பார்வதி
இந்துக்கடவுள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்வதி (ஆங்கிலம்: Parvati) அல்லது உமையவள் அல்லது மலைமகள் அல்லது இகன்மகள் என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார்.[2] இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[3][4][5] சக்தியின் பொதுவான வடிவமாகப் பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக் கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரசுவதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார்.[6] மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.[7] இவர் கங்கைக்கு இளையவர் ஆவார்.[8] முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விட்டுணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.[9]
ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாகப் பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும்[10] அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைகளும், நிறையவே காணப்படுகின்றன.[11][12]
Remove ads
வேர்ப்பெயரியல்
பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு ஒடிசாச் சிற்பம், இடப்புறம் ஈசன் துணையாக இருகைகளுடன், வலப்புறம் பிள்ளையார், முருகனுடன் லலிதையாக நாற்கரங்களுடன்1872,0701.54 .
மலையரசன் மகளென்பதால், மலையைக் குறிக்கும் "பர்வதம்" எனும் வடமொழிச் சொல்லிலிருந்து "பார்வதி" எனும் பெயர் வந்தது.[7][13] இதேபொருள்தரும் "கிரிஜை", "சைலஜை", "மலைமகள்" முதலான பல பெயர்கள் அவளுக்குண்டு.[14] லலிதையின் பேராயிரம் வடமொழிநூல், அவளது ஆயிரம் திருநாமங்களைச் சொல்கின்றது.[15] "உமையவள்" என்பது பார்வதிக்குச் சமமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.[16] "அம்பிகை"(அன்னைத்தெய்வம்), சக்தி (பேராற்றல்), அம்மன், மகேசுவரி (பேரிறைவி), கொற்றவை (பேரரசி) என்று அவளது பெயர்களின் பட்டியல் நீள்கின்றது. காமாட்சி, அன்னபூரணி ஆகிய பார்வதியின் இருவடிவங்களும் புகழ்பெற்றவை.[17]
வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில்[18] "கௌரி"[19] என்றும், கருமை நிறத்தில் "காளி" என்றும் போற்றப்படும் உமையின் இருவடிவங்களும் பரவலாகப் போற்றப்படுகின்றன,
Remove ads
வரலாறு
கேன உபநிடதத்தில் (3.12) "உமா ஹைமவதி" எனும் பெயர் காணப்படும் போதும்,, பார்வதி, வேதகாலத்துக்குப் பிந்திய தெய்வம் எனச் சில ஆய்வாளர்கள்[20] கூறுகின்றனர். எனினும் சாயனரின் அனுவாக உரை, தளவாகார உபநிடதத்திலுள்ள "உமா" எனும் பெயரையும் குறிப்பிடுவதால், "உமா", "அம்பிகா" என்றெல்லாம் சொல்லும் வேதத் தெய்வம் பார்வதியே என்பதில் சந்தேகமில்லை.[21]
இராமாயணம், மகாபாரதம் முதலானவற்றிலிருந்து, இதிகாச காலத்தில் (பொ.ஊ.மு. 400-இலிருந்து பொ.ஊ. 400) பார்வதி இன்றைய சிவசக்தியாக இனங்காணப்படுகிறாள். எனினும் காளிதாசன் (பொ.ஊ. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு) மற்றும் புராணங்கள் (பொ.ஊ. 4 முதல் 13-ம் நூற்றாண்டுகள்) இன்றைய பார்வதியை முழுமைபெறச் செய்யும் வரலாறுகளைக் கூறுகின்றனர். ஆரியர் அல்லாத மலைக்குடிகளின் தொல்தெய்வமே பார்வதி என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.[14]
உருத்திரன், அக்னி தேவன், இயமன் முதலான வேதகாலத் தெய்வங்களின கலவையாகச் சிவன் பெருவளர்ச்சி கண்டதுபோல், உமா, ஹைமவதி, அம்பிகை, காளி, கௌரி, ராத்திரி, அதிதி முதலான பழந்தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளே "பார்வதி" எனும் பெரும் தெய்வத்தைப் படைத்தன.[21][22][23]

தட்கனின் மகளும், ஈசனின் முதல் மனைவியுமான தாட்சாயிணியே மீண்டும், பார்வதியாக அவதரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.[24] தாட்சாயணியை இழந்து வருந்திய ஈசன் தியான நிலையில் ஆழ்ந்தார். சிவனை மணக்க பார்வதி தவம் செய்ய முடிவெடுத்தார். அவரின் பெற்றோர் முதலில் அதை மறுத்தனர். பின் அவரது உறுதியைக் கண்டு திகைத்து, அவரது தவத்துக்கு உதவினர். இதற்கிடையிவ் சூரபத்மன் என்னும் அசுரன், பிரம்மதேவரிடம் சிவனின் பிள்ளையைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் காமதேவனை அனுப்பி ஈசனின் தியானத்தைக் கலைத்துப் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வைக்க முயல்கின்றனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பு பட்டு, காமதேவன் எரிந்து சாம்பலானான். பின்பு ஈசனே மாறுவேடத்தில் வந்து, பார்வதியின் மனதைக் கலைக்க முயன்றும் அவர் கலங்காமல் தன் தவத்தைத் தொடர்ந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார்.[25]
திருமணத்திற்குப் பின் ஈசனுடன் பார்வதியும் கயிலை சென்று வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்குப் பிள்ளையார், முருகன் ஆகியோர் பிள்ளைகளாக அவதரிக்கின்றனர்.[13][26]
Remove ads
மாற்றுக் கதைகள்
ஹரிவம்சத்தின்படி, ஏகபர்ணை, ஏகபாதலை ஆகியோரின் மூத்த சகோதரியே பார்வதி. தேவி பாகவத புராணம், சிவ மகா புராணம் கந்த புராணம் என்பவற்றின்படி, ஆதிசக்தியை, மலையரசனும் மேனையும் வேண்டித் தவமிருந்ததாலேயே அவள் அவர்களுக்கு மகளாகப் பிறக்கிறாள். பார்வதிக்கு "அசோக சுந்தரி" எனும் மகளொருத்தி உண்டு எனம் நம்பிக்கைகளும் உண்டு.[27]
சிற்பவியலும் குறியீட்டியலும்
பொதுவாகப் பேரழகியாகச் சித்திரிக்கப்படும் பார்வதி,[28][29] செந்துகில் உடுத்து, இருகரத்தினளாகக் காட்சி தருவாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கண்ணாடி, மணி, கலப்பை, கரும்புவில், மலர்ப்பாணம்[5] முதலீயவற்றை ஏந்தி, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனும் அவள் சித்திரிக்கப்படுவது உண்டு.
இருகரத்தினளாக உள்ளபோது, ஒரு கரத்தைக் கத்யவலம்பித (கடக) முத்திரையலும், மற்றையதை அஞ்சேல் அல்லது மலரேந்திய முத்திரையிலும் அமைப்பது உண்டு. விளைந்த வயல்களைக் குறிக்கும் மஞ்சள் அல்லது பொன்னிறத்தில் அமைந்த "கௌரி"யின் வடிவத்திலும பார்வதி போற்றப்படுகிறாள்.[30] காளி முதலான பயங்கரமான உருவங்களும், மீனாட்சி, காமாட்சி போன்ற அழகொழுகும் வடிவங்களும் அவளுக்குரியவை. காமனை நினைவுகூரும் கிளி அவளது கரங்களில் காணப்படுவதும் உண்டு.[31]
சிவ சக்தியரை முறையே சிவலிங்கம் - யோனியாகக் குறிப்பது பொதுவழக்கம். இக்குறியீடு, "தோற்றம், மூலம்" என்பவற்றைக் குறிப்பிடுகின்றன[32] ஆண்மை - பெண்மை இணையும் போது தோன்றும் மீளுருவாக்கம், இனப்பெருக்கம், வளமை முதலானவற்றை இலிங்கமும் யோனியும் குறிப்பிடுக்கின்றன.[33]
மாதொருபாகன் - இலட்சியத் தம்பதிகளைக் காட்டும் இந்து எண்ணக்கரு.
Remove ads
பார்வதியின் வடிவங்கள்
பார்வதி எடுத்த அவதாரங்கள் பல.
- காளி — காலத்தின் வடிவானவர்
- தாரா — ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானின் உயிரைக் காப்பாற்றியவர்
- திரிபுரசுந்தரி — பண்டாசுரனை அழிக்கத் தோன்றியவர்
- புவனேஸ்வரி — உலகை ஆளும் தேவி
- பைரவி — திரிபுரசுந்தரியின் நிழலிலிருந்து தோன்றியவர்
- சின்னமஸ்தா — தன் தலையையே கொய்து அதன் குருதியை அருந்தியவர்
- தூமாவதி — ஜேஷ்டா தேவியின் வடிவம்
- பகளாமுகி — மதனாசுரனை அழிக்கத் தோன்றியவர்
- மாதங்கி — மதங்க முனிவரின் மகளாகத் தோன்றியவர்
- கமலாத்மிகா — லட்சுமி தேவியின் வடிவம்
- சைலபுத்ரி — இமவானின் மகளாகத் தோன்றியவர்
- பிரம்மாச்சாரிணி
- சந்திரகாந்தா
- குஷ்மாந்தா
- ஸ்கந்தமாதா — கந்தனின் அன்னை
- காத்யாயனி
- காளராத்திரி
- மகாகௌரி
- சித்திதாத்ரி
- துர்க்கை — மகிஷாசுரனை அழிக்க வந்தவர்
- கௌசிகி/மகாசரஸ்வதி — சும்ப நிசும்பர்களை அழிக்க வந்தவர்
- சாகம்பரி — தாவரங்களின் அதிபதி; துர்கமாசுரனை அழிக்க தோன்றியவர்
- பிரமாரி — அருணாசுரனை அழிக்கத் தோன்றியவர்
- விந்தியவாசினி — நந்தகோபர் & யசோதையின் மகளாகத் தோன்றியவர்
- ரக்ததந்திகா — வைப்ரசித்த அரக்கர்களை அழித்தவர்
- பீமாதேவி — இமயமலையிலுள்ள முனிவர்களைக் காக்கவும் அங்குள்ள அசுரர்களை அழிக்கவும் வந்தவர்
- மகாகாளி
- அர்த்தநாரீஸ்வரர்
- ஜகதாத்ரி — தேவர்களின் ஆணவத்தை அடக்க வந்தவர், சிவ புராணத்தின்படி, இவர் உமாதேவி என்றும் அழைக்கப்படுகிறார்
- காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அங்காளம்மன்
Remove ads
விரதங்கள்
பார்வதி தேவியைக் கவுரி என்ற வடிவில் வழிபடுகின்றனர். இதனால் கௌரி, அனந்தா திரிதியை, [34] ஜெயபார்வதி விரதம், கோகிலா விரதம், வடசாவித்திரி விரதம் போன்ற விரதங்களைக் கடைபிடிக்கின்றனர்.
ஜெயபார்வதி விரதம்
ஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற திரயோதசி திதி நாளை ஜெயபார்வதி விரதம் இருக்கின்றனர். இந்த நாளில் விரதம் இருந்தால் வெற்றிகளைப் பார்வதி தருவாள் என்பது நம்பிக்கையாகும்.[35]
கோகிலா விரதம்
கோகிலம் என்ற சொல் கிளியைக் குறிப்பது. கிளியைக் கையில் ஏந்தியிருக்கும் உமையம்மைக்கு இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.[36]
சாவித்திரி விரதம்
ஆலமரத்திடியில் உள்ள உமா தேவிக்கு இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்வதி தேவியை வழிபடுகின்றனர்.[37]
ஆத்ம திரிதியை விரதம்
வளர்பிறை திரிதியையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சக்தியை வழிபடுவது ஆத்ம திரிதியை விரதம் ஆகும்.[38]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads