எம். சேகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். சேகர் (பிறப்பு: 1961) மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஸ்கூடாய், லிண்டன் எஸ்டேட்டில் 1961 இல் பிறந்தவர் எம். சேகர். பல வருடங்கள் பூச்சோங்கில் வசித்த இவர், பூச்சோங் காசல் பீல்டு தமிழ்பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, பெட்டாலிங் உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். கோலாலம்பூர் ’லெல்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி’யில் பயிற்சியை முடித்து, தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்பள்ளியிலும் ஷா ஆலாம் சீபில்டு தமிழ்ப்பள்ளியிலும் மேலும் பல உயர்நிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசிக்கத் தொடங்கிய இவர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். சிங்கப்பூர் சிம் (SIM) பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத் துறையில் இளங்கலை (BA) பட்டம் பெற்று, தற்போது உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Remove ads
இலக்கியப் பணி
இவரது முதல் சிறுகதையான ‘புது வாழ்வு’ தமிழ் மலரில் 1981 இல் வெளியானது. ‘நானும் கன்னி கழியாதவள்தான்’ என்ற சிறுகதை, 1984 ஆம் ஆண்டு ‘தமிழ் நேசன்’ இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. இவர் எழுதிய ‘மனசுக்குள் காதல்’ (‘நயனம்’ வார இதழின் கணையாழி பரிசு), ‘உடைந்த மேகங்கள்’ (சிலாங்கூர் மாநில மணிமன்றத்தின் சிறுகதைப் பரிசு), ‘இருட்டு வெளிச்சம்’ (லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இலக்கியத் திறனாய்வில் இடம் பெற்றது), ‘வாழ்வைத் தேடி’ (முத்தமிழ் படிப்பகத்தின் ஆய்வில் இடம் பெற்றது) ஆகிய சிறுகதைகள் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளன. எம். சேகர், 1983 ஆம் ஆண்டு பெட்டாலிங் மாவட்ட தமிழர் திருநாள் விழாவில் ‘சிறந்த கவிஞர்’ விருதையும் பெற்றுள்ளார். பல தமிழ் மற்றும் இலக்கியம் சார்ந்த மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்துள்ளார். சிங்கப்பூரில் பல பள்ளிகளில் சிறுகதை மற்றும் கவிதைப் பயிலரங்குகளையும் பட்டறைகளையும் நடத்தி இளைய தலைமுறை படைப்பாளர்களின் உருவாக்கத்திற்கும் பங்களித்துக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் ம.கோ கதைச்சொல்லும் போட்டியில் (2014) இவரின் புதுச்சட்டை என்ற சிறுகதை உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவரால் சொல்லப்பட்டு முதல் பரிசைப் பெற்றது. 2015 தமிழ் அமுதம் நடத்திய சிங்கப்பூர் கவிஞர்களின் படைப்புகள் பிரிவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரால் இவரின் கவிதை வாசிக்கப்பட்டு, கவிதை வாசிப்பில் முதல் பரிசைப் பெற்றது.
Remove ads
படைப்புகள்
இதுவரை, புது வாழ்வு (சிறுகதைத் தொகுப்பு, 1992), நீ என் நிலா (சிறுகதைத் தொகுப்பு, 2000) மற்றும் நண்பன் (கவிதைத் தொகுப்பு, 2012) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 'அட்டைப்பெட்டிப் படுக்கையும், வெள்ளைத்தாடித் தாத்தாவும்' (2013) என்ற சிறுகதைத் தொகுதி இவரது நான்காவது நூலாகும். இவரது ஐந்தாவது நூல், 'கைவிளக்குக் கடவுள்' (2014) எனும் கவிதைத்தொகுப்பாகும். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எம். சேகரின் இலக்கியப் பயணம் தொடர்கிறது.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads