சார்ண்வுட் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்ண்வுட் நடவடிக்கை (Operation Charnwood) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.
பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. ஜூலை 8ம் தேதி நகரின் ஒரு சில பகுதிகளையாவது கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கில் சார்ண்வுட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நார்மாண்டி பாலமுகப்பிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கான முன்னேற்றம் நார்மாண்டி கடற்கரையின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து துவங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அந்த முன்னேற்றத்தை எதிர்க்க அனுப்பப்படுவதைத் தடுப்பதும் சார்ண்வுட் நடவடிக்கையின் இலக்குகளில் ஒன்று. கடுமையான வான்வழி குண்டுவீச்சுக்குப் பின்னர் (இந்த குண்டுவீச்சில் கான் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் பல அழிந்ததால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது) கனடிய-பிரிட்டானியப் படைப்பிரிவுகள் அடங்கிய பிரிட்டானிய 1வது கோர் கான் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. கான் நகரம் ஓர்ன் மற்றும் ஓடான் ஆறுகளால் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
இரு நாட்கள் சண்டைக்குப் பின்னர், நேசநாட்டுத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஜெர்மானியப் படைகள் ஓர்ன் ஆற்றைக் கடந்து பின் வாங்கி விட்டன. ஓர்ன் ஆற்றங்கரை வரையிலான கான் நகரம் நேசநாடுகள் வசமானது. ஆனால் ஆற்றைக் கடந்து அவைகளால் முன்னேற முடியவில்லை. ஜெர்மானியத் தரப்பில் பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும், நார்மாண்டியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் நகற்றம் தடைபடவில்லை. ஆனால் கான் மீதான தொடர் நேசநாட்டுத் தாக்குதல்களால் ஜெர்மானியப் படைகள் வெகுவாக பலவீனமடைந்து விட்டன. அடுத்து நடந்த தாக்குதல்களினால் ஜூலை மாத இறுதிக்குள் கான் நகரம் முழுவதும் நேச நாட்டுக் கட்டுபாட்டில் வந்து விட்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads