தெலங்காணா
தெற்கு இந்தியாவிலுள்ள மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெலங்காணா (Telengana, தெலுங்கு: తెలంగాణ) அல்லது தெலுங்கானா என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது.[8] இதன் முதலமைச்சராக க. சந்திரசேகர ராவ் பதவியேற்றுக்கொண்டார். தெலுங்கானா என்பதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும். இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது. இது முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் ஆட்சிப்பகுதியைத் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது. தெலங்காணாவை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 2013-ஆம் ஆண்டு சூலை 30-ஆம் தேதி நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.[9]

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருட்டிணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.


Remove ads
வரலாறு
தெலுங்கானா மண்டலம் மகாபாரதத்தில் தெலிங்கா நாடு எனக் குறிப்பிடப்படுகிறது.[10] இங்கு தெலவானா என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் சண்டை புரிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இதற்கு உறுதுணையாக வாரங்கலில் இருக்கும் பாண்டவுல குகாலு காட்டப்படுகிறது.
இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர். கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி, குதுப் சாகி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்சாகி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமசுதானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.
விடுதலைக்குப் பிறகான வரலாறு
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17, 1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951 வரை தொடர்ந்தது.
மொழிவாரி மாநிலம் மற்றும் தெலுங்கானா ஆந்திரா இணைப்பு
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமசுதானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்சு காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி சிரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராசு மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.
திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது. அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர் 1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு, நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு (Gentlemen's agreement of Andhra Pradesh) (1956) ஒன்றை அளித்தது.
Remove ads
தனித் தெலுங்கானா போராட்டம்
1969 இயக்கம்
1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர். இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.[11]
ஆட்சிபுரிந்த காங்கிரசு கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரசு தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரசா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.[12]
1990-2004களில் இயக்கம்
இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர்.[13][14][15][16][17] அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.[18][19][20][21][22][23]
2004 பின்னர்

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெ.ரா.ச. கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின.[24] மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது.[25] இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது.[26][27][28] காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது.[29][30][31] மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர்.[32][33] ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.[34]
இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரசா கட்சியை துவக்கினார்.[35][36] இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.[37]
நவ தெலுங்கானா பிரசா கட்சி நவம்பர் 2, 2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.[38]
2009
2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.[39][40][41]
புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரசா இராச்சியம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர். நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.[42][43]
இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன; மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது. முதலமைச்சர் இராசசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[44][45][46]
திசம்பர் 2009: தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார். அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது.[47][48][49][50][51]
திசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.[52]
Remove ads
மாவட்டங்கள்
இந்தியாவின் 29வது மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[53][54][55] பிப்ரவரி, 2019-இல் நாராயணன்பேட்டை மாவட்டம் மற்றும் முலுகு மாவட்டம் புதிதாக நிறுவபப்ட்டது.[56] மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கப்பட்டப் பின்னர் தெலங்கானா மாநிலம் தற்போது 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:
- ஆதிலாபாத் மாவட்டம்
- ஐதராபாத்து மாவட்டம்
- கம்மம் மாவட்டம்
- கரீம்நகர் மாவட்டம்
- காமாரெட்டி மாவட்டம்
- கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்
- சங்காரெட்டி மாவட்டம்
- சித்திபேட்டை மாவட்டம்
- சூரியபேட்டை மாவட்டம்
- நல்கொண்டா மாவட்டம்
- நாகர்கர்னூல் மாவட்டம்
- நிசாமாபாத் மாவட்டம்
- நிர்மல் மாவட்டம்
- பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்
- பெத்தபள்ளி மாவட்டம்
- மகபூப்நகர் மாவட்டம்
- மகபூபாபாத் மாவட்டம்
- மஞ்செரியல் மாவட்டம்
- மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
- மேடக் மாவட்டம்
- யதாத்ரி புவனகிரி மாவட்டம்
- ரங்காரெட்டி மாவட்டம்
- ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்
- வனபர்த்தி மாவட்டம்
- வாரங்கல் கிராமபுற மாவட்டம்
- வாரங்கல் நகர்புற மாவட்டம்
- விகராபாத் மாவட்டம்
- ஜக்டியால் மாவட்டம்
- ஜன்கோன் மாவட்டம்
- ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
- ஜோகுலம்பா மாவட்டம்
- நாராயணன்பேட்டை
- முலுகு
முக்கிய நகரங்கள்
தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும்.
உள்ளாட்சி அமைப்புகள்
தெலங்கானா மாநிலத்தில் ஆறு மாநகராட்சிகளும், முப்பத்து எட்டு நகராட்சிகளும், இருபத்து ஐந்து நகரப் பஞ்சாயத்து மன்றங்களும், 443 உறுப்பினர்களுடன் கூடிய ஒன்பது மாவட்ட ஊராட்சி முகமைகளும், 6497 உறுப்பினர்களுடன் கூடிய 443 மண்டல மக்கள் மன்றங்களும், 8778 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.
மக்கள் தொகையியல்
114,840 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தெலங்கானா மாநிலம், 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 351.94 இலட்சம் மக்கள் தொகையுடன் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 177.04 இலட்சம் ஆகவும், பெண்கள் 174.90 இலட்சம் ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டு (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 13.58% ஆக உயர்ந்துள்ளது. ஊர்நாட்டு மக்கள் தொகை 215.85 இலட்சங்கள் ஆகவும்; நகர்ப்புற மக்கள் தொகை 136.09 இலட்சங்கள் ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 988 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 307 பேர் வீதம் உள்ளனர். தலித்துகள்(தாழ்த்தப்பட்டோர்) தொகை 54.33 இலட்சமாகவும்; பழங்குடி மக்கள் மக்கள் தொகை 32.87 இலட்சமாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.28 இலட்சமாக உள்ளது. மாநில சராசரி படிப்பறிவு 66.46% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.92% ஆகவும் உள்ளது. மாநிலத்தில் பணி புரிபவர்கள் 164.53 இலட்சமாகும்.[57]
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 85% ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12.7% ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1.3% ஆக உள்ளது. பிற சமயத்தவர்களின் மக்கள் தொகை 0.9% ஆக உள்ளது.[58][59]
மொழிகள்
தெலுங்கு மொழி ஆட்சி மொழியாக உள்ளது. 77 விழுக்காடு மக்கள் தெலுங்கு மொழியும், 12 விழுக்காடு மக்கள் உருது மொழியும் மற்றும் 13 விழுக்காட்டினர் வேறு மொழிகளையும் பேசிகின்றனர்.[60][61]
Remove ads
காணத்தகுந்த இடங்கள்


- ஐதராபாத்
- சார்மினார் - நான்கு மாடங்களுடன் ஐதராபாத்தின் முதன்மை அடையாளம்;வளையல் சந்தை.
- பாலாக்ணுமா அரண்மனை
- கோல்கொண்டா கோட்டை - வரலாற்றுச் சின்னம்
- சாலர் சங் அருங்காட்சியகம் - உலகின் மிகப்பெரிய, தனியொரு மனிதனால் உலகமுழுவதிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம். வேறெங்கும் காணக்கிடைக்காத நேர்த்தியான கலைப்பொருட்களை கொண்டது.
- மக்கா மசூதி - கற்களால் கட்டப்பட்ட மசூதி - இந்தியாவின் மிகப் பெரிய மசூதிகளிலொன்று. பரம்பரியமிக்க கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டது. இசுலாம் மதத்தினரின் மிகப் புனிதமான மெக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களை மசூதியின் நடுப்பகுதியின் ஒப்பனை வளைவுகளில் அமைத்து கட்டப்பட்டதால் மெக்கா மசூதி என்று பெயர் பெற்றது.
- பிர்லா கோளரங்கம்
- உசேன் சாகர் - இரட்டை நகரங்களான ஐதராபாத்தையும் செகந்திராபாத்தையும் பிரிக்கும் செயற்கை ஏரி. தண்ணீர் விளையாட்டுகள், படகுப் போட்டிகள் நடத்தப்படும் ஏரி.
- துர்கம் செருவு- அழகான ஏரி.
- சில்கூர் பாலாசி கோவில், விசா பாலாசி எனவும் அறியப்படும். அமெரிக்கா போக விசா தங்கு தடையில்லாமல் கிடைக்க வழி செய்யும் கடவுள் என்று கொண்டாடப்படும் ஏழுமலையான் கோவில்.
- ஒசுமான் சாகர்- கன்டிப்பேட் எனவும் அறியப்படும். ஐதராபாத் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலொன்று.
- புரானி அவேலி - நிசாமின் அலுவல்முறை வசிப்பிடம்.
- சங்கி கோவில்
- பிர்லா மந்திர் - பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட சிரீ வெங்கடேசுவரரின் (திருமால்) பளிங்குக்கல்லாலான திருக்கோயில்.
- சிரீ உச்சயினி மகாகாளி (மாங்க்காளி) கோவில் - செகந்திராபாத் தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள இக்கோவிலின் போனாலு விழா புகழ்பெற்றது. வருடமொருமுறை இங்கு நடைபெறும் மகாங்காளி சாத்ரா என்னும் திருநாள் மிகவும்
- பெற்றது.
- மாதாபூர் - தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம். ஐட்டெக் சிடி, ஆந்திராவின் சிலிகான் வேல்லி என பெயர் பெற்றது.
- எதுலாபாத் - செகந்தராபாத் நகரின் புறநகரான கட்கேசுவரம் அருகேயுள்ள பெரிய ஊர். சிரீ ஆண்டாலம்மவாரி குடி எனப்படும் தெய்வ ஆண்டாளின் திருக்கோயிலுள்ள தலம். ஆந்திராவின் திருவில்லிபுத்தூர் இக்கோவிலின் கருவறை முதலான அமைப்புகள்தமிழ்நாட்டுத் திருவில்லிபுத்தூர் போலவே அமைந்து வழிபாட்டு முறைகளும் அத்தலத்தினுடையனவே.
- தெலங்காணாவின் பிற மாவட்டங்கள்
- நாகார்சுன சாகர் - கிருட்டிணா ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை - நல்கொண்டா மாவட்டம்
- சிரீராம்சாகர் - கோதாவரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை - நிசாமாபாத் மாவட்டம்
- பீச்சுப்பள்ளி - (அனுமார் கொவில்) மெகபூப்நகர் மாவட்டத்தில் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான அனுமான் ஆலயம்.
- ஆலம்பூர் - மெகபூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருட்டிணா நதிகள் இணையுமிடத்தில் தட்சிண காசி என்று கொண்டாடப்படும், பரமேசுவரர் மற்றும் சோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம். இங்கு பின்பற்றப்படும் ஒரு வியப்பான வழிபாட்டு முறையின் வாயிலாக பிள்ளைப் பேறு கிட்டும் என்று எண்ணப்படுகிறது.
- வாரங்கல் - இந்தப்பகுதியை ஆண்ட காக்கத்தீய பேரரசின் தலைநகர்.
- வாரங்கல் கோட்டை, 11-12ஆம் நூற்றாண்டில் காக்கத்தீயர்கள் கட்டிய கோட்டை
- வாரங்கல் பத்ரகாளி (ரௌதிர தேவி) கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்
- வாரங்கல்- ராமப்பா கோவில்
- வாரங்கல் - பகால் ஏரி 1213 ஆண்டு காக்கத்தீய அரசன் கணபதிதேவன் செயற்கையாக உருவாக்கிய 30 சகி.மீ. பரப்புள்ள அழகிய ஏரி.
- பாசரா - நாட்டிலுள்ள ஒரு சில தெய்வ கலைமகள் (சரசுவதி) கோவில்களில் மிக முக்கியமான தெய்வ கலைமகள் கோவில் கோவில் வலைத்தளம்
- தேசிய பூங்காக்கள் - பகாலா, எதுரு நகரம், பிராணகிதா, கின்னேராசனி, கவால், போச்சாரம்
- அனந்தகிரி காடு - அனந்தபத்மநாபர் கோவில் வலைத்தளம் பரணிடப்பட்டது 2014-09-03 at the வந்தவழி இயந்திரம்
- மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை
- பில்லல மர்ரி: மெகபூப் நகர் மாவட்டதில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையானதும் குறைந்தது 5 குறுக்கம் (ஏக்கர்) அளவில் பரவியுள்ளதுமான மிகப்பெரிய ஆலமரம் உள்ள இடம். ஏறக்குறைய ஆயிரம் மக்கள் இதன் நிழலில் இளைப்பாறலாம். ஏராளமான மக்கள் சுற்றுலா வருகின்றனர்.
- பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற இராமர் கோவில். பக்த ராமதாசு வழிபட்ட கோவில்.
- யாதகிரிகுட்டா: திருமகள்நரசிங்கமர் (லட்சுமி நரசிம்மர்) சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.
- காளேசுவரம்: ஆந்திர-மராட்டிய மாநிலங்கள் எல்லையில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மிக சிறப்புற்ற காளேசுவர முக்தீசுவர சுவாமி எனப்படும் சிவன் கோயில். ஐதராபாதிலிருந்து 277 கி.மீ தொலைவிலும், கரீம் நகர் பட்டணத்திலிருந்து 125 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு கோதாவரி ஆற்றோடு பிராணகிதா என்ற ஆறும், கண்ணுக்குத்தெரியாத கோவிலிருந்து வரும் மற்றுமொரு ஆறு அந்த்தர்வாகினியாய் கலப்பதால் தென்நாட்டு முக்கூடற் (திரிவேணி) சங்கமம் என பெயர்பெற்றது. கோவிலின் மிக இன்றியமையாத சிறப்பு தன்மை இக்கோவிலின் கருவறை மையத்தில் சிவனுக்கு (காளேசுவரர்) ஒரு இலிங்கமும், எமனுக்கு (முக்தீசுவரர்) மற்றொரு இலிங்கமுமாக இரண்டு இலிங்கங்கள் இருப்பதுதான்.
- நாகுனுர் கோட்டை: கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள காக்கத்தீய தலைமுறை மன்னர்களின் அற்புதமான கோட்டை. அவர்களின் ஆளுமையின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோட்டைக்குள் பல பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும், தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள மேல்மாடங்கள் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுப் போலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுப் போலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரும் விருந்து
- துலிக்கட்டா: கரீம்நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள மிகவும் தொன்மையான பௌத்த சமய சான்றுகளுடைய இடம். வெளிநாட்டு இறைநேயர் மெகசுதனிசு தன்னுடைய இண்டிகா என்ற நூலில் இந்த இடத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு வரை சாதவாகன மன்னர்களின் ஆட்சியில் மிகச் செழிப்பாகயிருந்த பகுதி. பல பௌத்த சமயச் சின்னங்களும் ஏராளமாக உள்ளன. வருடமொரு முறை மூன்று நாட்கள் சனவரி மாதத்தில் இங்கு நடக்கும் சாதவாகன விழா புகழ் மிக்கது. உலக முழுவதிலுமிருந்தும் பல பௌத்த சமயத் துறவிகள் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள்.
- கொண்டகட்டு: கரீம்நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள அனுமார் கோவில், கொண்டலராயா மற்றும் பொசப்போட்டானா குகைகள்.
- மொலாங்கூர் கிலா : கரீம்நகர் மாவட்டம்.
- மன்தானி : பழம் மறை பாடச்சாலை. கரீம் நகர் பட்டணத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் கோதாவரி ஆற்றங்ககரையில் அமைந்துள்ளது. மறைகளை கற்கும், கற்பிக்கும் மிகப் தொன்மையான இடம். திருமறைகளையும், இறைக் கலைகளையும் நன்கு கற்ற ஆயிரம் பார்பணக் குடும்பங்கள் இன்றும் இங்கு வாழ்வதாகக் கூறப்படுகிறது. வடமொழி சொல்லான 'மந்த்ர கூட்டம்' பெயர்க்கான வேர்ச்சொல். உள்ளூர் மறை விற்பன்னர்கள் மிகுந்த பய பக்தியுடன் இந்த ஊரை மந்த்ரபுரி என்று குறிப்பிடுகின்றனர். திருமலை-திருப்பதி திருவாலயத்தோர்(தேவஸ்தானத்தினர்) ஒரு திருமறை பாடச்சாலையை நிறுவியுள்ளனர்
- வேமுலவாடா - கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் பொ.ஊ. 750–975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட சிரீ ராச ராசேசுவர சுவாமி கோவிலுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் இராமன், இலக்குவணன், இலட்சுமி, கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான திரு பீமேசுவரரின் திருக்கோவில் மிகச் சிறப்புற்றது. மிகவும் ஈர்கதக்கது, இந்தக்கோவிலுக்குள் கட்டப்பட்டிருக்கும் குறைந்தது 400 ஆண்டுகள் பழமையான ஒரு மசூதிதான். இக்கோவில் தெய்வத்தின் ஆழ்ந்த ஒரு முசுலீம் இறைநேயரின் (பக்தர்) நினைவை போற்ற கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
- உமா மகேசுவரம் - மெகபூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்சுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட திருக்கோயில் உள்ளது. குன்றின் கீழிருந்து 5கி.மீ தூரமுள்ள கோவிலுக்கு செல்வது சற்று கடினமானது. இன்றும் எண்ணற்ற துறவிகளுக்கு உறைவிடம். கருவறைக்கு அருகிலுள்ள ஒரு அறியமுடியாத குணப்பண்பு கொண்ட பாபநாசனம் என்ற இடத்தில் ஆண்டுமுழுவதும் எவ்வளவு இரைத்தாலும் ஒரு குறிப்பட்ட அளவு நீர் எப்போதும் இருக்கும்படியாக உள்ளது. இந்த இடத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது.
- கத்வால் கோட்டை
- கொலனுபாக்க: நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையான ஒரு சமணக் கோவில். குல்பாக்சி என்று சமணர்களால் போற்றப்படும் தலம். இக்கோவிலில் சமணக் கடவுளர்களான தவசி (ரிசிபர்), நேமிநாத், மாவீர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளோடு மற்ற எட்டு தீர்த்தங்கரர்களின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இப்போதுள்ள அமைப்பிலேயே இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. பொ.ஊ. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் தழைத்தோங்கிய போது இந்தக் கோயில் இன்றியமையாத இடமாகத் திகழ்ந்தது. சுவேதாம்பரா (வெள்ளாடை) எனும் சமணசமயப் பிரிவினருக்கு இன்றும் மிகப்பெரிய இறைப்போக்குத் தலம்.
Remove ads
தனிமாநில அறிவிப்பிற்கு எதிர்ப்பு
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்காணா தனிமாநிலம் அமைப்பதற்கு சீமாந்தரா எனப்படும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா எனப்படும் உள்நிலப் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.[62][63][64][65][66][67] எனினும், தெலுங்காணா இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக 2014 சூன் 2 முதல் செயல்படத்தொடங்கியது.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads