சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று ஏ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்.
Remove ads
இரட்டை ஆட்சி முறை
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
Remove ads
தொகுதிகள்
1920 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[1][2][3][5]
Remove ads
அரசியல் நிலவரம்
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. நீதிக் கட்சி வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் எளிதாக பெருவாரியான இடங்களில் வென்றது.[1][4]
தேர்தல் முடிவுகள்
இரட்டை ஆட்சி முறையின் கீழ் முதல் தேர்தல் நவம்பர் 1920 இல் நடத்தப் பட்டது.[6] நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் 12,48,156 பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்களுள் 3,03,558 பேர் தேர்தலில் வாக்களித்தனர்[5] மாகாணம் முழுவதும் சராசரியாக 24.9 % வாக்குகள் பதிவாகின. தொகுதிகளில் 12 சதவிகிதம் வரை குறைவான வாக்குபதிவு நடைபெற்றது.[1] சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 52% வாக்குகள் பதிவாகின.[7][8]
நியமிக்கப்பட்ட 18 உறுப்பினர்கள் நீதிக்கட்சிக்கு ஆதரவளித்ததால், சட்டமன்றத்தில் அதன் பலம் 81 ஆக உயர்ந்தது.[6]
Remove ads
ஆட்சி அமைப்பு
நீதிக்கட்சி பெருவாரியான இடங்களில் வென்றதால், ஆளுனர் வில்லிங்டன் பிரபு, அக்கட்சியின் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் செட்டி தனக்கு பதில் ஏ. சுப்பராயுலு ரெட்டியாரை நியமிக்குமாறு பரிந்துரைத்ததால், ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். அவரே கல்வி, பொதுப்பணிகள், சுங்க வரி, பதிவு ஆகிய துறைகளை நிர்வகித்தார். பனகல் அரசர் ராமராயநிங்கருக்கு சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் வழங்கப்பட்டன. கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு வளர்ச்சித் துறை அமைச்சரானார். புதிய அமைச்சரவை டிசம்பர் 20, 1920 இல் பதவியேற்றது. பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி சட்டபேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். எட்வின் பெரியநாயகம், ஆற்காடு ராமசாமி முதலியார், பி. சுப்பராயன் ஆகியோர் பேரவைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆளுனரின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தோர் - லயனல் டேவிட்சன் (உள்துறை), சார்லஸ் டாட்ஹன்டர் (நிதி), முகமது ஹபிபுல்லா (வருவாய்), ஸ்ரீநிவாச அய்யங்கார் (சட்டம்). பதவியேற்ற சிறிது காலத்திற்குள் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் ரெட்டியார் பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஜுலை 11, 1921 இல் பனகல் அரசர் முதல்வரானார். ஒரிசாவைச் சேர்ந்த ஏ. பி. பாட்ரோ க்கு கல்வித்துறை வழங்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் செப்டம்பர் 11, 1923 இல் முடிவடைந்தது.[1][6][9][9][10][10][11]
Remove ads
தாக்கம்
பிரித்தானிய ஆட்சியில் இந்தியர்களுக்கு பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. 1916 இல் பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1920 இல் ஆட்சிக்கு வந்தது. 1926-30 இடைவெளியைத் தவிர 1937 வரை சென்னை மாகாணத்தை ஆண்டது. நீதிக்கட்சி அரசின் சில திட்டங்கள் இன்றும் அமலில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துவத்திற்கான அரசாணை (Communal GO # 613) பிறப்பிக்கப்பட்டது. இதுவே தற்போது இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் இட ஒதுக்கீடு கொள்கையின் முன்னோடி.[12][13][14] பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசே இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றி இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறையினை தோற்றுவித்தது. இச்சட்டம் டிசம்பர் 18, 1922 இல் தாக்கல் செய்யப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்டது.[14][15] இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவதைத் தடை செய்திருந்தது. ஏப்ரல் 1, 1921 இல் நீதிக்கட்சி பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தடையை நீக்க சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன் பலனாக, 1926 இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சென்னையின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.[16] தமிழ்நாட்டில் இப்போது வழக்கிலிருந்து வரும் சத்துணவுத் திட்டம் முதன் முதலாக நீதிக்கட்சி அரசால் காலை உணவுத் திட்டமாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[17]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads