கா. பொ. இரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் (கா. பொ. இரத்தினம், 10 மார்ச் 1914 – 20 திசம்பர் 2010) ஈழத்துத் தமிழ் அறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல்வாதியும் ஆவார். திருக்குறள் நெறி பரவப் பல்வேறு வழிகளில் பாடுபட்ட அறிஞர்களில் கா. பொ. இரத்தினம் குறிப்பிடத்தக்கவர். உலகத்தமிழ் மாநாடுகளுக்கு அடித்தளமான திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
1914-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் பிறந்த இரத்தினம்,[1][2] வேலணை ஆங்கிலக் கலவன் பாடசாலையிலும், பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[3] தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் கற்றுத் தேர்ந்த இரத்தினம்,[1] கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பயின்றார். 1933 இல் பண்டிதர் பட்டமும், 1942 இல் வித்துவான் பட்டமும் பெற்றார்.[1] 1941-ஆம் ஆண்டில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1943-இல் பாடசாலைகளுக்கான ஆய்வு அலுவலராகப் பணியாற்றினார். 1945 முதல் 1956 வரை மகரகமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர் கொழும்பில் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் எட்டாண்டுகள் பணியாற்றி, தமிழ் வெளியீடுகளில் தமிழ் மொழி அமுலாக்கல் சீராக நடைபெற உதவினார். பின்னர் மலேயாப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு இணைந்து பணியாற்றினார். 1952ம் ஆண்டு கொழும்பில் 'தமிழ்மறைக் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்ப் பணிகளை ஆற்றி வந்தார்.
1945 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கைலை (சிறப்பு)ப் பட்டமும்,[1][4] சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1952 ஆம் ஆண்டில் கீழைத்தேய மொழிகளில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.[1][4]
கா. பொ. இரத்தினம் பி. வயித்திலிங்கம் என்பாரின் மகள் சிந்தாமணியைத் திருமணம் புரிந்தார்.[1]
Remove ads
அரசியலில்
1960-ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலும்,[5] 1970 தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியிலும்[6] தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977 தேர்தலில் ஊர்காவற்துறைத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[7]
தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கா. பொ. இரத்தினம் நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[8].
Remove ads
தேர்தல் வரலாறு
சமூகப் பணி
பல ஆண்டுகள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராகவும் 1958-1959 காலப்பகுதியில் அதன் தலைவராகவும் 1973-1981 காலத்தில் துணைக் காப்பாளராகவும் இருந்து சங்கப் பணியாற்றினார். 1960 இல் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட "முருகு' என்ற இலக்கிய வெளியீட்டின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
எழுதிய நூல்கள்
- தமிழ், இலக்கியம் கற்பித்தல்
- தமிழ் உணர்ச்சி
- உரை வண்ணம்
- அன்புச் சோலை
- காவியமணம்
- இமயத்து உச்சியில்
- தனி ஆட்சி
- எழுத்தாளர் கல்கி
- நினைவுத்திரைகள் (சுயசரிதை)
- இலங்கையில் இன்பத் தமிழ்
- தமிழ் மறை விருந்து
- பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்
- மனப்பால்
- யாஅம் இரப்பவை (1987)
பட்டங்களும் விருதுகளும்
கா. பொ. இரத்தினம் அவர்கள் 'தமிழ்மறைக் காவலர்', 'திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இறுதிக்காலம்
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு சென்று தங்கியிருந்த இவர், 2003-ஆம் ஆண்டு மீண்டும் கொழும்பு திரும்பி வெள்ளவத்தையில் வசித்து வந்தார். 2010 திசம்பர் 20 ஆம் நாள் கொழும்பில் தனது 96வது அகவையில் காலமானார்.[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads