கலைச்சொல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலைச்சொல் (ஒலிப்பு) என்பது, ஏதாவது ஒரு அறிவுத்துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். இவை பொது வழக்கில் உள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியது இல்லை. ஒரு குறிப்பிட்ட துறை குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச் சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதித்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. கலைச்சொல் என்பது சொற்சிக்கனத்தோடு, பொருளில் ஆழத்தையும், துல்லியத்தன்மையையும் பெறுவதற்கான ஒரு வழிமுறையும் ஆகும். இதனால், ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத் துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.

Remove ads

பொதுச் சொற்களும், கலைச்சொற்களும்

வேறுபாடுகள்

வரைவிலக்கணங்களின் அடிப்படையில் கலைச்சொற்கள் பொதுச் சொற்களில் இருந்து பல வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாக உள்ளன. குறிப்பாகக் கலைச்சொற்களின் பின்வரும் பண்புகள்[1] அவற்றைப் பொதுச் சொற்களில் இருந்து வேறுபடுத்துகின்றன.

  • பொது வழக்கில் பயன்படாமை
  • ஒரு துறைசார்ந்த குழுவினர் மட்டும் பயன்படுத்துவது
  • சிறப்புப் பொருள் இருப்பது
  • சொல்லும் பொருளும் துறை சார்ந்தோரால் தீர்மானிக்கப்படுதல்
  • நுண்பொருளைக் குறிக்கும்போது ஆழ்ந்த பொருளை வெளிப்படுத்துவது.

பொதுத் தன்மைகள்

ஆனாலும், பயன்பாட்டில் இரண்டுக்கும் இடையே பொதுத் தன்மைகளும் இருக்கவே செய்கின்றன. சொற்கள் மொழியின் பொது வழக்கில் இல்லாவிட்டாலும் கூட, அம்மொழியின் இலக்கண வரம்புகளுக்குள்ளேயே பயன்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட ஒரு மொழியைப் பொறுத்தவரை கலைச்சொற்கள் பொதுச் சொற்களோடு பின்வரும் பொதுத் தன்மைகளைக் கொண்டுள்ளதைக் காணலாம்.[2]

  • ஒரே குறியீடுகளைப் பயன்படுத்துவது
  • ஒரே ஒலிப்புமுறை
  • ஒரே உருபனியல் அமைப்பு
  • ஒரே தொடரியல் விதிகளுக்கு அமைவது
  • ஒரே சொற்றொடர் வகைகளைப் பயன்படுத்துவது.

வகைகள்

கலைச்சொற்கள் பெரும்பாலும் பொது வழக்கில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவதால் சாதாரண மக்களும், பிற துறைகளைச் சார்ந்தவர்களும் புரிந்து கொள்ள முடியாதவையாக உள்ளன. எனினும், எல்லாக் கலைச்சொற்களுமே பொதுவழக்கில் இல்லாதவை என்று கூறிவிடுவதற்கு இல்லை. கலைச்சொற்களாகக் கருதப்படும் பல சொற்கள் பொது வழக்கிலும் புரிந்துகொள்ளக்கூடியவையாக இருப்பதைக் காணலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கலைச்சொற்களாகப் பயன்படும் சொற்களை மூன்று வகைகளுக்குள் அடக்கலாம்.

Remove ads

கலைச்சொற்கள் தொடர்பிலான அணுகுமுறைகள்

கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்குகள் மொழியின் ஒரு பகுதி என்ற அளவில், அது உணர்வு வெளிப்பாட்டுக்கும், தொடர்பாடலுக்குமான ஒரு ஊடகம் என்ற அடிப்படையையே பெரும்பாலான அணுகுமுறைகள் பொதுவாகக் கொண்டிருந்தன. பயனாளிகளின் நோக்கங்களையும் செயற்பாட்டுத் தேவைகளையும் பொறுத்து, அணுகுமுறைகளிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. தொடக்கத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் கையாளப்பட்டன. இவை, 1) மொழியியல் அணுகுமுறை, 2) மொழிபெயர்ப்பு அணுகுமுறை, 3) திட்டமிடல் அணுகுமுறை என்பன.[3]

மொழியியல் அணுகுமுறையைப் பொறுத்தவரை மூன்று குழுக்களை முக்கியமாகக் கருதலாம். ஒரு குழுவினர் யூஜின் வூசுட்டரின்"பொதுக் கலைச்சொல்லியல் கோட்பாட்டின்" அடிப்படையில் தமது அணுகு முறையை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள் கருத்துருக்களே முதன்மையானவை என்றும் அவற்றுக்கான பெயரீடுகளே கலைச்சொற்கள் எனனவும் கொண்டனர். இக்குழுவினர், கலைச்சொற்களைப் பன்னாட்டு அளவில் தரப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். இன்னொரு குழுவினர், கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்கைப், பொது மொழிவழக்கின் ஒரு பாணியாகவே கருதியதுடன், கலைச்சொற்களை, மொழியின் செயற்பாட்டு, தொழில்சார் பாணியின் அலகுகளாகக் கொண்டனர். மூன்றாவது குழுவினர், பன்மொழிச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு, கருத்துருக்களையும், கலைச்சொற்களையும் தரப்படுத்துவது தொடர்பில் தமது அணுகுமுறையை அமைத்துக்கொண்டனர்..[4]

மொழிபெயர்ப்பு அணுகுமுறை மொழிபெயர்ப்புகளுக்கான வசதிகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணுகுமுறை, பன்மொழிக் கலைச்சொற்களை உருவாக்குவதற்கும் அவற்றுக்கான தரவுத்தளங்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வழங்குவது.[2] பன்மொழி பேசும் சமூகங்களைக் கொண்ட பகுதிகளில், அரசாங்க நிர்வாகத் தேவைகளுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் பயன்படுகிறது. அதிகாரபூர்வக் கலைச்சொற்களை மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோரும் பயன்படுத்துவதைக் கலைச்சொல் தரவுத்தளம் உறுதிசெய்கிறது.

Remove ads

கலைச்சொல் தரப்படுத்தல்

Thumb
யூஜீன் வூசுட்டர்

கலைச்சொற்கள் நீண்டகால வரலாறு கொண்டவை. எனினும், அக்காலங்களில் கலைச்சொற்கள் தொடர்பில் ஒருமைப்பாடு காணப்படவில்லை. அறிவியல், தொழினுட்பம் மற்றும் புதிய அறிவுத் துறைகள் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தபோது, பன்னாட்டளவிலான தொடர்புகளுக்கும் அறிவுப் பரவலுக்கும் கலைச்சொற்களைத் தரப்படுத்தலின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆசுத்திரிய நாட்டைச் சேர்ந்தவரும், கலைச்சொல்லியலின் தந்தை எனக் கருதப்படுபவருமான யூஜீன் வூசுட்டர் (Eugen Wüster) என்பவர் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். 1931 ஆம் ஆண்டில் இவர் எழுதிய தொழில்நுட்பக் கலைச் சொற்களைப் பன்னாட்டளவில் தரப்படுத்தல் என்னும் செருமன் மொழி நூல், பன்னாட்டுத் தரப்படுத்தல் அமைப்பின் கீழ் கலைச்சொல் தரப்படுத்தலுக்கான பன்னாட்டுத் தொழில்நுட்பக் குழு ஒன்று உருவாகக் காரணமானது. இக்குழு 1967 ஆம் ஆண்டிலிருந்து 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கலைச்சொற்களைத் தரப்படுத்தல் தொடர்பான ஏழு அடிப்படை ஆவணங்களை வெளியிட்டது.

வூசுட்டரும் பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நிகழ்த்திக் கலைச்சொல் பொதுக் கோட்பாட்டின் அடிப்படைகள், பன்னாட்டுக் கலைச்சொற்கள் என்பன உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். இவற்றின் மூலம், கலைச்சொல்லாக்க வழிமுறைகள், கலைச்சொற்களைத் தெளிவுபடுத்தல், ஆவணப்படுத்தல், ஒலிபெயர்ப்பு போன்றவை தொடர்பான பல கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

உசாத்துணைகள்

  • சண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005.
  • செல்லப்பன், இராதா., கலைச்சொல்லாக்கம், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2006.
  • மாதையன், பெ., அகராதியியல் கலைச்சொல்லகராதி, பாவை பப்ளிகேசன்சு, சென்னை, 2009.
  • Cabre, M. Teresa., Terminology: Theory, Methods and Applications, John Benjamins Publishing Company, Amsterdam, 1999.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads