தில்லி சுல்தானகம்

1206-1526 கால இந்தியத் துணைக் கண்டப் பேரரசு From Wikipedia, the free encyclopedia

தில்லி சுல்தானகம்
Remove ads

தில்லி சுல்தானகம் (Delhi Sultanate) என்பது ஓர் இசுலாமியப் பேரரசு ஆகும். இது தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இது விரிவடைந்திருந்தது. இப்பேரரசு 320 ஆண்டுகளுக்கு (1206–1526) நீடித்தது.[7][8] தெற்கு ஆசியா மீது கோரி அரசமரபின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகத்தை பல்வேறு வகையான ஐந்து தொடர்பற்ற அரச மரபுகள் வரிசையாக ஆட்சி செய்தன. அவை மம்லூக் அரசமரபு (1206–1290), கல்சி அரசமரபு (1290–1320), துக்ளக் அரசமரபு (1320–1414),[9] சையிது அரசமரபு (1414–1451) மற்றும் லௌதி அரசமரபு (1451–1526) ஆகியவையாகும். நவீன கால இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம், மேலும் தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது.[10]

விரைவான உண்மைகள் தில்லி சுல்தானகம், தலைநகரம் ...

சுல்தானகத்தின் அடித்தளமானது கோரி அரசமரபைச் சேர்ந்த படையெடுப்பாளரான முகம்மது கோரியால் அமைக்கப்பட்டது. 1192ஆம் ஆண்டு தாரைனுக்கு அருகில் அஜ்மீர் ஆட்சியாளரான பிருத்திவிராச் சௌகானின் தலைமையிலான இராசபுத்திரக் கூட்டமைப்பைத் தோற்கடித்த பிறகு அவர் இதை அமைத்தார்.[11] இவ்வெற்றிக்கு முன்னர் கோரி இராசபுத்திரர்களிடம் தோல்வி அடைந்திருந்தார். முகம்மது கோரியின் துருக்கிய அடிமை-தளபதிகளான இல்திசு, ஐபக் மற்றும் குபாச்சா உள்ளிட்டோரால் ஆளப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேள் பகுதிகளில், கோரி அரசமரபின் வழித் தோன்றல்களில் தில்லி சுல்தானகமும் உண்மையில் ஒன்றாகும். இந்த வேள் பகுதிகள் கோரி நிலப்பரப்புகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.[12] நீண்ட கால உட்சண்டைக்குப் பிறகு கல்சி புரட்சியில் மம்லூக் அரசமரபினர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். துருக்கியர்களிடம் இருந்து பல்வேறு வகைப்பட்ட இந்தோ-முஸ்லிம் உயர்குடியினரிடம் சக்தியானது மாறியதை இது குறித்தது.[13][14] கல்சி மற்றும் துக்ளக் ஆகியோரின் ஆட்சியில் வேகமான இஸ்லாமியப் படையெடுப்புகள் தென்னிந்தியாவுக்குள் ஒரு புதிய அலையைப் போல நடந்தன.[15][16] சுல்தானகமானது இறுதியில் புவியியல் விரிவாக்கத்தில் அதன் உச்சத்தை துக்ளக் அரசமரபின் காலத்தில் அடைந்தது. முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் கீழ் பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை சுல்தானகமானது ஆக்கிரமித்திருந்தது.[17] இதற்குப் பிறகு இதன் நிலப்பரப்புகள் குறைய ஆரம்பித்தன. இதற்கான காரணங்கள் இந்துக்கள் இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுத்தது, விஜயநகரப் பேரரசு மற்றும் மேவார் போன்ற இந்து இராச்சியங்கள் அழுத்தம் திருத்தமாக தமது விடுதலையை நிறுவியது, மற்றும் வங்காள சுல்தானகம் போன்ற புதிய முஸ்லிம் சுல்தானகங்கள் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்தது ஆகியவை ஆகும்.[18][19] 1526இல் சுல்தானகமானது வெல்லப்பட்டு முகலாயப் பேரரசு ஆட்சிக்கு வந்தது.

சுல்தானகம் நிறுவப்பட்ட நிகழ்வானது இந்தியத் துணைக் கண்டத்தைப் பன்னாட்டு மற்றும் பல பண்பாட்டு இஸ்லாமிய சமூக மற்றும் பொருளாதார வலையமைப்புக்கு மேலும் அருகில் இழுத்தது.[20] இந்துசுத்தானி மொழி[21] மற்றும் இந்தோ-இஸ்லாமியக் கட்டடக்கலை[22][23] ஆகியவற்றின் வளர்ச்சியில் இதை நாம் கணலாம். மேலும், தில்லி சுல்தானகமானது மங்கோலியத் தாக்குதல்களை (சகதாயி கானரசிலிருந்து வந்த)[24] தடுத்து நிறுத்திய ஒரு சில சக்திகளில் ஒன்றாகவும், இஸ்லாமிய வரலாற்றில் அரியணைக்கு ஏற்றப்பட்ட ஒரு சில பெண் ஆட்சியாளர்களைக் (ரசியா பேகம், ஆட்சி. 1236–1240) கொண்டதாகவும் திகழ்ந்தது.[25] பக்தியார் கல்சியின் நிலப்பரப்பு இணைப்புகள் ஒரு பெரும் அளவிலான இந்து மற்றும் பௌத்த கோயில்களைச்[26] சேதப்படுத்தி அவமதித்ததையும், பல்கலைக்கழகங்கள் மற்றும் நூலகங்கள் அழிக்கப்பட்டதையும் உள்ளடக்கி இருந்தது.[27][28] கிழக்கு இந்தியா மற்றும் வங்காளத்தில் பௌத்த மதத்தின் வீழ்ச்சியில் இதுவும் ஒரு பங்காற்றியது.[29][30] மேற்கு மற்றும் நடு ஆசியா மீது மங்கோலியர்கள் நடத்திய திடீர்த் தாக்குதல்களானவை தப்பித்து ஓடிய போர் வீரர்கள், அறிஞர்கள், துறவிகள், வணிகர்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நூற்றாண்டுகளாக அப்பகுதிகளிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்குப் புலம்பெயரும் சூழ்நிலையை உருவாக்கியது. இவ்வாறாக இஸ்லாமியப் பண்பாட்டை புலம் பெயர்ந்தவர்கள் நிறுவினர்.[31][32]

Remove ads

வரலாறு

பின்புலம்

இந்தியாவில் தில்லி சுல்தானகத்தின் வளர்ச்சியானது பெரும்பாலான ஆசியக் கண்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பெரிய நிகழ்வின் போக்கின் ஒரு பகுதியாகும். இதில் ஒட்டு மொத்த மேற்கு ஆசியாவும் அடங்கும். இப்பகுதிகளுக்குள் நடு ஆசியப் புல்வெளிகளைச் சேர்ந்த நாடோடித் துருக்கிய மக்கள் திரளாக வர ஆரம்பித்தனர். இதன் தொடக்கமானது 9ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. அந்நேரத்தில் மத்திய கிழக்கில் இசுலாமியக் கலீபகமானது சிதைவுற ஆரம்பித்தது. எதிரெதிர் அரசுகளில் இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் நடு ஆசியப் புல்வெளிகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத நாடோடித் துருக்கியர்களை அடிமைப்படுத்த ஆரம்பித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசுவாசமுடைய இராணுவ அடிமைகளாக வளர்ந்தனர். அவர்கள் மம்லூக்குகள் என்று அழைக்கப்பட்டனர். சீக்கிரமே, துருக்கிய மக்கள் குழுக்கள் முஸ்லிம் நிலங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்தன. பிறகு இசுலாமிய மயமாக்கப்பட்டன. துருக்கிய மம்லூக் அடிமைகளில் பெரும்பாலானவர்கள் இறுதியாக ஆட்சியாளர்கள் எனும் நிலைக்கு உயர்ந்தனர். முஸ்லிம் உலகத்தின் பெரும் பகுதிகளை வென்றனர். மம்லூக் சுல்தானகங்களை எகிப்து முதல் தற்கால ஆப்கானித்தான் வரை நிறுவினர். பிறகு தங்களது கவனத்தை இந்தியத் துணைக் கண்டத்தை நோக்கித் திருப்பினர்.[33]

இஸ்லாமிய விரிவாக்கத்துக்கு முன்னர் இருந்தே நடைபெற்ற ஒரு பெரிய போக்கின் ஒரு பகுதியாகவும் இது திகழ்ந்தது. வரலாற்றில் இருந்த மற்ற நிலையான விவசாயச் சமூகங்களைப் போலவே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சமூகங்களும் அதன் நீண்ட வரலாறு முழுவதும் நாடோடிப் பழங்குடியினங்களால் தாக்கப்பட்டுள்ளன. துணைக் கண்டம் மீது இஸ்லாமியத் தாக்கத்தை மதிப்பிடும் போது வடமேற்குத் துணைக்கண்டமானது இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் நடு ஆசியாவைச் சேர்ந்த ஊடுருவல் நடத்தும் பழங்குடியினங்களின் இலக்காக அடிக்கடி இருந்தது என்பதையும் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறாக முஸ்லிம் தலையீடுகள் மற்றும் பிந்தைய முஸ்லீம் படையெடுப்புகள் ஆகியவை பொ. ஊ. முதலாயிரம் ஆண்டுக் காலத்தின் போது நடந்த ஆரம்பப் படையெடுப்புகளில் இருந்து வேறுபட்டது கிடையாது.[34]

பொ. ஊ. 962இல் தெற்காசியாவில் இருந்த இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் நடு ஆசியாவிலிருந்து வந்த முஸ்லிம் இராணுவங்களால் ஒரு தொடர்ச்சியான ஊடுருவல்களை எதிர்கொண்டன.[35] ஒரு துருக்கிய மம்லூக் இராணுவ அடிமையின் மகனான கசினியின் மகுமூதும் அவர்களில் ஒருவராவார்.[36] அவர் 997 மற்றும் 1030க்கு இடையில் கிழக்கே சிந்து ஆறு முதல் மேற்கே யமுனை ஆறு வரையிலான வட இந்தியாவிலிருந்த இராச்சியங்கள் மீது ஊடுருவல்களை நடத்திக் கொள்ளையடித்தார்.[37] கசினியின் மகுமூது கருவூலங்களைக் கொள்ளையடித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் பின் வாங்கினார். இஸ்லாமிய ஆட்சியை மேற்குப் பஞ்சாப் வரை மட்டுமே நீட்டித்தார்.[38][39]

வட மற்றும் மேற்கு இந்திய இராச்சியங்கள் மீதான முஸ்லிம் போர்ப் பிரபுக்களின் தொடர்ச்சியான ஊடுருவல்களானவை கசினியின் மகமூதுக்குப் பிறகும் தொடர்ந்தன.[40] இந்த ஊடுருவல்கள் இஸ்லாமிய இராச்சியங்களின் நிலையான எல்லைகளை நிறுவவோ அல்லது விரிவாக்கவோ இல்லை. மாறாக, பொதுவாக கோரி முகம்மது என்று அறியப்படும் கோரி அரசமரபின் சுல்தானான முயிசதீன் முகம்மது கோரி 1173இல் வட இந்தியாவுக்குள் ஓர் அமைப்பு ரீதியிலான போர் விரிவாக்கத்தைத் தொடங்கினார்.[41] தனக்கென ஒரு வேள் பகுதியை உருவாக்கவும், இஸ்லாமிய உலகத்தை விரிவாக்கவும் அவர் விரும்பினார்.[37][42] கோரி முகம்மது சிந்து ஆற்றுக்குக் கிழக்கே தன்னுடைய சொந்த விரிவாக்கத்தின் மூலம் ஒரு சன்னி இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்கினார். இவ்வாறாக அவர் தில்லி சுல்தானகம் என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் இராச்சியத்திற்கு அடித்தளத்தை அமைத்தார்.[37] 1192ஆம் ஆண்டு வாக்கில் தெற்காசியாவில் முகம்மது கோரி தனது நிலையையும், புவியியல் கோரிக்கைகளையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாகச் சில வரலாற்றாளர்கள் தில்லி சுல்தானகம் 1192ஆம் ஆண்டு ஆரம்பித்தது எனக் காலமிடுகின்றனர்.[43]

கோரி 1206ஆம் ஆண்டு அரசியல் கொலை செய்யப்பட்டார். இவரை இஸ்மாயிலி ஷியா முஸ்லிம்கள் கொன்றனர் என ஒரு சில நூல்களும் அல்லது கோகர்கள் கொன்றனர் என பிற நூல்களும் குறிப்பிடுகின்றன.[44] இந்த அரசியல் கொலைக்குப் பிறகு கோரியின் அடிமைகளில் (அல்லது மம்லூக்குகளில், அரபி: مملوك) ஒருவரான துருக்கியரான குத்புத்தீன் ஐபக் அதிகாரம் பெற்றார். தில்லியின் முதல் சுல்தானானார்.[37]

அரசமரபுகள்

மம்லூக் அரசமரபு

Thumb
தில்லி சுல்தானகமானது பொ. ஊ. 1206 முதல் 1290 வரை மம்லூக் அரசமரபின் கீழ் இருந்தது

முயிசதீன் முகம்மது கோரியின் ஒரு முன்னாள் அடிமையான குத்புத்தீன் ஐபக் தில்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் ஆவார். ஐபக் குமன்-கிப்சாக் (துருக்கிய) பூர்வீகத்தை உடையவராவார். இவரது பரம்பரை காரணமாக இவரது அரசமரபானது மம்லூக் (அடிமைப் பூர்வீகம்) அரசமரபு என்று அறியப்படுகிறது. இது ஈராக் மற்றும் எகிப்தின் மம்லூக் அரசமரபுகளில் இருந்து வேறுபட்டதாகும்.[45] ஐபக் தில்லியின் சுல்தானாக 1206 முதல் 1210 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். இவர் கால மற்றும் பிற்கால நூல்கள் ஐபக்கை அவரது ஈகைக் குணத்திற்காகப் புகழ்கின்றன. இதன் காரணமாக இவர் இலட்சங்களைக் கொடுப்பவர் என்று அழைக்கப்பட்டார்.[46]

ஐபக் இறந்த பிறகு 1210இல் ஆரம் ஷா பதவிக்கு வந்தார். ஆனால், 1211இல் ஐபக்கின் மருமகனான சம்சுத்தீன் இல்த்துத்மிசு ஆரம் ஷாவை அரசியல் கொலை செய்தார்.[47] இல்த்துத்மிசின் ஆட்சியானது உறுதியற்றதாக இருந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முஸ்லிம் உயர்குடியினர் அவரது அதிகாரத்திற்குச் சவால் விடுத்தனர். ஏனெனில், அவர்கள் குத்புத்தீன் ஐபக்கின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் எதிராளிகளை மிருகத் தனமாக மரண தண்டனைக்கு உட்படுத்தியதற்குப் பிறகு இல்த்துத்மிசு தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினார்.[48] அவரது ஆட்சியானது ஒரு சில நேரங்களில் குபாச்சா போன்றோரின் சவால்களையும் எதிர்கொண்டது. இது ஒரு தொடர்ச்சியான போர்களுக்கும் இட்டுச் சென்றது.[49] போட்டியிட்ட முஸ்லிம் ஆட்சியாளரிடமிருந்து முல்தான் மற்றும் வங்காளத்தையும், இந்து ஆட்சியாளர்களிடமிருந்து இரந்தம்பூர் மற்றும் சிவாலிக்கையும் இல்த்துத்மிசு வென்றார். முயிசதீன் முகம்மது கோரியின் வாரிசாகத் தனது உரிமைகளை நிலைநாட்ட முயன்ற தாசல்தீன் இல்திசுவையும் இல்த்துத்மிசு தாக்கித் தோற்கடித்து மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[50] இல்த்துத்மிசின் ஆட்சியானது 1236 வரை நீடித்தது. அவரது இறப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகமானது ஒரு தொடர்ச்சியான பலவீனமான ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதையும், முஸ்லிம் உயர்குடியினருக்கு இடையேயான பிரச்சனைகளையும், அரசியல் கொலைகளையும் மற்றும் குறுகிய காலம் நீடித்த ஆட்சிகளையும் கண்டது. அதிகாரமானது உருக்னுதீன் பிரூசு முதல் ரசியா பேகம் மற்றும் பிறர் வரை கை மாறியது. இந்நிலை கியாசுத்தீன் பல்பான் அதிகாரத்திற்கு வரும் வரை நீடித்தது. அவர் 1266 முதல் 1287 வரை ஆட்சி புரிந்தார்.[49][50] அவருக்குப் பிறகு அவரது 17 வயது மகன் முயிசுதீன் கைகபாத் ஆட்சிக்கு வந்தார். அவர் சலாலுதீன் பிரூசு கல்சியைத் தனது இராணுவத்தின் தளபதியாக நியமித்தார். கல்சி கைகபாத்தை அரசியல் கொலை செய்தார். ஆட்சியைக் கைப்பற்றினார். மம்லூக் அரசமரபை முடித்து வைத்து, கல்சி அரசமரபைத் தொடங்கினார்.

குத்புத்தீன் ஐபக் குதுப் நினைவுச் சின்னங்களைக் கட்டுவதைத் தொடங்கி வைத்தார். ஆனால், அது முடிக்கப்படும் முன்னரே இறந்தார். அது பிறகு அவரது மருமகன் இல்த்துத்மிசால் கட்டி முடிக்கப்பட்டது.[51] குதுப் மினார் மசூதியானது ஐபக்கால் கட்டப்பட்டது. இது தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.[52] குதுப் மினார் வளாகமானது இல்த்துத்மிசாலும், பிறகு அலாவுதீன் கல்சியாலும் 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரிவாக்கப்பட்டது.[52][note 1] அந்நேரத்தில் மேற்காசியாவை மங்கோலியர்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் மம்லூக் அரசமரபின் காலத்தின் போது ஆப்கானித்தான் மற்றும் பாரசீகத்திலிருந்து ஏராளமான உயர் குடியினர் புலம்பெயர்ந்து இந்தியாவில் குடியமர்ந்தனர்.[54]

கல்சி அரசமரபு

Thumb
குதுப் மினாரானது தில்லி சுல்தானாகத்தின் அடிமை மற்றும் கல்சி அரசமரபுகளின் காலத்தின் போது கட்டப்பட்டது.[52]

கல்சி அரசமரபானது துருக்கிய-ஆப்கானியப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.[55][56][57][58] இவர்கள் உண்மையில் துருக்கியப் பூர்வீகத்தை உடையவர்களாக இருந்தனர். இந்தியாவில் தில்லிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் தற்கால ஆப்கானித்தானில் நீண்ட காலம் குடியமர்ந்து இருந்தனர். "கல்சி" என்ற பெயரானது ஓர் ஆப்கானியப் பட்டணமான கலாதி கல்சி ("கல்சியின் கோட்டை") என்று அறியப்படுவதைக் குறிக்கிறது.[59] சில ஆப்கானியப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் பின்பற்ற ஆரம்பித்த காரணத்தால் இவர்கள் மற்றவர்களால் ஆப்கானியர்களாகவே கருதப்பட்டனர்.[60][61] இதன் விளைவாக இந்த அரசமரபானது "துருக்கிய-ஆப்கானிய" அரசமரபு என்று குறிப்பிடப்படுகிறது.[56][57][58] இந்த அரசமரபானது இந்திய மூதாதையரையும் கொண்டிருந்தது. அவர் இராமச்சந்திராவின் மகளான சத்யபாலி ஆவார். அவர் அலாவுதீன் கில்சிக்கு மனைவியாகவும், சிகாபுதீன் ஒமருக்குத் தாயாகவும் இருந்தார்.[62]

கல்சி அரசமரபின் முதல் ஆட்சியாளர் சலாலுதீன் பிரூசு கல்சி ஆவார். கல்சி புரட்சிக்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். அதிகாரமானது துருக்கிய உயர் குடியினரிடமிருந்து பல்வேறு வகைப்பட்ட இந்தோ-முஸ்லிம் உயர்குடியினரிடம் மாறியதை இது குறித்தது. கல்சி மற்றும் இந்தோ-முஸ்லிம் பிரிவானது எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருந்த மதம் மாறியவர்களால் வலுப்பட்டது. அவர்கள் ஒரு தொடர்ச்சியான அரசியல் கொலைகள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றினர்.[13] முயிசுதீன் கைகபாத் அரசியல் கொலை செய்யப்பட்டார். சலாலுதீன் ஓர் இராணுவப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். சலாலுதீன் பதவிக்கு வந்த நேரத்தில் சுமார் 70 வயதுடையவராக இருந்தார். மிதமான நடத்தையுடைய, பணிவான மற்றும் இரக்க குணமுடைய ஆட்சியாளராகப் பொதுமக்களால் இவர் அறியப்பட்டார்.[63][64] சலாலுதீன் பிரூசு 6 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். 1296இல் தன் மருமகன் சுனா முகம்மது கல்சியால்[65] கொல்லப்பட்டார். சுனா முகம்மது கல்சியே பிற்காலத்தில் அலாவுதீன் கல்சி என்று அறியப்பட்டார்.

அலாவுதீன் தனது இராணுவ வாழ்வை காரா மாகாணத்தின் ஆளுநராகத் தொடங்கினார். அங்கிருந்து மால்வா (1292) மற்றும் தௌலதாபாத் (1294) மீது இரண்டு திடீர்த் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கினார். இத்தாக்குதல்கள் கொள்ளையடிப்பதற்கும், சூறையாடுவதற்கும் நடத்தப்பட்டன. இவர் அதிகாரத்திற்கு வந்த பிறகு இவரது இராணுவ நடவடிக்கையானது இந்த நிலங்களுக்கு மீண்டும் வந்தது. மேலும் தென்னிந்திய இராச்சியங்களுக்கும் வந்தது. இவர் குசராத்து, இரந்தம்பூர், சித்தோர்கார் மற்றும் மால்வாவை வென்றார்.[66] எனினும் இந்த வெற்றிகள் உடனடியாக முடித்துக் கொள்ளப்பட்டன. ஏனெனில், மங்கோலியர்கள் வடமேற்குப் பகுதியில் சூறையாடும் திடீர்த் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். சூறையாடியதற்குப் பிறகு மங்கோலியர்கள் பின்வாங்கினர். தில்லி சுல்தானகத்தின் வடமேற்குப் பகுதிகள் மீது திடீர்த் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்தினர்.[67]

மங்கோலியர்கள் பின்வாங்கிய பிறகு தில்லி சுல்தானகத்தைத் தென்னிந்தியாவுக்குள் விரிவாக்குவதை அலாவுதீன் கல்சி தொடர்ந்தார். இதற்கு இவரது தளபதிகளான மாலிக் கபூர் மற்றும் குஸ்ரோ கான் ஆகியோர் உதவி புரிந்தனர். தாங்கள் தோற்கடித்தவர்களிடம் பெருமளவிலான பொருட்களை அவர்கள் சேகரித்தனர்.[68] அவற்றுக்கு வரிகளையும் செலுத்தினர். இது கல்சியின் ஆட்சியை வலுப்படுத்த உதவியது. இவ்வாறு அவர்கள் வாரங்கலில் சூறையாடிய பொருட்களில் புகழ் பெற்ற கோகினூர் வைரமும் ஒன்றாகும்.[69]

அலாவுதீன் கல்சி வரிக் கொள்கைகளை மாற்றினார். விவசாய வரியை 20%இலிருந்து 50%மாக உயர்த்தினார். இதைத் தானியம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் மூலம் செலுத்த முடியும். உள்ளூர் தலைவர்களால் வசூலிக்கப்பட்ட வரிகள் மீதான கட்டணங்களை நீக்கினார். தன்னுடைய அதிகாரிகளுக்கு மத்தியில் சமூகமயமாதலைத் தடை செய்தார். உயர்குடியினரின் குடும்பங்களுக்கு இடையில் திருமண பந்தங்கள் ஏற்படுவதைத் தடை செய்தார். தனக்கு எதிராக எந்த ஓர் எதிர்ப்பும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இவர் இவ்வாறு செய்தார். அதிகாரிகள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் சம்பளங்களைக் குறைத்தார்.[65] இவரது வளர்ந்து வந்த இராணுவத்தைப் பேணுவதற்குச் செலவழிப்பதற்காக இவரது கருவூலத்தை இந்த வரிக் கொள்கைகளும் செலவீனக் கட்டுப்பாடுகளும் வலிமைப்படுத்தின. இராச்சியத்தில் அனைத்து விவசாய உற்பத்தி மற்றும் பொருட்கள் மீது விலைக் கட்டுப்பாடுகளையும் இவர் அறிமுகப்படுத்தினார். மேலும், எங்கு, எவ்வாறு மற்றும் யாரால் இந்தப் பொருட்கள் விற்கப்படும் என்பது குறித்தும் கட்டுப்பாடுகளை விதித்தார். "சகானா-இ மண்டி" என்று அழைக்கப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டன.[70] அதிகாரப்பூர்வ விலைகளில் வாங்குவதற்கும், மீண்டும் விற்பதற்கும் இந்த மண்டிகளில் முஸ்லிம் வணிகர்களுக்கு தனித்துவமான அனுமதிகளும், ஏகபோக உரிமையும் வழங்கப்பட்டது. இந்த வணிகர்களைத் தவிர்த்து எந்த ஒருவரும் விவசாயிகளிடம் இருந்து வாங்கவோ அல்லது நகரங்களில் விற்கவோ இயலாது. இந்த மண்டி விதிகளை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். தானிய வடிவில் வசூலிக்கப்பட்ட வரிகள் இராச்சியத்தின் கிடங்கில் சேமிக்கப்பட்டன. பஞ்ச காலங்களின் போது இந்தத் தானியக் கிடங்குகள் இராணுவத்திற்குப் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்தன.[65]

வரலாற்றாளர்கள் அலாவுதீன் கல்சி ஒரு கொடுங்கோலன் என்பதைக் குறிப்பிடுகின்றனர். தனது சக்திக்கு அச்சுறுத்தலாக அலாவுதீன் சந்தேகித்த எந்த ஒரு நபரும் அவரது குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கொல்லப்பட்டனர். இறுதியாகத் தன்னுடைய உயர் குடியினரில் பெரும்பாலானவர்கள் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இவர் வந்தார், குறிப்பிடத்தக்க தனது சொந்த அடிமைகள் மற்றும் குடும்பத்துக்கு மட்டுமே ஆதரவு அளித்தார். குசராத்து படையெடுப்பின் போது கிளர்ச்சியில் ஈடுபட்டதால் 1298இல் அண்மையில் இஸ்லாமுக்கு மதம் மாறியிருந்த 15,000 முதல் 30,000 வரையிலான மங்கோலியர்கள் தில்லிக்கு அருகில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர்.[71] தான் யுத்தத்தில் தோற்கடித்த இராச்சியங்களுக்கு எதிராகக் கொடூரமாக நடந்து கொண்டதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

1316இல் அலாவுதீனின் இறப்பிற்குப் பிறகு இவரது திருநங்கையாக்கப்பட்ட, இந்துக் குடும்பத்தில் பிறந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய தளபதியான மாலிக் கபூர் உண்மையான அதிகாரத்தைப் பெற்றார். கல்சி அல்லாத உயர் குடியினரான கமலல்தீன் குர்க் போன்ற குறிப்பிடத்தக்க பதான்களின் ஆதரவைப் பெற்றார். எனினும், பெரும்பாலான கல்சி உயர் குடியினரின் ஆதரவை இவர் பெறவில்லை. அவர்கள் இவரை அரசியல் கொலை செய்தனர். இதன் மூலம் அதிகாரத்தைத் தாங்கள் பெறலாம் என்று நம்பினர்.[65] ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர் கபூரைக் கொன்றவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.

கடைசி கல்சி ஆட்சியாளர் அலாவுதீன் கல்சியின் 18 வயது மகனான குத்புதீன் முபாரக் ஷா கல்சி ஆவார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். பிறகு மற்றொரு இந்துப் பூர்வீகத்தைக் கொண்ட அடிமை-தளபதியான குஸ்ரோ கானால் கொல்லப்பட்டார். குஸ்ரோ கான் இஸ்லாமிலிருந்து இந்து மதத்திற்கு மாறி, உயர் குடியினரில் தனது இந்து பாரது இராணுவ இனத்தை ஆதரித்தார். குஸ்ரோ கானின் ஆட்சியானது சில மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. பிற்காலத்தில் கியாதல்தீன் துக்ளக் என்று அழைக்கப்பட்ட காசி மாலிக் பஞ்சாபி கோகர் பழங்குடி இனத்தவரின் உதவியுடன் இவரைத் தோற்கடித்தார். 1320ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். கல்சி அரசமரபை முடித்து வைத்து, துக்ளக் அரசமரபைத் தொடங்கினார்.[54][71]

துக்ளக் அரசமரபு

Thumb
1321 முதல் 1330 வரையில் தில்லி சுல்தானகமானது துக்ளக் அரசமரபின் கீழ் இருந்தது. 1330க்குப் பிறகு பல்வேறு பகுதிகள் சுல்தானகத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இராச்சியமானது சுருங்கியது.

துக்ளக் அரசமரபானது 1320 முதல் கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்திருந்தது. முதல் ஆட்சியாளரான காசி மாலிக் தனது பெயரை கியாதல்தீன் துக்ளக் என்று மாற்றிக் கொண்டார். மேலும், அறிஞர்களின் நூல்களில் இவர் துக்ளக் ஷா என்று குறிப்பிடப்படுகிறார். இவர் "எளிமையான பூர்வீகத்தை" கொண்டிருந்தார். ஆனால், பொதுவாக இந்தோ-துருக்கியக் கலப்புப் பூர்வீகத்தைக் கொண்டிருந்தவராகக் கருதப்படுகிறார்.[1] கியாதல்தீன் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். தில்லிக்கு அருகில் துக்ளகாபாத் என்று அழைக்கப்பட்ட ஒரு பட்டணத்தை உருவாக்கினார்.[72] வின்சென்ட் ஸ்மித் போன்ற சில வரலாற்றாளர்களின் கூற்றுப்படி,[73] இவர் இவரது மகன் சுனா கானால் கொல்லப்பட்டார். சுனா கான் 1325இல் ஆட்சிக்கு வந்தார். சுனா கான் தனது பெயரை முகம்மது பின் துக்ளக் என்று மாற்றிக் கொண்டார். 26 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தார்.[74] அவரது ஆட்சியின் போது தில்லி சுல்தானகமானது புவியியல் விரிவாக்கத்தின் வகையில் அதன் உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது.[17]

முகம்மது பின் துக்ளக் சிந்தனை இன்பத்தில் நாட்டமுடைய ஒருவராவார். குர்ஆன், பிகூ, கவிதை மற்றும் பிற துறைகளில் விரிவான அறிவைப் பெற்றிருந்தார். தனது உறவினர்கள் மற்றும் மந்திரிகள் குறித்து இவருக்கும் ஆழ்ந்த சந்தேகம் இருந்தது. தனது எதிரிகளிடம் எல்லை மீறிய கடுமையுடன் நடந்து கொண்டார். பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய முடிவுகளை எடுத்தார். உதாரணமாக, எளிய உலோகங்களில் இருந்து நாணயங்களை அச்சிடுவதற்கு இவர் ஆணையிட்டார். இந்த நாணயங்கள் வெள்ளி நாணயங்களின் மதிப்பைக் கொண்டிருந்தன. இந்த முடிவு தோல்வியில் முடிந்தது. ஏனெனில், தங்களது வீட்டில் இருந்த எளிய உலோகங்களில் இருந்து சாதாரண மக்கள் போலி நாணயங்களை அச்சிட ஆரம்பித்தனர். அதை வரிகள் மற்றும் ஜிஸ்யா வரிகளைச் செலுத்தப் பயன்படுத்தினர்.[17][73]

Thumb
1800களில் தௌலதாபாத் கோட்டை
Thumb
பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் சென்ற முகம்மது பின் துக்ளக்கின் எளிய உலோகங்களாலான நாணயம்.

தில்லி சுல்தானகத்தின் இரண்டாவது நிர்வாகத் தலைநகரமாக தற்போதைய மகாராட்டிராவின் தியோகிரி நகரத்தை முகம்மது பின் துக்ளக் தேர்ந்தெடுத்தார். நகரத்தின் பெயரைத் தௌலதாபாத் என்று மாற்றினார்.[75] தன்னுடைய அரச குடும்பம், உயர் குடியினர், சையதுக்கள், சேக்குகள் மற்றும் உலேமா ஆகிய தில்லியின் முஸ்லிம் மக்களைத் தௌலதாபாத்தில் குடியமர்த்துவதற்காகக் கட்டாயப்படுத்தப்பட்டப் புலம்பெயர்தலுக்கு இவர் ஆணையிட்டார். தௌலதாபாத்திற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் மேல் தட்டு மக்களையும் இடம் மாற்றியதன் குறிக்கோளானது உலகை வெல்லும் தனது முயற்சியில் அவர்களை ஈடுபடுத்துவதாகும். பேரரசின் நடைக்கு இஸ்லாமியச் சமயச் சின்னங்களைப் பின்பற்றும் பரப்புரையாளர்களாக அவர்களது பங்கை இவர் கண்டார். தக்காணத்தின் குடிமக்களை முஸ்லிம் ஆக மாற இணங்க வைக்க சூபிக்களால் இயலும் என இவர் கண்டார். தௌலதாபாத்திற்கு புலம் பெயர விருப்பமற்ற உயர்குடியினரைக் கொடூரமான தண்டனைக்குத் துக்ளக் ஆளாக்கினார். தன்னுடைய ஆணையை அவர்கள் செயல்படுத்தாததைக் கிளர்ச்சிக்குச் சமமாகக் கருதினார். பெரிசுதா என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, பஞ்சாப்புக்கு மங்கோலியர்கள் வந்த போது தன்னுடைய மேல்தட்டு மக்களை தில்லிக்கு மீண்டும் சுல்தான் அனுப்பினார். எனினும், தௌலதாபாத் ஒரு நிர்வாக மையமாகத் தொடர்ந்தது.[76] தௌலதாபாத்திற்கு மேல்தட்டு மக்களைப் புலம் பெயர வைத்ததன் விளைவானது உயர்குடியினர் மத்தியில் சுல்தான் மீதான வெறுப்பை ஏற்படுத்தியது ஆகும். இந்த வெறுப்பு அவர்களின் மனங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்தது.[77] தில்லிக்குத் திரும்பாத தௌலதாபாத்தின் முஸ்லிம் மக்களின் வளர்ச்சி மற்றும் ஒரு நிலையான முஸ்லிம் மேல்தட்டு மக்களை உருவாக்க முடிந்தது ஆகியவற்றை இதன் மற்றொரு விளைவாகக் குறிப்பிடலாம்.[17] இந்த விளைவுகள் நடைபெறாவிட்டால் விஜயநகரப் பேரரசுக்குப் போட்டியாக வந்து பாமினி இராச்சியத்தின் வளர்ச்சியானது நடந்திருக்காது.[78] தக்காணப் பகுதியில் முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்புகள் அழிவு மற்றும் கோயிலைச் சேதப்படுத்தி அவமதித்த நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. உதாரணமாக சுயம்பு சிவன் கோயில் மற்றும் ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவை இவ்வாறாக நடத்தப்பட்டன.[28]

Thumb
துக்ளக்கின் கொள்கைகளின் விளைவாக உருவான பாமினி இராச்சியத்தால் கட்டப்பட்ட மகுமூது கவான் மதரசா

முகம்மது பின் துக்ளக்கிற்கு எதிரான புரட்சிகள் 1327இல் தொடங்கின. இவரது ஆட்சி முழுவதும் தொடர்ந்தன. காலப்போக்கில் சுல்தானகத்தின் புவியியல் விரிவானது சுருங்கியது. தில்லி சுல்தானகத்தின் தாக்குதல்களுக்கு நேரடிப் பதிலாக தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு உருவாகியது.[79] தில்லி சுல்தானகத்தின் ஆட்சியிலிருந்து தென்னிந்தியாவை விடுதலை செய்தது.[80] 1330களில் சீனா மீது படையெடுக்க முகம்மது பின் துக்ளக் ஆணையிட்டார்.[சான்று தேவை] தன்னுடைய படைகளின் ஒரு பகுதியை இமயமலைகளைத் தாண்டி அனுப்பினார். எனினும், அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் கங்கிரா அரசால் தோற்கடிக்கப்பட்டனர்.[81] இவரது ஆட்சியின் போது 1329 முதல் 1332 வரையிலான எளிய உலோகங்களாலான நாணயங்கள் போன்ற இவரது கொள்கைகளால் அரசின் வருவாயானது வீழ்ச்சியடைந்தது. பஞ்சங்கள், பரவலான வறுமை மற்றும் கிளர்ச்சி ஆகியவை இராச்சியம் முழுவதும் வளர்ந்தன. 1338இல் இவரது சொந்த உடன்பிறப்புகளின் மகன் மால்வாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டார். துக்ளக் அவரைத் தாக்கினார். 1339இல் உள்ளூர் முஸ்லிம் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிழக்குப் பகுதிகளும், இந்து மன்னர்களால் ஆளப்பட்ட தெற்குப் பகுதிகளும் புரட்சியில் ஈடுபட்டன. தில்லி சுல்தானகத்திலிருந்து சுதந்திரத்தை அறிவித்தன. தன்னுடைய சுருங்கிக் கொண்டிருந்த இராச்சியத்தை மீட்க ஆதாரங்களோ அல்லது ஆதரவோ முகம்மது பின் துக்ளக்கிடம் இல்லை.[82] வால்போர்டு என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, எளிய உலோகங்களாலான நாணய ஆய்வுக்குப் பிந்தைய முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலங்களின் போது தில்லி மற்றும் பெரும்பாலான இந்தியாவானது கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது.[83][84] 1347இல் பாமினி சுல்தானகமானது தனித்து இயங்க ஆரம்பித்தது. தக்காணப் பகுதியில் போட்டி மனப்பான்மையுடைய முஸ்லிம் இராச்சியமாக உருவானது.[35]

Thumb
Thumb
துக்ளக் அரசமரபானது அதன் கட்டடக்கலை புரவலத்தன்மைக்காக நினைவுபடுத்தப்படுகிறது. தில்லி-தோப்ரா தூண் போன்ற பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகரால் எழுப்பப்பட்ட பழைய பௌத்தத் தூண்களை இது மீண்டும் பயன்படுத்தியது. சுல்தானகமானது ஆரம்பத்தில் தூண்களை மசூதி மினார்களாகப் பயன்படுத்த விரும்பியது. பிரூசு ஷா துக்ளக் வேறு மாதிரியாக முடிவெடுத்தார். அவர் தூண்களை மசூதிகளுக்கு அருகில் நிறுவினார்.[85] தூண்களின் (அசோகர் கல்வெட்டுக்கள்) மீது இருந்த பிராமி எழுத்துமுறையின் பொருளானது பிரூசாவின் காலத்தில் அறியப்படாமல் இருந்தது.[86][87]

முகம்மது பின் துக்ளக் 1351இல் இறந்தார். தில்லி சுல்தானகத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களைக் குசராத்தில் துரத்தித் தண்டனைக்கு உட்படுத்த முயன்ற போது அவர் இறந்தார்.[82] இவருக்குப் பிறகு பிரூசு ஷா துக்ளக் (1351–1388) ஆட்சிக்கு வந்தார். அவர் பழைய இராச்சியத்தின் எல்லைகளை மீண்டும் பெறுவதற்காக வங்காளத்தில் 1359ஆம் ஆண்டு 11 மாதங்களுக்குப் போர் நடத்தினார். எனினும், வங்காளம் வீழவில்லை. பிரூசு ஷா 37 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். இவரது ஆட்சியானது உணவு வழங்கலை நிலைப்படுத்தவும், பஞ்சங்களைக் குறைக்கவும் முயற்சித்தது. இதற்கு யமுனை ஆற்றிலிருந்து ஒரு பாசனக் கால்வாயையும் ஏற்படுத்தியது. கல்வியறிவு பெற்ற சுல்தானான பிரூசு ஷா ஒரு நினைவுக் குறிப்பையும் விட்டுச் சென்றார்.[88] அதில் தான் சித்திரவதைகளைத் தடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[89] அதில் மேலும் இவரது இராணுவங்கள் அழித்த கோயில்களை மீண்டும் எழுப்ப முயலும் இந்துக்களைத் தான் சகித்துக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.[90] இந்துக்களை இஸ்லாமுக்கு மாற்றியது உள்ளிட்ட தன்னுடைய சாதனைகளையும் பிரூசு ஷா துக்ளக் பட்டியலிட்டுள்ளார். மதம் மாறியவர்களுக்கு வரிகள் மற்றும் ஜிஸ்யாவில் இருந்து விலக்கு அளிப்பதாக இவர் அறிவித்தார். அதே நேரத்தில், வரிகள் மற்றும் ஜிஸ்யாவை இவர் உயர்த்தினார். அவற்றை மூன்று படிகளாக இவர் விதித்தார். தன்னுடைய முன்னோர்கள் வரலாற்று ரீதியாக அனைத்து இந்துப் பிராமணர்களுக்கும் ஜிஸ்யா வரியில் இருந்து விலக்கு அளித்த பழக்கத்தை இவர் நிறுத்தினார்.[89][91]தன்னுடைய சேவையில் மற்றும் பிற முஸ்லிம் உயர்குடியினரிடம் பணியாற்றிய அடிமைகளின் எண்ணிக்கையைப் பெருமளவு இவர் அதிகப்படுத்தினார். சித்திரவதையின் எல்லை மீறிய வடிவங்களின் குறைப்பு, சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினருக்கான தனிப்பட்ட ஆதரவை நீக்கியது ஆகியவையால் பிரூசு ஷா துக்ளக்கின் ஆட்சியானது குறிப்பிடப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட குழுக்களின் மீதான சகிப்புத்தன்மையற்ற செயல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதலையும் இவர் அதிகரித்தார்.[89] இதன் விளைவாக ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினர்.[92]

பிரூசு ஷா துக்ளக்கின் இறப்பானது அரசற்ற தன்மையையும், இராச்சியத்தின் சிதைவடைதலையும் உருவாக்கியது. இந்த அரசமரபின் கடைசி ஆட்சியாளர்கள் இருவருமே தங்களை 1394 முதல் 1397 வரை சுல்தான்கள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள், தில்லியில் இருந்து ஆட்சி செய்த பிரூசு ஷா துக்ளக்கின் பேரனான தில்லியில் இருந்து ஆட்சி செய்த நசிருதீன் மகுமூது ஷா துக்ளக் மற்றும் பிரூசு ஷா துக்ளக்கின் மற்றொரு உறவினரான தில்லியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பிரோசாபாத்தில் இருந்து ஆட்சி செய்த நசிருதீன் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆகியோர் ஆவர்.[93] இந்த இரண்டு உறவினர்களுக்கும் இடையிலான யுத்தமானது 1398இல் தைமூரின் படையெடுப்பு வரை தொடர்ந்து. தைமூர் என்பவர் துருக்கியப் பாரம்பரியத்திற்கு மாறிய மங்கோலிய ஆட்சியாளர் ஆவார். இவர் தைமூரியப் பேரரசை ஆண்டார். தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர்களின் பலவீனம் மற்றும் சச்சரவுகள் பற்றி தைமூர் அறிந்தார். எனவே, தில்லிக்குத் தனது இராணுவத்துடன் அணி வகுத்தார். தான் வரும் வழியில் சூறையாடலையும், கொலைகளையும் செய்தார்.[94][95] தில்லியில் தைமூர் படுகொலை செய்தவர்களின் எண்ணிக்கை மதிப்பீடானது 1 இலட்சம் முதல் 2 இலட்சம் மக்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.[96][97] இந்தியாவில் தங்கியிருக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ தைமூருக்கு எண்ணம் இல்லை. தான் பயணித்த நிலப்பரப்புகளை இவர் சூறையாடினார். பிறகு தில்லியைச் சூறையாடி எரித்தார். ஐந்து நாட்களில் தைமூரும், அவரது இராணுவமும் கட்டுப்பாடற்ற சினத்துடன் ஒரு படுகொலையை நடத்தின.[சான்று தேவை] பிறகு செல்வங்களைக் எடுத்துக்கொண்டன. பெண்களைப் பிடித்தன. குறிப்பாக திறமை வாய்ந்த கைவினைஞர்கள் போன்ற மக்களை அடிமைப்படுத்தின. இந்தச் சூறையாடப்பட்ட பொருட்களுடன் சமர்கந்திற்குத் திரும்பின. தில்லி சுல்தானகத்துக்குள் இருந்த மக்களும், நிலப்பரப்புகளும் அரசற்ற நிலை, குழப்பம் மற்றும் கொள்ளை நோய் கொண்ட நிலைக்குத் தள்ளப்பட்டன.[93] தைமூரின் படையெடுப்பின் போது குசராத்துக்குத் தப்பியோடிய நசிருதீன் மகுமூது ஷா துக்ளக் திரும்பி வந்தார். துக்ளக் அரசமரபின் கடைசி ஆட்சியாளராக, அரசவையில் இருந்த பல்வேறு பிரிவினரின் ஒரு கைப்பாவையாகப் பெயரளவுக்கு ஆட்சி செய்தார்.[98]

சையிது அரசமரபு

சையிது அரசமரபானது தில்லி சுல்தானகத்தை 1415 முதல் 1451 வரை ஆட்சி செய்தது.[35] அக்கால எழுத்தாளரான எகியா சிரிந்தி தனது தரிக்-இ முபாரக் சாகி நூலில் இந்த அரசமரபைத் தோற்றுவித்த கிசிர் கான் இறைதூதர் முகம்மது நபியின் வழித்தோன்றல் என்று குறிப்பிடுகிறார்.[99] எனினும் ரிச்சர்ட் எம். ஈட்டன் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, கிசிர் கான் ஒரு பஞ்சாபித் தலைவராவார்.[100] தைமூரியப் படையெடுப்பும், சூறையாடலும் தில்லி சுல்தானகத்தை ஒழுங்கற்ற நிலைக்கு உள்ளாகியது. சையிது அரச மரபின் ஆட்சி குறித்து சிறிதளவு தகவல்களே உள்ளன. அன்னே மேரி சிம்மெல் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, அரச மரபின் முதல் ஆட்சியாளரான கிசிர் கான் தான் தைமூரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஆட்சியைப் பெற்றார். தில்லிக்கு அருகில் இருந்தவர்களாலும் கூட இவரது அதிகாரமானது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இவருக்குப் பிறகு முபாரக் கான் ஆட்சிக்கு வந்தார். அவர் தனது பெயரை முபாரக் ஷா என்று மாற்றிக் கொண்டார். அவர் கோகர் போர்ப் பிரபுக்களிடமிருந்து இழந்த பஞ்சாப் நிலப்பரப்புகளை மீண்டும் பெற முயற்சி செய்து தோல்வியடைந்தார்.[98]

சிம்மெலின் கூற்றுப்படி, சையிது அரசமரபின் சக்தியானது வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போது, இந்திய துணைக்கண்டத்தின் மீதான இசுலாமிய வரலாறானது ஓர் ஆழ்ந்த மாற்றத்தின் கீழ் சென்றது.[98] முன்னர் ஆதிக்கம் செலுத்திய இஸ்லாமின் சன்னி பிரிவானது நீர்த்துப்போனது, மாற்று முஸ்லிம் பிரிவுகளான சியா போன்றவை வளர்ச்சியடைந்தன. புதிய, போட்டியிட்ட இஸ்லாமியக் கலாச்சார மையங்கள் தில்லியைத் தாண்டி வேறூன்றத் தொடங்கின.

சையிது அரசமரபின் கடைசிக் காலத்தின் போக்கில், தில்லி சுல்தானகமானது ஒரு சிறிய சக்தியாக மாறும் வரையில் சுருங்கியது. கடைசி சையிது ஆட்சியாளரான ஆலம் ஷாவின் (பொருள்: "உலகின் மன்னன்") காலத்தின் போது, இது ஒரு பொதுவான வட இந்தியச் சொற்றொடரை விளைவித்தது. அது "உலகின் மன்னனின் இராச்சியமானது தில்லியில் இருந்து பாளம் வரை விரிவடைந்துள்ளது" என்பதாகும். அதாவது வெறும் 13 கிலோ மீட்டர்கள் என்பதாகும். வரலாற்றாளர் ரிச்சர்ட் எம். ஈட்டன், "ஒரு காலத்தில் வல்லமை மிக்க பேரரசானது ஒரு நகைச்சுவையாக மாறிப் போனது" என்பதை இச்சொற்றொடர் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்.[101] 1451இல் சையிது அரசமரபுக்குப் பிறகு லௌதி அரசமரபு ஆட்சிக்கு வந்தது. எனினும், தில்லி சுல்தானகத்தின் மறு எழுச்சிக்கு இது வழி வகுத்தது.[101]

லௌதி அரசமரபு

Thumb
பாபுரின் படையெடுப்பின் போது தில்லி சுல்தானகம்.

லௌதி அரசமரபானது பஷ்தூன்[102] (ஆப்கான்)[103] லௌதி பழங்குடியினத்தைச் சேர்ந்ததாகும். பலூல் கான் லௌதி, லௌதி அரசமரபைத் தொடங்கினார். தில்லி சுல்தானகத்தை ஆண்ட முதல் பஷ்தூன் இவர் தான்.[104] தில்லி சுல்தானகத்தின் செல்வாக்கை விரிவாக்குவதற்காக பலூல் லௌதி முஸ்லிம் சௌன்பூர் சுல்தானகத்தைத் தாக்கியதன் மூலம் தனது ஆட்சியைத் தொடங்கினார். ஓர் ஒப்பந்தத்தின் வழியாக பகுதியளவு வெற்றி அடைந்தார். இதற்குப் பிறகு தில்லி முதல் வாரணாசி (வங்காள மாகாணத்தின் எல்லை) வரையிலான பகுதியானது தில்லி சுல்தானகத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது.

பலூல் லௌதி இறந்த பிறகு அவரது மகன் நிசாம் கான் ஆட்சிக்கு வந்தார். அவர் தனது பெயரைச் சிக்கந்தர் லௌதி என்று மாற்றிக் கொண்டார். 1489 முதல் 1517 வரை ஆட்சி செய்தார்.[105] அரசமரபின் நன்றாக அறியப்பட்ட ஆட்சியாளர்களில் ஒருவரான சிக்கந்தர் லௌதி தனது சகோதரர் பர்பக் ஷாவை சௌன்பூரில் இருந்து வெளியேற்றினார். தனது மகன் சலால் கானை ஆட்சியாளராக அமர வைத்தார். பிறகு பீகாரை உரிமை கோருவதற்காகக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டார். பீகாரின் முஸ்லிம் ஆளுநர்கள் திறை மற்றும் வரிகளைச் செலுத்த ஒப்புக் கொண்டனர். ஆனால், தில்லி சுல்தானகத்திலிருந்து சுதந்திரமாக இயங்கினர். சிக்கந்தர் லௌதி குறிப்பாக மதுராவைச் சுற்றியிருந்த கோயில்களை அழித்த ஒரு போர்ப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார். இவர் மேலும் தனது தலை நகரம் மற்றும் அரசவையைத் தில்லியில் இருந்து ஆக்ராவுக்கு மாற்றினார்.[106] ஆக்ராவானது ஒரு பண்டைய இந்து நகரம் ஆகும். ஆரம்ப தில்லி சுல்தானகக் காலத்தின் போது சூறையாடல் மற்றும் தாக்குதல்களால் இது அழிக்கப்பட்டிருந்தது. தன்னுடைய ஆட்சியின் போது ஆக்ராவில் இந்தோ-இஸ்லாமியக் கட்டடக்கலையில் கட்டங்களைச் சிக்கந்தர் எழுப்பினார். ஆக்ராவின் வளர்ச்சியானது தில்லி சுல்தானகத்தின் முடிவிற்குப் பிறகு முகலாயப் பேரரசின் காலத்திலும் தொடர்ந்தது.[104][107]

1517இல் சிக்கந்தர் லௌதி இயற்கை மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் மகனான இப்ராகிம் லௌதி ஆட்சிக்கு வந்தார். ஆப்கான் மற்றும் பாரசீக உயர்குடியினர் அல்லது வட்டாரத் தலைவர்களின் ஆதரவை இப்ராகிம் பெற்றிருக்கவில்லை.[108] இப்ராகிம் தனது அண்ணன் சலால் கானைத் தாக்கிக் கொன்றார். சலால் கானி இவர்களது தந்தை சௌன்பூரின் ஆளுநராக நியமித்து இருந்தார். சலால் கானுக்கு அமீர்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவு இருந்தது.[104] இப்ராகிம் லௌதியால் தனது ஆட்சியை நிலை நிறுத்த இயலவில்லை. சலால் கானின் இறப்பிற்குப் பிறகு பஞ்சாப்பின் ஆளுநரான தௌலத் கான் லௌதி மற்றும் இராணா சங்கா ஆகியோர் முகலாயரான பாபுரைத் தொடர்பு கொண்டனர். தில்லி சுல்தானகத்தைத் தாக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர்.[109] 1526இல் பானிபட் போரில் பாபுர் இப்ராகிம் லௌதியைத் தோற்கடித்துக் கொன்றார். இப்ராகிம் லௌதியின் இறப்பானது தில்லி சுல்தானகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. முகலாயப் பேரரசு ஆட்சிக்கு வந்தது.

Remove ads

அரசாங்கமும், அரசியலும்

வரலாற்றாளர் பேதுரு ஜாக்சனின் கேம்பிரிச்சின் புதிய இஸ்லாமிய வரலாறு என்ற நூலில் விளக்கப்பட்டுள்ள படி, ஆரம்ப தில்லி சுல்தானகத்தின் மேற்குடியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பாரசீகம் மற்றும் நடு ஆசியாவிலிருந்து வந்த முதல் தலைமுறைக் குடியேறிகளாக இருந்தனர்: பாரசீகர்கள் (தசிக்குகள்), துருக்கிய மக்கள் குழுவினர், கோரிகள் மற்றும் நவீன ஆப்கானித்தானின் வெப்பப் பகுதிகளில் இருந்து வந்த கலச்களாகவும் கூட இருந்தனர்.[110] அலாய் காலமானது, ஆரம்ப அடிமை ஆட்சியின் பழைய உயர்குடியினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதைக் கண்டது. தில்லியில் அவர்களது செல்வமானது நுஸ்ரத் கான் சலேசரியால் பறிமுதல் செய்யப்பட்ட போது, துருக்கிய உயர்குடியினரின் முதுகெலும்பானது உடைக்கப்பட்டது.[111] இதற்குப் பிறகு புதிய பல்வேறு வகை இந்தோ-முஸ்லிம் உயர்குடியினர் தில்லி சுல்தானகத்தில் தோன்ற ஆரம்பித்தனர்.[13][112]

அரசியலமைப்பு

இசாமி மற்றும் பரணி போன்ற நடுக்கால அறிஞர்கள் தில்லி சுல்தானகத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலமானது கசனவித்து அரசு மற்றும் அதன் ஆட்சியாளர் மகுமூது கசனவியிடம் உள்ளது எனப் பரிந்துரைக்கின்றனர். தில்லி அரசு முறையின் உருவாக்கத்தின் உள்ளமைப்புக்குக் கசனவி அடித்தளம் அமைத்தார் மற்றும் அகத் தூண்டுதலாக இருந்தார் என்று பரிந்துரைக்கின்றனர். தம் மதம் சாராத மங்கோலியர் மற்றும் இந்துக்கள் இந்தக் குறிப்புகளில் பெரிய "மற்றவர்கள்" என்று குறிப்பிடப்படுகின்றனர். பாரசீக மற்றும் வகுப்பு உணர்வுகள், ஒரு முன்மாதிரி அரசின் உயர்குடியினரின் பண்புகள் ஆகியவை கசனவித்து அரசில் ஆக்கத் திறனுடன் நினைவு படுத்தப்பட்டன. இவையே அப்போதைய தில்லி சுல்தானகத்தின் மாதிரி வடிவமாக இருந்தன. ஒரு வரலாற்று நிகழ்வாக உருவாக்கப்பட்ட இது சுல்தானகத்தை ஒரு மிகுந்த சுய-பிரதிபலிப்புடையதாகவும் மற்றும் முஸ்லிம் அரசமைப்பின் பெரிய பாரம்பரியங்களில் சுல்தானகம் நேராக வேறூன்றவும் அனுமதியளித்தன.[113] காலப்போக்கில் வழி வந்த இந்தோ-முஸ்லிம் அரசமரபுகள் பாரசீகப் பாரம்பரியத்தில் ஒரு 'மையப்படுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கின. அதன் பணியானது தம் மதம் சாராத மங்கோலியர் மற்றும் இந்துக்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்காக மனித வளம் மற்றும் பொருள் ஆதாரங்களைத் திரட்டுவதாகும்'.[114] சுல்தானகத்தின் மன்னனானவர் இந்துக்களின் அல்லது உதாரணமாக அரியானா மக்களின் சுல்தான் கிடையாது. மாறாக சுல்தானகத்தின் வரலாற்றாளர்களின் பார்வையில், தற்போது "ஸ்டாட்ஸ்வோல்க்" (Staatsvolk) என்ற சொல்லால் குறிப்பிடப்படும் அரசின் மக்களாக முஸ்லிம்கள் இருந்தனர். பல முஸ்லிம் பார்வையாளர்களுக்கு இஸ்லாமிய உலகில் உள்ள எந்த ஓர் ஆட்சியாளரின் இறுதியான ஏற்கத்தக்க முகாந்திரமானது மத நம்பிக்கையைப் பாதுகாப்பதும், முன்னேற்றுவதும் ஆகும். அவர்களது கசனவித்து மற்றும் கோரி முன்னிருந்தவர்களைப் போலவே, சுல்தான்களுக்கும் பிற முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒடுக்குவதிலும் ஈடுபட்டனர். பிரூசு ஷாவும் இவ்வாறான ஒரு பிரிவுக்கு எதிராகச் செயல்படுவதற்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்தார். இதில் சுதந்திர இந்து வேள் பகுதிகளுக்கு எதிராகச் சூறையாடுவது, திறையைக் கட்டாயப்படுத்திப் பெறுவது ஆகியவையும் அடங்கும்.[115] பிரூசு ஷா இறுதியில் இந்தியா ஒரு முஸ்லிம் நாடு என்று நம்பினார்.[116] "ஒரு முசல்மான் நாட்டில் வாழும் எந்த ஒரு சிம்மிக்கும் (முஸ்லிம் அல்லாதவருக்கும்) செயல்படுவதற்குத் தைரியம் வராது" என்று அவர் அறிவித்தார்.[117]

துணைக்கண்டத்துக்குள் இருந்த கல்வியறிவு பெற்ற முஸ்லிம் சமூகத்தினரின் அகன்ற தொகுதியில் இருந்தோரின் பார்வையில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடி பணிந்த பல கடவுள்களை வழிபடும் இந்துக்கள் "பாதுகாக்கப்பட்ட மக்கள்" என்ற தகுதியைப் பெற்றனர். இதற்கு ஓர் ஆதாரமானது, அதற்கு முன்னர் ஒரு வேளை இல்லாதிருக்க வாய்ப்பிருந்திருந்தாலும் 14ஆம் நூற்றாண்டின் பிற்பாதியின் போது ஜிஸ்யா வரியானது முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஒரு பாரபட்சமான வரியாகத் தீர்க்கமாக விதிக்கப்பட்டது ஆகும். முஸ்லிம் அதிகாரத்தின் முதன்மையான மையங்களுக்கு வெளியே இந்த நடவடிக்கையானது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிவது கடினமாக இருந்த போதிலும் கூட இவ்வாறு கருதப்படுகிறது.[118] தில்லி சுல்தானகமானது முந்தைய இந்து அரசுகளின் அரசாங்க மரபுகளையும் தொடர்ந்தது. தனித்துவமான முதன்மைக் கட்டுப்பாட்டைக் கோருவதற்குப் பதிலாக தம் குடிமக்களில் சிலர் மீது இராசாதி இராசன் போன்ற உரிமையைக் கோரியது. இவ்வாறாக அது வெல்லப்பட்ட சில இந்து ஆட்சியாளர்களிடம் அவர்களின் தன்னாட்சி மற்றும் இராணுவத்தில் தலையிடவில்லை. திறை செலுத்திய இந்துக்கள் மற்றும் அதிகாரிகளைச் சுதந்திரமாக அது உள்ளடக்கியிருந்தது.[7]

பொருளாதாரக் கொள்கையும், நிர்வாகமும்

பாரம்பரிய இந்து அரசமரபுகளுடன் ஒப்பிடும் போது, அதிகப்படியான அரசாங்க ஈடுபாடு, மற்றும் அரசாங்கக் கட்டுப்பாடுகளை மீறும் தனியார் வணிக அமைப்புகளுக்கான அதிகரிக்கப்பட்ட தண்டனைப் பணம் ஆகியவற்றால் தில்லி சுல்தானகத்தின் பொருளாதாரக் கொள்கையானது விவரிக்கப்படுகிறது. தனியார் சந்தைகளுக்குப் பதிலாக நான்கு மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சந்தைகளை அலாவுதீன் கல்சி கொண்டு வந்தார். ஒரு "சந்தை கட்டுப்பாட்டாளரை" நியமித்தார். "தொப்பிகள் முதல் குறுங்காலுறைகள் வரை; சீப்புகள் முதல் ஊசிகள் வரை; காய்கறிகள், வடிசாறுகள், இனிப்புகள் முதல் சப்பாத்திகள் வரை" அனைத்து வகையான பொருட்கள் மீதும் கடுமையான விலைக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தினார் (சியாவுதீன் பரணியின் கூற்றுப்படி [அண். 1357][119]).[120] வறட்சிக் காலங்களின் போது கூட விலைக் கட்டுப்பாடுகள் நெகிழ்வுத் தன்மை இல்லாதவையாக இருந்தன.[121] குதிரை வணிகத்தில் பங்கேற்பதில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டனர்.[122] விலங்கு மற்றும் அடிமை இடைத்தரகர்கள் விற்பனை முகவர் பங்குகளை வசூலிப்பதிலிருந்து தடை செய்யப்பட்டனர்.[123] அனைத்து விலங்கு மற்றும் அடிமைச் சந்தைகளில் இருந்து தனியார் வணிகர்கள் நீக்கப்பட்டனர்.[123] பொருட்களை இரகசியமாகக் குவிப்பது[124] மற்றும் சந்தை நிலவரத்தின் போக்கை மாற்ற முயற்சிப்பது[125] ஆகியவைக்கு எதிராகத் தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தானியக் கிடங்குகள் தேசியமயமாக்கப்பட்டன.[124] தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக அறுவடையாளர்கள் பயன்படுத்தும் தானியத்தின் அளவின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.[126]

பல்வேறு உரிமை விதிகள் விதிக்கப்பட்டன. வணிகர்களாகுவதற்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.[127] ஒரு சில விலை உயர்ந்த துணிகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பொதுமக்களுக்குத் "தேவையற்றவை" என்று கருதப்பட்டன. அவற்றை வாங்குவதற்கு அரசிடமிருந்து ஓர் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. இந்த உரிமங்கள் அரசாங்கத்தின் அமீர்கள், மாலிக்குகள் மற்ற பிற முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டன.[123] விவசாய வரிகள் 50%க்கு உயர்த்தப்பட்டன.

வணிகர்கள் இந்த விதிமுறைகளைச் சுமையை ஏற்படுத்துவதாகக் கருதினர். கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர். இது வணிகர்களிடையே மேலும் வெறுப்புணர்வு ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது.[119] இந்த அமைப்பு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒற்றர்களின் ஓர் அமைப்பும் தொடங்கப்பட்டது. பரணியின் கூற்றுப்படி, கல்சியின் இறப்பிற்குப் பிறகு விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒற்றர்கள் குறித்த அச்சமானது தொடர்ந்தது. விலையுயர்ந்த பொருட்களில் வணிகம் செய்வதை மக்கள் தொடர்ந்து தவிர்த்தனர்.[128]

சமூகக் கொள்கைகள்

கலையில் விலங்குகள் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைச் சித்தரிக்கும் பிரதிநிதித்துவங்கள் இஸ்லாமிய சமயத் தடையின் படி சுல்தானகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டன.[129]

இராணுவம்

தில்லி சுல்தான்களின் இராணுவமானது ஆரம்பத்தில் கோரி முகம்மதுவுக்குச் சொந்தமான நாடோடித் துருக்கிய மக்கள் குழுவின் அடிமைகளை உள்ளடக்கியதாக இருந்தது.

அலாய் காலத்தில் அரசு மீதான துருக்கிய ஏகபோகமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. தில்லி சுல்தானகத்தின் அலாய் காலத்தின் இராணுவமானது இந்திய இராணுவப் பாணியிலான போர் முறையைக் கொண்டிருந்தது. அதற்கு முன்னால் இல்பாரி அடிமைப் பாணியிலான போர் முறையானது பின்பற்றப்பட்டு வந்தது. வரலாற்று நூல்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட துருக்கிய மக்கள் குழு அடிமைகள் குறித்து மேற்கொண்ட எந்த ஒரு குறிப்பும் அரிதாகவே காணப்படுகின்றன. 1200களின் இறுதியில் இந்திய அடிமைகள் இராணுவத்திற்காக விரும்பப்பட்டனர்.[130] மம்லூக் அரசமரபினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதற்குப் பிறகு துருக்கிய மக்கள் குழு அடிமைகளின் சக்தியைக் குறைக்க புதிய உயர் குடியினர் விரும்பியதே இதற்குக் காரணம் ஆகும்.[131]

தில்லி சுல்தானகத்தின் ஒரு முக்கிய இராணுவப் பங்களிப்பானது இந்தியா மீது சகதாயி கானரசு எடுத்த மங்கோலியப் படையெடுப்புளைத் தங்களது வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் முறியடித்ததாகும். இப்படையெடுப்பு ஒரு வேளை இந்தியத் துணைக்கண்டத்திற்கு சீனா, பாரசீகம் மற்றும் ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்புகள் போல் அழிவுகரமானதாக இருந்திருக்கலாம். தில்லி சுல்தானகம் இல்லை என்றால், இந்தியா மீதான படையெடுப்பில் சகதாயி கானரசானது ஒரு வேளை வெற்றியடைந்திருக்கலாம்.[33]

Remove ads

பொருளாதாரம்

இந்தியாவைப் பல பண்பாட்டு மற்றும் பல்வேறு நாட்டு மக்களைக் கொண்ட இடமாக மேலும் ஆக்கியதற்குத் தில்லி சுல்தானாகம் காரணம் எனப் பல வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர். இந்தியாவில் தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டது மங்கோலியப் பேரரசின் விரிவாக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. "ஐரோவாசிய முழுவதும் ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெரிய வரலாற்றுப் போக்கின் பகுதி" என இது அழைக்கப்படுகிறது. இதில் "நாடோடி மக்கள் உள் ஆசியாவின் புல்வெளியில் இருந்து புலம் பெயர்ந்தனர். அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்."[20]

பிரித்தானியப் பொருளாதார நிபுணர் அங்குஸ் மாடிசனின் கூற்றுப்படி, 1000 மற்றும் 1500 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கிட்டத்தட்ட 80% வளர்ந்து 1500ஆம் ஆண்டு ஐஅ$60.5 பில்லியன் (4,32,671.8 கோடி)-ஆக உயர்ந்தது. இதில் சுல்தானகங்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றின. இதனுடன் ஒப்பிடும் போது, அதற்கு முந்தைய 1,000 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது இல்லாமல் இருந்தது.[132] மாடிசனின் மதிப்பீடுகளின் படி, இதே காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 50% வளர்ந்தது.[133]

இந்தியத் துணைக் கண்டத்தில் இயந்திரத் தொழில்நுட்பமானது பெருமளவில் பயன்படுத்தப்பட்டதுடன் தில்லி சுல்தானகக் காலமானது ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் இந்தியா அதற்கு முன்னர் நுணுக்கங்கள் வாய்ந்த விவசாயம், உணவுப் பயிர்கள், ஜவுளிகள், மருந்துகள், தாதுப் பொருட்கள் மற்றும் உலோகங்களைக் கொண்டிருந்த போதும் அது இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய உலகம் அல்லது சீனாவைப் போல் நுணுக்கங்கள் உடையதாக இல்லை.[134] தில்லி சுல்தானகத்திற்கு முன்னரே இந்தியாவில் நீர்ச் சக்கரங்கள் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ள போதும்,[135][note 2] பற்சில்லுகள், அல்லது பற்சில்லுகளை உடைய பிற இயந்திரம், கப்பிகள், இயக்கவழங்கிகள் அல்லது நழுவி வணரி இயங்கமைவுகளைக் கொண்டு நீரை எடுக்கும் சக்கரங்கள் இந்தியாவில் அதற்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை.[134] இந்த இயந்திரக் கருவிகள் 13ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவுக்கு இஸ்லாமிய உலகத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டன.[134] பிறகு, முகலாயப் பேரரசர் பாபுர் தில்லி சுல்தானாகத்தில் நீர்ச் சக்கரங்களைப் பயன்படுத்தியதைக் குறித்து ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.[140]

அர்னால்டு பேசி மற்றும் இர்பான் அபீப் போன்ற வரலாற்றாளர்களின் கூற்றுப்படி, நூற்புச் சக்காரமானது தில்லி சுல்தானகத்தின் காலத்தின் போது ஈரானில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[141] ஸ்மித் மற்றும் கோத்ரன் ஆகிய வரலாற்றாளர்கள் பொ. ஊ. முதல் 1,000 ஆண்டுகளின் இரண்டாம் பாதியின் போது இந்தியாவில் இது உருவாக்கப்பட்டது எனப் பரிந்துரைக்கின்றனர்.[142] ஆனால், பருத்தி நூற்புச் சக்கரம் குறித்த இந்த ஆரம்பக் குறிப்புகள் தெளிவற்றவையாக உள்ளன என பேசி மற்றும் அபீப் குறிப்பிடுகின்றனர். அவை ஒரு சக்கரத்தைத் தெளிவாக அடையாளப்படுத்தவில்லை எனவும், ஆனால் பெரும்பாலும் ஒரு கை நூற்புச் சக்கரத்தைக் குறிப்பிடவே வாய்ப்பிருந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.[141] நூற்புச் சக்கரம் குறித்து ஆரம்ப, குழப்பமற்ற குறிப்பானது இந்தியாவில் 1350ஆம் ஆண்டு தேதியிட்டப்படுகிறது.[141] பற்சக்கர உருளை பருத்தி அரவை ஆலையானது 13 அல்லது 14ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டது என அபீப் குறிப்பிடுகிறார். இந்த உருவாக்கமானது பெரும்பாலும் தீபகற்ப இந்தியாவில் நடைபெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். முகலாயக் காலத்தின் போது இந்தியா முழுவதும் இது பின்னர் பரவியது.[143] பருத்தி அரவை ஆலையில் நழுவி வணரி இயங்கமைவானது சேர்க்கப்பட்டது தில்லி சுல்தானகத்தின் பிற்காலம் அல்லது முகலாயப் பேரரசின் ஆரம்ப காலத்தின் போது ஒரு நேரத்தில் தொடங்கியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.[144]

காகிதமானது இந்தியாவின் சில பகுதிகளை 6 அல்லது 7ஆம் நூற்றாண்டு போன்ற ஆரம்ப காலங்களிலேயே அடைந்தது.[114][145][146] சீனப் பயணிகள் மூலம் இது ஆரம்பத்தில் பரவியது. ஓலைச்சுவடிகளும், பூர்ச்சமரப் பட்டைகளும் காகிதத்தை விட அதிகப் பிரபலமானதாகத் தொடர்ந்ததால் காகிதத்தால் அவற்றுடன் போட்டியிட இயலவில்லை.[147] வட இந்தியா முழுவதும் காகிதம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது 13ஆம் நூற்றாண்டில் தான். பிறகு தென்னிந்தியாவில் 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[148] தில்லி சுல்தானகத்திற்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்தில் காகிதத் தயாரிப்பானது வடமேற்குப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அப்பகுதிகளில் முஸ்லிம் ஆட்சியின் கீழோ (சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் பகுதிகள்) அல்லது முஸ்லிம் வணிகர்களைக் கொண்டோ (குசராத்து) இருந்தன. 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் காகிதத் தயாரிப்பானது இறுதியாகப் பரவத் தொடங்கியது. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இறுதியாகத் தென்னிந்தியா முழுவதும் பரவியது.[149] அதே நேரத்தில், காகிதமானது வங்காளத்திற்கு வேறு ஒரு தனி வழியில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டு சீனப் பயணியான மா குவான் வங்காளக் காகிதமானது வெள்ளை நிறத்தில் உள்ளது என்றும், சீனக் காகித தயாரிப்பு முறையை ஒத்து "ஒரு மரத்தின் பட்டையில்" இருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் கந்தல் துணிகள் மற்றும் குப்பைப் பொருட்களைப் பயன்படுத்திக் காகிதம் தயாரிக்கப்படும் முறைக்கு மாறாக இது உள்ளது. இது வங்காளத்திற்குக் காகிதமானது சீனாவிலிருந்து நேரடி வழியில் வந்தது என்பதை நமக்குப் பரிந்துரைக்கிறது.[149]

Remove ads

சமூகம்

மக்கள் தொகை

நவீன வரலாற்றாளர்களின் மிகுந்த உறுதிப்படுத்தப்படாத ஒரு வகை மதிப்பீடுகளின் படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையானது பொ. ஊ. 1 முதல் 1,000ஆம் ஆண்டு வரையிலான நடு இராச்சியங்களின் காலத்தின் போது 7.5 கோடி என்ற அளவிலேயே நின்று போனது. 1,000 முதல் 1,500 வரையிலான நடுக்காலத் தில்லி சுல்தானகத்தின் காலத்தின் போது இந்தியா ஓர் ஒட்டு மொத்த, நீடித்திருந்த மக்கள் தொகைப் பெருக்கத்தை 1,000 ஆண்டுகளில் முதல் முறையாக அடைந்தது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 50% அதிகரித்து 1500ஆம் ஆண்டு 11 கோடியானது.[150][151]

கலாச்சாரம்

பண்டைய காலங்களிலிருந்து இந்தியத் துணைக்கண்டமானது நடு ஆசியாவிலிருந்து வரும் படையெடுப்பாளர்களைக் கொண்டிருந்த போதும், முஸ்லிம் படையெடுப்புகளை வேற்றுமையாக ஆக்கியது, ஏற்கனவே இருந்த சமூக அமைப்பில் முந்தைய படையெடுப்பாளர்கள் இணைந்ததைப் போல் இல்லாமல், வெற்றியடைந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் தங்களது இஸ்லாமிய அடையாளத்தைத் தொடர்ந்து கடைபிடித்தனர். புதிய நீதி மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்கினர். ஏற்கனவே இருந்த சமூக நடத்தை மற்றும் நன்னெறி அமைப்புகளுக்குச் சவால் விட்டவையாகவும், பல நேரங்களில் பொதுவாக அவற்றின் இடத்தைக் கைக் கொண்டவையாகவும் இருந்தன. முஸ்லிம் அல்லாத எதிரிகள் மீது தாக்கத்தையும் கூட ஏற்படுத்தின. பொது மக்களின் மீது ஒரு நீண்ட அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின. இருந்த போதிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் தங்களது சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் விடப்பட்டனர்.[152][153] அவர்கள் புதிய கலாச்சார விதிகளையும் அறிமுகப்படுத்தினர். அவை சில வழிகளில் ஏற்கனவே இருந்த கலாச்சார விதிகளிலிருந்து மிகுந்த வேறுபாடுடையவையாக இருந்தன. ஒரு புதிய இந்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு இது வழி வகுத்தது. அக்கலாச்சாரம் இயற்கையில் கலவையான கலாச்சாரமாக இருந்தது. அது பண்டைய இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. இந்தியாவிலிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவைப் பூர்வீகமாக உடையவர்கள் ஆவர். அவர்கள் இஸ்லாமிற்கு மதம் மாறி இருந்தனர். இக்காரணியும் கலாச்சாரங்கள் இணைவதில் ஒரு முக்கியப் பங்காற்றியது.[154]

இந்துசுத்தானி மொழியானது (இந்து/உருது) தில்லி சுல்தானகத்தின் காலத்தில் உருவாகத் தொடங்கியது. இது வட இந்தியாவின் நடு இந்தோ-ஆரிய அபபிரம்சா வட்டாரப் பேச்சு மொழிகளில் இருந்து உருவாகியது. வட இந்தியாவில் தில்லி சுல்தானாகக் காலத்தின் போது பொ. ஊ. 13ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அமீர் குஸ்ராவ் இந்துசுத்தானியின் ஒரு வகையைப் பயன்படுத்தினார். இது அக்காலத்தின் இணைப்பு மொழியாக இருந்தது. இதை அவர் தனது நூல்களில் பயன்படுத்தினார். இதை இந்தவி என்று அழைத்தார்.[21]

அதிகாரிகள், சுல்தான்கள், கான்கள், மாலிக்குகள் மற்றும் படைவீரர்கள் குவாரசமியப் பாணியில் இஸ்லாமிய கபாசு ஆடைகளை அணிந்தனர். அவை உடலின் நடுப்பகுதியில் சொருகி வைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் தலைப்பாகையும், குல்லாவும் தலையில் அணியும் பொதுவான தொப்பிகளாக இருந்தன. தலைப்பாகையானது குல்லாவைச் சுற்றி சுற்றப்பட்டன. கால்கள் சிவப்பு புதை மிதியடிகளால் மூடப்பட்டிருந்தன. வாசிர்கள் மற்றும் கதீப்களும் படை வீரர்களைப் போலவே ஆடை அணிந்தனர். மாறாக, அவர்கள் இடுப்புப் பட்டைகளைப் பயன்படுத்தவில்லை. சூபிக்களின் பாணியில் துணியின் ஒரு துண்டைத் தங்களுக்கு முன்னாள் பெரும்பாலும் தொங்கவிட்டிருந்தனர். நீதிபதிகளும், கற்றறிந்த மக்களும் நீண்ட தளர் உடைகளையும், ஓர் அரேபிய ஆடையையும் அணிந்தனர்.[155]

கட்டடக்கலை

Thumb
குதுப் மினார் (இடது, தொடங்கப்பட்ட ஆண்டு அண்.1200) அலாய் தர்வாசா வாயிற்கதவுக்கு (1311) அடுத்து உள்ளது; குதுப் மினார் வளாகம், தில்லி

குத்புத்தீன் ஐபக்கின் கீழ் 1206ஆம் ஆண்டு தில்லி சுல்தானாகம் தொடங்கப்பட்டது என்பது இந்தியாவுக்கு நடு ஆசியப் பாணிகளைப் பயன்படுத்திய ஒரு பெரிய இஸ்லாமிய அரசை அறிமுகப்படுத்தியது.[156] முஸ்லிம் மேல்தட்டுக் குடியினரால் வேண்டப்பட்ட பெரிய கட்டடங்களின் வகைகளும், அமைப்புகளும் இந்தியாவில் முன்னர் கட்டப்பட்டவற்றிலிருந்து மிகுந்த வேறுபாடுடைவையாக இருந்தன. முஸ்லிம் உயர்குடியினர் பள்ளிவாசல்களையும், கல்லறைகளையும் மிகப் பொதுவாக வேண்டினர். இவற்றின் வெளிப்புறங்கள் பெரும்பாலும் அடிக்கடி பெரிய குவிமாடங்களை மேல் புறத்தில் கொண்டும், வளைவுகளை விரிவாகப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்டன. இந்த இரு அம்சங்களும் இந்துக் கோயில் கட்டடக்கலை மற்றும் பிற இந்தியப் பாணிகளில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. இந்த இரு வகை கட்டடங்களும் ஓர் உயர்ந்த குவிமாடத்துக்குக் கீழ் ஓர் ஒற்றை பெரிய வெளியைக் கொண்டிருந்தன. இந்துக் கோயில் கட்டடக்கலைக்கு மிகுந்த முக்கியமான உருவச் சிற்பங்களை இவை முழுவதுமாக தவித்தன.[157]

தில்லியின் முக்கியமான குதுப் மினார் வளாகமானது கோரி முகம்மதுவின் ஆட்சியின் கீழ் 1199இல் தொடங்கப்பட்டது. குத்புத்தீன் ஐபக் மற்றும் பிந்தைய சுல்தான்களின் ஆட்சியின் கீழ் தொடரப்பட்டது. குதுப் மினார் மசூதியானது முதல் கட்டடமாக இருந்தது. அது தற்போது சிதிலமடைந்துள்ளது. பிற ஆரம்ப இஸ்லாமியக் கட்டடங்களைப் போலவே அழிக்கப்பட்ட இந்து மற்றும் சமணக் கோயில்களின் தூண்கள் போன்ற பகுதிகளை இது மீண்டும் பயன்படுத்தியது. தள மேடை மீண்டும் பயன்படுத்தப்பட்ட அதே களம் ஒன்றும் இதில் அடங்கும். இதன் பாணியானது ஈரானியப் பாணியாகும். ஆனால் இன்னும் பாரம்பரிய இந்திய வழியிலேயே வாயில்கள் வளைத்து அமைக்கப்பட்டன.[158]

இதற்குப் பக்கவாட்டில் மிகுந்த உயரமுடைய குதுப் மினார் அமைந்துள்ளது. இது ஒரு மினார் அல்லது வெற்றிக் கோபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. இதன் உண்மையான நான்கு அமைப்புகள் 73 மீட்டர் உயரத்தை அடைகின்றன. இதன் இறுதி அமைப்பானது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. இதற்கு நெருங்கிய போட்டியாளராக உள்ளது ஆப்கானித்தானில் உள்ள 62 மீட்டர் உயர, முழுவதுமாக செங்கற்களால் கட்டப்பட்ட ஜாம் மினார் ஆகும். இது அண்.1190இல் கட்டப்பட்டது. தில்லி கோபுரத்தின் தோராயமான தொடக்க ஆண்டுக்கு ஒரு தசாப்தம் அல்லது அதற்கு முன்னர் இது தொடங்கப்பட்டது.[note 3] இவை இரண்டின் மேற்பரப்புகளும் பொறிப்புகள் மற்றும் வடிவியல் கணித வடிவங்களால் நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. தில்லியில் அதன் முழு நீளத்திற்கும், "மாடி முகப்புக்குக் கீழ் முகட்டின் தொங்கு ஊசி போன்ற சிறந்த அமைப்புகளை மினாரானது" அதன் ஒவ்வொரு அமைப்பின் மேல்புறத்திலும் கொண்டுள்ளது.[159] பொதுவாக மினார்கள் இந்தியாவில் மெதுவாகவே பயன்பாட்டுக்கு வந்தன. பெரும்பாலும் அவை அமைந்துள்ள மசூதியில் இருந்து தனித்தே இருக்கும்.[160]

சம்சுத்தீன் இல்த்துத்மிசின் கல்லறையானது 1236இல் சேர்க்கப்பட்டது. அதன் குவிமாடத்தின் அடிப்பகுதிகள் வளைந்து உள்ளன. குவிமாடமானது இதில் காணப்படவில்லை. நுணுக்கமான செதுக்கமானது கடுமையான, "கூரிய முனைகளை" உடையதாக விவரிக்கப்பட்டுள்ளது. பழக்கம் இல்லாத பாரம்பரியத்தில் செதுக்கியவர்கள் பணி புரிந்ததால் இவ்வாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.[161] அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மற்ற அம்சங்களும் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டன.

1190களில் தொடங்கப்பட்ட மற்றொரு மிகுந்த ஆரம்ப மசூதியானது இராசத்தானின் அஜ்மீரில் உள்ள அதை தின் கா சோன்பரா ஆகும். இது அதே தில்லி ஆட்சியாளர்களுக்காகக் கட்டப்பட்டது. மீண்டும் வளைவான வாயில்களையும், குவிமாடங்களையும் கொண்டிருந்தது. இங்கு இந்துக் கோயில் தூண்கள் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தூண்கள் அடுக்கப்பட்டு அதிகப்படியான உயரமானது எட்டப்பட்டது. இவற்றில் ஒரு வேளை சில புதிய தூண்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டு மசூதிகளும் பெரிய பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தன. அவற்றின் முன் வளைவான, நுனி உடைய வாயில்கள் இருந்தன. இவை ஒரு வேளை ஒரு சில தசாப்தங்களுக்குப் பிறகு இல்த்துத்மிசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் நடு வாயிலானது உயரமாக உள்ளது. இது மூன்று பக்கம் சுவர்களைக் கொண்டு ஒரு பக்கம் திறந்து விடப்பட்ட இவான் அமைப்பைப் போல் உள்ளது. அஜ்மீரில் சிறிய வாயில்கள் தெளிவற்ற முறையில் வளைந்துள்ளன. இது இந்தியாவில் முதல் முறையாக இவ்வாறு உள்ளது.[162]

Thumb
கியாதல்தீன் துக்ளக்கின் கல்லறை (இ. 1325), தில்லி

1300வாக்கில் அரை வட்டங்களையுடைய உண்மையான குவிமாடங்களும், வாயில்களும் கட்டப்பட்டன. தில்லியில் சிதைந்துள்ள பால்பனின் (இ. 1287) கல்லறையானது ஆரம்பத்தில் எஞ்சியிருந்தக் கருதப்படுகிறது.[163] குதுப் மினார் வளாகத்தின் அலாய் தர்வாசா வாயிற்கதவானது 1311ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இது புதிய தொழில்நுட்பத்திற்கு ஓர் எச்சரிக்கையான அணுகுமுறையை இன்னும் காட்டுகிறது. இதில் நல்ல தடித்த சுவர்களும், ஒரு வெற்றிடமான குவிமாடமும் உள்ளன. இவை ஒரு குறிப்பிடத்தக்க தொலைவு அல்லது உயரத்திலிருந்து காணப்படக் கூடியவையாக உள்ளன. எடுப்பான வேறுபட்ட நிறங்கள் உள்ள கல் தச்சு வேலைப்பாடானது, இந்தோ-இஸ்லாமியக் கட்டடக் கலையின் ஒரு பொதுவான அம்சமாகப் பிற்காலத்தில் உருவானதை அறிமுகப்படுத்தியது. இதில் சிவப்பு மணற்கற்களும், வெள்ளைப் பளிங்கும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பாரசீக மற்றும் நடு ஆசியாவில் பல வண்ணப் பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டதற்கு மாற்றாக இவை பயன்படுத்தப்பட்டன. நுனியுடைய வாயில்கள் அவற்றின் அடிப் பரப்புடன் சற்றே இணைந்து வருகின்றன. இது ஒரு மிதமான குதிரை இலாட வாயிற்கதவு தாக்கத்தைக் கொடுக்கிறது. அவற்றின் உள் முனைகள் வளைந்து இருக்கவில்லை. ஆனால், பொதுவான "ஈட்டி முனை" அமைப்புகளால் கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஒரு வேளை தாமரை மொட்டுகளை ஒத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சலி எனப்படும் கல் வேலைப்பாடுகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. கோயில்களில் இவை ஏற்கனவே நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.[164]

துக்ளக் கட்டடக்கலை

முல்தானில் உள்ள சாருக்னு-இ ஆலமின் கல்லறை 1320 முதல் 1324 வரை கட்டப்பட்டது. இது ஒரு பெரிய எண்கோண வடிவ, செங்கல்களால் கட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். இதில் பல வண்ணக் கற்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஈரான் மற்றும் ஆப்கானித்தான் பாணிகளுக்கு மிகுந்த நெருக்கமாக தொடர்ந்து உள்ளது. மரமும் இதன் உள்புறத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துக்ளக் அரசமரபின் (1320–1413) ஆரம்ப பெரிய நினைவுச்சின்னம் இதுவாகும். இவ்வரசமரபின் பெரும் நிலப்பரப்பானது நிலை பெற்றிருக்காத வகையில் விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில் இது கட்டப்பட்டது. இது சுல்தானுக்காக அல்லாமல் ஒரு சூபித் துறவிக்காகக் கட்டப்பட்டது. துக்ளக் கல்லறைகளில் பெரும்பாலானவை உணர்ச்சியூக்கம் குறைந்தவையாக உள்ளன. அரசமரபைத் தோற்றுவித்த கியாதல்தீன் துக்ளக்கின் (இ. 1325) கல்லறையானது மிகுந்த எளிமையாக உள்ளது. ஆனால், பாராட்டக் கூடியதாக உள்ளது. ஓர் இந்துக் கோயிலைப் போல் இதன் உச்சியில் ஒரு சிறிய வட்டும், ஒரு வட்டமான கலசம் போன்ற ஒன்றும் உள்ளது. முன்னர் குறிப்பிடப்பட்ட கட்டங்களை போல் இல்லாமல் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் இதில் முழுவதுமாக இல்லை. உயர்ந்த சுவர்கள் மற்றும் இடைவெளி உடைய தாழ்வான சுவர்களுடன் ஒரு சுற்று வட்டச் சுவர்களில் இது உள்ளது. இந்த இரண்டு கல்லறைகளுக்கும் வெளிப்புறச் சுவர்கள் உட்புறம் சற்றே சாய்ந்தவாறு உள்ளன. தில்லி கல்லறையில் இது 25° சாய்ந்துள்ளது. கல்லறைக்கு எதிராக உள்ள சிதிலமடைந்த துக்ளகாபாத் கோட்டை உள்ளிட்ட பல காப்பரண்களைப் போல இதுவும் ஒரு புதிய தலைநகரமாக உருவாக்கப்படுவதற்காகக் கட்டப்பட்டதாகும்.[165]

துக்ளக்குகளிடம் அரசாங்கக் கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் கட்டுனர்களைக் கொண்ட ஒரு குழு இருந்தது. இது மற்றும் பிற பதவிகள் பல இந்துக்களை பணியமர்த்தி இருந்தன. அவர்கள் ஒரு பல கட்டடங்களையும், ஒரு தரப்படுத்தப்பட்ட அரசமரபு பாணியையும் விட்டுச் சென்றனர்.[164] மூன்றாவது சுல்தானான பிரூசு ஷா (ஆட்சி. 1351–88) தானே கட்டடங்களை வடிவமைத்ததாகக் கூறப்பட்டது. அரசமரபின் நீண்ட காலம் ஆட்சி செய்த ஆட்சியாளரும், பெரும் கட்டட உருவாக்குனருமாக அவர் இருந்தார். அவரது பிரூசு ஷா அரண்மனை வளாகமானது அரியானாவின் இசாரில் 1354இல் தொடங்கப்பட்டது. அது தற்போது சிதிலமடைந்துள்ளது. ஆனால், ஒரு சில பகுதிகள் இன்றும் நல்ல முறையில் உள்ளன.[166] இஸ்லாமியக் கட்டடங்களில் அரிதாகவோ அல்லது அறியப்படாமலோ இருந்த வடிவங்களை இவரது ஆட்சியின் போது இருந்த சில கட்டடங்கள் கொண்டுள்ளன.[167] தில்லியில் பெரிய கவுசு காசு வளாகத்தில் இவர் புதைக்கப்பட்டார். இவரது மற்றும் பிந்தைய சுல்தானாகக் காலத்தின் போது கட்டப்பட்ட பல பிற கட்டடங்கள் உள்ளன. இதில் பல சிறிய குவிமாட ஓய்விடங்கள் வெறும் தூண்களால் மட்டுமே ஆதரவு அளிக்கப்பட்டு உள்ளன.[168]

இந்த நேரத்தில் இந்தியாவில் இஸ்லாமியக் கட்டடக் கலையானது ஆரம்ப இந்தியக் கட்டடக் கலையின் சில அம்சங்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. ஓர் உயர்ந்த கற்பாளத்தைப் பயன்படுத்துதல்[169] மற்றும் அடிக்கடி அதன் விளிம்புகளைச் சுற்றி பூசுதல், மேலும் தூண்கள், பாரந்தாங்கிகள் மற்றும் தூண்களை உடைய மன்றங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.[170] பிரூசின் இறப்பிற்குப் பிறகு துக்ளக்குகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்த தில்லி அரசமரபுகள் பலவீனமானவையாக இருந்தன. கட்டப்பட்ட பெரும்பாலான நினைவுக் கட்டடங்கள் கல்லறைகளாக இருந்தன. எனினும், தில்லியின் பாராட்டத்தக்க லௌதி தோட்டங்கள் பிந்தைய லௌதி அரசமரபால் கட்டப்பட்டன. இதில் அலங்கார நீரூற்றுகள், நான்கு வழித் தோட்டங்கள், குளங்கள், கல்லறைகள் மற்றும் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற மாகாண முஸ்லிம் அரசுகளின் கட்டடக் கலையும் பெரும்பாலும் பராட்டுக்குரியதாகவே இருந்தது.[171]

Remove ads

ஆட்சியாளர்களின் பட்டியல்

அழிவும், சேதப்படுத்தி அவமதித்தலும்

நகரங்கள்

நடுக்காலப் போர்முறையில் நகரங்களைச் சூறையாடுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இல்லாதிருந்த போதும், தில்லி சுல்தானகத்தின் இராணுவம் அடிக்கடி தன் இராணுவ நடவடிக்கைகளில் நகரங்களை முழுவதுமாக அழித்தது. சமண வரலாற்றாளர் சினப்பிரப சூரியின் கூற்றுப்படி, நுஸ்ரத் கானின் படையெடுப்புகள் நூற்றுக்கணக்கான பட்டணங்களை அழித்தன. இதில் அசப்பள்ளி (நவீன அகமதாபாது), அன்கில்வாது (நவீன பதான்), குசராத்தின் வந்தாலி மற்றும் சூரத்து ஆகியவையும் அடங்கும்.[172] இத்தகவல்களை சியாவுதீன் பரணியும் குறிப்பிடுகிறார்.[173]

யுத்தங்களும், படுகொலைகளும்

  • கியாசுத்தீன் பல்பான் மேவாத் மற்றும் அவாதைச் சேர்ந்த இராசபுத்திரர்களைக் கொன்றார். இதில் சுமார் 1,00,000 மக்கள் கொல்லப்பட்டனர்.[174]
  • அலாவுதீன் கல்சி சித்தோர்கரில் 30,000 மக்களைக் கொல்வதற்கு ஆணையிட்டார்.[175]
  • அலாவுதீன் கல்சி தேவகிரி மீதான தன் திடீர்த் தாக்குதலின் போது பல முக்கியமான பிராமண மற்றும் வணிகக் குடிமக்களின் கொலைக்கு ஆணையிட்டார்.[176]
  • வேதாந்த தேசிகரின் ஒரு பாடலின் படி, திருவரங்கத்தைச் சூறையாடிய போது முகம்மது பின் துக்ளக் 12,000 இந்துத் துறவிகளைக் கொன்றார் என்று கூறப்படுகிறது.[177]
  • பிரூசு ஷா துக்ளக் வங்காளம் மீதான தனது படையெடுப்பின் போது 1,80,000 மக்களைக் கொன்றார்.[178]

சேதப்படுத்தி அவமதித்தல்

வரலாற்றாளர் ரிச்சர்ட் ஈட்டன் படையெடுப்பின் போது தில்லி சுல்தான்களால் அழிக்கப்பட்ட கடவுள் சிலைகளையும், கோயில்களையும் பட்டியலிட்டுள்ளார். இவற்றில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்ற சில ஆண்டுகள் கலந்துள்ளன.[26][179][180] தனது கட்டுரையில் தில்லி சுல்தானகக் காலத்தின் போது 1234 முதல் 1518 வரை இந்துக் கோயில்கள் சேதப்படுத்தி அவமதிக்கப்பட்டது அல்லது அழிக்கப்பட்ட 37 நிகழ்வுகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இவற்றுக்கான ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரங்கள் உள்ளன.[181][182][183] நடுக்கால இந்தியாவில் இது வழக்கத்திற்கு மாறான ஒன்று கிடையாது என்று அவர் குறிப்பிடுகிறார். 642 மற்றும் 1520க்கு இடையில் எதிரி இந்திய இராச்சியங்களுக்கு எதிராக இந்து மற்றும் பௌத்த மன்னர்கள் கோயில்களை சேதப்படுத்தி அவமதித்த நிகழ்வுகள் பல முறை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெவ்வேறு இந்துக் கடவுள்களின் பக்தர்கள், மேலும் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்களுக்கு இடையிலான சண்டையில் இவை நடைபெற்றுள்ளன.[184][185][186] தில்லி சுல்தான்கள் பல நேரங்களில் கோயில்களைப் பாதுகாத்து, பேணி மற்றும் புணரமைக்க ஆணையிட்ட பல நிகழ்வுகளையும் கூட அவர் மேலும் குறிப்பிடுகிறார். அச்சுல்தான்கள் இந்து மந்திரிகளைப் பெரும்பாலும் கொண்டிருந்தனர். இவை முஸ்லிம் மற்றும் இந்து நூல்கள் ஆகிய இரண்டிலுமே குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, தனது தக்காணப் படையெடுப்புக்குப் பிறகு பிதாரில் உள்ள ஒரு சிவன் கோயிலைச் சுல்தான் முகம்மது பின் துக்ளக் புனரமைக்க வைத்தார் என்று ஒரு சமசுகிருதக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தில்லி சுல்தான்கள் தங்களது படையெடுப்பின் போது கோயில்களைச் சூறையாடுதல் அல்லது சேதப்படுத்தியதற்குப் பிறகு, படையெடுப்புக்குப் பிறகு, கோயில்களுக்கு நிதி வழங்குவது அல்லது புனரமைத்த ஒரு போக்கானது அடிக்கடி காணப்படுகிறது. முகலாயப் பேரரசின் காலத்தில் இப்போக்கு முடிவுக்கு வந்தது. அப்போது அக்பரின் முதலமைச்சரான அபுல் பாசல் கசினியின் மகுமூது போன்ற முந்தைய சுல்தான்களின் அளவுக்கு மீறிய நடவடிக்கைகளை விமர்சித்தார்.[181]

பல நேரங்களில், தில்லி சுல்தான்களால் அழிக்கப்பட்ட கோயில்களின் பாறைகள், உடைந்த சிலை துண்டுகள் போன்ற அழிக்கப்பட்டவற்றின் எஞ்சிய பகுதிகளனவை மசூதிகள் மற்றும் பிற கட்டடங்களைக் கட்டுவதற்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, சில நூல்களின் படி, அழிக்கப்பட்ட 27 இந்து மற்றும் சமணக் கோயில்களின் கற்களிலிருந்து தில்லியிலுள்ள குதுப் மினார் வளாகமானது கட்டப்பட்டது.[187] இதே போல் மகாராட்டிராவின் கானாபூரில் உள்ள முஸ்லிம் மசூதியானது இந்துக் கோயில்களின் சூறையாடப்பட்ட பகுதிகள் மற்றும் அழிக்கப்பட்டவற்றில் எஞ்சியவையில் இருந்து கட்டப்பட்டது.[54] தில்லி சுல்தானகத்தின் ஆரம்பத்தின் போது பொ. ஊ. 1193இல் பக்தியார் கல்சி நாளந்தா மற்றும் ஒதந்தபுரி பல்கலைக்கழகங்களில் இருந்த பௌத்த மற்றும் இந்து நூலகங்களையும், அவற்றின் நூல்களையும் அழித்தார்.[28][27]

ஒரு படையெடுப்பின் போது கோயில்கள் அழிக்கப்படுதல், இந்துக் கடவுள் சிலைகளின் முகங்கள் அல்லது தலைகள் சேதப்படுத்தப்படுதல் என்பது முதன் முதலில் கோரி முகம்மதுவின் தலைமையின் கீழ் 1193 முதல் 1194 வரை இராசத்தான், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்றதாக முதல் வரலாற்றுப் பதிவானது உள்ளது. அடிமைகள் மற்றும் கல்சிகளுக்குக் கீழ் கோயில் சேதப்படுத்தி, அவமதிக்கப்படும் நடவடிக்கையானது பீகார், மத்திய பிரதேசம், குசராத்து மற்றும் மகாராட்டிராவுக்கும் விரிவடைந்தது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இச்செயல்கள் தொடர்ந்தன.[26] தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கும் 14ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் மற்றும் உலுக் கானின் தலைமையின் கீழ் விரிவடைந்தன. 15ஆம் நூற்றாண்டில் பாமினிகள் இதைச் செயல்படுத்தினர்.[28] துக்ளக்குகளின் கீழ் 14ஆம் நூற்றாண்டில் ஒரிசா கோயில்கள் அழிக்கப்பட்டன.

அழிவு மற்றும் சேதப்படுத்தி அவமதிக்கப்படுதலைத் தாண்டி தில்லி சுல்தானகத்தின் சுல்தான்கள் சில நேரங்களில் சேதப்படுத்தப்பட்ட இந்து, சமண மற்றும் பௌத்தக் கோயில்களை மீண்டும் எழுப்புவதைத் தடை செய்தனர். பழைய கோயில்களைப் புனரமைப்பது அல்லது எந்த ஒரு புதிய கோயில்களையும் கட்டுவதையும் அவர்கள் தடை செய்தனர்.[188][189] புரவலரோ அல்லது அச்சமயச் சமூகமோ ஜிஸ்யா வரிகளைச் செலுத்தி இருந்தால் சில நேரங்களில் சுல்தானகமானது புனரமைக்கவும், கோயில்களைக் கட்டுவதற்கும் அனுமதி வழங்கும். உதாரணமாக, சுல்தானாக இராணுவத்தால் அழிக்கப்பட்ட இமயமலைப் பௌத்தக் கோயில்களைப் புனரமைக்கச் சீனர்கள் ஒரு முன்மொழிவை வைத்த போது, சுல்தானகத்தால் அம்முன்மொழிவு மறுக்கப்பட்டது. சுல்தானகத்தின் கருவூலத்திற்கு ஜிஸ்யா வரி செலுத்தச் சீனர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே கோயில் புனரமைப்பு அனுமதிக்கப்படும் என்ற காரணத்தின் அடிப்படையில் இது மறுக்கப்பட்டது.[190][191] தனது நினைவுக் குறிப்புகளில் பிரூசு ஷா துக்ளக் தான் கோயில்களை அழித்து, மாறாக மசூதிகளைக் கட்டினேன் என்றும், புதிய கோயில்களைக் கட்டுவதற்கு தைரியம் கொண்டவர்களைத் தான் எவ்வாறு கொன்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[90] தில்லி சுல்தானகத்தின் பல்வேறு சுல்தான்களின் வசீர்கள், அமீர்கள் மற்றும் அரசவை வரலாற்றாளர்களின் வரலாற்றுப் பதிவுகள் தங்களின் படையெடுப்புகளின் போது தாங்கள் கண்ட கடவுள் சிலைகள் மற்றும் கோயில்களின் கண் கவரும் தோற்றப் பொலிவை விளக்கியுள்ளனர். மேலும் அவை எவ்வாறு அழிக்கப்பட்டன மற்றும் சேதப்படுத்தி அவமதிக்கப்பட்டன என்றும் விளக்கியுள்ளனர்.[192]

மேலதிகத் தகவல்கள் சுல்தான் / பிரதிநிதி, அரசமரபு ...
Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Welch and Crane note that the Quwwat-ul-Islam Mosque was built with the remains of demolished Hindu and Jain temples.[53]
  2. Pali literature dating to the 4th century BC mentions the cakkavattaka, which commentaries explain as arahatta-ghati-yanta (machine with wheel-pots attached), and according to Pacey, water-raising devices were used for irrigation in Ancient India predating their use in the Roman empire or China.[136] Greco-Roman tradition, on the other hand, asserts that the device was introduced to India from the Roman Empire.[137] Furthermore, South Indian mathematician இரண்டாம் பாஸ்கரர் describes water-wheels c. 1150 in his incorrect proposal for a perpetual motion machine.[138] Srivastava argues that the Sakia, or araghatta was in fact invented in India by the 4th century.[139]
  3. Also two huge minarets at காசுனி.
  4. Ulugh Khan also known as Almas Beg was brother of அலாவுதீன் கில்சி; his destruction campaign overlapped the two dynasties.
  5. சோமநாதர் கோயில் temple went through cycles of destruction by Sultans and rebuilding by Hindus.
Remove ads

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads