ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்

From Wikipedia, the free encyclopedia

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்map
Remove ads

ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் (ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்) இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 20 கிலோமீற்றர்[2] தொலைவில் ஒட்டுசுட்டான் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயமாகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இதுவும் ஒன்றாகும். இவ் ஆலய மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப்படாமல் தானே தோன்றியதால் தான்தோன்றீஸ்வரம் என்றழைக்கப்படுகின்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் என்றும் எரித்த குரக்கன் ஒட்டுவேகவில்லை என்பதனால் வேகாவனமுடையார் என்னும் காரணப் பெயரும் இவருக்கு உள்ளது. இறைவி பூலோகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கொன்றை மரமும், தீர்த்தமாக ஆலய தீர்த்தக் கேணி விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் தான்தோன்றீச்சரம், ஒட்டுசுட்டான், ஆள்கூறுகள்: ...
Remove ads

வரலாற்றுச் சுருக்கம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த வீரபத்திரர் என்ற சைவ வேளாளர் தம் பிள்ளைகள் இருவருடன் வன்னிக்குச் சென்று குடியேறினார். ஒட்டுசுட்டானில் அவர்கள் வாழ்ந்த இடம் இன்றும் இடைக்காடு என்றே அழைக்கப்படுகின்றது. அவர் அவ்விடத்திற் காடு வெட்டிக் குரக்கன் பயிரிட்டார். குரக்கன் கதிர்களைக் கொய்த பின்னர் ஒட்டுக்களுக்குத் தீயிட்டு எரித்தார். அப்பொழுது கொன்றை மரம் ஒன்றின் கீழ் அவை எரியாதிருந்தன. ஆகவே அங்கு எரியாமல் இருந்த பகுதியை அவர் மண்வெட்டியால் வெட்டிய போது அவர் மண் வெட்டியில் இரத்தம் கசிவதைக் கண்டார். பயந்து போய் வெட்டுவதை நிறுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஈஸ்வரர் பாமாலை என்ற நூலில் இப்படியாகக் கூறி உள்ளார்கள்:

மண்வெட்டியில் தோன்றி இருந்த இரத்தத்தைக் கண்டு பயந்து போன தீரபுத்திரன் ஓடோடிச் சென்று அந்தப் பகுதியை நிர்வாகித்து வந்த வன்னியனிடம் அதை எடுத்துரைத்தார். அந்த இடத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்த பொழுது, சிவபெருமானின் திருவருளால் அக்கொன்றை மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று அவர் கண்ணுக்குத் தென்பட்டது. அதுவே அன்று தொட்டு இன்று வரை இக்கோயிலின் கருவறையிலுள்ள சிவலிங்கமாக விளங்குகின்றது. [3]

Remove ads

மூர்த்திச் சிறப்பு

வன்னியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் முதலில் இதற்குக் கோயில் கட்டுவித்தான். பல பெரிய கோயில்களைக் கட்டுவதில் ஈடுபட்ட குளக்கோட்ட மன்னனும் இக்கோயிலுக்குந் திருப்பணி செய்வித்தான் என்பதனால் இம்மூர்த்தியின் கீர்த்தி எத்தகையது என்பது புலப்படும்.

இது தானாகவே தோன்றிய இலிங்கம் என்பது ஏலவே கூறப்பட்டது. மூர்த்தியின் மகிமை காரணமாகவே அது தானாகத் தோன்றுகின்றது. இத்தகைய மூர்த்தி சுயம்பு இலிங்கம் எனப்படும். சிற்பி செய்கின்ற சிவலிங்கத்துக்கு உருத்திர பாகம், விஷ்ணு பாகம், பிரம பாகம் என மூன்று பிரிவுகளைக் கொண்ட சிவலிங்கம் வேறாகவும், ஆவுடையார் என்பது வேறாகவும் இருக்கும். சுயம்பு இலிங்கத்துக்கு இந்த வரையறைகள் இல்லை என்பதனால் ஆவுடையார் பகுதியும் இல்லை. இது இல்லாதிருத்தல் தவறு எனக் கருதிய கோயில் நிர்வாகி இந்தியாவிலிருந்து சிற்பி ஒருவரை வரவழைத்து, ஆவுடையார் பகுதியைச் செய்வித்தார். அத்துடன் இயற்கையாக அமைந்த இந்தச் சிவலிங்கத்தை அழகுபடுத்தவேண்டும் என்றெண்ணி அதனை மூடுவதற்குப் பொற் கவசம் ஒன்றுஞ் செய்விக்கப்பட்டது. எனினும், இவை இரண்டும் தமக்குத் தேவையில்லை என்பதனைத் தான்தோன்றீச்சரர் தம் அருட் குறிப்பாற் கோயில் அதிகாரிக்குத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியும் அந்த மூர்த்தியின் அளப்பரிய அருளாற்றலை வெளிப்படுத்துகின்றது. பொற் கவசம் இன்னமும் கோயிலில் இருக்கின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோயில் இயற்கையாகவும் செயற்கையாகவும் உண்டாகின்ற அனர்த்தங்களினாற் பாதிக்கப்படாமல் இருப்பதும் இந்த மூர்த்தியின் அற்புதச் செயலாகும். சுயம்புலிங்கம் எப்பொழுது தோன்றியது எனக் கூறமுடியாது. எக்காலத்தில் இருந்து மக்கள் இதனை வழிபடத் தொடங்கினர் என்பதனை மட்டுமே கூற முடியும். இது சுயம்பு லிங்க மூர்த்தியின் தனிச் சிறப்பாகும்.

Remove ads

தலச் சிறப்பு

ஆரம்பத்தில் இது அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தலமாகும். எனவே, இங்கு மக்கள் அதிகமில்லை. இந்தத் தலத்தின் மகிமை காரணமாக ஆதியில் மக்கள் இங்குக் குடியிருக்கத் தொடங்கியிருப்பார்கள். தான்தோன்றியீச்சரரை நம்பி அங்குக் குடியேறியவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக இற்றைக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அங்கு குளம் ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது கோயிலை அடுத்துள்ள காட்டுப் பகுதியிற் பாழடைந்த நிலையில் முத்துராயன் கட்டுக்குளம், இறைவன் சித்தமாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அது இப்பொழுது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இக்குளம் அத்தலத்தைச் செழிப்பாக்கியமையும் அந்தத் தலத்தின் சிறப்பாகும். இத்தலத்திற்குத் தேவர் பதி என்னும் பெயரும் வழங்குகின்றது. தேவர்கள் வாழும் இடம் என இப்பெயர் பொருள் தருதலும் இத்தலத்தின் சிறப்பினையே எடுத்து விளக்குகின்றது.

தீர்த்தச் சிறப்பு

இந்தக் கோயிலுக்கு இயற்கையாய் அமைந்த அற்புதமான தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. தீராத நோய் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்வார்கள். அந்த நேர்த்திக் கடனை நிறைவு செய்து இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடிய பின்னர் அவர்களுடைய நோய் தீர்ந்துவிடும். இது இத்தீர்த்தத்தின் மகிமையை எடுத்தியம்புகின்றது.

Thumb
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர ஆலய தீர்த்தக் குளத்தின் ஆரம்ப கால உள்தோற்றம்

இதற்கு மாறாக, இந்தத் தீர்த்தக்குளத்தை அசுத்தப்படுத்த எண்ணுபவர்கள் இறைவனின் சீற்றத்திற்கு ஆளாதலும் கண்கூடு. இற்றைக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலுக்குப் பூசை செய்ய நியமிக்கப்பட்ட பூசகர் இருவர் இந்தத் தீர்த்தத்தின் புனிதத் தன்மையைப் பேணாது இதனைப் பயன்படுத்த முயன்றனர். அப்பொழுது தற்செயலாக அவ்விடத்துக்கு வந்த கோயில் நிருவாகி அவர்களைத் தடுத்தும் அதனைப் பொருட்படுத்தவில்லை. அதனால் அவ்விருவரும் தீர்த்தக் குளத்திலிருந்து உயிருடன் மீளவில்லை. இந்நிகழ்ச்சி அந்தத் தீர்த்தத்தின் மகிமையை அச்சத்துடன் புலப்படுத்துகின்றது.

Thumb
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர ஆலய திருக்குளத்தின் தற்போதைய உள்தோற்றம்


Remove ads

பூசைகளும் விழாக்களும்

இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் மூன்றுகாலப் பூசைகள் கிரமமாக நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, தைப்பொங்கல், மாதப்பிறப்பு, நவராத்திரி, கேதாரகௌரி விரதம், கந்த சஷ்டி, ஆடி அமாவாசை, திருவெம்பாவை முதலான விசேட தினங்களில் அவற்றுக்குரிய பூசைகளுஞ் செய்யப்படுகின்றன.

இங்கு மகோற்சவம் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையோடு ஆரம்பித்து, பதினாறு நாட்களுக்கு நடைபெறும். பதின்மூன்றாம் நாள் நடைபெறும் வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பானது. தீராத நோய்களாற் பீடிக்கப்பட்டவர்கள் தம் நோய் தீருவதற்காக வேட்டைத் திருவிழா அன்று வேடனாக வருவதாக நேர்த்திக்கடன் செய்வார்கள். இவர்கள் வாகைமரக் குழைகளாற் குடையும் வாகைக் குழையால் அல்லது தென்னோலையால் செய்த தொப்பியும் அணிந்து, உடல் முழுவதும் கரிபூசி வேடர்கள் போலக் கோலஞ் செய்வார்கள். தடி ஒன்றின் நுனியிற் குழை கட்டி அதனைக் கையில் வைத்துக்கொள்வார்கள். இவ்வேடர்களுக்குத் தலைவன் ஒருவன் இருப்பான். இது பரம்பரை பரம்பரையாகக் கிடைக்கின்ற ஒரு பதவியாகும். தலைவன் தேன் நிறைந்த சுரைக் குடுவை ஒன்றினை அரையிலே கட்டியிருப்பான்.

இந்தத் திருவிழாவுக்குச் சுவாமி மட்டுமே எழுந்தருளுவார். அவர் பெரிய வேடன் போல மேலே வீற்றிருக்க, வேட்டுவப் படை அணி சூழ்ந்து வர, திருவிழா பவனி வருதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்வாறு வீதி வலம் வந்து கோயில் வாயிலை அடையும்பொழுது, அக்கோயிலின் இறைவி சுவாமியுடன் கோபித்துக் கொண்டு வாயிற் கதவைப் பூட்டிக் கொள்ளுவார். அவ்வேளையில் கோயில் மணியகாரர் அவர்களுடைய பிணக்கை விசாரித்துத் தீர்த்து வைக்கும் பாங்கில் நிகழ்ச்சி ஒன்று அவ்விடத்தில் நடைபெறும்.

என்று தேவி அருளிப்பாடுவாள் அம்மன் ஆலகால சுந்தரருக்கும் சண்டீஸ்வரருக்கும் முறையிடுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறாகப் பிணக்குத் தீர்க்கப்பட்டுச் சுவாமி கோயிலின் உள்ளே சென்ற பின்னர் வேடுவர் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்பர். அவ்வேளையில் வேட்டுவத் தலைவனின் ஆணைக்கு அமைந்து, அவர்கள் நிலத்தில் வீழ்ந்து வணங்குவர். பின்னர் அவர்கள் கோயிலை வலம் வந்து, தீர்த்தக் குளத்திற்குச் சென்று வேட்டுவ உடைகளைக் களைந்து தீர்த்தமாடுவர். இதன் பின் அவர்களுடைய நோய் தீர்தல் ஒருதலை. இத்தகைய நோயாளர் விரதம் இருந்தே இந்த நேர்த்திக் கடனைச் செய்தல் நியதி. அதனால் நோய் தீரும் என்ற நம்பிக்கை வலுப் பெற்றுள்ளதனால், வேட்டைத் திருவிழாவில் வேடுவர்களாகப் பங்குபற்றுவோரின் தொகையும் அதிகரிக்கின்றது. மகோற்சவப் பிற்பகுதியில் பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழாவும் பதினாறாம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.

இக்கோயிலின் பூசைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுவதற்கு வேண்டிய வருவாயைப் பெறுவதற்காக இதற்குச் சொந்தமான நெல் வயல்களும் தென்னந்தோட்டங்களும் உள்ளன. இவை பண்டைக் கால மன்னர்களாலும் பொது மக்களாலும் இக்கோயிலுக்கென வழங்கப்பட்ட நன்கொடைகளாகும். இக்கோயிலுக்குக் குளக்கோட்டு மன்னனும், வன்னியரசர்களும் திருப்பணி செய்துள்ளார்கள்.

Thumb
ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவர ஆலயத்தின் இரதமொன்றின் கட்சி
Thumb
ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவர ஆலய சப்பரத் திருவிழா பவனி
Remove ads

கும்பாபிஷேகம்

நெடுங்கால இடைவெளிக்குப்பின் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயபுனராவர்த்தன 33 குண்ட பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் 10 நவம்பர் 1993 இல் வேதாகமகிரியாதிலகம் சிவசிறி இராஜாராம் குருக்கள் தலைமையில் 33 குருக்கள் கிரியைகள் செய்ய மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆலயம் புதுப்பொலிவுடன் அருளாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் 1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக ஒட்டுசுட்டானில் இருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் 2000 ஆம் ஆண்டில் மீள்குடியேறினர். மீண்டும் மக்கள் ஊருக்குத் திரும்பியதும் மீண்டும் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகாகும்பாபிஷேகம் 13 ஜூலை 2005 இல் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தற்பொழுது ஆலயத்தில் புதிதாக மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அமைக்கப்பட்ட 108 அடி நவதள இராஜகோபுர மற்றும் ஆலய புனரமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஆலயத்துக்கும் நவதள இராஜகோபுரத்துக்கும் 01 யூன் 2023 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் சிறப்புறச் செய்யப்பட்டுள்ளது.

Thumb
ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவர ஆலயத்தின் நவதள இராஜகோபுரம்
Remove ads

நூல்கள்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் ஆசிரியர் விருத்தம் என்னும் நூல் கொக்குவில் கு.ச.சபாரத்தின முதலியாரால் 1883 இல் இயற்றப்பட்டது. இக்கோயிலுக்கு ஊஞ்சற் பதிகம் ஒன்றும் உள்ளது. சுதுமலையைச் சேர்ந்த பண்டிதர் ஆ.சி. நாகலிங்கம் என்பவரால் அது பாடப்பட்டுள்ளது.

வேட்டைத் திருவிழா அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் இடையிலான பிணக்கை விசாரித்துத் தீர்த்து வைப்பது போன்று அமைந்த வசனக் கவிதை ஒன்றும் நூல் உருவில் இருக்கின்றது. கோயில் மணியகாரரே அவர்களுடைய வழக்கை விசாரிக்கும் நடுநிலையாளர் போன்ற பாவனையில் இக்கவிதை அன்று அவராலே படிக்கப்படும்.

இறைவனும் இறைவியும் நேராக ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறாமல், தம் குறையை மணியகாரருக்கு முறையிடுவது போன்று இக்கவிதைகள் அமைந்துள்ளன. இது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு நிகழ்ச்சியாகும். அதேபோல் ஆசிரியர் முருகேசு பாடிய பக்திப்பாடல்களும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் பாடிய தான்தோன்றி ஈஸ்வரர் பாமாலையும் தான்தோன்றி ஈஸ்வரர் அருளைப் பறைசாற்றும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads