உயிர்ச்சத்து பி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிர்ச்சத்து பி என்பது நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும். வளர்சிதைமாற்றங்களின் தேவைக்கு உயிர்ச்சத்து பி குழுமம் இன்றியமையாத பங்கினை வழங்குகின்றது. ஒவ்வொரு "பி" உயிர்ச்சத்தும் தம்முடன் ஒரு சிறப்பு எண்ணைக் கொண்டுள்ளது (எ.கா.: பி1, பி6, பி12 ....). இது தவிர அவற்றை, ஒவ்வொன்றுக்குமுரிய வேதியியல் பெயர் மூலமும் அழைத்தல் வழமையில் உள்ளது. போதியளவு உயிர்ச்சத்து பி உணவில் கிடைக்காதவிடத்து, குறைநிரப்பு (supplements) குளிகைகள் (மாத்திரைகள்) உட்கொள்ளப்படுவது வழக்கம். எட்டு உயிர்ச்சத்து பி வகைகளும் சேர்த்து பெறப்படும் குளிகை உயிர்ச்சத்து பி தொகுதி (Vitamin B complex) என அழைக்கப்படும்.

Remove ads
பி உயிர்ச்சத்துக்களின் பட்டியல்
- உயிர்ச்சத்து பி1 (தயமின்)
- உயிர்ச்சத்து பி2 (இரைபோஃபிளவின்)
- உயிர்ச்சத்து பி3 (நியாசின் or நியாசினமைட்)
- உயிர்ச்சத்து பி5 (பன்டோதீனிக் அமிலம்)
- உயிர்ச்சத்து பி6 (பிரிடொக்சின், பிரிடொக்சல், or பிரிடொக்சாமைன்)
- உயிர்ச்சத்து பி7 (பயோட்டின்)
- உயிர்ச்சத்து பி9 (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி)
- உயிர்ச்சத்து பி12 (பலதரப்பட்ட கோபாலமின்கள்; பொதுவாக உயிர்ச்சத்து மாற்றீடுகளில் சையனோகோபாலமின் எனும் வடிவத்தில்)
பி உயிர்ச்சத்துக்களின் பங்கு
- வளர்சிதைமாற்ற தாக்கங்களுக்கு துணையாக இருக்கும்.
- ஆரோக்கியமான தோல், முடி, தசை என்பவற்றைப் பேணுவதற்கு உதவும்.
- நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, நரம்புத் தொகுதி தொழிற்பாட்டைக் கூட்டும்.
- உயிரணு வளர்ச்சி, உயிரணுப்பிரிவு என்பவற்றை மேம்படுத்தும். குருதிச் சிவப்பணுக்களிலும் இம்மேம்படுத்துகை நிகழ்வதால், குருதிச்சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.
- குளிகைகள் மூலமாக அன்றி, உணவுடன் உட்கொள்ளப்படும்போது[1][2] ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றான கணைய புற்றுநோய்]] இடரைக் குறைக்கும்[3].
எல்லா உயிர்ச்சத்து பி க்களும் நீரில் கரைபவையாக இருப்பதனால், உடல்முழுவதும் பரந்து காணப்படும். மேலதிகமாக இருக்கும் உய்ரிச்சத்து பி, சிறுநீருடன் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதனால், சீராக தொடர்ந்து மீள்நிறைவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்[4].
Remove ads
உயிர்ச்சத்து பி குறைபாடு
போதியளவு உயிர்ச்சத்து பி கிடைக்காவிட்டால், பெயரிடப்படக் கூடிய பல குறைபாட்டு நோய்கள் தோன்றும்.
உயிர்ச்சத்து | வேதியியல் பெயர் | குறைபாட்டுத் தாக்கம் |
உயிர்ச்சத்து பி1 | தயமின் | இக்குறைபாட்டினால் பெரிபெரி நோய் ஏற்படலாம். நீண்டகால தயமின் குறைபாடு இருப்பின் Korsakoff's syndrome என்னும் நிலை ஏற்படலாம். இதனால் மீளமுடியாத மறதி, உண்மையில் நடக்காத நிகழ்ச்சிகளை நடந்தவையாகச் சொல்லும் உளவியல் குறைபாடு (confabulation) என்பன ஏற்படலாம். |
உயிர்ச்சத்து பி2 | இரைபோஃபிளவின் | குறைபாட்டினால் ariboflavinosis எனும் நிலையேற்படும். இதன் அறிகுறிகளாக, உதட்டில் வெடிப்புகள் ஏற்படல், சூரிய ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டிருத்தல், கடை வாய்ப் பகுதியில் ஏற்படும் புண்கள், வெடிப்புகள், நாக்கில் ஏற்படும் அழற்சி, முகம், தலையின் தோல்ப்பகுதி, சிபிலிசு போன்ற போலித்தன்மை, தொண்டை அழற்சி, இழையங்களுக்கு மிக அதிகளவிலான குருதி வழங்கப்படல், வாய், தொண்டைப் பகுதியிலுள்ள மென்சவ்வில் வீக்கம் என்பன காணப்படும். |
உயிர்ச்சத்து பி3 | நியாசின் | இந்த குறைபாட்டுடன் டிரிப்டோபான் குறைபாடும் சேருமாயின், பெல்லாக்ரா எனப்படும் குறைபாட்டு நிலைகள் தோன்றும். இதன் அறிகுறிகளாக தாக்கும் உணர்வு ஏற்படல், தோலழற்சி, தூக்கமின்மை, தசைச்சோர்வு, மனக்குழப்பம், வயிற்றுப்போக்கு என்பன காணப்படும். குறைபாடு அதிகரிப்பின் மறதிநோய், மற்ரும் இறப்பு ஏற்படலாம். |
உயிர்ச்சத்து பி5 | பன்டோதீனிக் அமிலம் | இதன் குறைபாட்டால் ஆக்னே என அழைக்கப்படும், முகம் தலைத்தோலில் ஏற்படும் அழற்சி உருவாகும். சிலசமயம் Paresthesia எனப்படும் நோய்நிலையும் ஏற்படலாம். |
உயிர்ச்சத்து பி6 | பிரிடொக்சின் | இந்த குறைபாட்டினால் microcytic anemia எனப்படும் சிறிய குருதிச் சிவப்பணுக்கள் உருவாகும் குருதிச்சோகை ஏற்படும். இதன் அறிகுறிகளாக மன அழுத்தம், தோலழற்சி, உயர் இரத்த அழுத்தம், ஹோமோசிஸ்டீன் அளவு அதிகரித்தல் என்பன காணப்படும். |
உயிர்ச்சத்து பி7 | பயோட்டின் | இந்தக் குறைபாடு வளர்ந்தவர்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும், கைக்குழந்தைகளில் குறைபாடான வளர்ச்சி, மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தும். பிறக்கும்போதே இருக்கக்கூடிய ஒரு வளர்சிதைமாற்றத் தவறான Multiple carboxylase deficiency இருப்பின், உணவு மூலம் பயோட்டின் தேவையான அளவில் உள்ளெடுக்கப்பட்டாலும், பயோட்டின் குறைபாட்டு விளைவுகளைத் தரும். |
உயிர்ச்சத்து பி9 | போலிக் அமிலம் | இந்தக் குறைபாடு Megaloblastic anemia எனப்படும் ஒரு வகை குருதிச்சோகை நோயைக் கொடுப்பதுடன், ஹோமோசிஸ்டீன் அளவு அதிகரிக்கவும் காரணமாகின்றது. அத்துடன் கருத்தரித்து இருக்கும் பெண்களில் குழந்தை பிறப்பு நிலையில் குறைபாடுகள் ஏற்படவும் காரணமாகின்றது. இதனால் பொதுவாக கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு குறைநிரப்பு குளிகைகள் வழங்கப்படுவதுண்டு. வயது அதிகரிக்கையில் மூளையில் ஏற்படக்கூடிய தீங்கான தாக்கங்களையும் இந்த போலி அமிலம் குறைப்பதாக ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். |
உயிர்ச்சத்து பி12 | கோபாலமின்கள் | இந்தக் குறைபாடு Megaloblastic anemia எனப்படும் ஒரு வகை குருதிச்சோகை நோயைக் கொடுப்பதுடன், ஹோமோசிஸ்டீன் அளவு அதிகரிக்கவும் காரணமாகின்றது. அத்துடன் புற நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கும் peripheral neuropathy, மற்றும், ஞாபக மறதியுடன் ஏனைய உணர்வுசார் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். பொதுவாக வயது போனவர்களிலேயே இந்தக் குறைபாடு வெளிக்காட்டப்படும். காரணம் வயது அதிகரிக்கும்போது, குடல் பகுதியில் உறிஞ்சல் தொழிற்பாடு குறைந்து செல்வதேயாகும். மேலும் இந்த குறைபாட்டினால் pernicious anemia எனப்படும் தன்னுடல் தாக்குநோய் ஏற்படுகின்றது. Mania எனப்படும், உன்மத்தம் பிடித்த மனநிலை, அல்லது Psychosis எனப்படும் யதார்த்தம் புரிந்து கொள்ள முடியாத உளவியல் குறைபாடுகளையும் இந்த கோபாலமின் குறைபாடு தோற்றுவிக்கக் கூடும். அரிதாக இந்த குறைபாடு அதிகமாக இருப்பின் அது முடக்குவாதம் (Paralysis) போன்ற நிலைகளைத் தோற்றுவிக்கலாம். |
Remove ads
உயிர்ச்சத்து பி யின் நச்சுத்தன்மை
உயிர்ச்சத்து பி உடலின் தேவைக்கு மேலதிகமாக இருக்கையில், பொதுவாக அது சிறுநீருடன் அகற்றப்படும். இருந்தாலும், அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படும்போது, அது உடலுக்குத் தீங்கான விளைவுகளைத் தரும்.
உயிர்ச்சத்து | பெயர் | உட்கொள்ளக்கூடிய அளவிற்கான எல்லை | தீங்கான விளைவுகள் |
உயிர்ச்சத்து பி1 | தயமின் | இல்லை[5] | வாய்மூலம் உட்கொள்ளப்படும்போது, எந்த தீங்கான விளைவும் இல்லை. சிரையூடாகவோ, அல்லது தசையூடாகவோ ஊசிமூலம் அதிகளவில் செலுத்தப்படும்போது, anaphylaxis என்னும் தீவிர அழற்சி நிலை வருவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. ஆனாலும் பொதுவாக ஊசிமூலம் கொடுக்கப்படும் மருந்தளவானது மனிதர்கள் வாய்வழியாக உள்ளெடுக்கும் அளவை விட அதிகமாகவே இருக்கும்[5] |
உயிர்ச்சத்து பி2 | இரைபோஃபிளவின் | இல்லை[6] | மனிதன், விலங்குகளில் செய்யப்பட்ட குறன்த எண்ணிக்கையிலான ஆய்வுகளில் தீங்கு விளைவுகளுக்கான ஆதாரம் இல்லை. செயற்கைக் கல முறையில் செய்யப்பட்ட ஆய்வில், இரைபோஃபிளவின் செறிவான கண்ணுக்குப் புலனாகும் ஒளி, புற ஊதா ஒளிக்கு வெளிப்படுத்தப்படும்போது, எதிர்வினை செய்யக்கூடிய ஆக்சிசன் மூலக்கூறுகள் (free radicals) உருவாவது அவதானிக்கப்பட்டது மட்டுமே இதன் தீங்கு விளைவிக்கும் தன்மையைக் காட்டும் ஒரே ஆதாரமாகும்.[6] |
உயிர்ச்சத்து பி3 | நியாசின் | குறைநிரப்பி குளிகைகள், மருந்துகள், மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் மூலம் நாளொன்றுக்கு 35 மில்லி கிராம்[7] | நாளொன்றுக்கு 3000 மில்லி கிராமுக்கு அதிகமான நிக்கோட்டினமைடும், 1500 மில்லி கிராமுக்கு அதிகமான நிக்கோட்டினிக் அமிலமும் உள்ளெடுக்கப்பட்டால், குமட்டல், வாந்தி, என்பவற்றுடன் கல்லீரலில் நச்சுத்தன்மை இருப்பதற்கான அறிகுறிகளும், உணர்குறிகளும் தெரியும். மேலும் இன்சுலின் தொழிற்பாடு குறைவதனால் நீரிழிவுநோய் வருவதற்கு முன்னரான குளுக்கோசு சகிப்புத்தன்மையின்மையும், மீளக்கூடிய கண்பார்வையிலேற்படும் தாக்கங்களும் ஏற்படலாம். அத்துடன் நிக்கோட்டினிக் அமிலம் அதிகரிப்பதனால், தமனி, சிரை ஆகிய குருதிக்கலன்கள் விரிவடைந்து, அதனால் முகம்சிவத்தல் (Flushing) என்றழைக்கப்படும் நிலை தோன்றும். இதன்போது தோலின் சில பகுதிகள் சிவந்திருத்தலுடன், தோலில் அரிப்பு, கூச்சம், எரிவு போன்ற உணர்வுகள் தோன்றும். இவற்றுடன் தலைவலி, வலியுடன் கூடிய மண்டையோட்டுக்கு உள்ளான குருதி ஓட்டமும் ஏற்படும்[7]. அதிகரித்த லிப்பிட் இருக்கும்போது, தமனிகளில் குருதிக்கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்க, மருத்துவர்கள் நியாசின் உட்கொள்ளப்படக்கூடிய அளவு நாளொன்றுக்கு 2000 மில்லி கிராம் என்றும், இவை நேரத்துக்கு நேரம் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியேறும் தன்மை கொண்ட பொதிமருந்து மாத்திரை (Capsule) வடிவில் எடுக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்கள்[8]. |
உயிர்ச்சத்து பி5 | பன்டோதீனிக் அமிலம் | இல்லை | நச்சுத்தன்மை பற்றித் தெரியாது. |
உயிர்ச்சத்து பி6 | பிரிடொக்சின் | குறைநிரப்பி குளிகைகள், மருந்துகள், மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லி கிராம்[9] | நாளொன்றுக்கு 1000 மில்லி கிராமைவிட அதிகமாக உள்ளெடுக்கப்பட்டால், புறநரம்பு மண்டலம், புலன்சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படும். ஏனைய பாதிப்புக்கள் உறுதி செய்யப்படவில்லை. தோல்சார்ந்த புண்கள் (காரணியின் தொடர்புக்கான வாய்ப்பு குறைவு); கைக்குழன்தைகளில் பி6 இல் தங்கியிருக்கும் தன்மை (காரணியின் தொடர்புக்கான வாய்ப்பு குறைவு).[9] |
உயிர்ச்சத்து பி7 | பயோட்டின் | இல்லை | நச்சுத்தன்மை பற்றித் தெரியாது. |
உயிர்ச்சத்து பி9 | போலிக் அமிலம் | நாளொன்றுக்கு 1 மில்லி கிராம் [10] | இது அதிகமாக இருக்கையில், உயிர்ச்சத்து பி12 குறைபாடு மறைக்கப்பட்டு விடுவதனால், நிரந்தரமான நரம்பியல் பாதிப்புக்கள் ஏற்பட சந்தர்ப்பமளிக்கும்.[10] |
உயிர்ச்சத்து பி12 | கோபாலமின் | நிறுவப்படவில்லை[11] | ஆக்னே போன்ற சொறி வகை (காரணி சரியாக நிறுவப்படவில்லை).[11][12] |
Remove ads
உயிர்ச்சத்து பி கிடைக்கும் மூலங்கள்
பதனிடப்படாத முழுமையான தானியங்களில் உயிர்ச்சத்து பி பெறப்படும். கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும். இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும்[13]. பதனிடப்படாத முழுமையான தானியம், உருளைக் கிழங்கு, பருப்பு, அவரை, வாழை, மதுவம் போன்றவற்றிலும், மற்றும் கரும்பு, திராட்சை, சக்கரைக்கிழங்கு (sugar beet) போன்றவற்றில் இருந்து சீனி தயாரிக்கும்போது கிடைக்கும் molasses எனப்படும் துணைப்பொருளிலும் உயிர்ச்சத்து பி அதிகளவில் கிடைக்கும்.
மதுவத்திலிருந்து பியர் தயாரிக்கப்படும்போது பியரிலும் உயிர்ச்சத்து பி இருந்தாலும்[14], அதிலிருக்கும் எத்தனால் தயமின் (B1),[15][16], இரைபோஃபிளவின் (B2),[17], நியாசின் (B3)[18], பயோட்டின் (B7)[19], போலிக் அமிலம் (B9)[20][21] ஆகியவற்றின் உறிஞ்சப்படும் தன்மையைப் நிரோதிப்பதனால், உடலுக்கு கிடைக்கும் தன்மை குறையும். மேலும், பியரோ அல்லது வேறு எத்தனோல் சேர்ந்த திரவங்களோ உயிர்ச்சத்து பி உறிஞ்சுவதை பொதுவாகவே நிரோதிப்பதனால், அதன் நிகர குறைபாடும், அது சார்ந்த உடநலக் குறைகளும் அதிகரிக்கும்.
உயிர்ச்சத்து பி12 ஆக தாவரங்கள் மூலம் கிடைப்பதில்லை. அதனால் அப்படியான உணவுகளை மட்டும் உண்பவர்களில் B12 குறைபாடு ஏற்படுவது அதிகம். ஆனாலும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உணவுகளைத் தயாரிப்பவர்கள் சிலர் B12 அங்கேயும் கிடைப்பதாகக் கூறுவது சில குழப்பங்களைத் தருகின்றது. காரணம் இந்த அளவை அளவிடும்போது US Pharmacopeia (USP) B12 நேரடியாகக் கிடைக்கவில்லை. B12 ஐ ஒத்த மாற்று வேதியியல் வடிவம் ஒன்று தாவரத்தில் இருப்பதாகவும், அது மனித உடலால் பயன்படுத்த முடியாதது எனவும் அறியப்படுகின்றது. இதே காரணத்தால், வேறு சில உணவுகளிலும் B12 அளவீடு உண்மையில் இருப்பதை விடவும் அதிகமாகவும் காட்டும்[22].
உயிர்ச்சத்து பி குறைபாட்டைப் போக்க ஊசி மூலமும் வழங்கலாம்[23]. உயிர்ச்சத்து பி ஐ உடலில் கூட்டிக் கொள்வதற்கு பொதுவாக அவற்றின் குறைநிரப்பும் குளிகைகளும் உட்கொள்ளப்படுவதுண்டு.
சந்தையில் 'ஆற்றல் பானங்கள்' (energy drinks) என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில், அதிகளவு பி உயிர்ச்சத்து காணப்படுகின்றது[24]. இப்பானங்கள் பதற்றம், படபடப்பு, அழுத்தங்கள் எதுவுமின்றி நாளைக் கழிக்க உதவுவனவாக விளம்பரம் செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன[24]. ஆனால் பேராசிரியர் Hope Barkoukis போன்ற உணவியல் வல்லுநர்கள், வணிகப்படுத்தலுக்கு இது உதவுமேயன்றி, இதில் உண்மையில்லை என்று சொல்லி இதனை மறுக்கின்றனர்[24]. உணவில் இருக்கும் ஆற்றல் தரும் பொருட்கள் இலகுவாக உடலால் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு வருவதற்கும் இந்த உயிரிச்சத்து பி உதவுகின்றது.
Remove ads
உயிர்ச்சத்து பி குறைநிரப்பு குளிகைகள்

உடலில் மேலதிகமாக இருக்கும் உயிர்ச்சத்து பி யானது உடனுக்குடன் அகற்றப்பட்டு விடுவதனால், உடல் நலத்தைப் பேணுவதற்காக, பொதுவாக உயிர்ச்சத்து பி குறைநிரப்பு குளிகைகள் உட்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதரிலும் உயிர்ச்சத்து பி உறிஞ்சப்படுமளவு, வெளியே அகற்றப்படும் அளவு என்பன வேறுபடுவதனால், ஒருவரின் தேவை என்ன என்பதை அறிவது இலகுவல்ல[24]. முதியோர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் B12 உறிஞ்சப்படுவதில் உள்ள பிரச்சனைகளாலும், அவர்களுக்கான ஆற்றல் தேவை அதிகமாய் இருப்பதனாலும் அதனை குறைநிரப்பு குளிகைகளாக வழங்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் அவர்களது நோய் தொடர்பில் அதிகளவு தயமின் பயன்படுத்தப்படுவதனால், அவர்களுக்குத் தேவையான தயமினை ஈடுசெய்ய குறைநிரப்பு குளிகைகள் வழங்கலாம்[25]. அத்துடன் பிறக்கும் குழந்தைகளில் B9 குறைபாடானது, சில நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதனால், கருத்தரிக்க திட்டமிடும் பெண்கள் முதலிலேயே இதனை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்[26].[24]. ஆனாலும் இக்குளிகைகளை உட்கொள்ளும் அனைவரும், இந்த தேவையின்றியே உட்கொள்வதாகவும், அது ஒரு வணிக நோக்கிலான விளம்பரமே என்ற கருத்தும் உண்டு[24].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads