இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கையில் இயங்கிய/இயங்கும் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

இலங்கைத் தமிழரசுக் கட்சி
Remove ads

இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi, ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது.[1] 2004 முதல் 2024 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்படும் வரை, அக்கூட்டமைப்பின் முக்கிய கட்சியாக தமிழரசுக் கட்சி இருந்தது. 2024 நிலவரப்படி, இக் கட்சி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய தமிழ்க் கட்சியாகவும், தேசிய மக்கள் சக்தி, மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி Ilankai Tamil Arasu Kachchi, தலைவர் ...
Remove ads

வரலாறு

மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.

1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.

1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.

1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.

தமிழர் விடுதலைக் கூட்டணி

இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி 1972 இல் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

2001 ஆம் ஆண்டில், தமிழர் விடுதலை கூட்டணி, ஏனைய மிதவாதத் தமிழ்க் கட்சிகளுடனும், முன்னாள் போராளிக் குழுக்களுடனும் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை உருவாக்கியது. 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது.[3] பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்து, புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியது. இது தமிழர் விடுதலை கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தியது. அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் சில உறுப்பினர்கள் புலிகளை எதிர்த்தனர். 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியின் பெயரைப் பயன்படுத்த ஆனந்தசங்கரி அனுமதிக்க மறுத்துவிட்டார்.[4] இதன் விளைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து இருக்க விரும்பிய தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் "இலங்கைத் தமிழரசுக் கட்சி" என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் மூலம் 2004 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2020 தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே போட்டியிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு

2022 திசம்பரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2023 இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது.[5][6] இதற்குப் பதிலடியாக, புளொட், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய கட்சிகள் 2023 உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற புதிய கூட்டணியைத் தொடங்கின.[5][7] இந்தக் கூட்டணியில் ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ்), தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவை இணைந்தன.[8][9][10] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டு 8 உறுப்பினர்களை வென்றது.

Remove ads

தேர்தல் முடிவுகள்

1952 நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி முதல் தடவையாக 1952 தேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகரித்துக் கொண்டது. தமிழரசுக் கட்சியில் இருந்து 2 உறுப்பினர்கள் (கு. வன்னியசிங்கம், என். ஆர். இராசவரோதயம்) தெரிவு செய்யப்பட்டனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு கட்சி 4 இடங்களைக் கைப்பற்றியது.

1956 நாடாளுமன்றத் தேர்தல்

1956 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சியமைத்தது. தமிழரசுக் கட்சி 5.39% வாக்குகளைப் பெற்று, 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. தமிழ்க் காங்கிரசு ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது.

தொகுதி வாரியாக தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொகுதி, வாக்குகள் ...

1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினர், ஆனால் அது சிங்களக் கும்பலால் வன்முறை மூலம் கலைக்கப்பட்டது. 1958 கலவரங்களை அடுத்து தமிழரசுக் கட்சி சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தின்படி 1958 ஆம் ஆண்டு தமிழ் மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டது.

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்

மார்ச் 1960 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது, தமிழரசுக் கட்சி 5.80% வாக்குகளைப் பெற்று 15 இடங்களைக் கைப்பற்றியது.

தொகுதி வாரியாக தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொகுதி, வாக்குகள் ...

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்

சூலை 1960 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி பெரும்பான்மைக் கட்சியாக ஆட்சியைக் கைப்பற்றியது, தமிழரசுக் கட்சி 7.0% வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது.

1965 நாடாளுமன்றத் தேர்தல்

1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது, தமிழரசுக் கட்சி 5.38% வாக்குகளைப் பெற்று 14 இடங்களைக் கைப்பற்றியது.

தொகுதி வாரியாக தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொகுதி, வாக்குகள் ...

1970 நாடாளுமன்றத் தேர்தல்

1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி-தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது, தமிழரசுக் கட்சி 4.92% வாக்குகளைப் பெற்று 13 இடங்களைக் கைப்பற்றியது.

தொகுதி வாரியாக தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொகுதி, வாக்குகள் ...

1977 நாடாளுமன்றத் தேர்தல்

21 சூலை 1977 தேர்தலில் தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் முதல்தடவையாகப் போட்டியிட்டது, ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. தவிகூ 6.40% வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. வட மாகாணத்தின் அனைத்து 14 இடங்களையும் அது கைப்பற்றியது.

தொகுதி வாரியாக தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொகுதி, வாக்குகள் ...

1989 நாடாளுமன்றத் தேர்தல்

தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியாவின் பின்னணியில் இயங்கிய துணை இராணுவக் குழுக்களான ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகியவற்றுடன் இணைந்து 15 பெப்ரவரி 1989 தேர்தலில் போட்டியிட்டது. இக்கூட்டணி 3.40% வாக்குகளைப் பெற்று 10 இடங்களைக் கைப்பற்றியது.

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக கூட்டணி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல்மாவட்டம், வாக்குகள் ...

1994 நாடாளுமன்றத் தேர்தல்

16 ஆகத்து 1994 தேர்தலில் 17-ஆண்டுகால ஐதேக ஆட்சியின் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1.60% வாக்குகள் பெற்று 5 இடங்களை மட்டும் கைப்பற்றியது.

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக கூட்டணி பெற்ற வாக்குகளும் இடங்களும்

மேலதிகத் தகவல்கள் தேர்தல்மாவட்டம், வாக்குகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads