கோபாலகிருஷ்ண பாரதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபாலகிருஷ்ண பாரதி (1811 - 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தஞ்சாவூரில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் தியாகராஜ சுவாமியின் சம காலத்தவர் ஆவார். பாரதியின் தந்தை ராமசுவாமி பாரதி ஒரு பாடகராய் இருந்தார். கோபாலகிருஷ்ணர் அத்வைதம், யோக சாத்திரம் போன்றவற்றை மாயவரத்தில் ஒரு குருவிடம் இருந்து கற்றார். உலக வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபடாவிட்டாலும் தன்னளவில் இவர் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்தார். குடும்பப் பின்னணியும் இசையைச் சார்ந்தே இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டார். தானே பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இவருக்கு வந்தது. அவர் காலத்தில் இருந்த மற்ற இசைப் பாடகர்களின் கச்சேரிகளையும் அடிக்கடி கேட்டுத் தன் இசை அறிவை மேலும் மெருகேற்றிக்கொண்டார்.[1].
அத்வைத சித்தாந்தத்தை ஒட்டியே இவர் பாடிய பல கிருதிகள் ஏனையோரால் பாடப்பட்டு இவர் காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. பல பாடகர்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை இயற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டு பாடுவதுண்டு. இவர் தன் பாடல்களில் கடைசியில் தன் பெயரான கோபாலகிருஷ்ணா வரும்படியாக இயற்றி வந்தார்[1]. இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் ஒரு சங்கீத கதா காலட்சேபமாக இவர் காலத்திலும், அதற்கு அப்பால் இன்று வரையிலும் நிலை பெற்று இருக்கிறது.
நந்தனார் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இதில் உள்ள இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை எனச் சொல்லி இந்த நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார். பின்னால் கோபாலகிருஷ்ண பாரதியார் நடையாக நடந்து, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ. வே. சாமிநாதையர் தன்னுடைய என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார். பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற தஞ்சாவூர் பாலசரஸ்வதி இவரின் குறிப்பிட்ட சில பாடல்களைத் தன் அபிநயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்[1].
Remove ads
நந்தனார் திரைப்படம்
நந்தனார் சரித்திரத்தை ஒட்டி மூன்று திரைப்படங்கள் அந்நாட்களில் எடுக்கப்பட்டன. எம். எம். தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்த நந்தனார் என்னும் திரைப்படம் 1942 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்போது விடுதலைப் போராட்ட நாட்களாகவும் இருந்த காரணத்தால் தீண்டாதவர் குலத்தில் பிறந்த நந்தனாரைக் கதாநாயகராய்ப் போட்டு எடுத்த இந்தப் படத்தை மகாத்மா காந்தி தன் சீடர்களுடன் பார்த்து மனம் உருகினார் என்று சொல்லப்படுகிறது[1].
Remove ads
இயற்றிய பாடல்களின் பட்டியல்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads