இராபர்ட் எஃப் கென்னடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராபர்ட் பிரான்சிசு கென்னடி (Robert Francis Kennedy, நவம்பர் 20, 1925 – சூன் 6, 1968) அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நியூயார்க் மாநிலத்துக்கான மேலவை உறுப்பினராக 1965 சனவரி முதல் 1968 சூனில் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். இவர் முன்னதாக 1961 முதல் 1964 வரை அமெரிக்கத் தலைமை வழக்குரைஞராக, அவரது தமையனாரும் அரசுத்தலைவருமான ஜான் எஃப். கென்னடி, மற்றும் அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் ஆகியோரின் கீழ் பணியாற்றினார். கென்னடி சனநாயகக் கட்சியின் உறுப்பினராவார்.
கென்னடி மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் யோசப் கென்னடிக்கும் ரோசு கென்னடிக்கும் ஏழாவது மகவாகப் பிறந்தார்.[1] 1944 முதல் 46 வரை அமெரிக்கக் கடற்படையில் பயிலுனர் மாலுமியாக சேவையாற்றினார்.[2] பின்னர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்று 1948 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] பின்னர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று,[4] மாசச்சூசெட்ஸ் வழக்குரைஞர் அமைப்பில் 1951 இல் சேர்ந்தார்.[5] 1952 இல் அரசியலில் இறங்கினார். அவரது தமையனார் ஜான் எஃப். கென்னடி மேலவை உறுப்பினராகப் போட்டியிட்டபோதும்,[6] 1960 அரசுத்தலைவராகப் போட்டியிட்ட போதும்[6] அவருக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டார். கென்னடி அமெரிக்க தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். 1961 முதல் 1963 வரை அரசுத்தலைவருக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். குடிசார் உரிமைகள் இயக்கம், கூட்டுக் குற்றங்கள் மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு, கியூபா தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றில் பெரும் பங்காற்றினார். தமையன் ஜான் கென்னடியின் படுகொலைக்குப் பின்னர், ஜான்சனின் நிருவாகத்தில் பல மாதங்கள் பதவியில் இருந்தார். அமெரிக்க செனட்டராக 1964 இல் தெரிவு செய்யப்பட்டார்.[7] பதவியில் இருக்கும் போது, இவர் இனவாதத்துக்கு எதிராகவும், வியட்நாம் போரில் அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.[8]
1968 அரசுத்தலைவர் தேர்தலில், கென்னடி சனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக இருந்தார். வறியோர், ஆபிரிக்க அமெரிக்கர், அமெரிக்க இலத்தீனர்கள், கத்தோலிக்க திருச்சபை, இளைஞர்களுக்கான வாக்குரிமை ஆகியவற்றுக்கு கென்னடி குரல் கொடுத்தார். 1967 ஆறு நாள் போரில் இசுரேலுக்கு ஆதரவாக கென்னடி குரல் கொடுத்தமைக்காக 1968 சூன் 5 நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர், சிர்கான் சிர்கான் என்ற 24-வயது பாலத்தீனரால் கென்னடி சுடப்பட்டார். கென்னடிக்கு மூன்று சூடுகள் தாக்கின. மேலும் ஐவர் காயமடைந்தனர்.[9] அடுத்த நாள் கென்னடி இறந்தார்.[10] சிர்கானுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads