கிராதா அர்ஜுனா (ஊர்வசி சாகசம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராதா அர்ஜுனா (அல்லது ஊர்வசி சாகசம்) 1940-ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய புராணக்கதை தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகேசன், முத்துசுவாமி ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கும் வேடனாக வடிவெடுத்து வந்த சிவனுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டது. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய கோவில் ஒன்று கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருக்கிறது.[2]
Remove ads
திரைக்கதை
அர்ச்சுனன் தன்மீது எவ்வளவு பக்தி வைத்திருக்கிறான் என்பதை பார்வதி தேவிக்கு சிவன் உணர்த்த விரும்பினார். அர்ச்சுனன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கிராதா என்ற வேடனாக சிவன் அவ்விடத்துக்கு வந்தார். அப்போது ஒரு காட்டுப் பன்றி அர்ச்சுனனை நோக்கி பாய்வதைக் கண்டு சிவன் ஒரு அம்பை எய்தார். வில் வீரனான அர்ச்சுனனும் பன்றியை நோக்கி அம்பெய்தினான். மூகாசுரன் என்ற ஒரு அசுரன் தான் காட்டுப்பன்றி உருவத்தில் வந்திருந்தான். காட்டுப் பன்றி இறந்ததும் அசுரன் தன்னுடைய சுய உருவத்தைப் பெற்றான். பன்றியைக் கொன்றது யார் என கிராதா வுக்கும் அர்ச்சுனனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்குமிடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது. ஈற்றில் கிராதாவுக்கே வெற்றி கிடைத்தது.
தோல்வியடைந்து, எழுந்து நிற்கக்கூட வலுவிழந்த அர்ச்சுனன் அங்கிருந்த சேற்றில் ஒரு சிவலிங்கம் செய்து அதற்கு மலர்களால் வழிபாடு செய்தான். அவன் சிவலிங்கத்தின் மீது சொரிந்த பூக்கள் எல்லாம் கிராதாவின் தலையில் வீழ்வதைக் கண்டு அர்ச்சுனன் ஆச்சரியப்பட்டான். கிராதா உண்மையில் சிவன் தான் என அர்ச்சுனன் உணர்ந்து அவரைப் பணிகிறான். சிவனும் அவனது பக்தியை மெச்சி அவன் வேண்டிய பாசுபதாஸ்திரத்தை அவனுக்குக் கொடுக்கிறார்.[2]
Remove ads
நடிகர்கள்
- அருச்சுனனாக எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- பி.பி. ரெங்காச்சாரி
- ஊர்வசியாக திருக்கரைவாசல் சுப்புலட்சுமி
- நாரதராக பவானி கே. சாம்பமூர்த்தி
- சிவபெருமானாக டி. எம். ராமசாமி பிள்ளை
- எம். வி. சுலோச்சனா
- எம். எஸ். மணி
- டி. வி. லட்சுமி
தயாரிப்பு விபரம்
இத்திரைப்படத்துக்கு கிராதா அர்ச்சுனா எனவும் ஊர்வசி சாகசம் எனவும் இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. 1939 ஆம் ஆண்டிலேயே தணிக்கை செய்யப்பட்டு, வெளியிடத் தயாராக இருந்தும், ஏதோ காரணங்களால் தடைபட்டு 1940 ஆம் ஆண்டில் வெளியானது. மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் தம்பியும் சிறந்த கருநாடக இசை வித்துவானுமாகிய எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி அர்ச்சுனனாக நடித்தார். நாடக மேடைகளில் புகழ்பெற்ற இசை நடிகனாக விளங்கிய அவர், திரைத்துறையிலும் வந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பாடி நடித்தார். 1934 ஆம் ஆண்டு வெளியான பாமா விஜயம் திரைப்படத்தில் கிருஷ்ணராகத் தோன்றி நடித்திருந்தார்.
அர்ச்சுனனின் தவத்தைக் கலைப்பதற்கு இந்திரனால் அனுப்பப்பட்ட தேவலோக நடன மங்கையாக திருக்கரைவாசல் சுப்புலட்சுமி தோன்றி நடித்தார்.
இத்திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. (பிற்காலத்தில் கல்யாண பரிசு போன்ற திரைப்படங்களைத் தயாரித்த பிரபல வீனஸ் பிக்சர்ஸ் வேறு நிறுவனமாகும்.) இத்திரைப்படத்தை இயக்கியவர்களில் ஒருவரான ஜி. ராமகேசன் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் நிறுவப்படக் காரணமாக இருந்தவர்களில் ஒருவராவார். இவர் இந்த ஒரே திரைப்படத்தை மட்டும் இயக்கியிருந்தார். மற்ற இயக்குநரான முத்துசுவாமி ஐயர் பின்னர் முருகதாசா என்ற பெயரில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தின் பிரதிகளோ அல்லது ஒளிப்படங்களோ இப்போது கிடைக்கவில்லை. ஆகவே திரைப்படம் பற்றிய முழுத் தகவலும் பெற முடியவில்லை.[2]
பாடல்கள்
கருநாடக இசை வித்துவான் பவானி கே. சாம்பமூர்த்தி இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட ஆரம்ப காலங்களில் இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். இத்திரைப்படத்தில் நாரதராக நடித்தார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads