விருப்பாச்சி கோபால்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

விருப்பாச்சி கோபால்
Remove ads

கோபால் நாயக்கர் (இறப்பு: 20, நவம்பர், 1801[1]) தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் திண்டுக்கல்பழநிக்கு நடுவே உள்ள விருப்பாச்சி என்ற ஊரை அன்றைய நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர்.

Thumb
கோபால் நாயக்கர்

ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாச்சி பகுதியில் அமைந்துள்ளது.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இன்றைய திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் - பழநிக்கு செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரில் கி.பி.1725 இல் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரய்யா நாயக்கர் - காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் இவர் இயற்பெயர் (திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர்) அல்லது திருமலை கோபால சின்னய்யா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையப்பட்டுகளில் ஒன்றான விருப்பாச்சியின், 19 ஆவது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்.

குடும்பம்

கோபால் நாயக்கருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும் முத்துவேல் நாயக்கர், பொன்னப்பா நாயக்கர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

விருப்பாச்சி பெயர் காரணம்

நங்காஞ்சிப் பகுதிக்கு வந்த விசய நகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் அப்பகுதி மக்களின் வீரத்தைப் பாராட்டி தனது மனைவியின் பெயரான ’விருப்பாச்சி’யை அவ்வூரின் பெயராக வைத்தார். அது முதல் நங்காஞ்சி என்ற ஊர் விருப்பாச்சி என மாறியது.

Remove ads

கூட்டமைப்பு

விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில், புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர். மருதுபாண்டியருடனும் (அண்டை தேசத்து) கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்பு என்றழைக்கப்பட்டது, மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச் சீமையும், அதேபோல் கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூந்தாசிவாக்கும் கிருட்டிணப்பநாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் கூட்டுப்படை மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் கூட்டுபடையினர் இயங்கினர். ஈரோட்டு மூதார்சின்னனும், கானிசாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லட்சுமி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தங்களது போர் வீரர்களைக் கோபால நாயக்கருக்குக் கொடுத்து உதவி வந்து உள்ளனர் . பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டமைப்பு தலைமையில் மக்கள் திரளாகப் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது.

முதல் போர்

கி.பி.1799 மார்ச்சில் கோபால்நாயக்கர் வழி காட்டுதலின் படி மணப்பாறை லட்சுமிநாயக்கர், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர்,மணப்பாறை ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

ஆங்கிலேயர் எச்சரிக்கை

Thumb
செப்புப் பட்டயம்

கி.பி.1799 அக்டோபரில் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட பின் விருப்பாச்சி அரண்மனைக்கு மேஜர் ஐ. ஏ. பானர்மேன் எச்சரிக்கை செப்புப் பட்டயம் ஒன்றை அனுப்பினார். அதில் "கும்பனியருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல் தூக்கிலிட்டு கொல்லப்படுவர்" என்ற செய்தி இருந்தது. தற்போது இடையகோட்டை ஜமீன் அரண்மனையில் இச்செப்புப் பட்டயம் பாதுகாப்பாக உள்ளது.

Remove ads

ஆங்கிலேயரை எதிர்த்தார்

ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார்.

கோவைத் தாக்குதல்

கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர். இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணித் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டார்.

இறுதிப் போர்

Thumb
சத்திரப்பட்டி அரண்மனை

கோவை தாக்குதலுக்குப் பின் கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை முற்றுகையிட்டான். விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச்சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரபட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில் கி.பி.1816 வரை சிறைவைத்தனர். கோபால்நாயக்கர் தலைக்கு அந்த காலத்திலேயே 20,000 ரூபாய் என அறிவித்தனர். பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி.1801செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபாலநாயக்கர் சமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றும் உள்ளது.[2]

கோபால்நாயக்கர் அரண்மனை

Thumb
இடிந்த அரண்மனை

கோபால்நாயக்கரின் அரண்மனையையும், அவரது மனைவிக்காக கட்டிய அந்தப்புரத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். அரண்மனையின் சுவர்களின் அடித்தளம் 45 அடி நீளமுள்ளது மட்டும் இன்றும் உள்ளது. அரண்மனை முன்பு யானை கட்டும் நடு கல், குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கருங்கல் தொட்டி, இன்றும் காணமுடிகிறது.

Remove ads

கள ஆய்வு

கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

Remove ads

நினைவிடம்

Thumb
மணிமண்டபம்

ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாச்சியார்க்கும், ஊமைத்துரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் ,என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட திருமலை கோபால சின்னப்பா நாயக்கருக்குத் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது[3][4][5][6].

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads