சைல் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைல் சரணாலயம் (Chail Sanctuary) என்பது இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சரணாலயம் ஆகும். சைல் சரணாலயம், கடமான், இந்திய மான் வகைகளுள் ஒன்றான கோரல் மற்றும் சீர் பெசன்ட் பறவையின் மலை வாழிடமாக அமைந்துள்ளது. இங்குக் கேளையாடு மற்றும் கலிஜின் ஆகியவை அந்தி மற்றும் விடியற்காலையில் காணப்படுகின்றன.[1] இவற்றைப் பார்வையிடச் சிறந்த காலம் மார்ச் முதல் அக்டோபர் வரை ஆகும்.
வரலாறு
சைல் சரணாலயம் 110 சதுர கி. மீ. வனப்பரப்பினை உள்ளடக்கியது. 1976ஆம் ஆண்டில், சைல் வனவிலங்கு சரணாலயம் கண்டறியப்பட்டு, அரசாங்கத்தின் பரிசீலனையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. சீர் பெசண்ட் இனப்பெருக்கம் மற்றும் மறுவாழ்வு திட்டம் 1988-ல் தொடங்கப்பட்டது. கருவாலி மரம், பைன் மற்றும் புல்வெளிகளுடன் கூடிய அடர்ந்த வனமாக இது உள்ளது.
விலங்குகள்
இச்சரணாலயத்தில் முக்கியமான பாலூட்டிகள் இனங்கள் பல உள்ளன. இவற்றில் செம்முகக் குரங்கு, சிறுத்தைகள், இந்தியக் கேளையாடு மற்றும் முள்ளம்பன்றி ஆகியவை அடங்கும். இமாலய கருப்பு கரடி, காட்டுப்பன்றி, சாம்பல் குரங்கு, கடமான் மற்றும் இந்தியக் குழிமுயல் ஆகியவை இப்பகுதியில் காணப்படும் பிற இனங்களாகும். ஐரோப்பிய சிவப்பு மான் அரை நூற்றாண்டுக்கு முன்பு பட்டியாலாவின் முன்னாள் மகாராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இவை எதுவும் 1988-ல் கணக்கெடுப்பின் போது காணப்படவில்லை. சீர் பெசன்ட் இனப்பெருக்கம் மற்றும் மறுவாழ்வு மையம், சீர் பெசன்ட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது.[2]
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் கருத்துப்படி, சைல் வனவிலங்கு சரணாலயம் சைலின் முக்கிய ஈர்ப்பாக கருதப்படுகிறது.[3] அடர்ந்த மூடப்பட்ட ஓக் காடுகள், தேவதாரு மரம், இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கு, 10,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளது. இது செம்முகக் குரங்கு, சிறுத்தை, இந்திய முண்ட்ஜாக், கோரல், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, சாம்பல் குரங்கு மற்றும் இமயமலை கருங்கரடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அழிந்து வரும் சில ஊர்வன மற்றும் பறவை இனங்களையும் இச்சரணாலயம் அழிவிலிருந்து காத்து வருகின்றது.
Remove ads
அணுகல்
சைல் வனவிலங்கு சரணாலயத்திற்கு கால்கா - சிம்லா சாலை வழியாகவும், அம்பாலா - கால்கா தொடருந்து பாதையில் கால்கா வரை தொடருந்தில் பயணித்தும் அடையலாம். சைல் வனவிலங்கு சரணாலயம் சிம்லா மற்றும் சண்டிகரின் முக்கிய வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads