தஞ்சாவூர் ஓவியத்தட்டு

From Wikipedia, the free encyclopedia

தஞ்சாவூர் ஓவியத்தட்டு
Remove ads

தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியத்தட்டு, தஞ்சாவூர் அலங்காரத்தட்டு அல்லது தஞ்சாவூர்த் தட்டு (Thanjavur Art Plate) என்பது தஞ்சாவூரில் உருவாக்கப் பெற்ற செயற்கை அலங்காரப் பொருளாகும். இந்த வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப்படுகிறது. இக் கைவினைத்திறன் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களினால், நடுவில் கடவுள்கள் அல்லது தேவர்களின் உருவங்களுடன் புடைப்புரு சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படுகிறது.[1] இக் கலை வேலைப்பாடு அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு சட்டம் 1999 இல் "தஞ்சாவூர் ஓவியத்தட்டு" (Thanjavur Art Plate) என 63 வது பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1][2] தஞ்சாவூர் வீணையைப் போலவே தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உணர்த்துகிறது.

விரைவான உண்மைகள் தஞ்சாவூர் ஓவியத்தட்டு, குறிப்பு ...
Thumb
விநாயகர் மற்றும் மயில் உருவம் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர் கலைத்தட்டுகள்
Remove ads

வரலாறு

தஞ்சாவூர் ஓவியத்தட்டு அல்லது அலங்காரத்தட்டு, இரண்டாம் சரபோஜியினால் (1777–1832) தஞ்சாவூர் மராத்திய அரசு ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3][4] அரசனின் ஆலோசனைக்கு அமையத் தஞ்சாவூர் கைவினைஞர்களினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பரிசுப் பொருளாக உருவாக்கப்பட்டது.[1][5] பொருளின் அளவு மாத்திரம் வேறுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய உலோகக் கலவை, விபரம் என்பன புவியியல் சார்ந்த குறியீடுக்கு ஏற்ப மாற்றமின்றி ஒன்றாகவே உள்ளது.[1]

இக் கலைப்பொருள் தஞ்சாவூர் விஸ்வகர்மா சமூகத்தினரால் செதுக்கப்பட்டது. இந்த பரம்பரைக் கலை அவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைகிறது. இது பிரதானமாக வீடுகளில் கைவினைஞர்களினால் உருவாக்கப்படுவதால், குடிசைக் கைத்தொழிலாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனுடைய உற்பத்தி உள்ளூர் நபர்களின் தனியுரிமையாக மாத்திரம் உள்ளது.[6] கம்மாளர் என்ற சமூகத்தினர் தஞ்சைக் கலைத்தட்டினை பரம்பரையாகச் செய்துவருகின்றனர். இவர்களைக் கன்மாளர், பஞ்சாலத்தார், அஞ்சுபஞ்சாலத்தார், ரதிகாரர், ஸ்தபதி, தட்டான், பெருந்தட்டான், தட்சன், பெருஞ்தச்சன், கொல்லன், பெருங்கொல்லன் ஆகிய பெயர்களில் அழைக்கின்றார்கள்.[7]

20 ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட ஓர் அலங்காரத்தட்டு தஞ்சாவூர் அரசாங்க நூதனகாட்சிச் சாலையில் 2011 களில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த அலங்காரத்தட்டு அறிவுறுத்தப்பட்ட உலோகங்களினால் உருவாக்கப்பட்டு நடராசர், பதஞ்சலி, தாமரைப் பூவின் மேல் நிற்கும் பார்வதி ஆகியவற்றின் உருவங்களுடன் புடைப்புச் சிற்பமாக தட்டின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.[5]

Remove ads

உற்பத்தி நடைமுறை

தஞ்சாவூர் கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளைத்தகடு, செப்புத்தகடு, வெள்ளித்தகடு போன்றவை மூலப் பொருள்களாக அமைகின்றன. இத்தட்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்கள் உளி, சிற்றுளி, கருப்பு அரக்கு ஊற்றிய மரப்பலகை (வார்ப்புப்பலகை) மற்றும் உருவம் தயாரித்த ஈயம் அச்சு முதலியனவாகும்.[7] ஓவியத்தட்டின் அடித் தட்டு மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதன்மையான வடிவமைப்பு வட்டமான உலோகத் தட்டையும், அதன் பின்பு இரண்டாவது வடிவமைப்பையும் கொண்டது. அடித் தட்டில் பித்தளைத் தகட்டையும், வெள்ளித் தகட்டில் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டு, முப்பரிமாண உருவத்தை உருவாக்க ஈயத்தினால் ஆன அச்சும், தட்டைப் பொருத்த அசுபால்ட்டு அல்லது மெழுகுப் பலகையும் என தட்டில் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரிய உலோகத்தில் சிறப்புப் பெற்ற கைவினைஞர்களினால் முதலாவது அடித் தட்டு ஆயத்தப்படுத்தப்படுகிறது. அதன் பின், செதுக்கல் வடிவமைப்பு அல்லது புடைப்புச் சிற்பம் அணிகலக் கைவினைஞர்களினால் செய்யப்பட்டு, புடைப்புச் சிற்ப கெட்டிப்பூச்சு வேலை வைரப் பதிப்பு நிபுணர்களின் தனியுரிமையின்படி அமைக்கப்படுகின்றன. உற்பத்தி நடைமுறை என்பது அடித்தட்டு உருவாக்கம், பித்தளைத் தட்டு வார்ப்பு, அச்சு ஆயத்தம் செய்தல், பித்தளைத் தகட்டில் செதுக்குதல், வண்ணந் தீட்டுதல், அலங்கார வேலை ஆகியவற்றால் அமையப் பெறுகின்றது. ஓவியத்தட்டின் அடித் தட்டும் அலங்கார வேலையினால் அமைக்கப்பட்டுள்ளது. புடைப்பு வடிவமைப்பில் பூக்கள், பிற வடிவங்கள் ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. இறுதியில் பளபளப்புச் செய்வதன் மூலம் உற்பத்தி நடைமுறையானது நிறைவடைகிறது.[8]

ஓவியத் தட்டுக்கள் உள்நாட்டிலும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவை கைவினைஞர்களினால் நேரடியாக அல்லது ஏற்றுமதியாளர்கள் மூலம் கைப்பணிப் பொருட்கள் காட்சியறைகள் வைப்பதன் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன.[9]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads