சத்யேந்திரநாத் தாகூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யேந்திரநாத் தாகூர் (Satyendranath Tagore) (1842 சூன் 1 - 1923 சனவரி 9) இவர் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த முதல் இந்தியராவார். இவர் ஒரு எழுத்தாளரும், இசையமைப்பாளரும் மற்றும் மொழியியலாளரும் ஆவா. மேலும் பிரிட்டிசு இராச்சியத்தில் இந்திய சமுதாயத்தில் பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.[1][2] இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் ரவீந்திரநாத் தாகூரின் இரண்டாவது அண்ணன் ஆவார்.
Remove ads
ஆரம்ப காலம்
கொல்கத்தாவின் தாகூர் குடும்பத்தின் ஜோராசங்கோ கிளையைச் சேர்ந்த இரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரரும், துவாரகநாத் தாகூரின் பேரனுமான தேபேந்திரநாத் தாகூரின் இரண்டாவது மகனுமான இவர் வீட்டிலேயே சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் கற்றார். இந்து பள்ளியின் மாணவரான இவர், 1857இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகளில் முதல் தொகுதி மாணவர்களில் ஒரு பகுதியாக இருந்தார். முதல் பிரிவில் இடம் பெற்ற இவர் கொல்கத்தா, மாநிலக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.[1]
அன்றைய வழக்கத்தின்படி, இவர் 1859 ஆம் ஆண்டில் ஞானநந்தினி தேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு, இவரும் கேசப் சுந்தர் சென்னும் தனது தந்தையுடன் இலங்கைக்குச் சென்றனர்.[1][3]
Remove ads
ஆட்சிப் பணி
கிழக்கிந்திய கம்பெனி அதன் நிர்வாகத்தை "ஒப்பந்த ஊழியர்கள்" மூலம் நிர்வகித்தது. இவ்வகை ஊழியர்கள் நிறுவனத்தின் இயக்குநருக்கு விருப்பமானவரே பரிந்துரைக்கப்பட்டு வந்தனர்.[4] நீண்ட காலமாக, இந்தப்பணி ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியர்களுக்கும் சில பதவிகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டன, மேலும் ஒரு போட்டித் தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கிளர்ச்சியைத் தொடர்ந்து, நிர்வாகிகள் 1861இல் நிறுவப்பட்ட இந்திய குடிமைப் பணி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய ஆட்சிப் பணி போட்டித் தேர்வு முறைத் தொடர்ந்தது.
இங்கிலாந்து சென்று ஆங்கிலேயர்களுடன் ஒரு பதவிக்கு போட்டியிடுவது ஒரு கடினமான பணியாக இருந்தாலும், இவரது நண்பர் மனோமோகன் கோசு இவருக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்கினார். மேலும் இருவரும் ஆட்சிப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகவும் தேர்வெழுதவும் 1862 இல் இங்கிலாந்துக்குப் பயணம் செய்தனர்..[2]
சத்யேந்திரநாத் 1863 சூன் மாதம் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது தகுதிகாண் பயிற்சியை முடித்து 1864 நவம்பரில் இந்தியா திரும்பினார்.[2] மனோமோகன் கோசு அத்தேர்வில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அவர் பட்டியலில் அழைக்கப்பட்டார்.[5] சத்யேந்திரநாத் மும்பை மாகாணத்தின் நிர்வாகியாக அனுப்பப்பட்டார். அது இன்றைய மகாராட்டிரா, குசராத் மற்றும் சிந்தின் மேற்கு பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. மும்பையில் நான்கு மாதங்கள் கழிந்த பின்னர், அகமதாபாத்தில் தனது முதல் பணியில் ஈடுபட்டார்.
ஏராளமான நகரங்களுக்கு தனது பணிகளுக்காக, இவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். இவர் வீட்டிலிருந்து நீண்ட காலம் வெளியிலேயே தங்கியிருந்ததால், இவரது குடும்ப உறுப்பினர்கள் இவரைச் சந்தித்து இவருடன் நீண்ட காலம் தங்கினர். இவரது வழக்கமான பார்வையாளர்களில் இவரது தம்பிகள் ஜோதிரிந்திரநாத் , இரவீந்திரநாத் மற்றும் அவரது சகோதரி சுவர்ணகுமாரி தேவி ஆகியோர் அடங்குவர் .[2]
வங்காளத்திற்கு வெளியே இவர் பணி செய்தது பல இந்திய மொழிகளைக் கற்க உதவியது. இவர் பால கங்காதர திலக்கின் கிதாரகசியம் மற்றும் துக்காராமின் அபங்கக கவிதைகளை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார் .[6] இரவீந்திரநாத் தாகூர் துக்காராமின் சில கவிதைகளையும் மொழிபெயர்த்திருந்தார்.[7] சத்யேந்திரநாத் எங்கு பணியிலிருந்தாலும் பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகளில் தீவிர அக்கறை காட்டினார், எ.கா. அகமதாபாத் மற்றும் ஐதராபாத் .[8]
மகாராட்டிரா பிராந்தியத்தில் இருந்தபோது, இவர் பல முன்னணி சீர்திருத்தவாதிகள் மற்றும் பிரார்த்தனா சமாஜ நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் - மகாதேவ் கோவிந்த் ரனதே, காசிநாத் திரிம்பக் தெலங், ராமகிருட்டிண கோபால் பண்டார்கர் மற்றும் நாராயண் கணேஷ் சந்தவர்க்கர் போன்றோர்.[9]
1882 இல் சத்யேந்திரநாத் கர்நாடகாவின் கார்வாரில் மாவட்ட நீதிபதியாக இருந்தார். இவர் சுமார் முப்பது ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணியிலிருந்தார். மேலும் இறுதியாக 1897 இல் மகாராட்டிராவில் சதாராவில் நீதிபதியாக ஓய்வு பெற்றார்.[10]
Remove ads
பெண்கள் விடுதலை
இராசாராம் மோகன் ராய் வங்காளப் பெண்களை "படிக்காத மற்றும் கல்வியறிவற்றவர்களாகவும், சொத்துரிமை இழந்தவர்களாகவும், பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்களாகவும், பர்தாவில் சிறையில் அடைக்கப்பட்டவர்களாகவும்,[11] மேலும் உடன்கட்டை ஏறல் என்ற காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கத்தால் கொலை செய்யப்பட்டவர்களாகவும்" இருப்பதை கண்டறிந்தார்.[12] சத்யேந்திரநாத் பிறந்த நேரத்தில் உடன்கட்டை ஏறுவது தடைசெய்யப்பட்டது (1829 இல்). மேலும் சீர்திருத்த செயல்முறைகளும் தொடங்கியது.
சமூகத்தில் பெண்களின் நிலை இவரை சிறு வயதிலிருந்தே தொந்தரவு செய்தது. இவர் தனது குடும்பத்தில் உள்ள பர்தா அமைப்பு 'நமது தேசத்தை சேர்ந்தது அல்ல. அது முஸ்லிம் நடைமுறைகளின் நகல்' என்று நினைத்தார். இவர் பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டு வந்த இங்கிலாந்துக்கு சென்று வந்ததால் இந்திய சமுதாயத்தில் பெண்களின் ஒப்பீட்டளவில் மோசமான நிலையைப் புரிந்துகொள்ள உதவியது.[2]
இவரது திருமணத்திற்குப் பிறகு, ஞானநந்தினி தேவியியிடம் தனது சிந்தனையை நிறைவேற்ற ஒரு சிறந்த பங்காளியைக் கண்டார். இங்கிலாந்தில் முன்னேறிய சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு இவர் மகிழ்ச்சியடைந்த இவர், தனது மனைவியை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் இவரது தந்தை தேபேந்திரநாத் தாகூர் அதை தடுத்தார்.[2]
இந்தியா திரும்பி, சத்யேந்திரநாத் ஞானநந்தினி தேவியை பம்பாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இந்திய ஆட்சிப் பணியிலிருக்கும் ஆங்கில அதிகாரிகளின் மனைவிகளைப் போல வாழ முயன்றார். இந்த இணை விடுமுறைக்காக ஜோராசங்கோவில் உள்ள மூதாதையர் வீட்டிற்கு திரும்பியபோது, அவர்கள் கொல்கத்தா சமூகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். இவர்கள் அரசு மாளிகையில் (இப்போது ராஜ் பவன் ) ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டனர். அனைத்து பாரம்பரிய விதிகளையும் மீறி, ஞானநந்தினி தேவி தனது கணவருடன் விருந்துக்கு வந்தார். அங்கே அவர் - "நூற்றுக்கணக்கான ஆங்கிலப் பெண்களுக்கு நடுவே ஒரு தனி பெங்காலி பெண்ணாக இருந்தார்." விருந்தில் கலந்து கொண்ட தாகூர் குடும்பத்தின் பதுரியகட்டா கிளையைச் சேர்ந்த பிரசன்னா கூமர் தாகூர், ஒரு குடும்ப உறுப்பினரின் மனைவி இதுபோன்ற திறந்தவெளிக்கு வந்ததைத் தாங்க முடியாமல் உடனடியாக "வெட்கத்திலும் கோபத்திலும்" வெளியேறினார்.[2]
1877 ஆம் ஆண்டில், இவர் ஒரு ஆங்கில தம்பதியினருடன் ஞானநந்தினி தேவியை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அவர் தனது மூன்று குழந்தைகளுடன் சென்றார். இது அந்த நாட்களில் ஒரு தைரியமான பணியாகும். அவர்கள் ஆரம்பத்தில் பிரசன்னா கூமர் தாகூரின் மகன் ஞானேந்திரமோகன் தாகூரின் குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர். ஞானேந்திரமோகன் தாகூரர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஆங்கில வழக்கறிஞராக தகுதி பெற்ற முதல் இந்தியராவார். பின்னர் அவர்கள் பிரைட்டனுக்கு மாறி, அங்கேயே வாழ்ந்தார்கள்.[2]
அதைத் தொடர்ந்து, சத்யேந்திரநாத் இரவீந்திரநாத்தை முதன்முதலாக இங்கிலாந்துக்குச் அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் 1880இல் இந்தியா திரும்பினர். இவர் தனது மனைவியுடன் மட்டுமல்ல, தனது சகோதரிகளிடமும் இவ்வகையான மாற்றங்களை தொடங்குவதற்கு முன்னிலை வகித்தார். இவரது சகோதரி சௌதச்மினி தேவி இவ்வாறு எழுதினார், 'நாங்கள் வண்டிகளில் வெளியே சென்றபோது நாங்கள் சந்தித்த கேலியைப் பற்றி இப்போது சொன்னால் நம்புவது கடினம்.' [2]
இவ்வாறு உயர் மற்றும் நடுத்தர வர்க்க பெண்களை பர்தாவிலிருந்து விடுவிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இது சத்யேந்திரநாத் தாகூரின் ஒரு பெரிய சாதனையாகும்.[2]
ஞானநந்தினி தேவியும் சமுதாயத்திற்கு தனது சொந்த வழிகளில் பங்களித்தார். அவர் வெளியே செல்ல வேண்டியிருந்ததால், புடவை அணியும் பாணியை உருவாக்கினார்.இது இன்று இந்திய பெண்கள் பரவலாக பின்பற்றப்படுகிறது. முறையான உள்ளாடைகளைப் பயன்படுத்துவதையும் அறிமுகப்படுத்தினார்.[2]
ஞானநந்தினி தேவி குழந்தைகளின் விஷயங்களில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொண்டு, குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் பிறந்தநாளைக் கடைப்பிடிப்பது, அவர்களுக்கு பரிசுகளை வழங்குவது மற்றும் அந்த நிகழ்வைக் கொண்டாடுவது போன்ற முறையைத் தொடங்கினார். அவர் 1885ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக பாலாக் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இது பெங்காலி மொழியில் குழந்தைகளுக்கான முதல் பத்திரிகையாக இருக்கலாம். பத்திரிகை இரவீந்திரநாத்தை குழந்தைகளுக்காக எழுத தூண்டியது. அவரது சிசு என்ற புத்தகத்தில் சேர்க்கப்பட்ட பல படைப்புகள் முதலில் பாலக் இதழில் வெளியிடப்பட்டன. இந்த இதழ் ஒரு வருடம் கழித்து பாரதி என்ற குடும்ப இதழுடன் இணைக்கப்பட்டது..[13]
Remove ads
மற்ற நடவடிக்கைகள்
தேசபக்தி
தாகூர் குடும்பம் வலுவான இந்திய தேசபக்தர்களாவர். மேற்கத்திய ஆடை பழக்கங்களைப் பின்பற்றுவதும், இந்திய உயர் சமுதாயத்தில் ஆங்கில மொழியைப் பேசுவதும் பரவலாக இருந்த ஒரு யுகத்தில், தாகூர்கள் இந்திய ஆடைகளை வைத்து வங்காளத்தில் பயிரிடத் தேர்வு செய்தார். பிரிட்சு சமுதாயத்தைக் கொண்டிருப்பதாக அவர் கருதிய நேர்மறையான குணங்களைப் பாராட்டும் அதே வேளையில், ஏற்கனவே இருந்த இந்திய சமுதாயத்தை சீர்திருத்துவதும் வளர்ப்பதும் அவசியம் என்ற கருத்தை சத்யேந்திரநாத் எடுத்துக் கொண்டார்.[2]
இவர் இந்து மேளாவுடன் தொடர்புடைய மக்களில் ஒருவராக இருந்தார். இதன் நோக்கம் சாதாரண இந்தியர்களின் வாழ்க்கையில் தேசபக்தி உணர்வை எழுப்புவதாகும். 1867 ஏப்ரலில் முதல் அமர்வு நடைபெற்றபோது, இவர் மேற்கு இந்தியாவில் இருந்தார். இருப்பினும், இவர் 1868இல் இரண்டாவது அமர்வுக்கு கொல்கத்தாவில் கலந்து கொண்டார். இந்தியாவின் முதல் தேசிய கீதம் என்று பாராட்டப்பட்ட இந்நிகழ்ச்சிக்காக மைல் சபே பாரத் சாந்தன், எக்டன் கஹோ கான் ( ஒன்றிணை, இந்தியாவின் குழந்தைகள், ஒற்றுமையாகப் பாடுங்கள்) என்ற பாடலை இயற்றினார். இதுபோன்ற பல தேசபக்தி பாடல்களையும் எழுதினார்.[2]
பிரம்ம சமாஜம்
சத்யேந்திரநாத் தனது தந்தை தேபேந்திரநாத் மீதும், தான் வளர இவ்வளவு வேதனையை தந்த மதம் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இளம் வயதில், அவரும் மனோமோகன் கோசும் கிருட்டிணாநகர் கல்லூரியில் சேர்ந்து இளைய தலைமுறையினரை வெல்லும் பிரச்சாரத்தில் கேசப் சுந்தர் சென்னுடன் சென்றனர்.[2][14]
இங்கிலாந்தில், இவர் மற்ற பணிகளில் பரப்பரப்பாக இருந்தபோதும், பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை பிரசங்கிக்க நேரம் கிடைத்தது. பின்னர், இவர் அகமதாபாத்தில் தான் பணியிலிருக்கும்போது, பிரம்ம சமாஜம் பற்றிய அறிக்கையை மாக்ஸ் முல்லருக்கு அனுப்பினார். இது அவரது மனைவி எழுதிய முல்லரின் வாழ்க்கை வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
சமூக இலக்கிய நடவடிக்கைகள்
ஓய்வு பெற்ற பிறகு இவர், கொல்கொத்தாவின் பூங்கா வீதியிலும், பின்னர் பாலிகுஞ்சிலும் சிறிது காலம் வாழ்ந்தார். இவரது வீடு இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான சந்திப்பு இடமாக இருந்தது.இவரை தவறாமல் பார்வையிட்ட குடும்பத்திற்கு வெளியில் இருந்தவர்களில் தாரக்நாத் பாலித், மனோமோகன் கோசு, சத்யேந்திர பிரசன்னா சின்கா, உமேஷ் சந்திர பானர்ஜி, கிருட்டிண கோவிந்த குப்தா மற்றும் பெகாரி லால் குப்தா ஆகியோர் அப்போது கொல்கத்தா சமூகத்தில் கணிசமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.[2]
பூங்கா வீதியிலுள்ள இவரது வீடு ஒரு இலக்கிய கூட்டத்தின் மையமாக இருந்தது. விவாதிக்கப்பட்ட சில பாடங்களில் "பெங்காலி மொழி மற்றும் பெங்காலி பாத்திரம்", "கவிதையின் கூறுகள்", "சிவாலரி" மற்றும் "பெண்கள் மற்றும் ஆண்களில் காதல்" ஆகியவை இருந்தன. பங்கேற்பாளர்களிடையே விவாதங்கள் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. அவை வெளியிடப்படக்கூடாது, குடும்பத்திற்கு வெளியே விநியோகிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனைகளால் வெளியிடப்படவில்லை.[15]
1897இல் நத்தோரில் நடைபெற்ற வங்காள மாகாண மாநாட்டின் 10 வது அமர்வுக்கு தலைமை தாங்கினார்.[16] மேலும், இவர் 1900-01 லிருந்து, வங்கீய சாகித்ய பரிசத்தின் தலைவராகவும் இருந்தார்.
Remove ads
குழந்தைகள்
இவரது குழந்தைகள், சுரேந்திரநாத் தாகூர் (1872-1940) மற்றும் இந்திரா தேவி சவுதுரானி (1873-1960) இருவரும் நன்கு அறியப்பட்ட நபர்களாவர். குழந்தைகளாக ஆங்கில வாழ்க்கையின் அனுபவம் அவர்களுக்கு இருந்தது. சுரேந்திரநாத் ஆங்கிலத்தில் பெரும் ஆளுமை கொண்டிருந்தார். ரவீந்திரநாத்தின் ஃபோர் சேப்டர் என்பதை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்திருந்தார். பெங்காலி மொழியில் மகாபாரதத்தின் முக்கிய பகுதியின் சுருக்கப்பட்ட பதிப்பை அவர் தயாரித்திருந்தார்.[2] இவரது காலத்தில், பிரிட்டிசாரார் பயங்கரவாதிகள் என்று கருதப்பட்ட ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடும் போர்க்குணமிக்க புரட்சிகர அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பு இருந்தது.[17] இந்திரா ஒரு சிறந்த பிரெஞ்சு அறிஞரும் மற்றும் இசையில், குறிப்பாக ரவீந்திரசங்கீதத்தின் மீது அதிகாரம் பெற்றவராகவும் இருந்தார். மேலும், விஸ்வ பாரதி பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக இருந்தார். பிரபல வங்காள எழுத்தாளர் பிரமதா சௌவுத்ரி என்பவரை மணந்தார். சாந்திநிகேதன் பதா பவனின் மிக நீண்ட காலம் தலைவராக இருந்த சுப்ரியோ தாகூர் இவரது பேரன்களில் ஒருவராகவும், கொல்கத்தா பதா பவனின் தலைவரன இசிதா தாசு அவரது பேத்திகளில் ஒருவராகவும் உள்ளார்.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads