திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்
Remove ads

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் (Kandiyur Kandeeswarar Temple) என்பது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் கண்டியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும்

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

தல வரலாறு

பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

Remove ads

தல சிறப்புகள்

  • அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.
  • "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.
  • பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.
  • சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
  • சப்த(ஏழு)ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
  • நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.
  • பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.
  • இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
  • கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.
Remove ads

திருவையாறு சப்தஸ்தானம்

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.[1]

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே
அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாயிவ்வைய முழுதுமாயழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே..

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads