சவ்வரிசி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவ்வரிசி (இலங்கையின் சில பகுதிகளில்: சௌவரிசி, Sago) என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் (Metroxylon sagu) என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

பயன்படுத்தப்படும் தாவரம்
உண்மையான சவ்வரிசி இந்தோனேசியத் தீவுகளில் வளர்கின்ற சவ்வரிசி மரம் (Sago Palms) எனப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது. சவ்வரிசி மரம் பப்புவாத் தீவிலேயே மிகக் கூடுதலாகக் காணப்படுகிறது. அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு (Mertroxylon Sagu) என்பதே உண்மையான சவ்வரிசித் தாவரமாகும். அதே சாதியைச் சேர்ந்த மெற்றொக்சிலன் ரம்பீ (Metroxylon rumphii) என்ற தாவரமும் சவ்வரிசி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங் காடுகளாக வளர்ந்துள்ளன. போர்னியோ (Borneo) தீவிலும் இவை தற்போது பயிரிடப்படுகின்றன.
Remove ads
சவ்வரிசித் தாவரங்களின் பயன்பாட்டு நிலை
சவ்வரிசித் தாவரங்கள் தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. 9 மீற்றர் (30அடி) வரை உயரமாக வளரக்கூடிய இத்தாவரங்களின் தண்டுப் பகுதி தடிப்பாக விருத்தியடையும். 15 ஆண்டுகளில் சவ்வரிசித் தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாப்பொருள் சேகரிக்கப்பட்டிருக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி அவை முதிர்ந்து கனிய இடம்கொடுத்தால் தண்டிலுள்ள மாப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுவதோடு தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்த பின்னர் தாவரம் செத்துவிடுகிறது.
Remove ads
சோறு பெறல்


சவ்வரிசி பெறுவதற்காகப் பயிர்செய்யப்படும் தாவரங்கள் பூந்துணர் தோன்றிய உடனேயே வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பின்னர் குற்றிகள் துண்டங்களாக வெட்டப்பட்டுப் பிளக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாப்பொருளோடு நார்கள் கலந்திருக்கும். இத்தூளை நீரோடு சேர்த்துப் பிசைந்து அரிதட்டு ஒன்றினூடாக வடியச் செய்வதன் மூலம் மாப்பகுதியிலிருந்து நார்கள் அகற்றப்படுகின்றன. பல தடவைகள் இவ்வாறு நீரினால் அலசிய பின்னர் மாப்பகுதி உபயோகத்துக்கு ஏற்றதாக மாறிவிடுகின்றது. அதனை உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக நேரடியாகப் பயன்படுத்த முடியும்.
ஏற்றுமதிக்காகத் தயார்படுத்தல்
ஏற்றுமதிக்காகத் தயார்படுத்தும் போது சவ்வரிசித் தாவரத்தின் மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். சவ்வரிசி மாவை நீரோடு கலந்து பிசைந்து பசைபோலாக்கி அதனை அரிதட்டுக்களினூடாகத் தேய்க்கும்போது சவ்வரிசி மணிகள் உருவாகின்றன. வித்தியாசமான பருமனுள்ள அரிதட்டுக்களை உபயோகிப்பதன் மூலம் வித்தியாசமான பருமன் கொண்ட சவ்வரிசி மணிகள் பெறப்படுகின்றன. பன்னாட்டுச் சந்தையில் முத்துச் சவ்வரிசி (pearl sago) என்ற பெரிய வகையும் சன்னச் சவ்வரிசி (bullet sago) என்ற சிறிய வகையும் கிடைக்கின்றன.
Remove ads
பயன்பாடு

சவ்வரிசி தூய மாப்பொருளைக் கொண்டது. அதில் 88வீதம் காபோவைதரேற்றும் 0.5 வீதம் புரதமும் மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளன. இவை தவிர சிறிதளவு உயிர்ச்சத்து B- க்கள் மாத்திரமே அதில் உண்டு. சவ்வரிசி எளிதில் சமிபாடடையக்கூடியது. தென்மேற்குப் பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாகச் சவ்வரிசி விளங்குகின்றது. சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை ஏனைய நாடுகளில் இனிப்புக்கூழ்கள் தயாரிப்பதற்கும் ஆணங்களைத் தடிப்பாக்குவதற்குமே இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. கைத்தொழிற்துறையில் துணிகளை விறைப்பாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகின்றது.
Remove ads
சான்று
அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை - இதழ்: 03
வெளி இணைப்புகள்
- ஜவ்வரிசி விக்சனரி
- ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை காலச்சுவடு பரணிடப்பட்டது 2014-12-31 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads