக்சுபந்தியின் மகனான நூருதீன் முகம்மது மிர்சாவைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு சலீமா சுல்தான் பேகம் பிறந்தார். சலீமா சுல்தான் பேகம் முதலில் பைராம் கானையும், பிறகு முகலாயப் பேரரசர் அக்பரையும் திருமணம் செய்து கொண்டார்.
- குல்பதன் பேகம் (பி. அண். 1523 – இ. 1603) — தாய் தில்தர் பேகம் — தன் தந்தையின் தாய் மாமனான மொகுலிசுதானின் அகமது அலக்கின் பேரனும், தன் தந்தையின் உறவினரான மொகுலிசுதானின் அயிமன் கவாசா சுல்தானின் மகனுமான கிசிர் கவாசா கானைத் திருமணம் செய்து கொண்டார்.
- குல்ச்சேரா பேகம் (பி. அண். 1515 – இ. 1557) — தாய் தில்தர் பேகம் — பாபுரின் தாய் மாமனான மொகுலிசுதானின் அகமது அலக்கின் மகன் சுல்தான் துக்தா புகா கானை முதலில் 1530இல் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக அப்பாசு சுல்தான் உசுப்பெக்கைத் திருமணம் செய்து கொண்டார்.
- குல்ரங் பேகம் — தாய் தில்தர் பேகம் — பாபுரின் தாய் மாமனான மொகுலிசுதானின் அகமது அலக்கின் மகன் ஒன்பதாவது மகன் இசான் தைமூர் சுல்தானி 1530இல் திருமணம் செய்து கொண்டார்.
Remove ads
இறப்பும், மறைவும்

பாபுர் ஆக்ராவில் தனது 47ஆம் வயதில் 5 சனவரி [யூ.நா. 26 திசம்பர் 1530] 1531 அன்று இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மூத்த மகன் உமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவர் முதலில் ஆக்ராவில் புதைக்கப்பட்டார். ஆனால், இவரது விருப்பப்படி இவரது உடலானது காபூலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காபூலின் பாக்-இ பாபுரில் 1539 மற்றும் 1544க்கு இடைப்பட்ட காலத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது.[59][45]

ஒரு தைமூரியராக பாபுர் பாரசீகக் கலாச்சாரத்தால் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இவரது பேரரசானது இந்திய துணைக்கண்டத்தில் பாரசீகச் சூழ்நிலையின் விரிவாக்கத்தின் வளர்ச்சியையும் கொடுத்தது என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.[15][60] இவர் தன் வகையில் தைமூரிய மறுமலர்ச்சியைப் பெற்றவராக உருவானார். இந்தியாவில் கலை சார்ந்த இலக்கியம் மற்றும் சமூக அம்சங்களின் அறிகுறிகளை விட்டுச் சென்றார்.[61]
உதாரணமாக ஈரானிய கலைக்களஞ்சியத்தில் எப். லீமன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
இவரது பிறப்பிடம், சமூக சூழ்நிலை, பயிற்சி மற்றும் கலாச்சாரம் ஆகியவை பாரசீகக் கலாச்சாரத்தில் ஆழ்ந்து தோய்ந்திருந்தன. எனவே, இவரது வழித்தோன்றலான முகலாயர்கள் இக்கலாச்சாரத்தை ஆதரித்துப் பேணுவதற்கு பெரும்பான்மையான காரணமாகப் பாபுர் திகழ்ந்தார். மேலும், இந்தியத் துணைக் கண்டத்தில் பாரசீக கலாச்சாரத் தாக்கத்தின் விரிவாக்கத்திற்கும் காரணமாக இருந்தார். இவை சிறந்த இலக்கிய, கலை சார்ந்த மற்றும் வரலாற்று நூல் விளைவுகளை ஏற்படுத்தின.[22]
பாபுரின் கால மக்களைத் தற்போதைய நடு ஆசிய இனத்தவருடன் ஒப்பிடும் எந்த ஒரு செயலும் இக்காலத்திற்குப் பொருந்தாததாக இருப்பினும், சோவியத் மற்றும் உசுப்பெக் நூல் ஆதாரங்கள் பாபுரை ஓர் உசுப்பெக் இனத்தவராகவே கருதுகின்றன.[62][63][64] அதே நேரத்தில், சோவியத் ஒன்றியக் காலத்தில் அறிஞர்கள் பாபுரைக் கனவியற்படுத்துவதிலும், போற்றுவதிலும் இருந்து தடை செய்யப்பட்டனர். அலி சிர் நவாய் உள்ளிட்ட பிற வரலாற்று நபர்களுக்கும் இதே நிலை நீடித்தது.[65]

பாபுர் உசுப்பெக்கிசுத்தானில் ஒரு தேசியக் கதாநாயகனாகக் கருதப்படுகிறார்.[66] 14 பெப்ரவரி 2008 அன்று இவரது 525வது பிறந்த ஆண்டை நினைவு படுத்துவதற்காக உசுப்பெக்கிசுத்தான் இவரது பெயரில் அஞ்சல் தலைகளை வெளியிட்டது.[67] பாபுரின் பெரும்பாலான பாடல்கள் பிரபலமான உசுப்பெக் நாட்டுப்புறப் பாடல்களாக, குறிப்பாக, செராலி சோரயேவ் என்பவரின் பாடல்கள் இவ்வாறு உருவாகியுள்ளன.[68] சில நூல் ஆதாரங்கள் பாபுரைக் கிர்கிசுத்தானின் தேசியக் கதாநாயகன் என்றும் கூறுகின்றன.[69] அக்டோபர் 2005இல் பாக்கித்தான் தான் உருவாக்கிய சீர் வேக ஏவுகணைக்குப் பாபுரின் பெயரை வைத்தது.
1944இல் வசகத் மிர்சாவால் இயக்கப்பட்ட ஷாகின்ஷா பாபுர் என்பது இவரைக் குறித்து வந்த ஒரு திரைப்படம் ஆகும். 1960இல் பாபுர் என்று பெயரிடப்பட்ட ஒரு சுயசரிதைத் திரைப்படத்தை ஏமன் குப்தா என்பவர் இயக்கினார். இது இவரது வாழ்க்கையைக் குறித்துச் சித்தரித்தது. இத்திரைப்படத்தில் கசனன் சாகிர்தார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[70]
பாபுரின் வாழ்வின் தொடரும் அம்சங்களில் ஒன்றாக இருப்பது இவர் விட்டுச் சென்ற உயிரோட்டமுள்ள மற்றும் நன்முறையில் எழுதப்பட்ட பாபர் நாமா எனும் சுயசரிதையாகும்.[71]
இவரது சொந்த வார்த்தைகளின் படி, "எனது சான்றுரையின் சிறந்த பகுதியானது, உனது சகோதரர்கள் உரியவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது." மேலும் "புத்தாண்டு, இளவேனிற்காலம் மற்றும் விருப்பத்திற்குரியவர்கள் மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களாவர். பாபுர் மகிழ்ச்சியை உருவாக்குகிறார். ஏனெனில், இந்த உலகமானது இரண்டாவது முறையாக உனக்குக் கிடைக்காது."[72]
Remove ads
பாபுர் மசூதி
பாபுர் தான் கட்டிய பாபுர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இந்து கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டினார். இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு இந்துகளின் எதோ ஒரு கோயில் இருந்ததற்கான கல்வெட்டுகள் இருந்தன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.என்றும் ஆதாரங்கள் இல்லை
Remove ads
மூலம்
- இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை.
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads