சா. ஞானப்பிரகாசர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) பன்மொழிப் புலவர்; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.

விரைவான உண்மைகள் சுவாமி ஞானப்பிரகாசர், பிறப்பு ...
Remove ads

பிறப்பு

இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து இணையரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாம்.

இளமைக் காலமும் கல்வியும்

அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.

Remove ads

திருநிலைப்படுத்தப்படுதல்

1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பன்மொழிப் புலமை

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.

நூல்கள் இயற்றல்

இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.

'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதன்று, சாங்கோபாங்க சுவாமிகளே அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்.

Remove ads

நினைவு முத்திரை வெளியீடு

சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads