தமிழ்ப் புத்தாண்டு

தமிழர்களின் பண்டிகை. From Wikipedia, the free encyclopedia

தமிழ்ப் புத்தாண்டு
Remove ads

தமிழ்ப் புத்தாண்டு (Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

விரைவான உண்மைகள் தமிழ்ப் புத்தாண்டு, கடைப்பிடிப்போர் ...

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் அடிப்படையில் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே ஒரு தமிழ் ஆண்டின் கால அளவாகும்.

Remove ads

வரலாறு

தமிழரிடையே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வழக்கில் இருந்ததற்கான சங்ககாலச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.ஊ பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.[1] ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.[2] சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு[3] காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி[4] முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதியில் அல்லது சித்திரை தொடக்கத்தில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.[5]

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.ஊ. 1310-இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய சரசோதி மாலை எனும் நூலில் ஆண்டுப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.[6] மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.ஊ. 1622-ஆம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.[7]

Remove ads

மரபுகள்

Thumb
தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.

தமிழர் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலைச் சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதிலும் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் நிறைந்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதைப் புத்தாண்டு அதிகாலையில் காண்பது நல்வாய்ப்பாகக் கருதப்படுகின்றது.[8] புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி, கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.[9] புத்தாண்டில் இனிப்பும் கசப்பும் கலந்தே இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி உண்பதும் குறிப்பிடத்தக்க மரபாகும்.[10]

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை, மூத்தோர் இளையவர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த நன்னேரத்தில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் மரபார்ந்த புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.[11]

Thumb Thumb
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
Remove ads

தைப்புத்தாண்டுச் சர்ச்சை

தைப்புத்தாண்டு

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்கிற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970 மற்றும் 1980களில் தோன்றியது. தை முதலாம் தேதியில் துவங்கும் திருவள்ளுவர் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆவணங்களில் நடைமுறைக்கு வந்ததே இக்கருத்து வலு பெற முக்கியக் காரணம் ஆகும்.[12] இப்பின்னணியில், தை முதல்நாள் தான் புத்தாண்டு என்று, திமுக அரசு 2008-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.[13] 2011-இல், அதிமுக அரசு இந்த அரசாணையை இரத்து செய்தது.[14]

தைப்புத்தாண்டு ஆதரவாளர்கள், 1921-ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும்[15], சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறுகின்றனர்.[16] இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் யாவையும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,[17] 1921-இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான ஆதாரமாகக் கருதத்தக்க ஆவணங்கள் எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்[18] 1921-இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல் தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.[19]

வடமொழி அறுபது ஆண்டுகள்

சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.[20] அதே சோழர் காலத்திலேயே சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன.[21] எனினும், தமிழகத்தில், 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் தொடங்கியே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.[22] இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்[23] பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக மரபார்ந்த தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்படுகிறது.[1]

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads