கமலா ஆரிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கமலா தேவி ஆரிசு (Kamala Devi Harris, கமலா ஹாரிஸ்[2] பிறப்பு: அக்டோபர் 20, 1964)[3] அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2021 சனவரி 20 இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் 2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் டோனால்ட் டிரம்ப்பையும், துணைத் தலைவர் மைக் பென்சையும் தோற்கடித்தனர். கமலா ஆரிசு 2017 முதல் கலிபோர்னியாவுக்கான அமெரிக்க மூதவை (மாநிலங்களவை ) உறுப்பினராக இருந்தவர். இந்தியத் தமிழ் மற்றும் ஆப்பிரிக்க-யமெய்க்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா பல்லின அமெரிக்கராவார்.[4] அமெரிக்க வரலாற்றில், கமலா ஆரிசு முதலாவது ஆசிய-அமெரிக்க, முதலாவது ஆபிரிக்க அமெரிக்க, மற்றும் முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக விளங்குவார்.[5] அத்துடன், இவர் அமெரிக்க வரலாற்றில், இத்தகைய அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் ஆவார்.
கலிபோர்னியா மாகாணத்தின் , ஆக்லாந்தில் பிறந்த கமலா ஆரிசு, அவார்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 அமெரிக்க மேலவைத் தேர்தலில் லொரெட்டா சான்செசைத் தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க மேலவைக்குத் (மாநிலங்களவை) தெரிவான முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், மற்றும் முதலாவது தெற்காசிய-அமெரிக்கர் என்ற சிறப்புகளையும் பெற்றார்.[6][7] மேலவை உறுப்பினராக, சுகாதார சீர்திருத்தம், கட்டுப்பாட்டுப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குதல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான வழிவகைகள், தாக்குதல் ஆயுதங்களுக்கு தடை, மற்றும் வளர்விகித வரி சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரட் கவானா என்பவரை குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத் இணை நீதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவித்த போது, இவர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தது மூலம் நாட்டளவில் அறியப்பட்டார்.[8]
2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக உட்கட்சித் தேர்தலில் கமலா போட்டியிட்டார். 2019 டிசம்பர் 3 இல் தொடர் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளில் சில காலம் இவர் முன்னணியில் இருந்தார்.[9] 2020 ஆகத்து 11 அன்று 2020 தேர்தலில் ஜோ பைடனின் துணைக் குடியரசுத் தலைவர்- வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டார். 2020 நவம்பர் 3ஆம் நாள் குடியரசு தலைவர், துணைத் தலைவருக்கான பொது தேர்தல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்கு பின் நவம்பர் 7 ஆம் நாள், பிடென்-ஆரிசு இணை 306 இடங்களையும், அப்போது பதவியிலிருந்த டிரம்ப்-பென்சு இணை 232 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர். மொத்தம் 538 இடங்கள் கொண்ட தேர்தல் சபையில் பெரும்பான்மையை வென்ற பிடென்-ஆரிசு இணை முறையே குடியரசு தலைவராகவும், குடியரசு துணை-தலைவராகவும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்க தேசிய சபையும் இந்த தேர்தல் முடிவை அங்கீகரித்தது. அமெரிக்க மாநிலங்கள் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021 அன்று கமலா ஆரிசு விலகினார். 2021 ஜனவரி 20ஆம் நாள், கமலா ஆரிசு அமெரிக்காவின் முதல் பெண் துணை-குடியரசு தலைவராக வாசிங்டனில் பதவி ஏற்றார். இவர் 49-வது துணை குடியரசு தலைவர் ஆவார். ஐரோப்பியரல்லாத வம்சாவளியைச் சேரா ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இது இரண்டாவது தடவையாகும், முன்னதாக 1929 முதல் 1932 வரை சார்லசு கேர்ட்டிசு அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.[10]
2024 சூலையில், பைடன் 2024 குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற பிறகு, ஹாரிஸ் அவரது ஒப்புதலுடன் தனது சொந்த குடியரசுத் தலைவர் பரப்புரையைத் தொடங்கினார். பின்னர் அவர் வேட்பாளராகி மினசோட்டா ஆளுநர் டிம் வால்சைத் தனது துணை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். இறுதியில் அவர் குடியரசுக் கட்சி வேட்பாளர்களான முன்னாள் குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப்பிடம் தேர்தலில் தோல்வியடைந்தார்.[11]
Remove ads
இளமைக்காலம்
கமலா 1964 அக்டோபர் 20 இல், கலிபோர்னியா, ஓக்லாந்தில் பிறந்தார்.[12] தாயார் சியாமளா கோபாலன், ஓர் உயிரியலாளர், மார்பகப் புற்றுநோய் புரோஜெஸ்ட்டிரோன் ஏற்பி மரபணு ஆய்வில் ஈடுபட்டவர்.[13] சியாமளா 1958 இல் தனது 19-வது அகவையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில் பட்டப் படிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து,[14][15] தனது முனைவர் பட்டத்தை 1964 இல் பெற்றார்.[16] கமலாவின் தந்தை டொனால்டு ஜே. ஹாரிசு யமேக்காவைச் சேர்ந்தவர். இவர் யமேக்காவில் இருந்து 1961 இல் அமெரிக்கா வந்து கலிபோஒர்னியா பல்கலைக்கழகத்தில் 1964 இல் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்று, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.[17][18]

கமலா தனது தங்கை மாயாவுடன் கலிபோர்னியாவில் பெர்க்லி நகரில் வசித்து வந்தார்.[19][20] இவர் வசித்த மேற்கு பெர்க்லியில் உள்ள பான்குரொஃப்ட் சாலை குறிப்பிடத்தக்க அளவு கறுப்பினத்தவர்கள் வாழ்ந்துவந்த இடமாகும்.[21]
Remove ads
மேலவை உறுப்பினர்
கமலா ஹாரிஸ், மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிஃபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22] [23] இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார். கமலா அமெரிக்க தேசிய துணை-குடியரசு தலைவராய் தேர்வானதால், தன் மேல் சபை உறுப்பினர் பதவியை விட்டு 2021 சனவரி 18 அன்று விலகினார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads