சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம் அல்லது எஸ். ஜேசுரத்தினம் (S. Yesurathanam, டிசம்பர் 26, 1931 - நவம்பர் 27, 2010) ஈழத்தின் புகழ்பெற்ற ஒரு நாடக நடிகரும், வானொலிக் கலைஞரும், திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், நெறியாள்கையாளருமாவார். வாடைக்காற்று திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த இவர் யாழ்ப்பாண வட்டார வழக்குச் சொற்களை நகைச்சுவைக்காக மட்டுமன்றி காத்திரமான படைப்புகளிலும் கையாள முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம், இளவாலையில் சந்தியாப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த யேசுரத்தினம் இளவாலை புனித என்றீஸ் பாடசாலையில் கல்வி கற்றார். இலங்கை சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே பணியாற்றி 1984 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
கொழும்பில் இவர் முப்பத்து மூன்று வருட காலம் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டங்களில்; இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் ஐந்து தடவைகள் அகதியாக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இறுதியாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் அகதியாக்கப்பட்டு, பின்பு 1985ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் தமிழ் நாட்டில் திருச்சியிலும், சென்னையிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார். 1993 ஆம் ஆண்டில் பிரான்சிற்குப் புலம்பெயர்ந்து தான் இறக்கும் வரை தனது துணைவியார், ஐந்து பிள்ளைகளுடன் பிரான்சிலேயே வசித்து வந்தார்.
Remove ads
கலையார்வம்
யேசுரட்ணத்தின் கலையார்வம் கல்லூரிக் காலத்திலிருந்தே இயல்பாக வெளிப்பட்டது. பாடசாலையில் கற்கும் காலத்தில் நாடகங்களில் நடித்துத் தன்னை நடிகனாக அடையாளம் காட்டினார். ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆங்கில நாடகங்களில் பங்கேற்றாலும் கூட பின்னர் தமிழில் தனது திறனை வெளிப்படுத்தினார்.
வானொலிக் கலைஞராக
1966 ஆம் ஆண்டு சூலை 26ம் திகதி இலங்கை வானொலியில் வானொலிக் கலைஞராக (பகுதிநேரம்) இணைந்தார். இலங்கை வானொலியில் இவர் பல நாடகங்களை எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ளார்.
முகத்தார் வீடு
இலங்கை வானொலியில் கிராமிய சேவையில் 1970களின் ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமைகளில் தொடராக ஒலிபரப்பான 'முகத்தார் வீடு' என்ற நாடகத்தை எழுதியதோடு, பிரதான பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். 268 வாரங்கள் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு' யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கான குடும்பப்; பிரச்சினைகளை யதார்த்தபூர்வமாக சித்தரித்தது. 15 நிமிடத்துக்குள் ஒரு விவசாயக் குடும்பத்துள் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்களுடன் விவசாயத் தகவல்களை வழங்குமொரு நிகழ்ச்சியாக இதனை இவர் தயாரித்து வழங்கியிருந்தார்.
இந்த நாடகத்தில் உலாவந்த பாத்திரங்களான ஆறுமுகம், மனைவி தெய்வானை, மகன் வடிவேலன், சரவணை, மைனர் குடும்பத்தினர், சாத்திரி குடும்பத்தினர், சட்டம்பி குடும்பத்தினர், பரியாரியாரின் குடும்பத்தினர், தரகர் குடும்பத்தினர்... இரண்டு தசாப்தங்கள் கடந்து இன்றும் மக்கள் மத்தியில் மறவாமல் இருக்கின்றது. ஜேசுறட்ணத்தின் பெயருடன் 'முகத்தார்' எனும் பெயரும் இணைந்து 'முகத்தார் ஜேசுறட்ணம்' என்று இன்றும் விழிக்கப்படுகிறது.
ஏனைய நிகழ்ச்சிகள்
இலங்கை வானொலியில் சனி இரவு 'நாடகம்' ஞாயிறு பகல் 'கதம்பம்', 'குதூகலம்' போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் எழுத்துக்கள் மிளிர்ந்திருந்தன. கதம்பத்தில் 123 தனி நாடகங்களையும், பருவக்காற்று தொடர் நாடகத்தையும் (52 வாரங்கள்) எழுதி, நடித்து, நெறியாள்கை செய்த இவரின் வானொலிப் பணி நிலைத்துள்ளது.
சில்லையூர் செல்வராசனின் ‘தணியாத தாகம்’ கே. எம். வாசகரின் இயக்கத்தில் வானொலி நாடகமாக உருப்பெற்ற போது இந்த நாடகத்தில் ஒரு மலேசியன் ஓய்வூதியம் பெறுபவராக நடித்தவர் எஸ். ஜேசுரத்தினம்.
மேடைநாடகங்கள்
இவர் எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ள சில நாடகங்கள்
- சண்டியன் சின்னத்தம்பி
- லண்டன் மாப்பிள்ளை
- மாடிவீட்டு மருக்கொழுந்து
- Kopay to Dubai
- மோசடி பத்தாயிரம்
- மண்ணோடு விளையாடும் விண்ணுலகம்
- சத்தியமே ஜெயம்
- பண்டாரவன்னியன்
- புரோக்கர் பொன்னம்பலம்
- அசோகரா
- உயிரோடு காடடர்ந்து
முகத்தார் யேசுறட்ணம் நடித்த சில மேடை நாடகங்கள்.
- அசட்டு மாப்பிள்ளை
- ஆசைமச்சான்
- கறுப்பும் சிவப்பும்
- பாசச்சுமை
- நம்பிக்கை
மணித்தியாலய நாடகங்கள்
- Julius Ceasar
- Merchant of Venice
- அகதி ஒருவன் ஊர்வலம் வருகிறான்.
எஸ். அகஸ்தியர் எழுதிய பிறரின் இயக்கத்தில் 'அலைகளின் குமுறல' , 'எரிமலை வெடித்தபோது', கோபுரங்கள் சரிகின்றன ஆகிய நாடகங்களிலும், கே. எம். வாசகர் இயக்கத்தில் மனிதவலை, தணியாத தாகம் ஆகிய மேடை நாடகங்களிலும், சுமதி (தொலைக்காட்சி நாடகம்) ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
Remove ads
திரைப்படங்கள்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறைக்கும் முகத்தார் யேசுறட்ணத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட மூன்று தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அத்திரைப்படங்களாவன:
- வாடைக்காற்று
- கோமாளிகள்
- ஏமாளிகள்
அத்துடன் 'பொன்மணி' திரைப்படத்துக்கு பின்னணிக் குரல் கொடுத்துமுள்ளார்.
புலம்பெயர் நாட்டில்
சின்னத் திரைப்படங்கள்
இவை தவிர பிரான்சிற்குப் புலம் பெயர்ந்த பின்பு சின்னத் திரைப்படங்கள் சிலதில் இவர் நடித்துள்ளார்.
- சத்திய கீதை
- முகத்தார் வீடு
- இன்னுமொரு பெண்
- புயல்
- முகம்
- ராஜாவின் ராகங்கள்
- தாகம்
வானொலி, தொலைக்காட்சி
புலம் பெயர்ந்த பின்பு ஐரோப்பிய வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இவரது கலைப் பணிகள் தொடர்ந்தன. தமிழ் றேடியோ தொலைக்காட்சி (TRT) நிறுவனத்திலும், ஏசியன் புறோட்காஸ்ட்; கோப்பிரேஷன் (ABC) நிறுவனத்திலும் வானொலி நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியுள்ளார்.
Remove ads
எழுதிய நூல்
பிரான்சில் யேசுரத்தினம் மேடையேற்றிய ‘முகத்தார் வீட்டில்’ வானொலி நாடகப் பிரதிகள் ஐந்து, மேடை நாடகங்கள் மூன்று, வேறு வானொலி நாடகப் பிரதிகள் நான்கு என மொத்தம் 12 நாடகங்களை ‘முகத்தார் வீட்டுப் பொங்கல்’ என்ற பெயரில் 1999ல் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார்.
பெற்றுள்ள விருதுகள்
- 1979 ஜனாதிபதி விருது (வாடைக்காற்று திரைப்படத்தில் திறன்பட நடித்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.)
- 1980 கலைமுரசு விருது
- 1981 முகத்தார், கௌரவ விருது
- 1982 விவசாய மன்னன், கௌரவ விருது
- 1983 கலைப் பணிச் செல்வர், (திருச்சி, தமிழ்நாடு)
- 1994 கலைவேள்ää கௌரவ விருது (பிரான்ஸ்)
- 1995 கலைப்பூபதி விருது (பாரிஸ் - பிரான்ஸ்)
- 1997 கலைமாமணி விருது (ஜேர்மனி)
- 1998 நகை ரசவாரி (ஜேர்மனி)
- 2005 முத்தமிழ்ச் செல்வர் (பிரான்ஸ்)
- 2005 கம்பன் பட்டயம் விருது (பிரான்ஸ்)
- 2007 ஈழத் தமிழ் விழி விருது (பிரான்ஸ்)
Remove ads
திரைப்படத்தில்
'வாடைக்காற்று' திரைப்படத்தில், 'பொன்னுக் கிழவர்' பாத்திரத்தில் நடித்து, சிறந்த தமிழ் துணை நடிகருக்கான இலங்கை ஜனாதிபதி விருதைப் பெற்றவர்.
மறைவு
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஜேசுரத்தினம் 2010 நவம்பர் 27 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
வெளி இணைப்புகள்
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 09 - பீ. எம். புன்னியாமீன்
- முகத்தார் எஸ். ஜேசுரத்தினம் சில நினைவுப் பதிவுகள் பரணிடப்பட்டது 2010-12-10 at the வந்தவழி இயந்திரம், எஸ். எழில்வேந்தன்
- ஈழத்து தமிழ்நாடக கலைஞர் முகத்தார் ஜேசுரத்தினம் பிரான்சில் காலமானார் பரணிடப்பட்டது 2010-12-03 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், நவம்பர் 29, 2010
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads