குட்வுட் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

குட்வுட் நடவடிக்கை
Remove ads

குட்வுட் நடவடிக்கை (Operation Goodwood) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

விரைவான உண்மைகள் குட்வுட் நடவடிக்கை, நாள் ...

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு மாதங்கள் தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையால் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இழப்புகளை ஈடு செய்வதில் ஜெர்மானியர்களால் நேச நாடுகளுக்கு இணையாகச் செயல்பட முடியவில்லை என்பதால், நார்மாண்டியில் அவர்களது நிலை வலுவிழந்து வந்தது. கான் நகரைக் கைப்பற்ற இயலாமை நார்மாண்டியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற நேச நாட்டு உத்தியாளர்கள் செய்திருந்த திட்டத்தினைக் கால தாமதப்படுத்தியது. கான் சண்டையினை முடிவுக்குக் கொண்டுவர இறுதிகட்ட முயற்சியாக நேசநாட்டுப் படைகள் குட்வுட் நடவடிக்கை மற்றும் அட்லாண்டிக் நடவடிக்கையைத் தொடங்கின. முன்னதில் பிரிட்டானிய 1வது கோர் கான் நகரின் கிழக்கிலும் பின்னதில் கனடிய 2வது கோர் மேற்கிலும் தாக்கின. ஜூலை 18ம் தேதி தொடங்கிய இத்தாக்குதல் இரண்டு நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்தது. பிரிட்டானியப் படைகள் ஜெர்மானிய முன்னணி நிலைகளை ஊடுருவி 7கிமீ வரை முன்னேறினாலும், கான் நகரத்தை அவைகளால் கைப்பற்ற இயலவில்லை. இந்நிலையில் நார்மாண்டியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் கோப்ரா நடவடிக்கையைத் தொடங்கியதால் கான் மீதான பெருந்தாக்குதல்கள் கைவிடப்பட்டன. அமெரிக்கப் படைகள் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கியது கான் நகரின் முக்கியத்துவத்தை நீக்கி விட்டது. இதனால் இரு மாதங்களாக அங்கு நடைபெற்று வந்த கடும் சண்டை ஓயத் தொடங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கான் நகரம் முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமானது.

குட்வுட் நடவடிக்கையின் இலக்கு என்ன என்பது இந்நாள் வரை சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. கான் நகர் முழுவதையும் கைப்பற்றுவது இலக்கு என்று பிரிட்டானியத் தளபதி ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கொமரி முதலில் அறிவித்தார். ஆனால் பின்னர் நினைத்த இலக்குகளை அடைய முடியவில்லை எனறானவுடன், கான் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகளை கோப்ரா நடவடிக்கையை எதிர்க்கவியலாமல் கானிலேயே முடக்குவது தான் இதன் இலக்கு என்று மாற்றிவிட்டார். எனவே கீழ்நிலை உத்தியளவில் குட்வுட் நடவடிக்கை தோல்வியென்றாலும், மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டுப் படைகளுக்கு அது வெற்றியே. கானைப் பாதுக்காக்க கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஜெர்மானியர்களால் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அங்கிருந்து தொடங்கிய பிரான்சின் உடபகுதி மீதான அமெரிக்கத் தாக்குதல் எளிதில் வெற்றி பெற்றது

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads