ஜோக்கர் (2019 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோக்கர் (ஆங்கிலம்: Joker) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை டாட் பிலிப்சு எழுதி இயக்கியுள்ளார். டிசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் எழுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜோக்குவின் பீனிக்சு, ரொபேர்ட் டி நீரோ, சாசி பீட்சு, பிராசெஸ் கான்ராய், பிரெட் கல்லன், கிளென் பிலெஷ்சியர், பில் கேம்ப், ஷியா விகம், மற்றும் மார் மேரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்சு, டிசி பிலிம்சு, மற்றும் ஜாயிண்டு எபர்டு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தினை டாட் பிலிப்சு உருவாக்க ஆரம்பித்தார். மார்ட்டின் ஸ்கோர்செசியின் டாக்சி டிரைவர் மற்றும் த கிங் ஆஃப் காமெடி ஆகியத் திரைப்படங்களின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. இத்திரைப்படம் நியூயார்க்கு நகரம், செர்சி நகரம், மற்றும் நுவார்க் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. பேட்மேன் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக இத்திரைப்படத்திற்கு ஆர்-மதிப்பிடப்பட்டது (பெரியவர்கள் மட்டும் பார்க்கலாம்).
ஜோக்கர் ஆகத்து 31, 2019 அன்று வெனிசு திரைப்படத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அங்கு தங்கச் சிங்கம் விருதினை வென்றது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் அக்டோபர் 4, 2019 அன்று வெளியானது. விமர்சகர்களை இத்திரைப்படம் இரண்டாக பிரித்தது. பீனிக்சின் நடிப்பும் திரைப்படத்தின் இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தின் கருமை தொனியும், வன்முறையை போற்றும் காட்சிகளும் பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டன. த டார்க் நைட் ரைசஸ் திரையிடப்பட்ட போது 2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த திரையரங்கம் இத்திரைப்படத்தினை காட்சியிட மறுத்தது. [6] இவற்றை மீறி பல வருவாய் சாதனைகளை ஈட்டியது. ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்கள் வருவாயினை ஈட்டி, இம்மைற்கல்லினை தாண்டிய முதல் ஆர்-மதிப்பிடப்பட்ட திரைப்படம் என்ற பெருமையினைப் பெற்றது. 2019 இல் வெளிவந்த திரைப்படங்களின் வருவாய் பட்டியலில் ஆறாவது இடத்தினைப் பெற்றது. மேலும், அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியலில் 31 ஆம் இடத்தினைப் பிடித்தது.
ஜோக்கர் பல்வேறு விருதுகளை வென்றது. 92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் இத்திரைப்படம் 11 பரிந்துரைகளைப் பெற்றது. அவற்றில் இரண்டினை வென்றது - சிறந்த நடிகர் - ஜோக்குவின் பீனிக்சிற்கும் மற்றும் சிறந்த இசை - ஹில்துர் குட்னடொட்டிர்கும். பீனிக்சு மற்றும் குட்னடொட்டிர் கோல்டன் குளோப் விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ஆகியவற்றினையும் வென்றனர். ஜோக்கராக நடித்த நடிகருக்கு வழங்கப்படும் இரண்டாவது அகாதமி விருதாகும். முன்னர் 2009 இல் த டார்க் நைட் திரைப்படத்தில் ஜோக்கராக நடித்ததற்கு ஹீத் லெட்ஜர் அகாதமி விருதினை வென்றார்.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads