காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் (Varadharaja Perumal Temple, Kanchipuram) என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.[1] இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 102 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°49'09.1"N, 79°43'28.0"E (அதாவது, 12.819200°N, 79.724450°E) ஆகும்.
வரலாறும் சிற்பக்கலையும்
பொ.ஊ. 1053-இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.[2]

அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது.[3] இம்மண்டபத்தின் தூண்களில் யாளி, போர்க்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.[2] தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
Remove ads
கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்
மலைமீது காட்சி தருவதால மூலவருக்கு மலையாளன் என்ற பெயரும் உண்டு.[4] மேலும் அவர் வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்ற பல திருப்பெயர்களைக் கொண்டுள்ளார். மேற்கே நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டாவது மாடியான மேல் மாடி வரதராஜபெருமாள் சன்னதியான அத்திகிரி என்றழைக்கப்படுகிறது. பெருந்தேவித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. இத்தாயாரை காமாட்சி சரஸ்வதி வழிபட்டுள்ளனர். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது. இரண்டாவது திருச்சுற்றில் 24-ஆவது படிக்கு எதிராக தங்கத்தினாலும், வெள்ளியாலும் ஆன இரண்டு பல்லிகள் உள்ளன. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றைத் தொட்டு, பெருமாளை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை உள்ளது.[3] இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத அளவில் 16 கைகளுடன் உள்ளார். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[4]
அத்தி வரதர்
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.[5] 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி சிறீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர்.[3] அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
Remove ads
பாடல்கள்
திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையதாகும். திருமங்கையாழ்வாரின் பாடல் அடிகளைக் காண்போம்.[3]
என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-
ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-
ஆழியான் அத்தியூரான்.
அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
Remove ads
திருவிழாக்கள்
வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவை மிகவும் பெயர் பெற்றதாகும்.[3]
போக்குவரத்து
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.
உசாத்துணை
மேலும் பார்க்க
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads