ஜெயக்குமார் தேவராஜ்
மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், (Jeyakumar Devaraj, பிறப்பு: 1955), மலேசிய அரசியல்வாதியும், மலேசிய இந்தியச் சமூக ஆர்வலரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ ச. சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு, வெற்றி பெற்று, மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.[2]
இவருடைய மலேசிய சமூகக் கட்சி (Socialist Party of Malaysia) பதிவு செய்யப் படுவதில் தடைகள் ஏற்பட்டன. அதனால் அவர் மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party (Malaysia) சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயக்குமார் தேவராஜ், 1999-ஆம், 2004-ஆம் ஆண்டுகளில் இதே சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.[3]
இவர், மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.[4] மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நிறைய உதவிகளைச் செய்து வருகின்றார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயக்குமார் 1955-ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தார். பினாங்கு ஃபிரி பள்ளியில் (Penang Free School) பயின்றார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார். அரசாங்கச் சேவையில் சேர்ந்து பினாங்கு, சரவாக், சபா, பேராக் மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணி புரிந்தார்.
அரசியல்
1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தார். அந்தத் தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் ச. சாமிவேலு பெரும் செல்வாக்கோடு விளங்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட மருத்துவராகச் சேவை செய்த ஜெயக்குமார், தன்னுடைய அரசு சேவையைத் துறந்தார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
சமூக விழிப்புணர்வு பயிற்சிகள்
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்திய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் எனும் இலட்சியத்தில் அலைகள் எனும் தேசிய ரீதியிலான ஒரு சமூகக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
அதற்கு அவருடைய மனைவி திருமதி மோகராணி பெரும் உறுதுணையாக இருந்தார். அலைகளின் ஆதரவாளர்கள் சுங்கை சிப்புட் ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் உள்ள தோட்டப்புறத் தமிழர்களுக்கு கல்வி, சமூக விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தினர். தோட்டப்புற மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்து வந்தனர்.
குடியுரிமை, அடையாளக் அட்டைகள், குடியுரிமை இல்லாதவர்களுக்கு பத்திரங்களைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைத் தவிர, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கெடா மாநிலங்களிலும் இவர்களின் தொண்டூழியச் சேவைகள் தொடந்தன.
Remove ads
தேர்தல் முடிவுகள்
அண்மைய நடப்புகள்
கமுந்திங் சிறையில்
இவர் 2011 சூன் 25 ஆம் தேதி, பினாங்கு சுங்கை டுவா எனும் இடத்தில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். மலேசியாவில் தூய்மையான, நேர்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களிடம் வழங்கி வந்தார். அப்போது அவர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். 28 நாட்கள் சிறையில் இருந்தனர்.[6]
இவர்கள் பேராக், தைப்பிங் நகரில் இருக்கும் கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். ஜெயக்குமார் தேவராஜ் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் உள்ள பல்லாயிரம் இந்தியர்கள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர் விரைவில் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.[7].
சிறப்பு பிரார்த்தனைகள்
மலேசிய இந்துக்கள் கோயில்களிலும், கிறித்துவர்கள் மாதா கோயில்களிலும் பிரார்த்தனை செய்தனர். பிற இனத்தவரும் இவருக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர்[8] கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பியும் வைத்தனர்.
மலேசியத் தனியார் மருத்துவர் கழகத்தின் (Federation of Private Medical Practitioners’ Association) 5,000 மருத்துவர்கள், ஜெயக்குமார் தேவராஜை விடுதலை செய்யச் சொல்லி பகிங்கரமாகக் கண்டனம் தெரிவித்தனர். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 176 மருத்துவர்களும் ஆழமான கண்டனங்களைத் தெரிவித்தனர்.[9]
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து
ஏறக்குறைய ஒரு மாதம் சிறையில் இருந்தார். ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், 2012 மார்ச் மாதம் ரத்துச் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அறிவித்தார் அதைப் பற்றி மலேசிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
மருத்துவர் ஜெயக்குமார் மீது வழக்கு
மலேசிய சமூகக் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கடந்த 10 அக்டோபர் 2011-இல் பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டனர். அவர்களில் 24 பேர் விடுதலை செய்யப் பட்டனர்.[10] அவர்களில் மருத்துவர் ஜெயக்குமார் உட்பட அறுவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஏனெனில் அவர்கள் மீதான மற்றொரு வழக்கு புத்ராஜெயாவில் நடைபெற்றுக் கொண்டு இருந்ததால் அவர்களால் வர இயலவில்லை. மருத்துவர் ஜெயக்குமார் மீது இவ்வாறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
“ | The members were charged under Section 48 (1) of the Societies Act with possessing documents for an illegal assembly and Section 29 (1) of the Internal Security Act with possession of subversive documents. They were alleged to have committed the offences inside a bus at about 3.30pm on June 25. | ” |
இலவச மருத்துவச் சேவைகள்
மரு. ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.[11]
அலைகள் இயக்கம் மலேசியத் தொழிலாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப் பட வேண்டும் என்று நாடு தழுவிய நிலையில் எதிர்ப்பு அலைகள் தோன்றின. 1993 ஆம் ஆண்டில், இனப் பாகுபாடின்றி 1000 தோட்டத் தொழிலாளர்கள் மலேசிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒன்று கூடி சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மருத்துவர் ஜெயக்குமார் விளங்கினார். அதனால் அண்மைய தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு மருத்துவர் ஜெயக்குமார் பின்புலமாக இருக்கலாம் என்று அரசு கருதுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads