லாஸ் ஏஞ்சலஸ்

அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைமை கவுன்டி From Wikipedia, the free encyclopedia

லாஸ் ஏஞ்சலஸ்
Remove ads

லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles, /lɔːs ˈænələs/ (கேட்க), /lɔːs ˈæŋɡələs/ அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் (/lɒs ˈænəlz/ (கேட்க), வானதூதர்கள்), அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரம் (City of Los Angeles), சுருக்கமாக எல்லே (L.A.), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும், ஐக்கிய அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்த படியாக இரண்டாவது அதி கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.[3] கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 469 சதுர மீட்டர்கள் (1,215 கி.மீ.2) ஆகும்.

விரைவான உண்மைகள் லாஸ் ஏஞ்சலஸ்Los Angeles, நாடு ...
Thumb
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கொலீசியம் அரங்கம்
Remove ads

பெயர்ப் பொருள்

"லாஸ் ஏஞ்சலஸ்" என்னும் பெயர் எசுப்பானிய மொழிப் பெயர் ஆகும். இப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்ப வந்த எசுப்பானியர்கள் புனித அசிசியின் பிரான்சிசு என்பவர் தொடங்கிய "பிரான்சிஸ்கு சபையை" சார்ந்தவர்கள். புனித பிரான்சிசு பிறந்து வளர்ந்து இறந்த இடமான அசிசி நகரருகில் அமைந்திருக்கும் ஒரு கோவிலின் பெயர் "சிறுநிலத்தில் அமைந்த வானதூதர்களின் ஆண்டவளாம் மரியா கோவில்" (Our Lady of the Angels of Portiuncula) என்பதாகும். இதுவே இன்றைய அமெரிக்க நகரின் பெயராக இடப்பட்டது. Town of Our Lady of the Angels of Portiuncula என்னும் பொருள்கொண்ட மூல எசுப்பானிய பெயர் "El Pueblo de Nuestra Señora de los Angeles de Porciuncula" என்று கூறப்படும். இது பின்னர் சுருக்கமாக "Los Angeles" என்னும் வடிவம் பெற்றது. தமிழில் இதை "வானதூதர்கள் நகரம்" எனலாம்.

இந்நகரத்தில், தொழில், பொழுதுபோக்கு, சர்வதேச வணிகம், கலாச்சாரம், ஊடகம், ஆடை வடிவமைப்பு, அறிவியல், விளையாட்டு, நுட்பியல், கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி என பல் துறையில் விளங்குவதால், சர்வதேச நகரங்களுக்கான குறியீட்டில் ஆறாம் இடத்திலும், சர்வதேச பொருளாதார வலு குறியீட்டில் ஒன்பதாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்புக் கேந்திரமான ஹாலிவுட் இந்நகரினுள் அமைந்துள்ளது.

இவ்வூர் 1781ல் இசுபானிய ஆளுநர் பெலிப்பே தே நெவே[4] என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1821ல் தொடங்கிய மெக்சிகோ விடுதலைப் போர் முன்னிட்டு அந்நாட்டின் ஆளுகையின் கீழ் இருந்தது.[5] பிறகு குவாதலூப்பே ஹிடால்கோ உடன்படிக்கை மூலம் 1848ல் முடிவுக்கு வந்த போருக்குப்பின் இந்நகரம் ஐக்கிய அமெரிக்க மாகாணத்தால் வாங்கப்பட்டு கலிபோர்னிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.[6][7]

இங்கு இரண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன. எல்.ஏ.லேக்கர்ஸ் என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்டக் குழு இந்நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

Remove ads

வரலாறு

Historical affiliations

இசுபானியா ஆட்சி 1781–1821
முதல் மெக்சிகன் ஆட்சி 1821–1823
மெக்சிக்கோ ஐக்கிய மெக்சிகன் மாகாணங்கள் 1823–1848
கலிபோர்னியக் குடியரசு 1846
 ஐக்கிய அமெரிக்கா 1848–present

லாஸ் ஏஞ்சலஸ் கடற்கரையோரம் தொங்வா மற்றும் சுமாஷ் பூர்வகுடியினர் சில ஆயிரம் வருடங்களாக வசித்து வந்தனர்[8][9].

ஹுவான் ரோட்ரிகேஸ் கப்ரியோ என்ற போர்த்துகேயப் பயணி 1542ல் தென் கலிபோர்னியப் பகுதியை இசுபெயினுக்காக உரிமை கோரினார்[10]. கஸ்பர் தெ போர்ட்டோலா என்பவரும் கிறித்தவப் பாதிரியான ஹுவான் கிரெஸ்பி எனபவரும் ஆகத்து 2, 1769ல் லாஸ் ஏஞ்சலஸ் அமைந்துள்ள இடத்தை வந்தடைந்தனர்[11]

செப்டம்பர் 4 1781ல் 'லாஸ் பொப்ளதோரெஸ்' என்றழைக்கப்பட்ட பல்வேறு இனத்தைச் சேர்ந்த 44 ஆட்களுடன் நகரின் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது[12]. மேய்ச்சல் பகுதியாக இருந்த இவ்வூரின் மக்கள் தொகை படிப்படியாக 1825ல் 650ஐ அடைந்தது.[13] இசுபெயின் 1821ல் விடுதலை அளித்தாலும் இவ்வூர் தொடர்ந்து மெக்சிகோவின் ஆளுகையே தொடர்ந்தது. ஆல்டா கலிபோர்னியா என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாகாணத்தைக் கைப்பற்றும் பொருட்டு, அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே தொடர்ச்சியான போர்கள் நடைபெற்றன. முடிவில் கஹுவேங்கா உடன்படிக்கை மூலம் அமெரிக்கா சனவரி 13 1847 அன்று கலிபோர்னியா அமெரிக்காவிற்கு கையளிக்கப்பட்டது[14].

தென் பசிபிக் தடம் என்றழைக்கப்பட்ட புகைவண்டி போக்குவரத்து 1876ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[15]. பெட்ரோல் 1892ல் கண்டுபிடிக்கப்பட்ட பின் வெகு விரைவிலேயே அமெரிக்காவின் முன்னணி துரப்பண மாநிலமாகவும், உலக உற்பத்தியில் 25 சத பங்குடன் கலிபோர்னியா விளங்கியது[16].

தொடர்ந்து பெருகிய மக்கள்தொகை 1900களில் 1 லட்சத்தைக் கடந்தது[17]. பத்து திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிய பகுதியான ஹாலிவுட் 1910ல் ஏஞ்சலஸ் நகரத்துடன் இணைக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பின் மூலம் கிடைத்த வருவாய், பெரும் பொருளாதார நெருக்கடியான 1920களில் இந்நகரைக் காத்தது[18]. நகரின் மக்கள் தொகை 1930ல் பத்து லட்சத்தைத் தாண்டியது.[19] கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன்முறையாக 1932ல் இந்நகரில் நடைபெற்றது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் வேகமாக வளர்ந்த இந்நகரம் சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்குடன் இணைந்தது[20]. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1969ல் அமைக்கப்பட்ட ஆர்ப்பாநெட் என்ற கணிணி வலையின் மூலம் மென்லோ பார்க் நகரின் ஸ்டாண்போர்ட் ஆராய்ச்சி மையத்துடன் மின்னித் தகவல் பறிமாற்றம் நடைபெறத் துவங்கி இணையத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது[21].

கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இரண்டாம் முறையாக 1984ல் நடைபெற்றது.

ஏப்ரல் 29, 1992 அன்று ராட்னி கிங் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில் நகரக் காவல் அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து நகரில் பெருமளவிலான இனக்கலவரங்கள் நடைபெற்றது[22].

ரிக்டர் அலகில் 6.7 உள்ள நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம் 1994ல் நகரைத் தாக்கியதில் 72 உயிரிழப்புகளும், 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சேதாரமும் நிகழ்ந்தது[23].

Remove ads

புவியியல்

Thumb
லாஸ் ஏஞ்சலஸ் ஆறு

லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214 கி.மீ² (468.7 ச.மை.) ஆகும். நகரின் கிழக்கு மேற்கான தொலைவு 44 மைல்கள் (71 கி.மீ). மேலும் தென்வடக்காக 29 மைல்கள் (47 கி.மீ) தொலைவு நீளமுடையது.

சமதளமும், குன்றுப்பகுதிகளும் இணைந்திருக்கும் இந்நகரின் உயரமான இடம், சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 5074 அடி உயரமுடைய மவுண்ட் லூக்கென்ஸ்[24][25] என்ற இடமாகும். ஏஞ்சலஸ் கணவாயை சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கிடமிருந்து பிரிக்கும் சான்டா மோனிகா மலைத்தொடர் டவுன்டவுன் முதல் பசிபிக் கடல் வரைப் பரவியுள்ளது. மேலும் மவுண்ட் வாஷிங்டன், பாயில் உச்சி, பால்ட்வின் மலைகள் போன்றவை நகரைச் சூழ்ந்துள்ளன.

லாஸ் ஏஞ்சலஸ் ஆறு கனோகா பார்க் பகுதியில் தொடங்கி, சான்டா மோனிகா மலையின் வடக்குப்புறமாக, சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு ஊடாக கிழக்கு திசையில் ஓடி, சிட்டி சென்டர் அருகே தெற்காகத் திரும்பி லாங் பீச் துறைமுகம் அருகே பசிபிக் கடலில் கலக்கிறது.

நில நடுக்கம்

பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கும் ஏஞ்சலஸ் நகரம் அடிக்கடி நில நடுக்கத்தை எதிர் கொள்கிறது. வட அமெரிக்க மற்றும் பசிபிக் தட்டுகளின் உராய்வினால் உண்டான சான் ஆண்ட்ரியஸ் பிளவு தென் கலிபோர்னியா ஊடாகச் செல்கிறது. இப்பிளவு உண்டாக்கிய புவிச் சமன்பாடின்மை காரணமாக இப்பகுதி ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 நில அதிர்வுகளைச் சந்திக்கிறது[26]. இந்நகரைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் முக்கியமானவை 1994 நார்த்ரிட்ஜ் அதிர்வு, 1987 விட்டியர் நேரோஸ் அதிர்வு, 1971 சான் பெர்ணான்டோ அதிர்வு மற்றும் 1933 லாங் பீச் அதிர்வுகள் ஆகும்.

பருவநிலை

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தட்பவெப்பம் மத்திய தரைகடல் பகுதியினை ஒத்திருக்கிறது. அநேக நாட்களில் தெளிந்த வானத்துடன் அதிக சூரிய ஒளியைப் பெறும் இந்நகரம் ஆண்டில் சுமார் 35 நாட்களுக்கே பருவ மழையைப் பெறுகிறது[27]. நகரின் சராசரி தட்பவெப்பம் 66 ° பாரன்ஹீட்(19 °செல்சியஸ்), பகலில் 75 °பாரன்ஹீட் (24 °செல்சியஸ்) என்ற அளவிலும் இரவு நேரத்தில் 57 °பாரன்ஹீட் (14 °செல்சியஸ்) என்றும் உள்ளது. நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட குளிர்காலத்தில் சராசரியாக 15 முதல் 20 இன்ச் மழை பெய்கிறது. நகருக்கு அருகிலுள்ள மலைகளில் சிறிதளவு பனிப்பொழிவு இருக்கும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், லாஸ் ஏஞ்சலஸ் (எல்.ஏ.எக்ஸ் (LAX) விமான நிலையம்), மாதம் ...
மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், லாஸ் ஏஞ்சலஸ் (சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கில் உள்ள கனோகா பார்க் நகரம்), மாதம் ...

நகரத்தின் வீச்சு

Thumb
முல்ஹோலாண்ட் டிரைவில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தோற்றம். இட வலமாக: சான்டா ஆனா மலைகள், டவுன்ட்டவுன், ஹாலிவுட், வில்ஷைர் புலவார்ட், லாஸ் ஏஞ்சலஸ் துறைமுகம், பாலோஸ் வெர்தேஸ் தீபகற்பம், சான்டா காட்டலீனா தீவு மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையம்.

டவுன்ட்டவுன் லாஸ் ஏஞ்சலஸ், கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், வடகிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், தெற்கு லாஸ் ஏஞ்சலஸ், துறைமுகப்பகுதி, ஹாலிவுட், வில்ஷைர், வெஸ்ட்சைட், சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கு மற்றும் கிரசென்டா பள்ளத்தாக்கு என பிரிக்கப்படும் இந்நகரம் 80 வட்டங்களை கொண்டது.

Remove ads

சுற்றுலா இடங்கள்

நகரின் முக்கிய இடங்களாகக் குறிப்பிடப்படுபவை வால்ட் டிஸ்னி இசை அரங்கம், கிரிஃப்பித் கோளரங்கம், கெட்டி மையம், ஹாலிவுட் இலச்சினை, ஹாலிவுட் புலேவார்ட், ஸ்டேபிள்ஸ் அரங்கம், சாண்டா மோனிகா துறைக்கிட்டு, வெனிஸ் பீச், மலிபு பீச், பெவர்லி ஹில்ஸ் ஆகும்.

கலை, பண்பாடு

Thumb
புகழ்பெற்ற ஹாலிவுட் பகுதி.

மொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆறில் ஒருவர் படைப்பூக்கம் தொடர்பான துறையில் பணியாற்றும் இந்நகர் உலகின் முதன்மை படைப்பூக்க நகரம் எனக் கருதப்படுகிறது.[29] திரைப்படத் துறையில் முக்கிய இடம் பிடித்துள்ள ஹாலிவுட் இந்நகரத்தினுள் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருதுகள் என்று அறியப்படும் வருடாந்திர அகாடெமி விருதுகள் வழங்கும் விழா இங்குதான் நடத்தப்பெறுகிறது. அமெரிக்காவின் பழமையான திரைப்படக் கல்லூரியான தென்கலிபோர்னிய பல்கலைக்கழக திரைக்கலைப் பள்ளி இங்கு அமைந்திருக்கிறது.[30]

நாடகம் மற்றும் இசைத் உள்ளிட்ட மேடை நிகழச்சிகள் பெருமளவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறுகிறது. லாஸ் ஏஞ்சலஸ் பில்ஹார்மொனிக் இசைக்குழு நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

சுமார் 840 அருங்காட்சியகங்களும், கண்காட்சிகளும் உள்ளன.[31] அவற்றுள் முதன்மையானவை லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி கலை அருங்காட்சியகம்[32], கெட்டி மையம்[33], சமகாலக் கலைக்கான அருங்காட்சியகம் போன்றவை ஆகும்.

Remove ads

ஊடகம்

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் நகரின் முதன்மையான ஆங்கிலச் செய்தித்தாள் ஆகும். லாட்டினோக்கள் அதிகமுள்ள இந்நகரில் லா ஒப்பீனியன் என்ற இசுபானிய மொழி செய்தித்தாளும் முதன்மையான இடத்தில் உள்ளது. சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு டெய்லி நியூஸ் செய்தித்தாள் இயங்குகிறது. மேலும் பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக ஆர்மீனியன், கொரியன், பாரசீகம், ரஷ்யன், மாண்டரின், ஜப்பானிய, எபிரேய மற்றும் அரபு மொழிப் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது.

மேலும் திரைப்படத் துறை சார்ந்து தி ஹாலிவுட் ரிப்போர்டர் மற்றும் வெரைட்டி எனும் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது. பல்வேறு உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களும், பண்பலை வானொலி நிலையங்களும் இங்கு உள்ளது.

Remove ads

பொருளாதாரம்

சர்வதேச வணிகம், பொழுதுபோக்கு (திரைப்படம், தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள், இசைவட்டுகள்), விமானவியல், தொழில்நுட்பம், பெட்ரோல், ஆடை வடிவமைப்பு, சுற்றுலா போன்ற துறைகள் இந்நகரினுடைய பொருளாதாரத்திற்கு தூண்களாக விளங்குகின்றன. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களின் முதன்மையான உற்பத்திக் கேந்திரமாக லாஸ் ஏஞ்சலஸ் விளங்குகிறது.[34] நகரின் உற்பத்தி மதிப்பை உள்நாட்டு உற்பத்தி குறியீட்டெண் கொண்டு வகைப்படுத்தினால் உலக நாடுகளுள் 15 ஆம் இடத்தைப் பெறும்.[35]

பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 6 நிறுவனங்கள் இந்நகரைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. நகரின் பாரிய தனியார் துறை நிறுவனமாக விளங்கும் தென் கலிபோர்னிய பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.[36]

Remove ads

மக்கள்

2010 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள் தொகை 3,844,828 ஆகும்[37]. மக்கள் நெருக்கம் சதுர மைல் ஒன்றுக்கு 7,544.6 பேர் என்று உள்ளது. நகரில் ஒவ்வொரு 100 மகளிருக்கும் 99.2 ஆடவர் உள்ளனர்.[37]

மேலும் வெள்ளை இனத்தவர்(49.8%), ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர்(9.6%), தொல்குடி அமெரிக்கர்(0.7%), ஆசிய இனத்தவர்(11.3%), பசிபிக் தீவு இனத்தவர் (0.1%), பிற இனத்தவர்(23.8%), 2 அல்லது மேலதிக இனக் கலப்பினர் (4.6%) நகரில் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இசுபானியர்கள் அல்லது லட்டீனோ இனத்தவர் சதவிகிதம் (48.5%) ஆகும்.[37]

நகரில் பெரும்பாண்மையினரான இசுபானிய மொழி பேசும் மக்களில் மெக்சிகோ நாட்டினர் 31.9% சால்வடோர் நாட்டினர் (6.0%) மற்றும் கவுதமாலா நாட்டினர் (3.6%) உள்ளனர். லட்டீனோ இனத்தவர் கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தெற்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும் மிகுதியாக வசிக்கின்றனர்.[38]

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 140 நாடுகளைச் சேர்ந்த 224 மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.[39] நகரில் சைனாடவுன், பிலிப்பினோடவுன், கொரியாடவுன், லிட்டில் ஆர்மீனியா, லிட்டில் எத்தியோப்பியா, டெஹ்ராங்கலஸ், லிட்டில் டோக்கியோ, தாய்டவுன் என பல்வேறு இனக்குழுக்குழுவினர் மிகுதியாக வசிக்கும், வணிக வளாகங்கள் நடத்தும் பகுதிகள் உள்ளன. இந்தியர்களின் வணிகவளாகங்கள் ஆர்டீசியா பகுதியில் பயனீர் புலவார்ட் சாலையின் இருமருங்கிலும் அமைந்துள்ளன.[40][41]

வீடற்றவர்கள் பிரச்சனை

லாஸ் ஏஞ்சலஸ் நகர வீடற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2015இல் சுமார் 26,000 பேர் நகரின் தெருவோரங்களில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க 100 மிலியன் டாலர்கள் ஒதுக்குவதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.[42]

Remove ads

கல்வி

கல்லூரிகள்

லாஸ் ஏஞ்சலஸில் பல பெரிய கல்லூரிகள் உள்ளன. அவைகளுள் அரசு ஆதரவில் இயங்குபவை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA), கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (CSULA) மற்றும் கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (நார்த்ரிட்ஜ்)(CSUN) ஆகும்.

ஏல்லயன்ட் சர்வதேசப் பல்கலைக்கழகம், சிராக்யூஸ் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), அமெரிக்கன் இன்டர்காண்டினென்டல் பல்கலைக்கழகம், அமெரிக்க இசை மற்றும் நாடக அகாடெமி – லாஸ் ஏஞ்சலஸ் வளாகம், ஆண்டியோக் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), பயோலா பல்கலைக்கழகம், சார்ல்ஸ் ஆர். ட்ரூ மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ் நடிப்புப் பள்ளி, லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகம், மேரிமவுண்ட் கல்லூரி, மவுண்ட் செய்ன்ட் மேரிஸ் கல்லூரி, கலிபோர்னிய தேசியப் பல்கலைக்கழகம், ஓக்சிடெண்டல் கல்லூரி, ஓடிஸ் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, தென் கலிபோர்னியா கட்டடக்கலை நிறுவனம், தென்மேற்கு சட்டப்பள்ளி, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு தனியார் கல்லூரிகள் நகரில் உள்ளன.

கால்டெக் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரி பாசடீனா பகுதியில் அமைந்துள்ளது. நாசா அமைப்பின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தை இக்கல்லூரி நிர்வகிக்கிறது.

போக்குவரத்து

தனிவழிச் சாலைகள்

லாஸ் ஏஞ்சலஸ் நகரையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் பல்வேறு தனிவழிச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. 2005 ஆண்டு தேசிய நகரிய சாலைப் பயன்பாட்டு அறிக்கையின்படி இந்நகரமே நாட்டின் நெரிசலான போக்குவரத்தைக் கொண்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரச் சாலைகளில் பயணம் செய்பவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 72 மணி நேரத்தை அடைசலான போக்குவரத்தில் இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.[43] நகரினூடாகச் செல்லும் I5 நெடுஞ்சாலை தெற்கில் மெக்சிகோவின் எல்லை நகரான டிஹுவானாவையும், வடக்கில் சாக்ரமென்டோ, போர்டலேண்ட், சியாட்டில் கடந்து கனேடிய எல்லையைத் தொடுகிறது.

சான்டா மோனிகாவில் பசிபிக் கடலையொட்டித் துவங்கும் I10 தனிவழிச்சாலை கிழக்காக பல்வேறு மாகாணங்களைக் கடந்து பிளோரிடாவின் ஜாக்ஸன்வில் நகரில் அட்லாண்டிக் கடலைத் தொட்டு முடிகிறது. பசிபிக் நெடுஞ்சாலை என்றழைக்கப்பெறும் வழித்தடம் 101 நெடுஞ்சாலை நகரில் துவங்கி கலிபோர்னியாவின் கரையோரமாக வடக்கே சென்று ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களின் கரையோரமாகச் செல்கிறது.

உள்ளூர் பொதுப் போக்குவரத்துச் சேவை

லாஸ் ஏஞ்சலஸ் நகர் பேருந்து மற்றும் ரயில் சேவையைக் கொண்ட வலுவான போக்குவரத்துப் பின்னலைப் பெற்றுள்ளது. மெட்ரோலிங்க் ரயில்சேவை புறநகர்ப்பகுதிகளை இணைக்கிறது. நகரின் முக்கியமான ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன் டவுன்டவுனுக்கே வடக்கே அமைந்துள்ளது.

Thumb
எல்.ஏ.எக்ஸ் முகப்பு கட்டடம்

விமானப் போக்குவரத்து

லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையம் (LAX) முனைப்பான சேவையில் அமெரிக்காவில் மூன்றாவது இடத்திலும், உலகளவில் ஆறாவது இடத்திலும் உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சலஸ் நகரை நிலையாகக் கொண்டு இயங்குகிறது.[44] மேலும் ஒண்டாரியோ, பர்பேங்க், லாங்பீச், வான் நய்ஸ் மற்றும் ஆரஞ்சு கவுண்டி போன்ற இடங்களில் சிறு விமான நிலையங்கள் அமைந்துள்ளன.

துறைமுகங்கள்

நகரில் சான் பெட்ரோ மற்றும் லாங்பீச் ஆகிய இடங்களில் இரு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவை சரக்குப் போக்குவரத்தைக் கையாளுவதில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளன.[45] மேலும் சான் பெட்ரோவிலிருந்து கேட்டலீனா தீவில் உள்ள அவலான் நகருக்கு படகுச் சேவையும் நடைபெறுகிறது.

Remove ads

விளையாட்டு

Thumb
ஸ்டேப்பிள்ஸ் மையம்

மேஜர் லீக் பேஸ்பாலில் விளையாடும் டாட்ஜர்ஸ், தேசிய ஹாக்கி லீகில் விளையாடும் கிங்ஸ் மற்றும் தேசிய பேஸ்கட்பால் சங்கப் போட்டிகளில் ஆடும் லேக்கர்ஸ் & கிளிப்பர்ஸ் அணிகள் நகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தேசிய புட்பால் கூட்டமைப்பின் அணிகள் எதுவும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இயங்கவில்லை.

இந்நகரம் 1932 மற்றும் 1984 ஆண்டுகளில் கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தியுள்ளது. 1994 ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. நகரில் டாட்ஜர்ஸ் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலஸ் கொலீசியம், தி போரம், ஸ்டேப்பிள்ஸ் சென்டர் என பல பெரும் விளையாட்டு அரங்குகள் அமைந்துள்ளன.

Remove ads

வழிபாட்டுத் தலங்கள்

மலிபு கோவில் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வெங்கடேசுவரர் ஆலயம் கலபசஸ் நகரில், லாஸ் விர்ஜினஸ் சாலையில் அமைந்துள்ளது.[46] ஹாலிவுட் நகரத்தில் சுவாமிநாராயண் இயக்கத்தினரின் ஆலயம் அமைந்துள்ளது.[47] மலையாள மொழியில் நடத்தப்படும் செயின்ட் அல்போன்ஸா சைரோ மலபார் கத்தோலிக்க ஆலயம் சான் பெர்ணான்டோ நகரில் அமைந்துள்ளது.[48]

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads