கேதீஸ் லோகநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேதீஸ் லோகநாதன் (Kethesh Loganathan 1952 – ஆகத்து 12, 2006) இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் இலங்கை மோதல் மற்றும் அமைதி பகுப்பாய்வுப் பிரிவின் (SCOPP) பிரதிச் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் 2006 ஆகத்து 12 இல் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது படுகொலைக்கு இவ்வியக்கம் உரிமை கோரவில்லை.[1]
Remove ads
கல்வி
யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த லோகநாதன் கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை செல்லையா லோகநாதன் இலங்கை வங்கி பொது முகாமையாளராகப் பணியாற்றியவர். கேதீசு லோகநாதன் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் சென்னை சென்னை லயோலா கல்லூரியிலும் கல்வி கற்றார். அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் நெதர்லாந்து டென் ஹாக்கில் சமூகக் கற்கைகளுக்கான கல்விக்கழகத்திலும் உயர்கல்வி கற்று அபிவிருத்திக் கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
Remove ads
அரசியல் செயற்பாடுகள்
பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய லோகநாதன் யாழ்ப்பாணம் மார்கா கல்விக்கழகத்தில் சமூக அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1983 இல் ஈழப் போர் தொடங்கியதை அடுத்து, இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற போராளிக் குழுவில் இணைந்தார். 1994 இல் இக்குழுவில் இருந்து விலகினார். இவர் ஊடகவியலாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். இவர் பாக்கியசோதி சரவணமுத்துவுடன் இணைந்து மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற பெயரில் மதியுரையகம் ஒன்றை ஆரம்பித்து 2006 வரை அதன் இயக்குநர் சபையில் இருந்து பணியாற்றினார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். 2006 மார்ச் மாதத்தில் இலங்கை அரசின் அமைதிக்கான செயலகத்தின் பிரதிச் செயலாளராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார்.
Remove ads
படுகொலை
லோகநாதன் 2006 ஆகத்து 12 அன்று அவரது வீட்டுக்கு வெளியே புலனாய்வுத்துறை அதிகாரி என அடையாளம் காட்டிய ஒருவரால் சுடப்பட்ட நிலையில், களுபோவிலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார்.[3][4][5] மனித உரிமைகள் கண்காணிப்பகம்,[6] யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு[1] போன்ற மனித உரிமை அமைப்புகள் விடுதலைப் புலிகளை இக்கொலைக்கு குற்றம் சாட்டின.[7][8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads