சகுந்தலா
பரதப் பேரரசனின் தாயாரும், பௌரவர் குலத் தோன்றலான துஷ்யந்தனின் மனைவியுமாவார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தக் கட்டுரை சாகுந்தலம் கதாபாத்திரம் பற்றியது. இதே பெயரில் தமிழ் திரைப்படம் பற்றி அறிய சாகுந்தலை (திரைப்படம்) ஐப் பார்க்கவும்.



சாகுந்தலா ( Shakuntala ) அல்லது சாகுந்தலை இவர் பௌரவர் குலத் தோன்றலான துசுயந்தனின் மனைவியும் பரதனின் அன்னையுமாவார். இவரது கதை பண்டைய இந்தியக் காவியமான மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பல எழுத்தாளர்களால் நாடகமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாகுந்தலை - துஷ்யந்தனின் கதை, காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக வடிவில் இயற்றப்பட்டது.[1]
Remove ads
புராணக்கதைகள்
ஒருமுறை, விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி அந்தஸ்தைப் பெறுவதற்காக தவமிருக்கத் தொடங்கினார். அவரது தவத்தின் தீவிரம் இந்திரனை பயமுறுத்தியது. விஸ்வாமித்திரர் தனது சிம்மாசனத்தை விரும்புவார் என்று இந்திரன் அஞ்சி அவரது தவத்தை கலைக்க, மேனகை என்ற அரம்பையை அனுப்பினான். மேனகை விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்து அவரை மயக்கினாள். அவரும் தனது காமத்தை கட்டுப்படுத்த முடியாததால் தவத்தை கைவிட்டு மேனகையுடன் சேர்ந்தார். இவருவரும் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், இவை அனைத்தும் இந்திரனின் தந்திரங்கள் என்பதை விஸ்வாமித்திரர் உணர்ந்தார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த விஸ்வாமித்ரர் மேனகையை விட்டுச் சென்றார். மேனகா சொர்க்கத்திற்குத் திரும்புவதற்கு முன் கன்வ முனிவரின் துறவு இல்லத்திற்கு அருகில் குழந்தையை விட்டுச் சென்றாள். கண்வர் சகுந்தல பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார். அதனால் அவளுக்கு "பறவைகளால் காப்பாற்றப்பட்டவள்" என்னும் பொருள்படும் "சகுந்தலா" (சமக்கிருதம்: शकुन्तला / शकुन्तळा) என்னும் பெயரை சூட்டினார்.[2][3]
இதைப் பற்றி மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் கன்வ முனிவர் இவ்வாறு கூறுகிறார்:
निर्जने च वने यस्माचछकुन्तैः परिरक्षिता
शकुन्तळेति नामास्याः कृतं चापि ततो मया
நிர்ஜனே ச வனே யஸ்மாச்சகுந்தலே பரிரக்சித
சகுந்தலேதி நமஸ்யஹ் க்ர்தம் சாபி ததோ மயா
வனத்தின் தனிமையில் சாகுந்தங்களால் (பறவைகளால்) அவள் சூழப்பட்டிருந்தாள்,
எனவே சகுந்தலா (பறவைகளால் காக்கப்பட்டவள்) என என்னால் பெயரிடப்பட்டாள்.
Remove ads
பிறப்பும் குழந்தைப்பருவமும்

சகுந்தலா விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்னும் வானுலகத் தேவமங்கைக்கும் பிறந்தவள் ஆவாள். மாபெரும் முனிவரான விசுவாமித்திரரின் ஆழ்ந்த தவத்திலிருந்து அவரைத் திசைதிருப்பத் தேவர்களின் தலைவனான இந்திரன் அளித்த உத்தரவின்பேரில் மண்ணுலகம் வந்தவள்தான் மேனகை. அவள் தன் நோக்கத்தில் வெற்றிபெற்று அவரால் ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள். பல ஆண்டுகளாக கடுமையான ஆச்சாரத்தால் தான் பெற்ற பலன்களை இழந்துவிட்டதால் கோபமடைந்த விசுவாமித்திரர் அந்தக் குழந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் விலகி தன்னுடைய பணிக்கு திரும்புகிறார். தன்னால் அந்தக் குழந்தையை அவரிடம் விட்டுச்செல்ல முடியாது என்பதையும், மேல் உலகத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததையும் உணர்ந்துகொண்ட பின்னர் புதிதாகப் பிறந்த சகுந்தலாவை மேனகா காட்டிலேயே விட்டுச்செல்கிறாள்.[4] பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படும் சகுந்தலாவை கன்வ முனிவர் கண்டெடுக்கிறார். இதனால் அவளுக்கு அவர் சகுந்தலா என்று பெயரிடுகிறார்.[5] அக் குழந்தையை இந்தியாவிலுள்ள (தற்போதைய உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கோத்வாரா நகரத்திலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும்) இமய மலையின் சிவாலிக் மலைகளால் சூழப்பட்ட மாலினி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள தன்னுடைய ஆசிரமத்திற்கு எடுத்துச்செல்கிறார். இந்த செய்தியை காளிதாசன் மாலினி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள கன்வ ரிஷி ஆசிரமத்தை விவரிக்கும் தனது புகழ்பெற்ற அபிஞான சாகுந்தலம் என்ற காப்பியத்தில் வலுப்படுத்துகிறார்.
Remove ads
துசுயந்தனுடனான சந்திப்பு
மன்னர் துசுயந்தன் தன்னுடைய படையினருடன் காட்டில் பயணித்த போது சகுந்தலாவை சந்திக்கிறார். தன்னுடைய அம்பினால் காயமடைந்த மானைத் தேடி ஆசிரமத்திற்கு வரும் அவர், சகுந்தலா மானிற்கு மருந்திடுவதை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். அவர் அந்த மானைக் காயப்படுத்தியற்காக மன்னி்ப்பு கேட்டுக்கொண்டு ஆசிரமத்தில் கொஞ்ச நாட்களை செலவிடுகிறார். இருவரும் காதல் வயப்பட்டு ஆசிரமத்திலேயே காந்தர்வ திருமணம் செய்துகொள்னறனர். தனது நாட்டிற்கு திரும்பும் முன் சில நாட்களில் தான் விரைவிலேயே திரும்பி வருவதாகச் சத்தியம் செய்துவிட்டு தங்களுடைய காதலின் அடையாளச் சின்னமாக சகுந்தலாவிடம் ஒரு அரச மோதிரத்தைக் கொடுத்து இராணியாக தனது அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் செல்கிறார்.[6]
துர்வாசரின் சாபம்

நாள்தோறும் சகுந்தலா தன்னுடைய கணவனை நினைத்து கனவு காண்கிறாள். இதனால் கவனம் சிதறுகிறது. ஒருநாள் சக்தி மிகுந்த முனிவரான துர்வாசர் ஆசிரமத்திற்கு வருகிறார். ஆனால் துசுயந்தனைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகளின் காரணமாக சகுந்தலா அவருக்கு உரிய வரவேற்பு அளிக்க தவறிவிடுகிறாள். இந்த சிறிய அவமதிப்பால் கோபமடைந்த முனிவர் அவள் கனவு காணும் நபர் அவளை மறந்தேவிடுவார் என்று சபிக்கிறார். அவர் கோபத்தோடு புறப்படுகையில் சகுந்தலாவின் தோழியர்களுள் ஒருத்தி தன்னுடைய தோழியின் கவனச்சிதறலுக்கான காரணத்தை அவருக்கு விரிவாக எடுத்துரைக்கிறாள். தன்னுடைய மிதமிஞ்சிய கோபத்தில் அவ்வளவு நியாயமில்லை என்பதை உணர்ந்த மாமுனி தன்னுடைய சாபம் நீங்க பரிகாரம் சொல்கிறார். சகுந்தலாவை மறந்துவிட்ட அந்த நபர், அவர் அவளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கிய அடையாளச் சின்னத்தை காட்டினால் மட்டுமே அவளை குறித்த நினைவைப் பெறுவார் என்று கூறிவிடுகிறார்.

காலம் செல்கிறது, சகுந்தலாவிற்கு துஷ்யந்தன் ஏன் இன்னும் தன்னைத் தேடி வரவில்லை என்று தெரியவில்லை, முடிவில் தன்னுடைய தந்தை மற்றும் சிலருடன் தலைநகரத்திற்கு செல்ல தீர்மானிக்கிறாள். போகும் வழியில் அவர்கள் ஒரு சிறிய பரிசலில் ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது, ஆற்றின் அடர்நீலத்தால் கவரப்பட்ட சகுந்தலா தண்ணீரில் தன்னுடைய கையை விடுகிறாள். அவளுடைய மோதிரம் அவளுக்குத் தெரியாமலேயே விரலில் இருந்து நழுவிவிடுகிறது.
துசுயந்தனின் அரண்மனைக்கு வந்த பின்னர் சகுந்தலா மிகுந்த கவலையடைகிறாள். தன்னுடைய கணவன் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாததையும், தன்னைக் குறித்த எதையும் அவரால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாததையும் கண்டு திகைக்கிறாள்.[7] தான் அவருடைய மனைவிதான் என்று அவருக்கு நினைவுபடுத்த அவள் முயன்றாலும், மோதிரம் இல்லாமல் துசுயந்தனால் இவளை அடையாளம் காண இயலவில்லை. அவமானமடைந்த அவள் காட்டிற்குத் திரும்பி, தன்னுடைய மகனைக் கூட்டிக்கொண்டு காட்டின் ஒரு பகுதியில் குடியேறுகிறாள். இவளுடைய மகன் பரதன் வளரும்வரை அங்கேயே தன்னுடைய காலத்தை செலவிடுகிறாள். காட்டு விலங்குகளால் மட்டுமே சூழப்பெற்ற பரதன் பலம்பொருந்திய இளைஞனாகவும், புலிகள் மற்றும் சிங்கங்களின் வாய்களைப் பிளந்து அவற்றின் பற்களை எண்ணிவிடும் திறன்கொண்டவனாகவும் வளர்கிறான்.[8][9]
Remove ads
அங்கீகாரம்

அதேசமயத்தில், ஒரு மீனவன் தான் பிடித்த மீனின் வயிற்றில் அரச மோதிரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறான். அரச முத்திரையை அடையாளம் கண்ட அவன அந்த மோதிரத்தை அரண்மனைக்கு எடுத்துச்செல்கிறான். அதைப்பார்த்தவுடன் துசுயந்தனுக்கு தன்னுடைய மனைவி குறித்த நினைவுகள் திரும்பி வருகின்றன. அவன் உடனடியாக அவளைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்து அவளுடைய தந்தையின் ஆசிரமத்திற்கு வருகிறான். அங்கு அவள் நீண்டகாலமாகவே இல்லை என்பதை அறிகிறான். தொடர்ந்து அடர்ந்த காட்டிற்குள் தன்னுடைய மனைவியைத் தேடும்பொழுது காட்டில் ஒரு ஆச்சரியமான காட்சியைக் காண்கிறான்: ஒரு இளைஞன் சிங்கத்தின் வாயை அகலத் திறந்து அதன் பற்களை எண்ணுவதில் மும்முரமாக இருக்கிறான். அவனுடைய அற்புதமான துணிச்சலாலும் வலிமையாலும் ஆச்சரியமுற்ற அரசர் அந்தப் இளைஞனைப்ப் பாராட்டி அவனுடைய பெயரைக் கேட்கிறான். இளைஞன் தன்னுடைய பெயர் பரதன் என்றும், மன்னன் துசுயந்தனின் மகன் என்றும் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைகிறான். அவ்விளைஞன் துசுயந்தனை சகுந்தலாவிடம் கூட்டிச்செல்கிறான். இவ்வாறு அந்தக் குடும்பத்தினர் ஒன்றிணைகின்றனர்.
மகாபாரதத்தில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் இந்தக் கதை சொல்லப்படுகிறது, சகுந்தலையை துசுயந்தன் நினைவிற்கு கொண்டுவர தவறுவது உண்மையில் இந்த திருமணத்தின் நேர்மைத்தன்மை குறித்து வதந்திகள் பரவலாம் என்று அச்சம்கொள்வதால் தன்னுடைய உண்மையான மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்து திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இக்கதையின் ஒரு மாற்று வடிவம் என்னவெனில், துசுயந்தன் சகுந்தலாவை அடையாளப்படுத்த தவறிய பின்னர் அவளுடைய தாயாரான மேனகை சொர்க்கத்திற்கு சகுந்தலாவைக் கூட்டிச்செல்கிறார். அங்கு அவர் பரதனை பெற்றெடுக்கிறார். துசுயந்தன் தேவர்களுடன் போரிட வேண்டிய நிலை வருகிறது. அதில் அவர் வெற்றி பெறுகிறார். அதற்கான பரிசாக தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் சேர்வது பரிசாக வழங்கப்படுகிறது. ஒரு இளைஞன் சிங்கத்தின் பற்களை எண்ணுகின்ற காட்சி ஒன்றை அவர் காண்கிறார். அவ்விளைஞனின் கைக் கவசம் அவன் கையிலிருந்து நழுவி விழுந்துவிடுகிறது. பரதனின் தாய் அல்லது தந்தையால் மட்டுமே அவனுடைய கையில் அதை மீண்டும் பொருத்த முடியும் என்று தேவர்களால் துசுயந்தனுக்கு சொல்லப்படுகிறது. துசுயந்தன் அதை வெற்றிகரமாக அவனுடைய கையில் பொருத்திவிடுகிறார். இதனால் குழப்பமடைந்த பரதன், அரசனைத் தன் தாய் சகுந்தலாவிடம் அழைத்துச் சென்று, இந்த மனிதன் தன்னைத் தன் தந்தை என்று கூறுவதாகக் கூறினான். சகுந்தலையும் துசுயந்தனே பரதனின் தந்தை என்று கூறுகிறாள். இவ்வாறு அந்தக் குடும்பத்தினர் சொர்க்கத்தில் ஒன்றுசேர்கின்றனர். அத்துடன் அவர்கள் பூவுலகிற்கு திரும்பிவந்து பாண்டவர்கள் பிறப்பிற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு ஆட்சி செய்கின்றனர்.
Remove ads
திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
1940ஆம் ஆண்டு மறைந்த திருமதி ம. ச. சுப்புலட்சுமி மற்றும் ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய இசை மேதைகளின் நடிப்பில், சகுந்தலாவின் முதல் திரைத்தழுவாக்கம் உருவானது. பின்னர் 1961ஆம் ஆண்டில் பூபேன் அசாரிகாவின் அசாமிய திரைப்படமான சகுந்தலா வெளியானது. இது குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன் விமரிசன ரீதியான பாராட்டுதலையும் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சகுந்தலா இதே பெயரில் மலையாளத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கே.ஆர்.விஜயாவும் பிரேம் நசீரும் முறையே சகுந்தலாவாகவும் துசுயந்தனாகவும் நடித்திருந்தனர்.
'சகுந்தலா' எனப்படும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேஹா மேத்தா மற்றும் கௌதம் ஷர்மா தலைப்பு கதாபாத்திரங்களில் நடித்திருக்க ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு தற்போது ஸ்டார் பிளஸ்ஸில் காட்டப்பட்டது.
Remove ads
இசைத் தழுவல்கள்
- எர்னஸ்ட் ரையர் (1823-1909), 1838ஆம் ஆண்டில் தியோபில் காதியரின் விவாதத்தின் அடிப்படையில் 'சாகோந்தலா' என்ற இசைப்பாடலை அமைத்திருக்கிறார்.
- கரோலி கோல்ட்மார்க், ஹங்கேரிய இசையமைப்பாளர் (1830-1915): சகுந்தலா ஓவர்ச்சர் ஓபரா.13 (1865)
- ஃபிராங்கோ ஆல்ஃபனோ என்ற இத்தாலியர் 1921 ஆம் ஆண்டில் லா லஜண்டா டி சகுந்தலா (தி லெஜண்ட் ஆஃப் சகுந்தலா ) என்ற பெயரில் முதல் பதிப்பில் ஓபரா அமைத்திருக்கிறார், 1952 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பில் சகுந்தலா என்றே அமைத்திருக்கிறார்.
- அமிதைஸ்டியம் என்ற ஹங்கேரிய இசைக்கலைஞர் "கார்டன் ஆஃப் சகுந்தலா" என்ற பாடலை எழுதியிருக்கிறார், இது அபிலியன் சிடியில் காணக்கிடைக்கிறது.
- சோவியத் இசையமைப்பாளரான செர்கெய் பலசன்யன் சகுந்தலா என்ற இசைப்பாடலை அமைத்திருக்கிறார்.
- ஃபிரான்ஸ் ஷுபர்ட்: சகோந்தலா: இரண்டு காட்சிகள் ஓபரா, டி701 (சி. 1820, முற்றுபெறாதது); கார்ல் அகே ராஸ்மஸனால் நிறைவுசெய்யப்பட்டது (நேரடிப் பதிவு, அக்டோபர் 4, 2006) (சிஏஆர்யுஎஸ் 83218)
Remove ads
மேலும் பார்க்க
- அபிஞான சாகுந்தலம்: காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற சமக்கிருத நாடகம்.
- குந்தலா: சகுந்தலாவோடு தொடர்புடைய நீர்வீழ்ச்சி
- கெமில்லே கிளாடெல் சகுந்தலாவின் உருவச்சிலையை உருவாக்கியிருக்கிறார்
சான்றுகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads