கெட்டிசுபெர்க்கு உரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெட்டிசுபெர்க்கு உரை (Gettysburg Address) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனால் கெட்டிசுபெர்க்கு தேசியக்கல்லறைத் தோட்டத்தில் ஆற்றிய புகழ்பெற்ற உரையாகும். இது அமெரிக்க வரலாற்றிலேயே தலைசிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[4] அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கெட்டிசுபெர்க்கு போர்க்களத்தில் அமெரிக்க ஒன்றியப் படைகள் பிரிவினைப் படைகளான கூட்டமைப்புப் படைகளை முறியடித்து நான்கரை மாதங்கள் கழித்து, நவம்பர் 19, 1863 அன்று கெட்டிசுபெர்க்கு தேசிய கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்குப் படைக்கும் நிகழ்ச்சியில் இந்த உரையாற்றினார்.


பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் வாழ்த்துரை சொல்ல இரண்டாம் நிலைப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த அதிபர் லிங்கன் மிகவும் அக்கறையுடன் செதுக்கிய இந்தப் பேச்சு, அமெரிக்க நாட்டின் அடிப்படை நோக்கம் பற்றி எடுத்துரைக்கும் பேருரைகளில் தலையாயனவற்றில் ஒன்றாகக் கருதப்பட்டு இன்றும் மக்களை வழிநடத்தும் பேச்சாகப் போற்றப்படுகிறது. இரண்டே நிமிடங்களில் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலைப் பறைசாற்றத்தில் வலியுறுத்தப் பட்டிருக்கும் மாந்த சமத்துவக் கொள்கைகளை வலியுறுத்தினார்.[5] மேலும் நாட்டை அலைக்கழிக்கும் பிரிவினைச் சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்தைக் காக்கவே உள்நாட்டுப்போர் புரிய வேண்டியதென்று முழங்கினார்.[6] இந்தச் சிக்கலில் எட்டிய வெற்றி அனைத்து குடிமக்களுக்கும்[7] உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டும்[7]"ஒரு புதிய விடுதலைக்கு,"[8] வித்திட்டுள்ளதாக அறிவித்தார். லிங்கன் மேலும் உள்நாட்டுப் போர் அமெரிக்க ஒன்றியத்தைக் காப்பாற்ற நிகழ்ந்த போராட்டமல்லாது மாந்த சமத்துவக் கொள்கைக்கான போராட்டமாகவும் விவரித்தார்.[5]
1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப் புரட்சிப் போரை நினைவுக்கூறுமுகமாக — தற்போது புகழ்பெற்ற சொற்களாக விளங்கும் "நான்கு இருபதுடன் ஏழாண்டுகளுக்கு முன்பு"("Four score and seven years ago") என்ற முதற்சொற்களுடன் இந்த உரை தொடங்குகிறது. இதில் உள்ள "ஸ்கோர்" (score) என்ற ஆங்கிலச் சொல் இருபது என்பதற்கானப் பழைய ஆங்கிலச்சொல். இந்த உரையில் ஐக்கிய அமெரிக்காவின் நிறுவற் கோட்பாடுகளை உள்நாட்டுப் போரின் சூழமைவில் தொடர்புபடுத்தி ஏன் அப்போது நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப்போரால் அந்தக் கோட்பாடுகள் நசிந்து போகக்கூடும் என்று அவையோருக்கு நினைவூட்டினார். அந்தக் கோட்பாடுகளைக் காக்கப் போராடி கெட்டிசுபெர்க்குப் போர்க்களத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தைப் போற்றினார். மேலும் கேட்போரிடம் அமெரிக்காவின் சார்பாளர் மக்களாட்சி தழைத்திருந்து உலகிற்கு ஒளிவிளக்காக விளங்கத் தொடர்ந்து போராட வேண்டுமென்று வலியுறுத்தினார். பத்தே சொற்றொடர்கள் கொண்ட உரைக்கு முத்தாய்ப்பாய்
போர்க்களத்தில் உயிர்துறந்தவர்கள் வீணாக மடிந்திராமலிருக்க - இந்த நாடு, கடவுளின் திருவடியில், புதியதொரு வீடுபேறு பெற்று - மக்களுக்கான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் அரசு அழியாது என்றும் புவிமிசை இருக்கும் (that these dead shall not have died in vain — that this nation, under God, shall have a new birth of freedom — and that government of the people, by the people, for the people, shall not perish from the earth)
என்று கூறிப் பேச்சை நிறைவு செய்தார். அந்தக் கடைசிச் சொற்கள் இன்றும் மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிநாதமாய் உலகெங்கும் மேற்கோள் காட்டப்படுகிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.

Remove ads
பின்புலம்

கெட்டிசுபெர்க்கு போர்க்களத்தில் ஜூலை 1 முதல் 3 வரை நடந்த சண்டைக்குப் பிறகு, களத்தில் வீழ்ந்த ஒன்றியப் படைவீரர்களை மீண்டும் புதைக்கும் பணி அக்டோபர் 17 அன்று தொடங்கியது. நவம்பர் 19, 1863 அன்று கெட்டிசுபெர்க்கு தேசிய கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்குப் படைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த குழு நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றும் பொறுப்பை எட்வர்டு எவரெட் என்பாருக்குக் கொடுத்தது. குழுவின் உறுப்பினர் டேவிட் வில்ஸ் அமெரிக்க அதிபர் லிங்கனை நிகழ்ச்சிக்கு அழைத்தார் : "பேருரைக்குப் பின்னர் நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையில் கல்லறைத் தோட்டத்தைப் படைவீரர்களைப் புதைக்கும் புனிதப் பணிக்கென்று வழங்க நீங்கள் தக்க கருத்துகள் சிலவற்றை உரைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது."[9] லிங்கனுக்கு முன் சொற்பொழிவாற்றிய எட்வர்டு எவரெட், அந்த நிகழ்ச்சியைப் பற்றி 1864 இல் எழுதிய நூலில் லிங்கனின் பேச்சின் ஒரு படியையும் சேர்த்தார்.
தலைநகர் வாஷிங்டனிலிருந்து தொடர்வண்டியில் கெட்டிசுபெர்க்குக்கு வரும்போதே அதிபர் லிங்கனுக்கு உடல்நலம் இல்லாமல் இருந்திருக்கிறது. அப்போது அவருக்கு மிதமான அம்மை நோய் தொற்றியிருக்கலாம் என்று அவர் உடல் அறிகுறிகளை மற்றவர்களும் பதிவு செய்ததை வைத்துத் தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[10]
Remove ads
நிகழ்ச்சி நிரலும் எவரெட்டின் "கெட்டிசுபெர்க்கு சொற்பொழிவும்"

கல்லறைத்தோட்டப் படையல் விழாக்குழுவின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
இசை, பர்க்ஃபெல்டு இசைக்குழு[11] ("Homage d'uns Heros" by Adolph Birgfeld)
இறைவணக்கம், ரெவரெண்டு தாமசு ஸ்டாக்டன், இறையியல் முனைவர்
இசை, அமெரிக்க மெரைன் பாண்டு வாத்தியக் குழு ("Old Hundred"), directed by Francis Scala
சொற்பொழிவு மாண். எட்வர்டு எவரெட் ("கெட்டிசுபெர்க்கு போர்க்களச் சண்டைகள்")
இசை, இறைவாழ்த்து ("நேர்த்திக்கடன் மந்திரம் "Consecration Chant") இயற்றியவர்: பி. பி. பிரெஞ்ச், இசையமைப்பு: வில்லியம் ஹோர்னர், பாடல்: பால்டிமோர் கிளீ குழு
வழங்கல் உரை, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
இரங்கற்பா ("Oh! It is Great for Our Country to Die", இயற்றியவர் ஜேம்ஸ் பெர்சிவல், இசை ஆல்பிரெட் டிலானி, பாடியவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட கொயர் இசைக்குழுவாழ்த்துரை ரெவரெண்டு ஹென்றி பாகர், இறையியல் முனைவர்
கெட்டிசுபெர்க்கில் லிங்கன் ஆற்றிய உரையை ஆங்கிலப் பொதுக்கூட்டப் பேருரைகளின் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இன்று எல்லோரும் கொண்டாடினாலும் நிகழ்ச்சியில் இரண்டு மணி நேரம் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டவர் மாண்பு மிகு எட்வர்டு எவரெட் தான். அவருடைய 13,607 சொற்கள் கொண்ட சொற்பொழிவு புத்தக வடிவில் கிடைத்தாலும் அதைப் படிப்பவர்கள் வெகு சிலரே.[12]
அந்தக் காலத்தில் கல்லறைத்தோட்டத்துப் படையல் நிகழ்ச்சிகளில் அவ்வளவு பெரிய சொற்பொழிவுகள் வழக்கமாக இருந்தன. அப்படிப்பட்ட சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஒன்றியத்தின் குறிக்கோள்களையும் கல்லறைத்தோட்டத்தையும் பிணைத்துப் பேசின.[13]
Remove ads
லிங்கன் உரையின் கருத்தூற்றுகள்
கெட்டிசுபெர்க்கில் லிங்கன் என்ற நூலில் கேரி வில்ஸ் லிங்கனின் பேச்சுக்கும் பண்டைய கிரேக்க மரபினரான பெரிக்ளிசின் பெலோபொன்னீசியன் போரின் இரங்கற் பேருரைகளுக்கும் பல ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார். பெரிக்ளிசின் பேச்சும் லிங்கனின் பேச்சைப் போலவே:
- நீத்தார் பெருமை - வணக்கத்துக்குரிய முன்னோர்களுக்கு நன்றி பாராட்டித் தொடங்குதல்
- இறைமாட்சி - நாடு மக்களாட்சியில் உறுதியாய் இருப்பதன் தனித்தன்மையைப் புகழ்தல்
- படைமாட்சி - நாட்டுக்காக போரில் உயிர்துறந்தவரின் ஈகையைப் போற்றுதல்
- படைச்செருக்கு - உயிரோடிருப்பவர்களை நாட்டுக்காகத் தொடர்ந்து போராட ஊக்குவித்தல்[14][15]
ஆனால், ஆதாம் காப்நிக் நியூயார்க்கர் இதழில் இதை மறுக்கிறார். லிங்கனுக்கு முன் பேசிய எவரெட்டின் சொற்பொழிவு நேரடியாகவே ஐரோப்பிய மரபிலக்கியத்தைச் சுட்டிப் பேசியது போல் லிங்கனின் பேச்சு மரபிலக்கியத்தைத் தொடவேயில்லை என்கிறார். லிங்கனின் மற்றப் பேச்சுகளிலும் ஐரோப்பிய மரபிலக்கியத் தொடர்புகளைக் காண்பது அரிது. ஆனால், லிங்கனின் பேச்சுகள் விவிலியத்தில் தோய்ந்திருக்கும். ஜேம்ஸ் மன்னரின் விவிலியத்தின் மொழியை லிங்கன் கரைத்துக் குடித்திருந்தார். அரசமைப்புச் சட்டத்தின் நுட்பமான கருத்தையும் விவிலியத்தோடு தொடர்பு படுத்திப் பேச வல்லவர் லிங்கன். [16]

மக்களாட்சி பற்றி லிங்கன் சொன்ன "மக்களுக்கான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் அரசு" என்ற கருத்தின் மூலத்தைப் பற்றிப் பல ஆய்வாளர்களர் எண்ணற்ற கருதுகோள்களை முன் வைத்திருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு தேடிப்பார்த்தாலும் இந்தக் கருத்து விவிலியத்தின் 1384 ஆங்கில மொழிபெயர்ப்பில் இல்லை என்பது உறுதி.[17]
ஆனால், அடிமை முறையை அழித்தொழிக்கப் போராடிய மாசச்சூசெட்ஸ் கிறித்தவப் போதகர் தியடோர் பார்க்கரின் எழுத்துகளில் இதே கருத்து இருந்திருக்கிறது. [18] [19]
மேற்சான்றுகள்
நூற்தொகுப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads