காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
Remove ads

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் (குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.) மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம்., ஆள்கூறுகள்: ...
Remove ads

இறைவர், வழிபட்டோர்

சிறப்பு நாட்கள்

திருவிழா: ஆண்டுதோறும் வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.

வேண்டுவன: நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது தொன்மை (ஐதீகம்).

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.[2]

Remove ads

தல பெருமை

இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகும். மேலும், இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது.

நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது. மேலும், சந்தான கணபதி திருவுருவமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.[3]

தல சிறப்பு

தேவசேனாபதீச்சரம்

இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக தேவசேனாபதீச்வரர் எழுந்தருளியுள்ளார். (முருகப் பெருமானின் கருவறையின் எதிரில் தனி கட்டிடமாக உள்ளது.) சிவலிங்க ஸ்வரூபமாக மூலத்தானத்து மேல் விமானத்தில், முருகனும், திருமாலும் இவ்விறைவனை வணங்கும் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். குமரக்கோட்டத்துக்குள், உருகும் உள்ளப் பெருமாள் சந்நிதி, முருகப்பெருமானின் பள்ளியறைக்கு அடுத்து அமைந்துள்ளது. (மூலவர்: உருகு உள்ள மூலப் பெருமாள். தாயார்கள்: ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மார்க்கண்டேய முனிவர்.)[4]

Remove ads

தல வரலாறு

மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சிதருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.

பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ; எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.[5]

Remove ads

தல விளக்கம்

குமரகோட்ட தல விளக்கத்தில் அறிவது, முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன். அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார் வேதனை அடைந்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’ என வினவினர். ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக் குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.

தேவர் முறையீட்டிற்குத் திருச்செவி சாத்திய சிவபிரானார் நந்தியை விடுத்தபோது முருகப்பெருமான் பிரமனைச் சிறைவீடு செய்யாமையின் தாமே போந்து பிரமனை விடுவித்தனர். பிரமன் வேற்கடவுள் கருணையால் நல்லறிவு பெற்றேனென வணங்கித் தன் இருக்கை சார்ந்து படைப்புத் தொழிலை மேற்கொண்டனன். சிவபிரான் மடித்தலத்திலிருந்து முருகப்பெருமான் ஓம்மொழிப் பொருளைத் தந்தையார்க்கு வெளிப்படுத்தி அவரருளைப் பெற்றனர். ஆயினும் தந்தையார் பணியாகிய பிரமனைச் சிறைவீடு புரியாமையான் நேர்ந்த பிழைதீரத் தம்பெயரால் தேவசேனாபதீசர் எனச் சிவலிங்கம் இருத்திப் போற்றினர்.

முருகப்பெருமான் மான்தோலுடையும், தருப்பை அரைநாணும், திருக்கரங்களில் உருத்திராக்க வடமும், கமண்டலமும் விளங்க நினைப்பவர் பிறப்பறுதற்கு ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத் தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள் புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர். அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும் மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப் பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன் திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று விளங்குகின்றனர். குமரகோட்டம் என்னும் இத்தலம் காஞ்சிக்கு நடுநாயகமாய் விளங்குகின்றது.[6]

Remove ads

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு இராசவீதியில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி கச்சபேசுவரர் கோயில் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியிலும், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் தென்மேற்கு திசையிலும், அருகிலும் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[7]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads