சேரந்தீவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேரந்தீவம் (சேரந்தீபிட்டி, Serendipity) என்பது ஆகூழின்பம் அல்லது எதிர்பாராத நன்மை என்னும் பொருள் தரும் இட்டுக்கட்டப்பட்ட ஆங்கிலச்சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும்[1] இந்தச் சொல் 1754ல் ஒரேசு வால்போல் என்பவரால் இட்டுக்கட்டப்பட்டது. தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தற்செயலாகத் தான் கண்டுபிடித்தது ஒன்றைப் பற்றி விவரிக்கும்போது சேரந்தீவின் மூன்று இளவரசர்கள் என்ற பாரசீக விந்தைக்கதையைக் குறிப்பிட்டு எழுதினார். இந்த இளவரசர்கள் எப்போதுமே தற்செயலாகவோ அல்லது மதிநுட்பத்தாலோ தாங்கள் தேடாமலேயே எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள், என்று அவர் எழுதினார்.

சேரந்தீவம் அல்லது தற்செயலாகக் கண்டுபிடிப்பது என்ற கருத்து அறிவியல் வரலாற்றில் அடிக்கடி நடப்பதுதான். 1928ல் அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்ததும், 1945ல் பெர்சி ஸ்பென்சர் நுண்ணலைத் தணலடுப்பைக் கண்டுபிடித்ததும் இவ்வாறான தற்செயலான நிகழ்வுகள்தாம்.
Remove ads
வேர்ச்சொல் அல்லது சொற்பிறப்பியல்
இந்தச் சொல் ஆங்கிலத்தில் முதன்முறையாக ஒரேசு வால்போல் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்தான் தோன்றியது. அவர் அதைப் பாரசீக மொழியிலிருந்த சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் என்ற கதையில் பாரசீகச்சொல்லான சேரந்தீப் என்ற சொல்லிலிருந்து எடுத்ததாகச் சொன்னார். பாரசீக மொழியில் சேரந்தீப் என்ற சொல் அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையைக் குறித்தது. இது தமிழ் மொழிச் சொல்லான சேரளந்தீவு அல்லது சமக்கிருதச் சொல்லான சுவர்ணத்வீபா அல்லது பாரசீக மொழிச் சொல்லான ஸரந்தீப் (سرندیپ) என்பவற்றில் ஒன்றிலிருந்து வந்த சொல்லாகக் கருதப்படுகிறது. வரலாற்றில் பண்டைய இலங்கையின் சில பகுதிகள் நெடுங்காலம் தமிழ் அரசர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பழங்காலத்தில் ஆண்ட தமிழ் மன்னர்களான சேர அரசர்கள் பெயரிலிருந்தும், தீவு அல்லது தீவம் அல்லது தீபம் என்ற சொல் இலங்கையைப் போன்ற நீர் சூழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் என்பதாலும், சேரர்களின் ஆட்சியின் கீழிருந்த தீவுப்பகுதியை சேரந்தீவு என்று அழைத்ததால் அரபு வணிகர்களும் ஸரந்தீப்என்று அழைத்தார்கள்.[2][3]
Remove ads
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும்
பல சிந்தனையாளர்கள் அறிவியலில் ஆகூழ் அல்லது அதிர்ஷ்டத்தின் தாக்கம் பற்றிக் கருத்துரைத்திருக்கிறார்கள். வால்போல் இந்தச் சொல்லை ஆக்கியபோது குறிப்பிட்ட ஒரு கருத்தைத் தற்கால உரையாடல்களில் அடிக்கடி மறந்து விடுகிறோம். அதாவது சிதறிக் கிடக்கும் வெவ்வேறு தரவுகளைக் கோர்த்துப் பயனுள்ள புதிய முடிவுக்கு வருவதற்கான மதிநுட்பம் அல்லது கூர்மையான அறிவின் தேவையையும் மூன்று சேரந்தீவு இளவரசர்கள் கதையைப்பற்றிச் சொன்னபோது வால்போல் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் நெறியும், அறிவியலாளர்களின் மதிநுட்பமும், இது போன்ற பல்வேறு வகைகளில் தற்செயலாகக் கண்ணுக்குப் படுபவற்றைப் பயன்படுத்திக் கொண்டு புதியவற்றைக் கண்டுபிடிக்கத் துணை புரிகின்றன.
Remove ads
வணிகத்திலும் சூழ்வினைத்திறத்திலும்
எம். ஈ. கிரேப்னர் எதிர்பாராமல் கிடைக்கும் சேரந்தீவ லாபத்தை ஒரு புதிய வணிகநிறுவனத்தை வாங்கும் தறுவாயின்போது நிகழக்கூடியதாக விவரிக்கிறார். இரு நிறுவனங்கள் தனித்தனியே ஈட்டிய லாபத்தைவிட அவை ஒன்றாக இணைந்த பின் ஒத்திசைவால் விளையும் கூட்டாற்றலால் பன்மடங்கு லாபத்தை ஈட்டக்கூடும். இது முற்றிலும் எதிர்பாராதது. இகுஜிரோ நோனாகா[4] தன் ஆய்வுக்கட்டுரையில் புத்தாக்கத்தில் சேரந்தீவத்தன்மையைப் பற்றி மேலாளர்கள் நன்குணர்ந்துள்ளார்கள் என்றும், ஜப்பானிய நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணம் அவை வெறுமனே தகவல்களை அலசி ஆய்ந்து நுட்ப அறிவைப் படைப்பதைத் தவிர்த்து விட்டு ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எழுத்தில் வராத, தனி மனிதர்களின் உள்ளுணர்வுகள், உள்ளறிதல்கள், முன்னுணர்வுகளைத் திறந்துவிட்டு அவற்றை நிறுவனம் முழுதிற்கும் பயனுள்ளதாக மாற்றும் திறமையால்தான் என்கிறார்.
சேரந்தீவம் என்பது ஒரு சூழ்வினைத்திறப்பயன் என்றும் அதனால் ஒரு நிறுவனம் தனது படைப்பாற்றலைத் திறக்க முடியும் என்று கூறுகிறார்கள் நேப்பியரும் வோங்கும் (2013).[5]
சேரந்தீவம் என்பது போட்டியாளர் பற்றிய உளவு தொடர்பான ஒரு முக்கியக் கோட்பாடு ஏனெனில் நம் பார்வைக்குப் படாதவற்றைத் தவிர்க்க உதவும் கருவிகளில் அதுவுமொன்று.[6]
பயன்கள்
சமூகவியலாளர் ராபர்ட் மெர்ட்டன் தனது "சமூகக் கோட்பாடும் சமூகக் கட்டமைப்பும்" (Social Theory and Social Structure, 1949) என்ற நூலில் "சேரந்தீவப் பாங்கு" என்பது எதிர்பாராத, முரண்பட்ட, சூழ்வினைத்திறனுள்ள தரவுகளைக் கவனித்து அதைப் புத்தம்புதுக் கோட்பாடுகளை உருவாக்குவதற்கோ அல்லது நடைமுறையில் இருக்கும் கோட்பாடுகளை விரிவாக்குவதற்கோ வாய்ப்பாகப் பயன்படுத்துவது பொதுவாக எல்லோரும் செய்வதுதான் என்கிறார். இவரது கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்செல் ஸ்ட்ரௌசும் பார்னி கிலேசரும் எழுதிய நங்கூரக் கோட்பாடு (Grounded Theory) என்ற நூலில் சேரந்தீவம் ஒரு சமூகவியல் செயல்முறையாகவே அறியப்படுகிறது. ராபர்ட் மெர்ட்டன், எலினார் பார்பருடன் இணைந்து எழுதிய "சேரந்தீவத்தின் பயணங்களும் சாகசங்களும்" (The Travels and Adventures of Serendipity[7] என்ற நூலில் சேரந்தீபிட்டி (சேரந்தீவம்) என்ற சொல் படைக்கப்பட்டதிலிருந்து அந்தச் சொல்லின் தோற்றத்தையும் பயன்களையும் வரலாறாக வரைகிறது. நூலின் துணைத்தலைப்பு “இது சமூகவியலின் சொற்பொருளியல் மற்றும் அறிவியலின் சமூகவியல் பற்றிய ஆய்வு” என்று குறிப்பிடுகிறது. மேலும் திட்டமிட்ட சோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கும் அறிவியல் நெறி போல சேரந்தீவம் என்பதும் ஓர் அறிவியல் ”வழிமுறை” என்ற கருத்தை முன் வைக்கிறது.
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads